புதன், 14 ஜனவரி, 2015

கறையான் புற்றெடுக்க, 
கருநாகம் குடியிருக்க!
------------------------------------------------------------ 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------

(சங்கப் பரிவாரங்களின் முதுகெலும்பை 
  முறிக்கக் கோரும்  ஒரு கட்டுரை )
---------------------------------------------------------------------------------------------  

குட்டி முதலாளித்துவ எழுத்தாளரும், பின்நவீனத்துவத்தின் 
செல்வாக்கிற்கு ஆட்பட்டு எழுதுபவரும் ஆகிய  
பெருமாள் முருகன் குறித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.

"நூலாசிரியன் பெருமாள் முருகன் இறந்து விட்டான் " 
என்று ஒரு அறிக்கையை அண்மையில் வெளியிட்டு 
வாசகர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளித்து இருக்கிறார் 
பெருமாள் முருகன். அதிர்ச்சி தராத எந்த ஒன்றைப் 
பற்றியும் எழுதக் கூடாது என்பதும், எழுதப்படும் எந்த 
ஒன்றிலும் அதிர்ச்சி மதிப்பு (SHOCK VALUE) இருக்க வேண்டும் 
என்பதும் பெருமாள் முருகனின் பின்நவீனத்துவ இலக்கியக் 
கோட்பாடுகள்.

எனவேதான், பீக்கதைகளை ( ஆமாம், பீயைப் பற்றிய 
கதைகள், மலத்தைப் பற்றி எழுதியவை ) அவர் எழுதினார்.
கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலையும் அண்மையில் 
(2014) எழுதி உள்ளார்.

சமூகம் அதிர்ச்சியில் உறைந்து போக வேண்டும் என்பது 
எப்போதுமே அவரின் இலக்காக இருந்து வருகிறது என்பதை 
அவரின் நூல்களைப் படித்தோரால் உணர இயலும்.

இப்படித்தான் கொங்கு மண்டலமே அதிர்ச்சியில் உறைந்து 
போக வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் அவர் எழுதிய 
மாதொருபாகன் நாவல் பூமராங் ஆகி, அவருக்கே 
அதிர்ச்சியைத் தந்து கொண்டு இருக்கிறது. முதன் முதலாக,
HE IS AT THE RECEIVING END!

"பெருமாள் முருகன் இறந்து விட்டான்" என்ற அவருடைய 
அறிக்கையின் "மூலம்" (ORIGINAL), 1960களின் பிற்பகுதியில் 
வெளிவந்த, பிரெஞ்சு பின்நவீனத்துவ அறிஞரும் எழுத்தாளரும் 
ஆன  ரோலன் பார்த் ( ROLAND BARTHES) எழுதிய, புகழ்பெற்ற 
"ஆசிரியனின் மரணம்" (THE DEATH OF THE AUTHOR) என்ற 
கட்டுரை ஆகும்.( பெருமாள் முருகன் இலக்கியத் திருட்டில் 
ஈடுபட்டார் என்பதல்ல இங்கு நாம் கூறுவது என்பதை 
அறிவார்ந்த வாசகர்கள் அறிவார்கள் ).

பெருமாள் முருகன் இறந்து விட்டான் என்ற அறிக்கையை அவர் 
எழுதும்போது, தம்மை ரோலன் பார்த் ஆக அவர் பாவித்துக் 
கொண்டிருப்பார் என்பதை வாசகர்களால் உணர 
இயலும்.

பெருமாள் முருகனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 
மார்க்சிஸ்ட் கட்சியின் அமைப்பான, தமுஎகச, அவர் எந்த 
அமைப்பிலும் சேராதவர் என்பதையும் குத்திக் காட்டி உள்ளது.
"அமைப்பே கூடாது " என்ற பின்நவீனத்துவக் கோட்பாட்டை 
ஏற்றுக் கொண்டதால்தான், பெருமாள் முருகன் எந்த அமைப்பிலும் 
சேராமல் தனித்துவவாதியாக (INDIVIDUALIST) இருந்தார் 
என்பதை தமுஎகசவும் அறிந்து இருக்கக் கூடும்.

திராவிட இயல் சித்தாந்தத்தின் மீதும், திராவிட இயக்க 
அமைப்புகள் மீதும், எப்போதுமே ஒரு இளக்காரமான 
பார்வையைக் கொண்டு இருப்பவர் பெருமாள் முருகன். இந்தப் 
பார்வை காலச்சுவடு நிறுவனத்தின் பார்ப்பன அதிபர் 
கண்ணனிடம் இருந்து, அவர்  பெற்ற கொடையாக இருக்கக் கூடும்.
எனவேதான், சூத்திர மேன்மை என்பது அவரின் படைப்புகளின் பாடுபொருளாக இருந்தது இல்லை. 

கொங்குநாட்டுத் தமிழ்ச் சமூகத்தை, சூத்திரச் சாதியினரை 
கோவில் திருவிழாக்களின்போது விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் 
என்று எழுதி விட்டாரே பெருமாள் முருகன் என்று, அந்தப் பகுதி 
மக்கள், அவர் மீது வருத்தமும் கோபமும் மேலிட, அவரிடம் 
நியாயம் கேட்கத் திரண்டனர். எந்த அமைப்பின் பின்புலமும் 
வழிகாட்டலும் இல்லாமல், தன்னெழுச்சியாக உழைக்கும் 
மக்கள் அணி திரண்டனர். இந்தப் போராட்டம் இப்படித்தான் 
ஆரம்பித்தது. இது என்ன என்று பார்ப்பதற்காக மூக்கை நுழைத்த 
ஆர்.எஸ்.எஸ் கும்பல், இந்தப் பிரச்சினை தனக்குப் பயன்படும் 
என்று கணித்து, பிரச்சினையை ஊதிப் பெருக்கி, போராட்டத் 
தலைமையைக் கைப்பற்றிக் கொண்டது.அண்மையில் நாமக்கல் 
சென்று திரும்பிய நான், பகுதி மக்கள் வாயிலாகக் கேட்டறிந்த 
உண்மை இது. 

"கறையான் புற்று எடுக்கக் கருநாகம்  குடியிருக்க" என்பது போல் 
 தமிழ் மக்களின் போராட்டத்தை சங்கப் பரிவாரம் கைப்பற்றிக் 
கொண்டது.

              
பின்நவீனத்துவ எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும், சூத்திர 
உழைக்கும் மக்களுக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் 
நாம் உழைக்கும் மக்கள் பக்கமே நின்றோம். தொடர்ந்து நிற்போம்.

அதே நேரத்தில், எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும் 
சூத்திரத் தமிழ் மக்களுக்கும் இடையிலான இந்தப் பூசலில்,
தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை சங்கப் பரிவாரக் கும்பல் 
தன்  கையில் எடுத்துக் கொண்டு இருப்பது ஏற்கத் தக்கதல்ல.
போராடி முறியடிக்கப்பட வேண்டிய ஒன்று.  
      
எனவே, கொங்கு மண்டலப் போராட்டக் களத்தை விட்டு 
சங்கப் பரிவாரமே வெளியேறு என்ற முழக்கத்தை நாம் 
முன் வைக்கிறோம்.

பெருமாள் முருகன் விவகாரத்தில் ஆதாயம் அடைந்ததனால் 
தைரியம் அடைந்து, மெய்யான முற்போக்கு எழுத்தாளர்களிடம் 
வாலாட்ட முடியும் என்று சங்கப் பரிவாரங்கள் நினைக்குமேயானால்,
அவற்றின் முதுகெலும்பை முறித்திட உறுதி ஏற்போம்.

பின்குறிப்பு:
-------------------- 
கறையான் புற்றெடுக்க, கருநாகம் குடியிருக்க என்பது 
அறிஞர் அண்ணா தந்த உவமை.

************************************************************88

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக