திங்கள், 5 ஜனவரி, 2015

மார்க்சிய எழுத்தாளர் 
தோழர் ஏ.கே.ஈஸ்வரன் அவர்களின் 
எதிர்வினைக்கு மறுவினை!
-----------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
----------------------------------------------------------

பார்க்க: சாதியம் குறித்த இந்திய மார்க்சியர்களின்
                  தவறான புரிதல் என்ற என் கட்டுரை 
                  ( முகநூலில் வெளியிடப்பட்டது )   
                       ( please visit facebook: Ilango Pichandy )

இந்தக் கட்டுரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு
பற்றியது. உலகக் கம்யூனிசத்தின் வரலாறு பற்றியது அல்ல.
இதில் ஒரு பின்னணித் தகவலாக, மார்க்சியம் எப்போது
தோன்றியது என்பதும் சொல்லப் பட்டு உள்ளது.

உலக மார்க்சியத்தின் வயது 165. ஆனால் இந்திய
மார்க்சியத்தின் வயது 90. இதை உணர்த்துவதற்காகவே,
இந்தப் பின்னணித் தகவல் தரப்படுகிறது.

இதில் எந்தத் தவறோ, விவரப் பிழைகளோ (FACTUAL ERRORS)
இல்லை என்பது கண்கூடு.

"மார்க்ஸ்  இளம் வயதிலேயே தம் கருத்துக்களை
உலகறியச் செய்தார் "  என்று என் கட்டுரை கூறுகிறது.
இதில்  என்ன தவறு?

 1) பெர்லின் பல்கலையில் தத்துவஞானத்தில் டாக்டர்
பட்டம் பெறுவதற்காக அவர் சமர்ப்பித்த ஆய்வேடு
(1840-1841)
2) ரைனிஷ் ஜெட்டங் ( Rheninische Zeitung ) பத்திரிகை
ஆசிரியராக இருந்து அவர் எழுதிய கட்டுரைகள்
(  1842-1843 )
3) "1844ஆம் ஆண்டின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் 
கையேடுகள்" என்ற நூல் (1844)

இவையெல்லாம் தம் இளம் வயதில், மார்க்ஸ் எழுதி 
வெளியிட்ட கருத்துக்கள். இந்த விவரங்களை எல்லாம் 
உள்ளடக்கிய வாக்கியம்தான், "மார்க்ஸ் தம் இளம் வயதிலேயே
தம் கருத்துக்களை வெளியிட்டார்" என்பது. இதில் என்ன 
தவறு?

மேற்கூறிய கட்டுரைகள் மார்க்சின் புலமையையும், தத்துவஞான 
அறிவையும், புரட்சிகர உணர்வையும் வெளிப்படுத்துவன.   
 என்றாலும் அவற்றை மார்க்சியத்தின் தொடக்கமாக 
மார்க்சிய வரலாற்று ஆசிரியர்கள் கருதுவதில்லை. 
1848இல் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையில் இருந்து மார்க்சியம் தொடங்குவதாக மார்க்சிய வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். 
இது (1848) மார்க்சியத்தின் முறையான தொடக்கம், அதிகார 
பூர்வமான தொடக்கம் என்று மார்க்சிய அறிஞர்களால்  
ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அதையே நானும் எடுத்தாண்டு உள்ளேன்.

இதையேதான் லெனினும் கூறுகிறார்:
"1848இல் வெளியான மார்க்ஸ் எங்கல்சின் கம்யூனிஸ்ட்
அறிக்கை மார்க்சின் போதனையை முழுமையாகவும் 
முறையாகவும்  விரித்து உரைக்கிறது". 

 எனவே, மார்க்சிய போதனையின் முறையான தொடக்கம் 
கம்யூனிஸ்ட் அறிக்கைதான்  என்பது தெளிவு. இந்த உண்மைதான் 
என் கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.இதில், குழப்பம் 
எங்கே இருக்கிறது?

அடுத்து, கட்டுரையின் மையப்பகுதி, இந்தியக் கம்யூனிஸ்ட் 
இயக்க வரலாற்றைப் பேசுகிறது. தங்களின் எதிர்வினையில்,
அது குறித்து எந்த மறுப்பும் இல்லை என்பதை, வரவு 
வைத்துக் கொள்கிறேன்.

அடுத்து, நான் மார்க்சியத்தைப் படிக்கவில்லை என்று 
தொடர்ந்து கூறி வருகிறீர்கள். தங்களின் கூற்று 
இகழ்ச்சியுடன் நிராகரிக்கத் தக்கது. அதற்கு நான் பதிலளிக்கத் 
தேவையில்லை. இங்கு அறிஞர் அண்ணா கூறிய ஒரு கருத்தை 
தங்களுக்கு நினைவு ஊட்டுகிறேன்.

"யாராவது நமக்கு யானைக்கால் என்று சொன்னால்,
அதை மறுக்கும் பொருட்டு, ஒவ்வொருவரிடமும் சென்று 
நம் காலைக்  காட்ட வேண்டிய அவசியம் இல்லை" என்றார் 
அறிஞர் அண்ணா. நான் தங்களிடம் என் காலைக் 
காட்ட விரும்பவில்லை..       

அடுத்து, "மார்க்சிய" நூல்களைத் தாங்கள் எழுதி 
வருவதாகத் தெரிவித்தீர்கள். நன்றி. வரவேற்கிறேன்.
வாழ்த்துகிறேன். ஆனால், தங்கள் நூல்களில் இருந்து 
மார்க்சியம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் 
எனக்கு இல்லை.   

.......தோழமையுடன்,
         பி இளங்கோ சுப்பிரமணியன்......
*************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக