வெள்ளி, 29 செப்டம்பர், 2023

வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் மறைவு!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------
மானுட வரலாறு என்பது மகான்களின் வரலாறு அல்ல.
சமூகத்தில் வெவ்வேறு காலங்களில் நிலவிய 
வெவ்வேறு உற்பத்தியின் வரலாறே மானுட வரலாறு.
வரலாற்றைப் பற்றிய இந்தப் பார்வைதான் 
மார்க்சியம் கூறும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் 
ஆகும். 

1960களின் பிற்பகுதியில் இந்தியாவில் உணவு தானியப் 
பற்றாக்குறை தீவிரமாக இருந்தது. எனவே உற்பத்தியைப் 
பெருக்க வேண்டும் என்ற உடனடிக் கட்டாயம் 
இருந்தது.

அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் 
அன்றைய வேளாண்மை அமைச்சர் சி சுப்பிரமணியமும் 
சேர்ந்து உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கும்
பெரும் பொறுப்பை இந்திய வேளாண் விஞ்ஞானி 
டாக்டர் எம் எஸ் சுவாமிநாதனிடம் ஒப்படைத்தனர்.
அப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட சுவாமிநாதன் 
உணவுதானிய உற்பத்தியை பலமடங்கு உயர்த்திக் 
காட்டினார். இதுதான் பின்னாளில் பசுமைப் 
புரட்சி என்று பெயர் பெற்றது.

இதன் விளைவாக உணவு தானிய உற்பத்தியில் 
இந்தியா தன்னிறைவு அடைந்தது. பஞ்சம், பட்டினிச் 
சாவு என்ற அபாயம் நீங்கியது. இன்று 
தன்னிறைவு என்பதையும் தாண்டி உபரி 
உற்பத்தி என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது.
இதற்கு வித்திட்டவர் சுவாமிநாதன். பற்றாக்குறையில்
இருந்த நாட்டை உபரிக்கு உயர்த்தியவர் அவரே.

சமூகத்தின் பொருள் உற்பத்திக்குப் பங்களித்தவர்களே 
வரலாற்றை உருவாக்குகிறார்கள். அவர்களை 
மரியாதையுடன் பார்க்கிறது மார்க்சியம்.

ஆனால் இந்தியாவிலேயே அடையாள அரசியல் 
உச்சத்தில் இருக்கும் தமிழ்நாட்டில், சமூகத்தின்
பொருளுற்பத்திக்குப் பங்களித்தவர்கள் உரிய 
கெளரவத்தைப் பெறுவதில்லை. 

எனவேதான் உணவு உற்பத்தியைப் பெருக்கிய 
சுவாமிநாதன் இங்கு தற்குறிகளின் கண்டனத்துக்கு 
இலக்காகிறார். இது கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமும் 
அறியாமையும் ஆகும். 

மறைந்த தமிழார்வலரும் மரபார்ந்த வேளாண்மைப் 
பிரச்சாரகருமான நம்மாழ்வாரை சுவாமிநாதனுடன் 
ஒப்பிடும் கோமாளித்தனமும் இங்குதான் கொடிகட்டிப் 
பறக்கிறது. நம்மாழ்வார் நல்லவர்; பொது வாழ்வில் 
ஊழல் எதுவும் இன்றி நெருப்பாக வாழ்ந்து காட்டியவர்.
அந்த வகையில் அவர் வணக்கத்துக்கு உரியவர்.

ஆனால் நம்மாழ்வாரால் உற்பத்தியைப் பெருக்க 
ஒருபோதும் இயலவில்லை. அவர் ஆதரித்த 
organic farming மொத்த சமூகத்தின் உணவுத் 
தேவையில் 10 சதவீதத்தைக்கூட நிறைவேற்றப் 
போதாது. சமூகத்தின் பொருளுற்பத்திக்கு
அவரால் பங்களிக்க இயலாது. 
       
பொருளுற்பத்தி என்பது சகல அடையாளங்களுக்கும்
அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட பொருளுற்பத்தியிலேயே 
அடையாள அரசியலைப் புகுத்தியவர் நம்மாழ்வார்.

ரசாயன உரங்களுக்குப் பதில் சாணி உரம் என்பது 
பாராட்டக்கூடிய விஷயமே! ஆனால் நாடு முழுவதும் 
உள்ள லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களில் 
நெல் சாகுபடிக்கு எவ்வளவு சாணி உரம் வேண்டும்?
மலை மலையாக வண்டி வண்டியாகத் தேவைப்படுமே!
அவ்வளவு மாடுகள் நாட்டில் இருக்கின்றனவா?
இல்லையே!

முதலாளிய சமூகத்திற்கு வந்து விட்ட பின்னர் 
மீண்டும் நிலவுடைமைச் சமூகத்திற்குத் திரும்பிச் 
செல்ல இயலாது. வரலாற்றின் சக்கரங்களைப் 
பின்னோக்கித் திருப்ப முயன்றார் நம்மாழ்வார்.  .
எனவே ரசாயன உரங்களற்ற organic farming என்பது 
நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யப் 
போதுமானதல்ல. இது ஒரு கற்பனாவாதத் தீர்வு! நிற்க.

உணவு தானிய உற்பத்தியோடு இரண்டறக் கலந்து 
நின்ற வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம் எஸ் 
சுவாமிநாதன் மறைவுக்கு நியூட்டன் அறிவியல் 
மன்றம் அஞ்சலி செலுத்துகிறது.
**********************************************     

இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ளவோ,
இக்கட்டுரையின் பேசுபொருளைப் புரிந்து 
கொள்ளவோ வலுவான அறிவியல் பின்னணி
தேவைப்படுகிறது.

ஒருவர் தன்னை ஒரு மார்க்சிஸ்ட்டாக கருதிக்  
கொள்வதனாலேயே அவர் உலகில் உள்ள 
எல்லா விஷயங்களை பற்றியும் கருத்துக் 
கூற அருகதை உடையவர் ஆகி விடுவதில்லை.  

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய 
நூலின்றிக் கோட்டி கொளல்
என்கிறார் வள்ளுவர்.


முன்குறிப்பு:
அறிவியல் பின்னணி அற்றவர்கள் அருள்கூர்ந்து 
இக்கட்டுரையைப் படிக்காமல் இருந்து 
ஒத்துழைப்புத் தரும்படி பணிவுடன் வேண்டுகிறோம்.
பிறழ்புரிதல் ஏற்படாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு.




 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக