திங்கள், 22 மே, 2023

தமிழ்ப் பண்டிட்டுகள் தற்குறிகளா?
தமிழக அரசின் கல்விக்கொள்கை வகுப்புக்குழுவில் 
தமிழ்ப் பண்டிட்டுகள் இடம் பெறுவது 
பயனற்றது என்பதற்கான நிரூபணம்!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------  
1) மார்க்சியம் பொருளுற்பத்திக்கு முதன்மை அளிக்கும் 
தத்துவம். பொருளுற்பத்தியை அடிப்படையாகவும் 
மையமாகவும் கொண்டே மார்க்சிய ஆய்வுகள் 
அமைகின்றன. மார்க்சிய பாலபாடம் கற்றோர் 
அனைவரும் இவ்வுண்மையை நன்கறிவர்.

2) கல்வி என்பது என்ன? ஒரு சமூகத்தின் 
பொருளுற்பத்தியை மேற்கொள்வதற்குத் தேவையான 
அறிவையும் பயிற்சியையும் வழங்குவதே கல்வி.
குழந்தைகளும் சிறுவர்களும் வளர்ந்து பெரியவர்கள் 
ஆகும்போது, தங்கள் சமூகத்தின் பொருளுற்பத்தியை   
மேற்கொள்ள வேண்டும். அதற்கு அவர்களைத் தகுதி 
உடையவர்களாக்குவதுதான் கல்வி.

3) பொருளுற்பத்தி எவ்வாறு நிகழ்கிறது? 
பொருளுற்பத்தியை அறிவியல் நிகழ்த்துகிறது.
அறிவியல் இல்லாமல் பொருளுற்பத்தி நடக்காது.
கால்குலஸ் இல்லாமல், வெக்டர் அல்ஜீப்ரா இல்லாமல்,
முக்கோணவியல் (trigonometry) இல்லாமல், இயற்பியல் 
வேதியல் இல்லாமல் எந்த ஒரு சமூகத்திலும் 
பொருளுற்பத்தி நடைபெற இயலாது.

4) எனக்கு வெண்பா இயற்றத் தெரியும். இதுவரை 
பல நூற்றுக் கணக்கில் வெண்பாக்களை இயற்றி 
உள்ளேன். சான்றாக ஒரு வெண்பா. எட்டுத்தொகை 
நூல்களை மாணவர்கள் எளிதில் நினைவில் கொள்ள 
உதவும் கீழ்வரும் வெண்பாவை மனனம் செய்து 
கொள்ளுங்கள்.

5) வளையணிந்த பெண்ணே தொகையெட்டும் கேளாய்
திளைத்திடும் நற்றிணை ஐங்குறுநூ றும்அகம்
சீர்புறம் மன்னுபரி பாடல் குறுந்தொகை
சூழ்பதிற்றுப் பத்துகலி என்க.
  
6) என்றாலும் எனக்கு வெண்பா இயற்றத் தெரியும்
என்று சொல்லிக் கொண்டு, ஏதேனும் ஒரு நிறுவனத்தில் 
வேலை கேட்டுச் சென்றால் என்ன ஆகும்? அந்த 
நிறுவனத்தின் HR என்னைச் செருப்பால் அடித்து
விரட்டுவான். ஏனெனில் பொருளுற்பத்திக்கு 
வெண்பா இயற்றத் தெரிந்திருக்க வேண்டியதில்லை.
    
7) மாறாக எனக்கு கால்குலஸ் தெரியும்; Integration by 
partsல் நான் நிபுணன்; எனக்கு நியூட்டன் ராப்சன் 
மெதட் தெரியும்; Partial differential equationsஐ அனாயாசமாக 
சால்வ் பண்ணைக் கூடியவன் நான் என்று சொன்னால் 
அந்த HR என்னை உட்கார வைத்துப் பேசுவான்.
அவனுடைய Bossஐ நான் சந்திப்பதற்கு ஏற்பாடு 
செய்வான். இதற்கெல்லாம் காரணம் மிக மிக 
சிம்பிள்! பொருளுற்பத்தியை நிகழ்த்த வல்லவனை 
சமூகம் மதிக்கும்; பொருளுற்பத்திக்குப் பயன்படாதவனை 
சமூகம் ஒதுக்கும்.   

8) மயில்சாமி அண்ணாத்துரை சந்திரயான் என்னும் 
கோள்சுற்றியை (orbiter) நிலவைச் சுற்றி வர வைத்தார்.
அவருக்கு வெண்பா இயற்றத் தெரியாது. 
ஆகுபெயருக்கும் அன்மொழித்தொகைக்கும் உள்ள 
வேறுபாடு தெரியாது. ஆனால் அவருக்கு celestial mechanics
தெரியும். எனவேதான் உலகம் அவரைக் கையெடுத்துக் 
கும்பிடுகிறது. Celestial mechanics படிக்காமல், இரண்டாம் 
வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகைப் 
புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை பற்றி
மட்டுமே அறிந்தவர் என்றால், அவருக்கு இஸ்ரோவில் 
கக்கூஸ் கழுவும் வேலைகூடக் கிடைத்திருக்காது.        

9) தமிழ்ப் பண்டிட்டுகள் என்பவர்கள் யார்? 
சமூகத்தின் பொருளுற்பத்தியில் இருந்து 
முற்றிலுமாகத் தங்களைத் துண்டித்துக் கொண்டு 
பொருளுற்பத்திக்கு அப்பால் வெகுதூரம் தள்ளி 
நிற்பவர்களே தமிழ்ப் பண்டிட்டுகள். எனவே அவர்கள் 
பொருளுற்பத்திக்குப் பயன்படாதவர்கள். அதாவது 
சமூகத்திற்குப் பயன்படாதவர்கள்.

10) இந்த இடத்தில் இந்தியாவின் பொருளுற்பத்தி 
மொழி எது என்ற கேள்வி முக்கியமானது. தமிழோ 
இந்தியோ சமஸ்கிருதமோ அல்லது வேறெந்த இந்திய 
மொழியுமோ இந்தியாவின் பொருளுற்பத்தி 
மொழி அல்ல. இந்தியாவின் பொருளுற்பத்தி 
மொழி ஆங்கிலமே.

11) உற்பத்தி ஆங்கிலத்தில்தான் நடக்கிறது. 
உற்பத்திக்கு உரிய படிப்பு, கல்வி, செயல்முறை 
ஆகிய அனைத்துமே ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
ஒரு சமூகத்தில் உற்பத்தி மொழி மட்டுமே 
எல்லா அம்சங்களிலும் முதன்மை பெறும். 
உற்பத்தியில் இல்லாத மொழிகள் பண்பாட்டுத் 
தளத்தில் மட்டுமே எஞ்சி நிற்கும். தமிழும் சரி,
ஏனைய இந்திய மொழிகளும் சரி, உற்பத்தியில் 
இடம் பெறாமல் பண்பாட்டுத் தளத்தில் மட்டுமே 
நிலவுகின்றன என்ற உண்மையை உணராத 
எவருக்கும் மொழி குறித்துப் பேசும் தகுதி கிடையாது.    

12) பொருளுற்பத்தியில் இல்லாத தமிழைப் 
போதிக்கும் தமிழ்ப் பண்டிட்டுகள், கல்விக் 
கொள்கை வகுப்பதில் என்ன பெரிய பங்களிப்பைச் 
செய்து விட முடியும்? கல்வி என்றாலே பொருளுற்பத்தி 
என்றுதான் அர்த்தம். அப்படி இருக்கும்போது 
உற்பத்தியோடு தொடர்பற்ற தமிழ்ப் பண்டிட்டுகள் 
எப்படி கல்விக் கொள்கையை வகுக்க இயலும்?

13) சமூகத்தின் பொருளுற்பத்தி குறித்த எந்த 
அறிவையும் பெற்றிராத தமிழ்ப் பண்டிட்டுகளை 
அதிக அளவில் அரசின் துறைகளில், அரசின் கொள்கை 
வகுக்கும் அமைப்புகளில் நியமித்துக் கொண்டே 
போவது எப்படிச் சரியாகும்? எவ்விதத்தில் 
நியாயம் ஆகும்?

14) தமிழ்ப் பண்டிட்டுகள் தற்குறிகளா என்ற கேள்வி 
எழுகிறது. இதற்கு ஒரே ஒரு விடைதான் இருக்கிறது.
அது தீர்க்கமான விடை! The answer will be in the affirmative!   
அறிவு என்பது உற்பத்தி சார்ந்தது. உற்பத்தியில் 
இருந்து விலகி நிற்போர் எங்ஙனம் அறிவைப் 
பெற இயலும்?

15) கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் அறிவியல் 
அறிஞர்கள் அல்லவா இடம் பெற்றிருக்க வேண்டும்?
இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தலைமையில் 
அல்லவா இக்குழு இயங்க வேண்டும்! ஒரு நீதியரசர் 
தலைமையில் இயங்குவதை விட சிவன் தலைமையில் 
இயங்குவது பெரும் பயன் தருமன்றோ! 
  
16) ஐயம்பெருமாள் (கோளரங்க முன்னாள் இயக்குனர்)
மயில்சாமி அண்ணாத்துரை (இஸ்ரோ)
ரமணன் (வானிலை ஆய்வு மையம்)
டாக்டர் சுதா சேஷையன் (முன்னாள் துணைவேந்தர்)
போன்ற அறிவியல் அறிஞர்கள் அல்லவா புதிய 
கல்விக் கொள்கை வகுக்கத் தகுதியானவர்கள்!

17) கொள்கை வகுக்கும் குழு பலரையும் சந்தித்து 
கல்வி குறித்து ஆலோசித்தாக குழுவின் தலைவர் 
நீதியரசர் முருகேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். 
ஆனால்  அக்குழு தமிழில் அறிவியலை எழுதும் 
அறிவியல் எழுத்தாளர்கள் எவரையும் சந்திக்கவே 
இல்லை. ரமணன், ஐயம்பெருமாள், மயில்சாமி 
அண்ணாத்துரை ஆகியோர் குழுவில் இடம் 
பெற்றிருந்தால், அவர்கள் முதல் வேலையாக 
அறிவியல் எழுத்தாளர்களான எங்களைக் கலந்து 
ஆலோசித்து இருப்பார்கள் அல்லவா?  நாங்களும் 
அவர்களை எளிதில் தொடர்பு கொள்ள இயலும் அல்லவா!         

18.. அடுத்து தமிழ்ப் பண்டிட் என்ற சொல்லே 
இளக்காரம் நிரம்பிய சொல் என்று சொல்லப் 
படுகிறது. என்னுடைய பள்ளிக் கல்வியை 
1960-70களில் முடித்தேன். அக்காலத்தில் 
தமிழாசிரியரை அனைவருமே தமிழ்ப் பண்டிட்
என்றுதான் சொல்லுவார்கள்; அழைப்பார்கள். அதில் 
எவ்வித இகழ்ச்சிக் குறிப்பும் (contemptuous connotation) 
இருந்தது இல்லை. பின்னாளில் தமிழ் சினிமாக்களில் 
தமிழ்ப் பண்டிட்டுகள் என்றாலே  லூசுப் பயல்கள் என்று 
கூத்தாடி இயக்குனர்கள் சித்தரித்தனர். அதன் 
விளைவாக தமிழ்ப் பண்டிட்டுகள் இகழ்ச்சிக்கு
இலக்காயினர். அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக 
இயலும்?

19) புரட்சியின் பின் சீனத்தில் கல்லூரிக் கல்வியை 
சரி செய்ய முயல்கிறார் மாவோ. இலக்கியம், வரலாறு 
போன்ற arts group படிக்கும் மாணவர்களை உடனடியாக 
படிப்பைத் துறந்து கிராமங்களுக்குச் செல்லுமாறு 
கட்டளை இடுகிறார். ஆனால் அதே வேகத்தை 
மாவோ  அறிவியல் படிக்கும் மாணவர்களிடம் 
காட்டவில்லை. அறிவியல் படிப்புகள் உற்பத்தி 
சார்ந்தவை என்பதால் அறிவியல் மாணவர்களிடம் 
நிதானம் காட்டுகிறார் மாவோ; அவர்களும் 
கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற  
நிலை இருந்தபோதும். ஆக அறிவியல் 
படிப்பையும் இலக்கியப் படிப்பையும் பிரித்துப் 
பார்க்கும் எனது பார்வைக்கு மாவோவின் 
அங்கீகாரம் இருக்கிறது.
(பார்க்க: Selected works of Mao volume IX). 

20) கடந்த 15 ஆண்டுகளாக தமிழில் அறிவியலைத் 
தீவிரமாக எழுதி வருகிறேன். இதுவரை நூற்றுக்கும் 
மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். 
நாளிதழ் அறிவியல் ஏடுகளில் அவை பிரசுரமாகி 
உள்ளன. அறிவியல் வீடியோக்களை வெளியிட்டு 
உள்ளேன். Print media, Electronic media, Social media
ஆகியவற்றிலும் சமூகத்தின் பொதுவெளியிலும் 
அறிவியலைப் பரப்பி வருகிறேன்.அறிவியல் 
வட்டாரங்களில் நன்கு அறிமுகமான,  மக்களால் 
அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் பரப்புநர் நான்.
தமிழ் தமிழ் என்று நான் வெற்றுக் கூச்சல்
போடுவதில்லை. தமிழில் அறிவியலை எழுதி
தமிழை உற்பத்தி மொழியாக ஆக்கும் இமாலய 
முயற்சியில் ப்பீடு நடை போடும் வெகு சிலரின் 
நான் ஒருவன். வெண்பாவும் இயற்றுகிறேன்:
String theory என்பது இன்றைய இயற்பியலின் உச்சம்.
அவ்வளவு பிரசித்தி பெற்ற string theory பற்றி 
இதுவரை தமிழில் பொதுவெளியில் ஒரே ஒரு 
கட்டுரைதான் எழுதப் பட்டுள்ளது. அதை 
எழுதியவன் இந்தக் கட்டுரையாசிரியர்.

முடிவுரை:
---------------
 சமூகத்தின் பொருளுற்பத்தியோடு எவ்விதத் 
தொடர்புமற்ற தமிழ்ப் பண்டிட்டுகள் 
தங்களின் தகுதிக்கு மீறிய அங்கீகாரத்தை 
தமிழ்ச் சமூகத்தில் ஏற்கனவே பெற்று விட்டார்கள்.
பல்கலைகளின் துணைவேந்தர் பதவிகள் 
அனைத்தும் தமிழ்ப் பண்டிட்டுகளுக்கே.
(தெபொமீ, முவ, வ சுப மாணிக்கம், ஒளவை 
நடராசன் போன்றோர்). பாவேந்தர் விருது 
முதல் அரசு வழங்கும் அனைத்து விருதுகளும் 
தமிழ்ப் பண்டிட்களுக்கே. ஆனால் சி வி ராமன் 
பெயரிலோ ராமானுஜன் பெயரிலோ எவ்வித 
விருதும் கிடையாது. அரசு ஒரு கண்ணில் 
வெண்ணெயையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் 
வைக்கிறது. இதுதான் இன்றைய அவலம்.
*************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக