திங்கள், 8 மே, 2023

 இட ஒதுக்கீடு குறித்த முழுமையான வரலாறுகளை அறியாமல், அரைகுறையாகப் படித்ததையும், கேட்டதையும் வைத்துக் கொண்டு, உணர்வெழுச்சியாக இட ஒதுக்கீடு பற்றிய தவறான கருத்துகளைப் பலரும் எழுதுகின்றனர். பேசுகின்றனர். அம்பேத்கரை உயர்வுபடுத்துவதாக எண்ணிக் கொண்டு, இட ஒதுக்கீடு என்றாலே அம்பேத்கர் தான் என்ற பொய்யை ஓயாது பரப்புகின்றனர். இட ஒதுக்கீடு வரலாறு என்பது அம்பேத்கருக்கும் முந்தியது. இன்னும் சொல்லப் போனால், நீதிக் கட்சி

தொடங்குவதற்கு முன்பே வரம்புக்குட்பட்ட அளவில் பிரித்தானிய இந்தியாவில், சமஸ்தான இந்தியாவில் இட ஒதுக்கீட்டு முறைகள் இருந்தன. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டம் என்பது மிக நீண்ட வரலாறைக் கொண்டது. அம்பேத்கருக்கும் முந்தையது.
சுதந்தர இந்தியாவிலும் சரி, பிரித்தானிய இந்தியாவிலும் சரி, அம்பேத்கரின் வாழ்நாள் இலட்சியம் என்பது " பட்டியலின மக்களின் விடுதலை" என்பதாகவே இருந்தது. அம்பேத்கர் சொல்கிறார், "அரசியல் நிர்ணய சபைக்கு நான் சென்றபோது, அட்டவணை சாதியினரின் நலன்களைக் காப்பது தவிர, வேறெந்தப் பெரிய நோக்கமும் எனக்கு இருக்கவில்லை ...."I came into the Constituent Assembly with no greater aspiration than to safe gaurd the interest of Schedule Castes". இது அம்பேத்கரின் வாக்கு மூலம் .
அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக Article 340,341 , 342 பகுதிகள் இனங்காட்டப்பட்டுள்ளன. இதில் Article 340 பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு குறித்துப் பேசுகிறது. இந்தப் பிரிவு என்ன சொல்கிறது?
Article 340 in The Constitution Of India 1949
340. Appointment of a Commission to investigate the conditions of backward classes
(1) The President may by order appoint a Commission consisting of such persons as he thinks fit to investigate the conditions of socially and educationally backward classes within the territory of India and the difficulties under which they labour and to make recommendations as to the steps that should be taken by the Union or any State to remove such difficulties and to improve their condition and as to the grants that should be made for the purpose by the Union or any State the conditions subject to which such grants should be made, and the order appointing such Commission shall define the procedure to be followed by the Commission
(2) A Commission so appointed shall investigate the matters referred to them and present to the President a report setting out the facts as found by them and making such recommendations as they think proper
(3) The President shall cause a copy of the report so presented together with a memorandum explaining the action taken thereon to be laid before each House of Parliament
இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் ஷரத்து 340 - 1949
340: பிற்பட்ட வகுப்பினரின் நிலைமைகளை ஆராய்ந்தறிய ஒரு ஆணையத்தை நியமித்தல்:
1) குடியரசுத் தலைவர் தமது உத்தரவின் மூலம் ஓர் ஆணையத்தை நியமிக்கலாம்; இந்தியாவின் பிரதேச எல்லைக்குள் வாழும் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கி உள்ள வகுப்பினரின் நிலைமைகளையும், எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் ஆராய்ந்தறியத் தகுதி வாய்ந்தோர் என்று தாம் கருதும் நபர்களைக் கொண்டு அந்த ஆணையத்தை அமைக்கலாம்; அவர்களின் சிரமங்களைக் களையவும், அவர்களின் நிலைமையை மேம்படுத்தவும் ஒன்றியமோ அல்லது எந்த ஒரு மாநிலமோ மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், இந்த நோக்கத்துக்காக ஒன்றியமோ அல்லது எந்த ஒரு மாநிலமோ வழங்க இருக்கும் மானியங்கள் குறித்தும், எந்தெந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த மானியங்கள் வழங்கப்படும் என்பது குறித்தும், ஆணையமானது பரிந்துரைக்கும். மேலும் இந்த ஆணையம் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன என்பது பற்றி இந்த ஆணையத்தை நியமிக்கும் குடியரசுத் தலைவரின் உத்தரவு வரையறுக்கும்.
2) அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆணையமானது தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட விஷயங்கள் குறித்து ஆராய்ந்தறிந்து, தாங்கள் கண்டறிந்த உண்மைகளைத் தொகுத்தும் , தகுதியானவை என்று தாங்கள் கருதும் பரிந்துரைகளைச் செய்தும் ஓர் அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கும்..
3) அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஒரு பிரதியையும்
அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து
விளக்கும் ஒரு விஷயக் குறிப்பையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் முன்வைப்பார்.
இதன் உள்ளார்ந்த பொருளை விளக்குவதற்கு முன் அரசியல் நிர்ணய சபை பற்றிய குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
1946, மே 16 அன்று அமைச்சரவைத் தூதுக்குழு, அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. 9 டிசம்பர் 1946 அன்று "டாக்டர்.சச்சிதானந்த் சின்ஹா " இந்திய அரசியல் தற்காலிக நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார். 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள் டாக்டர் இராசேந்திர பிரசாத், அரசியல் நிர்ணய சபை நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தோராயமான வரைவு வி.என். ராவ் அவர்களால் தயாரிக்கப்பட்டது. அரசியலமைப்பு முன்னுதாரணங்கள் தலைப்பில் மூன்று வரிசைகளில் தரப்பட்ட அந்தப் பின்னணி விவரங்களில் சுமார் அறுபது நாடுகளின் அரசியல் சட்டங்களின் சிறப்புக் கூறுகள் தொகுத்துத் தரப்பட்டிருந்தன.
டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்ட வரைவுக்குழு ஒன்று 1947 ஆகஸ்ட் 29ஆம் நாள் நியமிக்கப்பட்டது. வரைவுக்குழு 7 உறுப்பினர்களை கொண்டது.
தலைவர்: பி.ஆர். அம்பேத்கர்
மற்ற உறுப்பினர்கள்: கோபாலஸ்வாமி ஐய்யங்கார், அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர், கே.எம். முன்சி, முகமது சாதுல்லா, என். மாதவராவ், டி. பி. கைதான்.
1949 நவம்பர் 26ஆம் தேதி இக்குழு அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி முடித்தது. 1950 ஜனவரி 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
பல நாடுகளில் உள்ள சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு தான் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டம் வழங்கிய இட ஒதுக்கீடு குறித்த விவாதங்களுக்குச் செல்லும் முன் இட ஒதுக்கீடு குறித்த ஆரம்ப கால வரலாற்றை விரிவாகப் பார்ப்போம்.
இட ஒதுக்கீடு முறை பிரித்தானிய இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பே சமஸ்தான இந்தியாவில் தான் முதன் முதலில் நடைமுறைக்கு வந்தது.
மராட்டியத்தில் ஒரு சமஸ்தானமான கோல்ஹாப்பூரில், பார்ப்பன பேஷ்வாக்கள் மிக கொடூரமான சுரண்டலிலும், ஒடுக்குமுறையிலும் ஈடுபட்டதால், அங்கு பார்ப்பனரல்லாத மக்களுக்கும் பார்ப்பன பேஷ்வாக்களுக்கும் இடையே பெரும் முரண்பாடு வெடித்தது. கோல்ஹாப்பூரை ஆண்ட சாகு மகாராஜா, முதன் முதலாக 1882 ஆம் ஆண்டு, தன் ஆட்சிக்குட்பட்ட மக்களிடையே இருந்த ஏற்றத் தாழ்வை நீக்கும் நோக்கத்தில், கல்வியின் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை வழங்க சட்டம் இயற்றினார். ஆனால் அந்த சட்டம் 1892 ல் தான் நடைமுறைப்படுத்த முடிந்தது. இதுவே இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முதல் சாதி ரீதியான இடஒதுக்கீடு ஆகும். இது அம்பேத்கருக்கும், நீதிக் கட்சிக்கும் முன்னரே வழங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மன்னர் ஆட்சிக்குப் பின்னரான ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியிலும் பிராமணர்களது செல்வாக்கு உயர்ந்திருந்தது. சுமார் 3.2% மட்டுமே இருந்த பிராமணர்கள் சகல துறைகளிலும் பெரும்பான்மையான வாய்ப்புகளை அனுபவித்தனர். ஆங்கிலேய ஆட்சியில் கல்வி பெறும் உரிமை, தரமான வேலை வாய்ப்புரிமை, நில உரிமை, அரசியல் உரிமை, சமூக பங்கேற்பு உரிமை, அரசியல் அதிகாரம் என எல்லாவற்றிலும் சாதி
ஆதிக்கத்தின் தாக்கத்தையும், யார் அதிகமாக பயனடைந்தனர் என்ற தகவலையும் பிரித்தானிய அரசின் கீழ்க்கண்ட ஆவணங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
" 1. மாவட்டங்களில் உள்ள சார்புநிலைப் பணிகளில் சில குறிப்பிட்ட குடும்பங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே அந்த பகுதிகளில் முதன்மை சாதிகளுக்குப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்" என வருவாய்த்துறையின் நிலைமை குறித்து 1854 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு உத்தரவு (எண். 128 (2)) கூறுகிறது".
2. "பெரும்பான்மை மக்கள் எவ்வித உதவியுமின்றிக் கற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறார்கள்" என்று 1883 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்விக் குழுவின் அறிக்கை, அத்தியாயம் 1 இவ்வாறு கூறுகிறது.
3. 09.03.1894 அன்று வெளியிடப்பட்ட, அரசுக் குழு ஒன்றின் நிலை ஆணைதான் (Board's Standing order - 128(2)), '"அரசு வேலைகளில் ஒரே ஒரு சாதியாரின் ஆதிக்கம் இருப்பதை" அறிந்து கூறியது ".
பிரித்தானிய அரசின் மாவட்ட ஆட்சியர்களை விட பல இடங்களில் பார்ப்பன அதிகார மையங்கள் சமூகச் செல்வாக்குச் செலுத்தின. மாவட்ட ஆட்சியர் நிர்வாகியாக இருந்தும் கூட இவர்களை மீறி ஒன்றும் செய்து விட முடியவில்லை. எனவே பிரித்தானியர்களின் ஆளுமைக்குட்பட்ட இந்தியாவை உருவாக்க புதிய பதவிகளில் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டிய நடைமுறை அவசியத்தை உணர்ந்தனர்.
1885 ஆம் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசும் "இந்திய வேலையை இந்திய மயமாக்கு" என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
இதனால் பிரித்தானிய அரசும்
1885-90 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், மாவட்டத் துணை ஆட்சியர், மாவட்ட நீதிபதிகள், அலுவலக முதன்மை பணிகள் இந்திய குடிகளுக்கு எனப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவையனைத்தும், உயர்சாதியினரே வைத்துக் கொண்டார்கள். இதனால் எதிர்ப்பு எழுந்தது.
இஸ்லாமியர்கள் அமைப்பாக திரண்டு எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள். "முஸ்லீம் லீக் "கட்சி தொடங்கப்பட்ட உடனேயே இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையையே முதலில் முன்னிறுத்தினர். 1906 அக்டோபர் 1ஆம் நாள் ஆகாகான் தலைமையில் அன்றைய தலைமை ஆளுநர் மிண்டோவைச் சந்தித்து இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோரினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு 1909 ஆம் ஆண்டு, மின்டோ மார்லி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களுக்குத் தேர்தல்களில் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த இடஒதுக்கீடு அரசியல் தளத்தில் மட்டுமே அமைந்தது, வரலாற்றில் பிரிட்டிஷ் வெள்ளையர் அரசு வழங்கிய முதல் இடஒதுக்கீடு இதுவேயாகும்.
அம்பேத்கரோ, நீதிக்கட்சியோ இந்த உரிமையை பெற்றுத் தரவில்லை. அது மட்டுமல்ல. DNT மக்களுக்கான சமூக நீதிப் போராட்டத்திலும் இவர்கள் பங்கு எள்ளவும் இல்லை. இந்த மக்களுக்கான போராட்ட வரலாறு மிக நீண்டது. சமூக நீதி இயக்கங்களும் , விடுதலைப் போராட்ட இயக்கங்களும் இவர்களைப் பற்றி பேசவில்லை. "லல்வக் " அறிக்கையைப் பற்றி கூட இன்னும் சமூக நீதி வரலாற்று ஏட்டிலே யாரும் எழுதவில்லை. இந்த நிலையில் தான் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தந்தார் என்ற வரலாற்று மோசடியை பரப்புகின்றனர்.
தோழமையுடன்
மருது பாண்டியன்
சோசலிச மையம்
7550256060
------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக