திங்கள், 2 ஜனவரி, 2017


1) சித்திரைப் புத்தாண்டும் தமிழரின் வாழ்வில்
ஏற்கப்பட்டு இருந்தது என்பதில் ஐயமில்லை.

2) ஆயினும், தொல்காப்பியர் காலத்தில் ஆவணிப்
புத்தாண்டு தமிழரால் கடைப்பிடிக்கப்பட்டு
வந்தது என்பதும் வரலாறே. இதற்கு இலக்கியச்
சான்றுகள் உள்ளன.

3) இன்று தைப்புத்தாண்டை ஏற்பதில் நமக்கு
எவ்விதத் தயக்கமும் இருக்க வேண்டியதில்லை.
ஏனெனில் அதுதான் அறிவியல் புத்தாண்டுடன்
நெருங்கி வருவது. கால ஓட்டத்தில் மாறுதல்கள்
தவிர்க்க இயலாதவை. மாறுதலுக்கு எதிராக
வீணே மீசையை முறுக்கத் தேவையில்லை.

4) தொல்காப்பியர் காலத்தில் வழங்கி வந்த ஆவணிப்
புத்தாண்டு பின்னர் சித்திரையாக மாற்றம் பெற்றது
போல, சித்திரைப் புத்தாண்டும் தைப்புத்தாண்டாக
மாற்றம் பெறுவது காலத்தின் கட்டாயம்.

5) தமிழ்ச் சமூகம் மிகுதியும் வேட்டுவச் சமூகமாக
இருந்த காலத்தில், ஆவணிப் புத்தாண்டு வழக்கில்
இருந்தது. வேட்டுவச் சமூகம் கால்நடை வளர்ப்புச்
சமூகமாகவும் பின்னர் வேளாண்மைச் சமூகமாகவும்
மாறிய காலத்தில் சித்திரை மற்றும் தைப்புத்தாண்டுகள்
வழக்கில் இருந்தன.

6) தமிழ்நிலம் ஒரேவகைப்பட்டதாக அன்று இருந்ததில்லை.
குறிஞ்சி முல்லை  மருதம் நெய்தல் பாலை ஆகிய
ஐந்திணைகளின் நிலமாகவே தமிழ்நாடு இருந்தது.
இந்த ஐந்து நிலங்களிலும் ஒரே காலக்கட்டத்தில்
ஒரே புத்தாண்டு என்ற வழக்கு இல்லை. வெவ்வேறு
நிலங்களில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு
புத்தாண்டுகள் இருந்தன.

6) சித்திரையே தையோ, இவையெல்லாம் ஒரு
அடிப்படைக் குறிப்பே (reference point) அன்றி வேறில்லை.
இந்த உண்மை அறிவினில் உறைதல் வேண்டும்.

7) இறுதி முடிவு இதுவே. அ) தையும் சித்திரையும்
பண்பாட்டுப் புத்தாண்டுகளாகத் தொடர்ந்து
இருத்தல் வேண்டும். ஆவணிப் புத்தாண்டு கால
ஓட்டத்தில் வழக்கு வீழ்ந்து விட்டது. உலகியலுக்கும்
உற்பத்திசார் வாழ்வியலுக்கும் அறிவியல் புத்தாண்டு
ஏற்கப் பட்டு விட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------

மதங்கள் மண்டியிட்டன!
அறிவியல் அதிகாரம் பெற்றது!
அறிவியல் புத்தாண்டு உருப்பெற்றது!
--------------------------------------------------------------------------

ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய கிறிஸ்து
சகாப்தம் (Christian era) என்ற மதச்ச்சார்பு உடைய
ஆண்டுக்  கணக்கீடு மாற்றப்பட்டு விட்டது.
இன்று COMMON ERA எனப்படும் பொது சகாப்தம்
வந்து விட்டது. இந்த மாற்றம் மக்களின் சிந்தனையில்
உறைக்க வேண்டும்.

பொது சகாப்தத்தில் எந்த மதத்திற்கும் இடமில்லை.
இதை எந்தப் பாதிரியாரோ போப்பாண்டவரோ
உருவாக்கவில்லை. இது அறிவியல் அறிஞர்களால்
உருவாக்கப் பட்டது.

ஆண்டுக் கணக்கீடு, காலம் நேரம் ஆகியவற்றில்
தேவையான திருத்தங்கள் செய்யும் உரிமை
ஆகிய எல்லாவற்றையும் இன்று அறிவியல் கையில்
எடுத்துக் கொண்டது. மதத் தலைவர்களின் கையில்
இருந்து அதை அறிவியல் பிடுங்கி கொண்டது.
இதனால்தான் 2016ஆம் ஆண்டின் இறுதியில்
ஒரு வினாடி நேரத்தைக் கூடுதலாகச்
சேர்க்க முடிந்தது.

எனவே இனியும் அதை பழைய பெயரில் "ஆங்கிலப்
புத்தாண்டு" என்று அழைப்பது குழப்பத்தையே தரும்.
அதை அறிவியல் புத்தாண்டு என்றோ பொது சகாப்தம்
என்றோ மக்கள் அழைக்கத் தலைப்பட  வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------
ஆரியனும் இல்லை; பார்ப்பானும் இல்லை. சித்திரைப்
புத்தாண்டை அறிவியல் அடிப்படையில் உருவாக்கியவன்
தமிழன். ஆரியன் அல்ல. SUMMER SOLSTICE எனப்படும்
கோடைக்கால கதிர்த்திருப்பத்தின் அடிப்படையில்
சித்திரைப் புத்தாண்டை உருவாக்கியவன் தமிழன்.
இந்த உண்மையை உணர்தல் வேண்டும். அடுத்து
இது ஆரிய--திராவிட சர்ச்சைக்கான கட்டுரை அல்ல.
இது அறிவியல் கட்டுரை. எனவே சித்திரையும் தையும்
ஆவணியும் தமிழரின் புத்தாண்டுகளே. அவை
நமது பண்பாட்டுப் புத்தாண்டுகள் ஆகும்.
---------------------------------------------------------------------------------------------
எமது கட்டுரை சித்திரைக்கு எதிரானது அல்ல. தமிழன்
சித்திரைப் புத்தாண்டை உருவாக்கினான், ஏற்றான்,
ஏற்று ஒழுகினான் என்பன வரலாற்று உண்மைகள்.
இவற்றை ஏற்க மறுத்துப் பயனில்லை. அதே நேரத்தில்,
கால ஓட்டத்தில், அறிவியல் வளர்ச்சியின் விளைவாக,
ஏற்பட்டுள்ள மாறிய புதிய சூழலில், கடுங்கோடையாகிய
சித்திரையை ஆண்டுத் தொடக்கமாகக் கொள்ளல்
வறட்டுப் பிடிவாதம் ஆகும்.
**
எப்படியும் சித்திரையும் சரி, தையும் சரி, உற்பத்தி
சார்ந்த புத்தாண்டுகளாக இருக்கப் போவதே இல்லை.
அவை பண்பாட்டு அடையாளங்களாக மட்டுமே
எஞ்சி நிற்க இயலும். அவற்றை ஏற்பதில் தயக்கம் என்ன?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக