புதன், 11 ஜனவரி, 2017

மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில்
பொங்கல் அண்மைக் காலத்தில் இருந்ததே இல்லை!
----------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
நாடு  முழுவதும் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு
அறிவிக்கப்படும்  விடுமுறை நாட்கள் பெரிய மாற்றமின்றி
அப்படியே நீடித்து வருகின்றன. 1970களின் இறுதியில்,
முதல் முறையாக விடுமுறை நாட்கள் அனைத்தும்
ஊதியத்துடன் கூடியவையாக (paid holidays) அறிவிக்கப்
பட்டன. அதாவது விடுமுறை நாட்களில் பணிபுரியும்
ஊழியர்களுக்கு மிகுதிநேரப்படி (overtime allowance)
வழங்கப்பட்டது. 24 மணி நேரமும் இயங்கும் ரயில்வே,
தொலைபேசி உள்ளிட்ட துறைகளின் பல லட்சக் கணக்கான ஊழியர்களுக்கு இது பெரிதும் பயனளித்தது.
இதைத் தொடர்ந்து மொத்த விடுமுறைகளின் எண்ணிக்கை
சிறிது குறைக்கப்பட்டு 18 ஆனது.

பின்னர் ராஜிவ் காந்தி பிரதமரானதும், 1985இல் மத்திய அரசு
அலுவலகங்களில் ஐந்து நாள் வேலைமுறையைக்
கொணர்ந்தார். இதன் விளைவாக ஓராண்டில் 104 விடுமுறைகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்தன. ஆரம்பத்தில்
ஓராண்டுக்கு 15 நாட்களாக இருந்த ஊழியர்களின் தற்செயல் விடுப்பு (casual leave) இடையில் 12 ஆகக் குறைந்து தற்போது
8 என்பதாக நிற்கிறது. ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள்
மற்றும் ஐந்து நாள் வேலை ஆகியவையே இதற்குக்
காரணங்கள்.

இத்தகைய மாற்றங்களை மத்திய அரசு தன்னிச்சையாகச்
செய்து விடுவதில்லை. மத்திய ஊதியக் குழுக்களின்
பரிந்துரைகள் மற்றும் அரசு-ஊழியர் கூட்டு ஆலோசனைக்
குழுவில் (Joint Consultative Machinery) ஊழியர் தரப்பு முன்வைக்கும்
கோரிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்தே மாற்றங்கள்
செய்யப்படும்.

ஐந்தாவது ஊதியக்குழுவின் தலைவரான நீதியரசர்
ரத்தினவேல் பாண்டியன் விடுமுறைகள் குறித்த ஒரு
புரட்சிகரமான பரிந்துரையைச் செய்தார். தேசிய விடுமுறை
நாட்கள் மூன்றைத் தவிர (சுதந்திர நாள், குடியரசு நாள்,
மகாத்மா காந்தி பிறந்த நாள்) பிற விடுமுறைகள்
அனைத்தையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும்,
விரும்பும் ஊழியர்கள் எடுத்துக் கொள்ளும் விதத்தில்
அவற்றை விருப்ப விடுப்பாக (Restricted Holidays) மாற்ற
வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். ஆனால்
அப்போதைய பிரதமர் ஐ கே குஜ்ரால் இப்பரிந்துரைகளை ஏற்கவில்லை.

இந்தச் சுருக்கமான பின்னணியுடன், பொங்கல் விடுமுறை
குறித்த சர்ச்சை பற்றிப் பரிசீலிப்போம்.

மத்திய அரசில் மொத்தம் 17 மூடிய விடுமுறைகள்
(Closed Holidays) உண்டு. இவை அரசிதழ் விடுமுறைகள்
(Gazetted Holidays) என்றும் கட்டாய விடுமுறைகள் என்றும்
வெவ்வேறு பெயர்களில் வழங்கப் படுகின்றன.

மேற்கூறிய 17 விடுமுறைகளில் மத்திய அரசு
14 விடுமுறைகளை மட்டுமே அறிவிக்கும். மீதி மூன்று
விடுமுறைகளை, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள,
மத்திய அரசு ஊழியர் நலக்குழு
(Central Govt Employees Welfare Coordination Committee) முடிவு செய்யும்.
ஊழியர்களின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும்
அடங்கிய இந்த நலக்குழு ஒரு மூத்த அதிகாரியின்
தலைமையில் இயங்கும்.

ஆண்டுதோறும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களிலேயே
அடுத்த ஆண்டிற்கான 14 விடுமுறைகளின் பட்டியலை
மத்திய அரசின் ஊழியர் நலத்துறை (Dept of Personnel and Training)
அறிவித்து விடும். இவற்றுடன் மாநில அளவிலான
மூன்று விடுமுறைகளைத் தெரிவு செய்து மொத்தம் 17
மூடிய விடுமுறைகளின் முழுமையான பட்டியலை
நவம்பர் மாத இறுதியிலேயே  ஊழியர் நலக்குழு
அறிவித்து விடும். கடைசி நிமிடப் பரபரப்புக்கு இதில்
இடமே கிடையாது.

கடந்த பத்தாண்டுகளாக (2007-2017), மத்திய அரசு வழங்கிய
14 விடுமுறைகளின் பட்டியலைக் கீழே காண்க.
இது மன்மோகன் அரசிலும் இன்றைய மோடி அரசிலும்
மாறாமல் அப்படியேதான் உள்ளது.

அ) தேசிய விடுமுறைகள் =3
ஆ) இஸ்லாமியப் பண்டிகைகள்= 4 (பக்ரீத், ரம்ஜான், மொஹரம்,
மீலாது நபி)
இ) கிறிஸ்துவப் பண்டிகைகள் =2 (கிறிஸ்துமஸ், நல்ல வெள்ளி)
ஈ) இந்து மதப் பண்டிகைகள் =2 (தீபாவளி, தசரா)
உ) புத்த மதப் பண்டிகை =1 (புத்த பௌர்ணமி)
ஊ) சீக்கிய மதப் பண்டிகை= 1(குருநானக் ஜெயந்தி)
எ) சமண மதப் பண்டிகை= 1 (மகாவீரர் ஜெயந்தி)
ஆக மொத்தம் =14.

மீதி 3 விடுமுறைகளை பின்வரும் பட்டியலில் இருந்து
அந்தந்த மாநிலத்தின் ஊழியர் நலக்குழு தெரிவு செய்யும்.

1)ஓணம் 2) பொங்கல் 3) மகர சங்கராந்தி 4) வசந்த பஞ்சமி
5) தசரா  (9 அல்லது 10ஆம் நாள்) 6) ஹோலி 7) விநாயக சதுர்த்தி
8) ஜென்மாஷ்டமி 9) ராம நவமி 10) ரத யாத்ரா
11)மகா சிவராத்திரி 12) விஷு அல்லது உகாதி போன்ற
அந்தந்த மாநிலத்தின் புத்தாண்டுப் பிறப்பு.

2016ஆம் ஆண்டில் பொங்கல் (வியாழன்), ஜென்மாஷ்டமி
(வியாழன்),விநாயகர் சதுர்த்தி (திங்கள்) ஆகிய மூன்று
விடுமுறைகளை ஊழியர் நலக்குழு தெரிவு செய்தது.

2017ஆம் ஆண்டில்  பொங்கல் (14.01.2017) இரண்டாம்
சனிக்கிழமை அன்று வருவதால், ஊழியர் நலக்குழு
பொங்கலைத் தவிர்த்துள்ளது. ஐந்துநாள் வேலை
காரணமாக, மத்திய அரசு அலுவலகங்களுக்கு
சனி, ஞாயிறு விடுமுறை ஆதலால், விடுமுறை
நாளன்று பொங்கல் வந்தமையால் நலக்குழு
அதைத் தெரிவு செய்யவில்லை. ஏற்கவே நீர் நிரம்பியுள்ள
குடத்தில் மீண்டும் நீர் ஊற்றுவது அறிவுடைமை ஆகாது.

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் உள்ள மத்திய
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் பொங்கலை விடுமுறையாகத் தெரிவு செய்துள்ளது. இதற்குக் காரணம்
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஐந்து நாள் வாரம்
நடைமுறையில் இல்லை. அவர்களுக்கு சனிக்கிழமையும்
வேலை நாளே.    

அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒரு யூனியன் பிரதேசம்.
இங்குள்ள ஊழியர் நலக்குழு பொங்கலை விடுமுறையாக
அறிவித்துள்ளது.

மேற்கூறிய உதாரணங்கள் தெரிவிப்பது என்ன?
பொங்கலுக்கு விடுமுறை வேண்டுமா வேண்டாமா
என்று தீர்மானிப்பது யார்? மத்திய அரசு அல்ல.
அந்தந்த மாநிலத்தில் உள்ள, ஊழியர்களின் நலக்குழுதான்
தீர்மானிக்கிறது.

மத்திய அரசு வழங்கும் பட்டியலில் உள்ள
14 விடுமுறைகளிலும் மாநிலங்களின் ஊழியர்
நலக்குழுக்கள் எவ்வித மாற்றத்தையும் செய்ய
முடியாது. இந்த 14இல் ஒன்றிரண்டு விடுமுறைகள்
ஞாயிறுகளில் வந்தாலும், அதை ஊழியர் நலக்குழு
அப்படியேதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரே பண்டிகை ஓராண்டில் இருமுறை வந்த நிகழ்வுகளும் உண்டு.
உதாரணமாக, 2015ஆம் ஆண்டில் மீலாது நபி
04.01.2015, 23.12.2015 ஆகிய இரு நாட்களிலும் வந்து
இரண்டு நாட்களுமே விடுமுறையாக அறிவிக்கப் பட்டன.

தற்போது பொங்கலுக்கு விடுமுறை வேண்டும் என்று
தமிழகத்தில் எழுந்த அரசியல் நிர்ப்பந்தங்களின்
காரணமாக ஊழியர் நலக்குழு, உத்தரவைத் திருத்தி,
தசராவை  (28.09.2017, வியாழன்) மூடிய விடுமுறையில்
இருந்து நீக்கி, அதனிடத்தில் பொங்கலை (14.01.2016 சனி) விடுமுறையாக அறிவித்து உள்ளது. காலங்காலமாக
ஊழியர்களும் அதிகாரிகளும் தங்களின் அதிகார
வரம்புக்குள் முடிவு செய்து கொள்ளும் நடைமுறையில்,
தற்போது நிகழ்ந்துள்ள அரசியல்  தலையீடு  அப்பட்டமான உரிமைமீறல் என்று  ஊழியர்கள் நடுவே அதிருப்தி
நிலவுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் யாரும்
பொங்கலுக்கு எதிரானவர்கள் இல்லை; பொங்கல்
கொண்டாடாதவர்களும் இல்லை. அவர்களின் தமிழ்
உணர்வில் பழுதில்லை. ஒரு உறைக்குள் ஒரு கத்தி
என்பது போல, ஒரு நாளுக்கு ஒரு விடுமுறை மட்டுமே
என்ற வலுவான தர்க்கத்தை (robust common sense)  பின்பற்றியது
அவர்களை முச்சந்தியில் நிறுத்தி உள்ளது.

ஊழியர் நலக்குழு தனது உத்தரவைத்  திருத்தியதைத்
தொடர்ந்து கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல்
இடம் பெற்று விட்டதாக செய்திகள் பரவி வருகின்றன.
இது உண்மையல்ல. மத்திய அரசின் கட்டாய விடுமுறைப்
பட்டியல் மாற்றமின்றி அப்படியேதான் நீடிக்கிறது; அதில்
எப்போதும் போலவே பொங்கலுக்கு இடமில்லை.
குறைந்தது 2007 முதல் 2017 வரையிலான பத்தாண்டுகளில்
என்றுமே பொங்கல் கட்டாய விடுமுறைப் பட்டியலில்
இருந்ததே இல்லை. 

விடுமுறைகளைத் தீர்மானிக்கும் ஊழியர் நலத்துறைக்கு,
கடந்த கால வரலாற்றில், தமிழர்களான ப சிதம்பரமும்,
புதுவை நாராயணசாமியும்  அமைச்சர்களாக  இருந்துள்ளனர்.
ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1986-89
காலக்கட்டத்தில் ப சிதம்பரம் அமைச்சராக இருந்தார்.
அப்போதெல்லாம் பொங்கல் விடுமுறை குறித்து
எவ்விதச் சிக்கலும் எழவில்லை. 

ஐமுகூ-2 ஆட்சிக்காலத்தில் மன்மோகன் பிரதமராக
இருந்தபோது, புதுவை நாராயணசாமி 2009-2014களில் 
ஐந்தாண்டுகள் அமைச்சராக இருந்தார். அப்போதும்
பொங்கல் மத்திய அரசின் கட்டாய விடுமுறைப்
பட்டியலில் இல்லை. அதற்கான கோரிக்கை எதுவும்
எவராலும் எழுப்பப் படவும் இல்லை.

இன்றைய மோடி அரசில் ஊழியர் நலத்துறையை
பிரதமரே தம் பொறுப்பில் வைத்துள்ளார். துறையின்
இணையமைச்சராக டாக்டர் ஜிதேந்திர சிங் உள்ளார்.
பொங்கல் விடுமுறை குறித்த எந்தக் கோரிக்கையும்
இதுவரை அமைச்சருக்குப் போய்ச்சேர்ந்ததாகத்
தெரியவில்லை.

இச்சிக்கலுக்கான நிரந்தரத் தீர்வு எளிமையானது;
அதை உடனடியாகச் செயல்படுத்த இயலும். 
ஊழியர் நலக்குழுக்கள் தெரிவு செய்ய அனுமதிக்கப்
பட்டுள்ள விடுமுறைகளின் எண்ணிக்கையை
மூன்றிலிருந்து பதினான்காக உயர்த்த வேண்டும்.
தேசிய விடுமுறைகளை மட்டுமே மத்திய அரசு
அறிவிக்க வேண்டும். மீதமுள்ள விடுமுறைகள்
குறித்து, ஊழியர் நலக்குழுக்களே முடிவெடுக்குமாறு
விட்டு விட வேண்டும். அந்தந்த மாநில அரசுகளோடு
கலந்து, ஊழியர் நலக்குழுக்கள் முடிவெடுக்க வேண்டும்.
இதன் மூலம் மத்திய மாநில அரசுகளின் விடுமுறைகளில்
ஓர் ஒருபடித்தான தன்மை ஏற்படும்.

கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் இடம்
பெறாமல் போகும் அவலநிலை  அப்போதுதான்
முடிவுக்கு வரும்.
************************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக