திங்கள், 16 ஜனவரி, 2017

இழைக்கொள்கை தோன்றக் காரணம்:
----------------------------------------------------------------------------
தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பது பழமொழி.
அதுபோல தற்செயல் நிகழ்வாக அல்லாமல், ஒரு தேவை கருதித்தான் இழைக்கொள்கை பிறந்தது. நவீன அறிவியலின் உச்சமாகக் கருதப்படுகிற, பிரபஞ்சத்தை விளக்குகின்ற,
தரமாதிரிச் சித்திரத்தில் (standard model) ஈர்ப்புவிசை உள்ளடங்கவில்லை. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப்
பொருட்களையும் எல்லா விசைகளையும் ஒருங்கிணைக்கிற
மாபெரும் ஒருங்கிணைப்புக் கொள்கையை (Grand UnificationTheory)
உருவாக்குவதில் நவீன இயற்பியல் முனைப்புடன்
செயல்பட்டு வருகிறது. ஐன்ஸ்டினின் கனவுக் கொள்கை இது.

மாபெரும் ஒருங்கிணைப்புக் கொள்கையானது
அனைத்துக்குமான கொள்கை (Theory of Everything) என்றும் அழைக்கப் படுகிறது. இக்கொள்கையை உருவாக்குவதில்,
ஒரே முட்டுக்கட்டை என்னவென்றால்,  தரமாதிரிச் சித்திரத்தில்
ஈர்ப்புவிசையை உள்ளடக்க முடியாமல் இருப்பதுதான்.
இந்தக் குறைகள் இழைக்கொள்கையில் நீக்கப்
படுகின்றன. ஈர்ப்புவிசை உட்பட அனைத்து விசைகளும்  இழைக்கொள்கையில் உள்ளடங்குகின்றன.
அனைத்துக்குமான கொள்கையை  உருவாக்கிட,
இழைக்கொள்கை ஒரு வேட்பாளராக (candidate theory) நிற்கிறது.

நவீன இயற்பியலின் இரு மாபெரும் கொள்கைகள்
பொதுச்சார்பியலும் குவான்டம் விசையியலும். இவை
இரண்டுக்கும் இடையில் இணக்கமில்லை. தனித்தனியாகச்
செயல்படும்போது, வெற்றிகரமானவையாக இருக்கும்
இவ்விரு கொள்கைகளும், ஒன்றாகச் சேர்ந்து
செயல்படும்போது படுதோல்வி அடைகின்றன.

சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள், விண்மீன்திரள்கள்
என்று பேரளவிலான (macro) பொருட்களை விளக்கும் கொள்கை
பொதுச்சார்பியல். இதற்கு மாறாக, அணுக்கள், துகள்கள்
என்று நுண்ணிய (micro) பொருட்களை விளக்கும் கொள்கை
குவான்டம் விசையியல். தத்தம் செயல்பாட்டுப் பிரதேசங்களில்
இவை சரியாக இருக்கின்றன. அதாவது பேரளவிலான
பகுதிகளில் பொதுச் சார்பியலும், நுட்பமான பகுதிகளில்
குவாண்டம் விசையியலும் சரியாக உள்ளன என்று
எல்லாப் பரிசோதனைகளும் மெய்ப்பித்துள்ளன.

அப்படியானால் சிக்கல் எங்கே வருகிறது? இவை இரண்டையும்
சேர்த்துச் செயல்படுத்தும் இடங்களில் சிக்கல் தோன்றி விடுகிறது.
உதாரணமாக, கருந்துளைகளில் (black holes) இவற்றைச் செயல்படுத்தும்போது முற்றிலும் தவறான சமன்பாடுகள்
கிடைக்கின்றன.

கருந்துளை என்பது பிரும்மாண்டமான நிறை, அதி நுண்ணிய
இடத்தில் திரண்டு நிற்பதாகும். ஒரு குண்டூசி முனையில்,
மொத்தப் பிரபஞ்சத்தின் நிறையும் திரண்டு நிற்பதாகக்
கற்பனை செய்து கொள்ளுங்கள். அதுதான் கருந்துளை.
ராட்சசத் தனமான நிறையும் அதி நுண்ணிய இடமும்
(macro and micro) ஒருங்கே கொண்டுள்ள கருந்துளைகளில்
பொதுச்சார்பியல் அல்லது குவான்டம் விசையியல் என்று
ஏதோ ஒரு கொள்கையைச் செயல்படுத்த முடியாது.
இரண்டு கொள்கைகளையும் சேர்த்துச் செயல்படுத்த
வேண்டும். ஏனெனில்,  பிரம்மாண்டமும் அதிநுட்பமும் ஒன்றாகச் சங்கமிக்கும் இடம் கருந்துளை. ஆனால், இரு கொள்கைகளையும்  ஒருங்கே செயல்படுத்தும்போது, முற்றிலும்
தவறான முடிவுகள் கிடைக்கின்றன. இதன் பொருள் என்ன?
ஒன்று பொதுச்சார்பியல் சரியானதாக இருக்க வேண்டும்;
அல்லது குவாண்டம் விசையியல் சரியானதாக இருக்க
வேண்டும்; இரண்டும் சரியானதாக இருக்க முடியாது என்பதே.

பசியோடு இருக்கும் ஒருவருக்கு இலை நிறையச் சோறு
வைக்கப் படுகிறது. அடுத்து கிண்ணம் நிறையக் குழம்பும்
வைக்கப் படுகிறது. சோற்றில் குழம்பை ஊற்றிப் பிசைந்து
சாப்பிட முற்படுகிறார் அவர். அப்போது பரிமாறுபவர்
அவரிடம், " ஒன்று வெறுஞ்சோற்றைச் சாப்பிடுங்கள்;
அல்லது குழம்பை மட்டும் குடியுங்கள்; இரண்டையும்
சேர்த்துச் சாப்பிடக் கூடாது; அப்படிச் சேர்த்துச் சாப்பிட்டால்,
சாப்பாடு விஷமாகி விடும்" என்று சொன்னால் எப்படி
இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அத்தகைய
ஒரு விசித்திரமான நிலைதான் பொதுச் சார்பியலையும்
குவான்டம் விசையியலையும் சேர்க்கும்போது உண்டாகிறது.


பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் இந்த மாபெரும் குறைபாட்டை
இழைக்கொள்கை நீக்கி விடுகிறது. உண்மையில் இக்குறையை
நீக்கும் பொருட்டே இழைக்கொள்கை பிறந்தது. இழைக்   கொள்கையில் இவ்விரு கொள்கைகளுக்கும் இடமளிக்கப்
பட்டுள்ளது. அங்கு அவை இணக்கத்துடன் செயல்படுகின்றன.

இழைக்கொள்கையின் இன்றையநிலை!
--------------------------------------------------------------------------
இருபத்தியோராம் நூற்றாண்டின் இயற்பியல் என்பது
இழைக்கொள்கையே. ஆரம்பத்தில் மையநீரோட்ட
இயற்பியலாளர்களின் கவனத்தைப் பெறாத இழைக்கொள்கை
தற்போது அதைப் பெற்றுள்ளது. போசானிய இழைக்கொள்கை
என்று தொடங்கி, இன்று "எம்" கொள்கையாக பரிணாம
வளர்ச்சி அடைந்திருக்கிறது இழைக்கொள்கை.

என்றாலும் இக்கொள்கையின் முன்மொழிவுகள் எவையும்
இந்த நிமிடம் வரை பரிசோதனைகள் மூலம் மெய்ப்பிக்கப்
படவில்லை. இக்கொள்கை கூறும் கிராவிட்டான் என்ற துகள்
கூட, இன்றுவரை பரிசோதனை மூலம் கண்டறியப்படவில்லை.
எனவே இக்கொள்கை ஒரு கருதுகோள் என்ற அளவில்தான்
இன்றும் நீடிக்கிறது. அதேநேரத்தில் பரிசோதனை முடிவுகள்
மூலம் இக்கொள்கை மெய்ப்பிக்கப் பட்டால், அறிவியல் உண்மையாக மாறும்.            


    

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக