திங்கள், 9 ஜனவரி, 2017

சேடிப் பெண்ணுக்கு இடமளிக்காத
ஸ்டாலினின் அந்தப்புரமும்
கலைஞரின் கம்பீரமும்!
----------------------------------------------------------------
புலவர் வீரை பி இளஞ்சேட்சென்னி
----------------------------------------------------------------
சம்பளத்துக்கு அமர்த்தப் படும் பணியாளரைப்
போன்றவரே கட்சிப் பேச்சாளர். அதிலும் நாஞ்சில்
சம்பத் தன்னை ஒரு ஊழியராக மட்டுமே கருதி
வருபவர். அதிகாரப்போட்டி நடக்கும் களத்திற்கு
வெகுதொலைவிலேயே தன்னை எப்போதும்
நிறுத்திக் கொள்பவர். ஜெயலலிதா மறைவுக்குப்
பின்னான புதிய சூழலில் தான் ஒரு MISFIT ஆகிவிடக்
கூடும் என்று கணித்த நாஞ்சில், திமுகவுக்கு
சமிக்ஞைகளை அனுப்பினார்.

தன் அந்தப்புரத்தில் ஒரு சேடிப்பெண்ணாக நாஞ்சிலை
ஸ்டாலின் அமர்த்திக் கொள்ள வேண்டும் என்று
கூறியிருந்தோம். இதில் உள்ள சூட்சுமத்தை சராசரியான
திமுக தொண்டர்கள் உணரவில்லை. அதில் பழுதில்லை.
எல்லோருக்கும் புரிந்து விட்டால் அதன் பெயர்
சூட்சுமம் அல்ல.

கலைஞராக இருந்தால், நாஞ்சிலை தயக்கமின்றிக்
கழகத்தில் இணைத்திருப்பார். தன்னை இழித்தும்
பழித்தும் பேசியவன் தன் காலடியில் பணிந்து நிற்க
முன்வரும்போது, அதை மூடத்தனமாக மறுப்பவர்
அல்லர் கலைஞர்.

தன்னை இழித்தும் பழித்தும் பேசுபவர் அனைவருக்கும்
இந்தக் கதிதான் என்ற உண்மையை உலகிற்கு
உணர்த்தும் அரிய வாய்ப்பல்லவா அது! மிகக் குறைவான
ராசதந்திரம் உடையோரும்கூட இத்தகைய வாய்ப்பை
மறுக்க மாட்டாரே! அப்படியிருக்க, உலக வரலாறு
கண்டும் கேட்டுமிராத  ராசதந்திரியான கலைஞரா
இத்தகைய வாய்ப்புகளை மறுப்பவர்!

ஆர்.எம்.வீரப்பனை விடவா வேறு ஒருவர் கலைஞரைப்
பழித்திருப்பார்! அந்த வீரப்பன் கடைசியில் என்ன
ஆனார்? அறிவாலயத்தில் மணி அடிக்கும் வேலை
கிடைத்தால் மகிழ்வேன் என்று கூறவில்லையா?
பி.ஹெச்.பாண்டியன், காளிமுத்து, க சுப்பு என்று
பல்லோர் முனியப் பயனில சொல்லியோர் கலைஞரின்
காலடிகளை ஈசன் எந்தை இணையடி நீழலே என்று
போற்றி பாடவில்லையா, பின்னர் வெளியேறினர்
என்ற போதிலும்? 

பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று தன்
நெஞ்சோடு கிளத்த கலைஞரால் எப்படி முடிகிறது?
அது அவரின் கம்பீரத்தால் முடிகிறது. கலைஞரும்
கம்பீரமும் பிரிக்க முடியாதவை.

தமிழக முதல்வர்களில் வெகுசிலரே கம்பீரம்
வாய்க்கப் பெற்றவர்கள். ராஜாஜி, அண்ணா, கலைஞர்,
ஜெயலலிதா ஆகியோரே கம்பீரம் உடையவர்கள்.
காமராசர், ராமச்சந்திர மேனன், ஓ பன்னீர் செல்வம்
ஆகியோரிடம் கம்பீரம் இருந்தது கிடையாது,
எல்லா முதல்வர்களிலும் அசாத்திய கம்பீரம்
உடையவர் அறிஞர் அண்ணாவே.

தன் கட்சியிலும் ஆட்சியிலும் தான் எதிர்கொள்ள
நேர்கிற அனைத்துச் சிக்கல்களுக்குமான தீர்வு
தன் அறிவெல்லையின் வரம்புக்குள் அடக்கத்துடன்
அமர்ந்திருக்கிறது என்று நம்பியவர் அறிஞர்
அண்ணா.

எல்லையற்ற அறிவும் அதனால் விளைந்து செழித்த
பிரம்மாண்டமான ஆளுமையும் இயல்பாகவே
அண்ணாவுக்கு கம்பீரத்தை வழங்கின. கம்பீரம்
என்பதே விசாலமானதும் ஆழமானதுமான
ஆளுமையின் குழந்தைதானே.

மேனன் மற்றும் காமராசரின் ஆளுமை அவர்தம்
அறிவெல்லையின் மிகவும் குறுகிய வரம்புக்குள்
சிறைப்பட்டுக் கிடந்தது. எனவே அவர்களிடம்
கம்பீரம் வெளிப்பட இயலாமல் போனது. மேனனிடம்
ஆணவம்,செருக்கு, சேடிசம், பாசிசம் ஆகிய
தன்மைகள் வெளிப்பட்டனவே தவிர, ஒருபோதும்
கம்பீரம் வெளிப்பட்டதில்லை.

மேனனின் இழிந்த பண்புகளை ஜெயலலிதா
சுவீகரித்துக் கொண்ட போதிலும், அவரிடமும்,
தன் ஆளுமை நிமித்தமாக, கம்பீரம் குடிகொண்டு
இருந்தது.

33 ஆண்டுகளாக சேடிப்பெண்ணாகவும் சிசுரூஷை
செய்பவராகவும் இருந்த சசிகலாவின் ஆளுமையில்
கம்பீரத்துக்கு இடமேயில்லை. மாறாக பேராசையும்
பெருநுகர்வு வெறியுமே  உள்ளன.

அண்ணாவின் பன்முகந் தழுவிய (VERSATILE) அறிவாற்றல்
கலைஞரிடம் குறைந்திருந்த போதிலும், தமிழ்
இலக்கியம் என்னும் கரைகாணாக் கடலில்
நாவாய் செலுத்தியவர் கலைஞர்.எனவே அவரிடமும்
கம்பீரம் இயல்பானதாக இருந்தது.

கலைஞரின்  கம்பீரத்திற்குக் கட்டியம் கூறும் ஒரு நிகழ்வு
நினைவில் நிழலாடுகிறது. சட்ட மன்றத் தேர்தலுக்கான
வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு அது.
சென்னை சேத்துப்பட்டில் கூட்டம். முதல் பட்டியலை
வெளியிட்டு அமர்ந்திருக்கிறார் கலைஞர்.
அதில் க சுப்புவின் பேர் இல்லை. அப்போது அவர்
திமுகவில்தான் இருந்தார்.

அவருக்கு இடம் கிடப்பது கடினம். ஏனெனில் மேனன்
காலத்தில் நடந்த அண்ணாநகர் இடைத்தேர்தலில்,
கழகத்திற்குப் பெருந்துரோகம் செய்யத் திட்டமிட்டவர்
க சுப்பு. கலைஞருக்கு முன்கூட்டியே தகவல்
கிடைத்ததும், அவர் சோ மா ராமச்சந்திரனை
நியமித்து கழகத்திற்கு ஏற்பட இருந்த தோல்வியைத்
தவிர்த்தார். எனவே சுப்புவுக்கு இடமில்லை என்பது
நியாயமே.

பட்டியலில் தன் பெயர் இல்லை என்றதுமே,
மேடையில் இருந்த கலைஞரை நோக்கிச் சென்ற
சுப்பு, கலைஞரிடம் பாரதியின் ஒரு பாடல் வரியைக்
கூறினார்.

"நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப்
புழுதியில் எறிவதுண்டோ" என்கிறார் சுப்பு.
 நெகிழ்ந்து போன கலைஞர் உடனே அறிவிக்கிறார்:
"ஒரு பெயர் விடுபட்டு விட்டது; அதைச் சேர்த்துக்
கொள்ளுங்கள்: வில்லிவாக்கம் தொகுதி, வேட்பாளர்
க சுப்பு" என்று.

இதற்குப் பெயர்தான் கம்பீரம்! எனவேதான் அவர் 
கம்பீரக் கலைஞர். (இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்ட
"கம்பீரக் கலைஞர் எங்கள் கருணாநிதி" என்ற நாகூர்
அனிபாவின் பாடலை வாசகர்கள் கேட்கலாம்.

அதிமுக இலக்கியவாதி ஒருவர் ஒரு கட்டுரையில்
ஒரு பாடலை மேற்கோள் காட்டி இருந்தார். "ஒங்கலிடை
வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி" என்று தொடங்கும்
அந்தப் பாடலை மேற்கோள் காட்டியவர் அப்துல்லா
அடியார். ( நீரோட்டம் ஏட்டின் ஆசிரியர்), அவ்வளவுதான்.
அந்தப் பாடலோடு அவரின் அரசியல் வாழ்க்கை
முடிவுக்கு வந்தது. அந்தப்பாடல் கருணாநிதியைப்
புகழ்கிற பாட்டு என்று எவனோ ஒரு ஈனம்
மேனனிடம் போட்டுக் கொடுத்து விட்டான். தற்குறி
மேனன் அத்தோடு அடியாரின் கதையை முடித்தும்
விட்டார். மேனனிடம் எங்கே இருந்தது கம்பீரம்?

தற்போது ஸ்டாலின் கழகத் தலைவராக உயர்ந்து
இருக்கிறார். கலைஞரிடம் வெளிப்பட்ட கம்பீரம்
ஸ்டாலினிடம் எதிர்பார்க்கப் படும். சேடிப்பெண்
நாஞ்சிலை தன் அந்தப்புரத்தில் பிடித்துக்
கட்டியிருந்தால் அவரிடமும் கம்பீரம்  வெளிப்பட்டு
இருக்கும். சரி, போகட்டும். அடுத்து வரும்
நிகழ்வுகளில் அவர் தன்னை நிரூபிக்கட்டும்.
*************************************************************              








      
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக