புதன், 11 ஜனவரி, 2017

ஜல்லிக் கட்டு தமிழர் பண்பாடே!
வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் ஜல்லிக் கட்டு!
-------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------------------------------------------------
தொழுவத்தில் இருந்த கன்றுக்குட்டி கட்டை அவிழ்த்துக் 
கொண்டு ஓடி வந்து விட்டது. தெருவில் அங்குமிங்கும் 
துள்ளிக் கொண்டு ஓடுகிறது.

"ஏல, அந்தக் கண்ணுக்குட்டியப் பிடிச்சுட்டு வால" என்றார் 
எங்க அய்யா. "கயத்தத் தாங்க" என்றேன். "கண்ணுக்குட்டிக்கு 
என்னலே கயத்தக் கேக்க, போய்ப் பிடிச்சுட்டு வால என்றார் 
எங்க அய்யா. நான் பிடிக்க முயன்றேன். எங்கள் தெரு நீண்ட 
தெரு. அதில் அங்குமிங்கும் ஓடுகிற  கன்றுக்குட்டியை 
என்னால் பிடிக்க முடியவில்லை. 

அப்போது எனக்குப் பன்னிரண்டு வயது இருக்கும்.
கன்றுக்குட்டி எனக்கு வசப்படவில்லை. தெருவில் 
பரிதாபமாக நின்று கொண்டு இருந்தேன். கன்றுக் 
குட்டியைப் பிடிக்காமல் நான் வீட்டுக்குப் போனால்,
எங்க அய்யா என்னை சாட்டைக் கம்பாலேயே அடிப்பார்.

கடைசியில் தெருக்காரர்கள் பிடித்துக் கொடுத்தார்கள்.
நான் அடி வாங்காமல் தப்பித்தேன்.

ஒருமுறை மந்தைக்கு மேயப்போன எங்கள் கிடாரி 
(பசுங்கன்று) வயக்காட்டில் இறங்கி பயிரைத் தின்று 
விட்டது என்று கூறி அதைப் பிடித்து பவுண்டியில் 
அடைத்து விட்டான் வயக்காரன். சாயங்காலம் மேயப் 
போன மாடு திரும்பி வராததால். ஊரெல்லாம் தேடினோம்.
கடைசியில் பவுண்டியில் அடைபட்டு இருக்கலாம் என்று 
யோசித்து, எங்க அய்யா என்னிடம் ஆறணாவைக் 
கொடுத்து,
"ஏல, பவுண்டிலே நம்ம கிடாரி இருக்கான்னு பாத்து,
இருந்தாக் கூட்டிட்டு வால" என்றார்.

இப்போது நான் கொஞ்சம் பெரியவன். பதினாலு வயது.
ஆறணாவை வாங்கிக் கால்சட்டைப் பையில் போட்டுக் 
கொண்டு, பக்கத்து வீட்டு சாமியையும் (சேக்காளி)
கூட்டிக் கொண்டு அரை மைல் தூரத்தில் இருந்த 
பவுண்டிக்குப் போனேன். அங்கு எங்கள் கிடாரியைக் 
கட்டிப் போட்டு வைத்து இருந்தார்கள். 

"அவராதம் எவ்வளவுன்னு கேட்டுக் கிட்டு துட்டக் குடுலே,
எடுத்த எடுப்புலே ஆறணாவ எடுத்து நீட்டிராத"என்று 
அய்யா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. "எவ்வளவு 
அண்ணாச்சி தரணும்"னு கேட்டு துட்டக் கொடுத்து 
கன்னுட்டிய மீட்டுக் கொண்டு வந்தேன்.

நான் மாடு கன்றுகளோடு வளர்ந்தவன். எங்கள் வீட்டில் 
இருந்த ஒரு பசு மாட்டிடம் கடைசி வரை என்னால் 
பால் கறக்கவே முடியவில்லை.மாடு வளர்ப்பு 
என்பதில் மாடுகளை நமக்கு வசப் படுத்துவது என்பது 
மிக முக்கியமானது. 

இவ்வாறு மாடுகளை வசப் படுத்துவதைத் தான் மாட்டை 
அடக்குவது என்கிறார்கள். மாடு என்பது நன்கு 
பழக்கப் படுத்தப்பட்ட விலங்கு (highly domesticated animal)
சிறிது பயிற்சி பெற்றால் மாட்டை அடக்க முடியும்.
இங்கு அடக்குவது என்பதன் பொருள் துன்புறுத்துவது அல்ல, 
மாட்டை நம் வசப்படுத்துவதுதான். 

இந்தப் பண்பாட்டின் உச்சம்தான் இன்றைய ஜல்லிக் 
கட்டு. இது அன்றைய ஏறு தழுவதலின் இன்றைய வடிவம்.
மாடுகள் இருக்கும் வரை, மாடு வளர்ப்பு இருக்கும் வரை,
ஜல்லிக் கட்டும் இருக்கும்.

ஜல்லிக்கட்டு என்பதை சல்லிக்கட்டு என்று எழுதினால் 
வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சல்லிக்கட்டு 
என்றால் பண முடிச்சு என்று பொருள். பணமுடிச்சைக் 
கொம்பில் அணிந்த காளை என்று பொருள். இதை 
அன்மொழித்தொகை என்று தமிழ் இலக்கணம் கூறும். 

காலப்போக்கில் மாடு வளர்ப்பு அருகி விடுமானால்,
ஜல்லிக் கட்டும் உலர்ந்து உதிர்ந்து விடும்( will wither away).
பண்பாட்டுக் கூறுகளுக்கு எவரும் ஒரு யாந்திரிகச் சாவை 
விதிக்க முடியாது (Nobody can impose a mechanical death).
அவை உலர்ந்து உதிர்ந்து விடும் தன்மை கொண்டவை.

"அரசு என்பது உலர்ந்து உதிர்ந்து விடும் (state will wither away)
என்று எங்கல்ஸ் கூறியதை இங்கு நினைவு கூரவும்.
இதை எழுதும்போது கிளியோபட்ராவின் அழகு குறித்து 
"Äge cannot wither her beauty; nor custom stale her infinite variety"
என்று கூறியதும் நினைவுக்கு வருகிறது.

வாழ்க்கையில் என்றுமே மாடுகளோடு பழகாதவர்கள்,
மாடு வளர்க்காதவர்கள், ஒரு கன்றுக்குட்டி அவிழ்த்துக் 
கொண்டு ஓடினால் அதைப் பிடித்துக் கொண்டு வர 
முடியாதவர்கள் எல்லாம் ஜல்லிக்கட்டுக்குத் தடை 
விதிக்க வேண்டும் என்று கூறுவது எவ்வித நியாயமும் 
அற்றது. அவர்களுக்கு அந்த உரிமை கிடையாது.
*********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக