ஞாயிறு, 1 ஜனவரி, 2017

அறிவியல் புத்தாண்டு என்றால் என்ன?
அதற்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்குமான
வேறுபாடு என்ன?
அறிவியல் புத்தாண்டைக் கொண்டாட வேண்டுமா?
---------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
இப்பதிவு இந்தியத் திட்ட நேரம் (Indian Standard Time)
01:08:10 (01.01.2017) நேரத்திலும் மற்றும் UTC 07:38:10 pm
(31.12.2016) நேரத்திலும் பதியப் படுகிறது.

உலகம் முழுவதும் சொல்லி வைத்தாற்போல்,
ஒரே நேரத்தில் புத்தாண்டு பிறப்பதில்லை.
உலகிலேயே முதன் முதலாக, நியூசிலாந்து
புத்தாண்டாம் 2017ஐச் சந்தித்து விட்டது. அங்கு
இந்திய நேரப்படி, 31.12.2016 மாலை 4.30 மணிக்கே
புத்தாண்டு உதயமாகி விட்டது. நியூசிலாந்தின்
நேரம்  இந்தியாவை விட ஏழரை மணி நேரம் முன்னதாக
உள்ளது. நியூசிலாந்து எந்தக் கண்டத்தில் உள்ளது?
ஏழு கண்டங்களிலும் அடங்கவில்லை நியூசிலாந்து.
ஆஸ்திரேலேசியா (Australisia) என்ற கண்டத்தில்
உள்ளது நியூசிலாந்து. கீழ்நிலை வகுப்புப் பாடப்
புத்தகங்களில் இச்செய்தி இடம் பெற்றுள்ளதா?
வாசகர்கள் தெரிவிக்கலாம்.

நியூசிலாந்துக்கு அடுத்து ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு
2017 பிறந்து விட்டது. ஆஸ்திரேலிய நேரம்  இந்தியாவை
விட ஐந்து மணி நேரம் முன்னதாக உள்ளது.
அதாவது டிசம்பர் 31 இரவு 7 மணிக்கே, (இந்திய
நேரப்படி) ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்து விட்டது.

உலகில் ஒவ்வொரு நாட்டிலும் நேரம் மாறுபடுகிறது
என்பதைப்  பார்த்தோம். இதனால் நேரிடும் குழப்பத்தைத்
தவிர்க்கவே உலகப் பொதுநேரம் எனப்படும் UTC நேரம்
கடைப்பிடிக்கப் படுகிறது. (UTC =  Coordinated Universal Time).


ஆங்கிலப் புத்தாண்டு என்று  வழக்கில் நாம் கூறுவது
கிறிஸ்துவ சகாப்தத்தைக் குறிக்கும் (Christian era).
இது ஏசு கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக்
கொண்ட ஆண்டுக் கணக்கு ஆகும். இதன்
அடிப்படையிலேயே கி.மு, கி.பி என்ற பதங்கள்
உண்டாயின.

உலகம் முழுவதும் கிறிஸ்து சகாப்த ஆண்டுக்
கணக்கு பின்பற்றப் பட்ட போதிலும், மாற்று
மதத்தவர்க்கும் கடவுள்--மத மறுப்பாளர்களுக்கும்
இது உறுத்தலாக இருந்தது. எனவே அனைவர்க்கும்
பொதுவானதாகவும் மதச் சார்பற்றதாகவும் உள்ள
ஒரு பொதுவான ஆண்டுக் கணக்கு தேவைப்
பட்டது.

அதே நேரத்தில் உலகம் முழுவதும் பின்பற்றப்பட்ட
கிறிஸ்துவ சகாப்த ஆண்டுக்  கணக்கை எடுத்தோம்
கவிழ்த்தோம் என்ற முறையில் அகற்றி விட்டு
முற்றிலும் புதிதாக ஒன்றை அறிமுகம் செய்து விட
முடியாது.

எனவே பழைய கணக்கீட்டு முறையைப் பின்பற்றும்
அதே நேரத்தில், அதிலுள்ள கிறிஸ்துவ மதம் சார்ந்த
பெயர்களைக் களைந்து புதிதான ஓர் ஆண்டுக்
கணக்கீட்டு முறையை அறிமுகம் செய்திட
அறிஞர்கள் முடிவெடுத்தனர்.

இப்படித்தான் பொது சகாப்தம் (Common Era) பிறந்தது.
கிறிஸ்துவ சகாப்தத்தின் ஆண்டுக் கணக்கு
முறையை இது அப்படியே பின்பற்றியது. அதாவது
கிறிஸ்துவின் பிறப்பு என்பது Reference dateஆகக்
கொள்ளப்  பட்டது. அதில் மாற்றம் இல்லை.
ஆனால் கிறிஸ்துவின் பெயரைக் குறிக்கும்
கி.மு, கி.பி. ஆகிய பெயர்கள் அகற்றப் பட்டன.
அவற்றுக்குப் பதிலாக,  பொ.மு,, பொ. ஆகிய
பதங்கள் அறிமுகம் செய்யப் பட்டன.

பொ.மு = பொது சகாப்தத்திற்கு முன் (BCE)
பொ. = பொது சகாப்தம் (CE)
ஆங்கிலத்தில்,
BCE = Before Common Era; CE =Common Era.

பொது சகாப்தப்படி,
கி.மு 1500 = பொ.மு 1500;
கி.பி 2017 = பொ 2017.
இந்த மாற்றங்களின் விளைவாக, ஆண்டுக்
கணக்கீட்டு முறையானது எந்தவொரு மதத்தையும்
சார்ந்ததாக இல்லாமல், அனைவருக்கும்
பொதுவானதாக ஆக்கப் பட்டுள்ளது. இந்த
பொது சகாப்த முறையையே அறிவியல் உலகம்
பின்பற்றி வருகிறது. இந்தியாவில் பாடப்
புத்தகங்கள் இந்த மாற்றத்தை உட்கொண்டு
மாற்றி எழுதப்பட வேண்டும். ஊடகங்களும்
இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, கி.மு, கி.பி
போன்ற பதங்களையும், கிறிஸ்து சகாப்தம் என்ற
ஆண்டுக் கணக்கு முறையையும் கைவிட
வேண்டும்.

கடவுள் மறுப்பு மற்றும் பகுத்தறிவு இயக்கங்கள்,
இடதுசாரி இயக்கங்கள் ஆகியோர் பொது சகாப்த
முறைக்கு மாற வேண்டும்.

1) பொது சகாப்த ஆண்டுக் கணக்கு முறை
2) அவ்வப்போது அறிவியல் வழியில் மாற்றம்
செய்யப்படும் பதின்மூன்றாம் கிரெகோரியின்
காலண்டர்
3) உலகப் பொது நேரமான UTC நேரம் ஆகியவற்றையே
அறிவியல் உலகம் பயன்படுத்தி வருகிறது.
அறிவியல் உலகத்தையே அனைவரும் பின்பற்ற
வேண்டும்.

ஆக, இப்போது பிறந்துள்ளது புத்தாண்டு 2017.
அதாவது பொ 2017. (பொது சகாப்தம் 2017)
ஆங்கிலத்தில் CE 2017. இதைக் கொண்டாடுவோம்.
இதில் பொதிந்துள்ள அறிவியலை அனைவர்க்கும்
உணர்த்துவதே புத்தாண்டைக் கொண்டாடும் முறை.
--------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: கடந்த ஆண்டின் இறுதியில் ஒரு வினாடி
அதிகம் சேர்க்கப் பட்டுள்ளது. 31.12.2016 23:59:60 என்று
60ஆவது வினாடி சேர்க்கப் பட்டுள்ளது. ஏன்?
பின்னர் காண்போம்.
********************************************************************

 



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக