திங்கள், 6 மார்ச், 2017

குப்பையில் இருந்து மீத்தேன் எடுக்க முடியுமா?
மாற்று எரிசக்தி (alternate energy) எவ்வளவு சாத்தியம்?
சாணியைக் கரைத்து ஊற்றி அடித்தால்
மின்சாரம் கிடைக்குமா?
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
(1) குப்பையில் இருந்து மீத்தேன் எடுக்க முடியும்.
மாட்டுச் சாணம் உள்ளிட்ட பிற கால்நடைகளின்
சாணத்தில் மீத்தேன் அதிகமாகவே இருக்கிறது.

2) ஹைட்ரோ கார்பன் என்பது இந்தியச் சூழலில் ஓர்
இன்றியமையாத தீமையாகவே இன்னும் இருக்கிறது
(essential evil). குப்பையில் இருந்து மீத்தேன் எடுத்தாலும்
மின்சாரம் எடுத்தாலும், அவை ஹைட்ரோ கார்பன்
வகையைச் சேர்ந்தவையே. 

3) குப்பையில் இருந்து மீத்தேன் எடுப்பதில் சிக்கலான
தொழில்நுட்பம் எதுவும் இல்லை. பெரும் முதலீடும்
தேவையில்லை.

4) என் சிறு வயதில் நெல்லை மாவட்டத்தின் பல
ஊர்களில் கம்போஸ்ட் உரக் களஞ்சியம் என்ற
பெயர்ப்பலகை மாட்டப்பட்ட பல்வேறு இடங்களை
நான் பார்த்து இருக்கிறேன்.

5) இவை குப்பையைச் சேகரித்து வைக்கும் குப்பைக்
கிடங்குகள். ஆட்டுப் புழுக்கை, மாடு கழுதைகளின்
சாணம் எல்லாம் இக்கிடங்கில் சேகரிக்கப் படும்.

6) இந்தக் குப்பைக் கிடங்கில் உள்ள பொருட்களை
அங்ககப் பொருட்கள் (organic substances) என்று கூறுகிறது
அறிவியல்.

7) சிறிது காலத்தின் பின், இந்த அங்ககப் பொருட்கள்
வேதியியல் வினைகளின் காரணமாக ஹைட்ரோ
கார்பனாக மாறும். அதாவது மீத்தேனாக மாறும்.

8) அரிசி மாவையும் உளுந்து மாவையும் கலந்து
ஒரு பாத்திரத்தில் இரவு நேரத்தில் வைக்கிறோம்.
மறுநாள் விடிந்ததும் மாவு புளித்து இட்லி தோசை
தயாரிக்கத் தேவையான பக்குவத்தை அடைந்து
விடுகிறது அல்லவா! இங்கு ஒரு வேதியியல் வினை
நிகழ்ந்து இருக்கிறது. கிட்டத்தட்ட இது போன்ற
ஒரு வேதியியல் வினையால், குப்பைக் கிடங்கில்
உள்ள அங்ககப் பொருட்கள் ஹைட்ரோ கார்பனாக
மாறி விடுகின்றன.

9) இதில் பயன்படும் தொழில்நுட்பம் ANAEROBIC DIGESTION
ஆகும். நுண்ணுயிரிகள் அங்ககப் பொருட்களைச்
சிதைத்து மீத்தேனை வெளியிடுதல் என்று சுருக்கமாகப்
புரிந்து கொள்ளலாம் (metabolism of organic substances by micro organisms).
இதில் கிடைக்கும் இறுதி விளைபொருள் (end product)
உயிரிவாயு (BIO GAS) ஆகும். இது மீத்தேனும்
கார்பன் டை  ஆக்சைடும் கலந்த கலவை.
இக்கலவையில் தோராயமாக 60 சதம் மீத்தேன் இருக்கும்.
ஐரோப்பிய நாடுகளில் இத்தொழில்நுட்பத்தால்
உற்பத்தியான மீத்தேன் பற்றிய அனுபவங்களைக்
கணக்கில் கொண்டு பார்த்தால், ஒரு டன் குப்பையில்
இருந்து குறைந்தது ஒரு கிலோ மீத்தேன் பெற முடியும்.
இது ஒரு தோராயமான கணக்கு. துல்லியமான
கணக்கீட்டைச் செய்ய, தொழில்நுட்பம் பற்றிய
துல்லியமானதும் முழுமையானதுமான விவரங்கள்
தரப்பட வேண்டும்.

10) இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் குப்பையை
மீத்தேன் ஆக்குவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன.
பிளாஸ்டிக் கலக்காத குப்பை தமிழ்நாட்டில்
கிடையாது. மட்கத்தக்க குப்பையில் இருந்து
(BIO DEGRADABLE WASTE) மட்டுமே மீத்தேனோ
(அல்லது மின்சாரமோ) எடுக்க முடியும்.

11) குப்பையால் தொல்லை என்று கருதினால்,
மாட்டுச் சாணத்தில் இருந்து உயிரிவாயு (biogas)
எடுத்துக் கொள்ளலாம். இது  GOBAR GAS என்று
அழைக்கப் படுகிறது. தொடர்புடைய அதிகாரிகளுக்கு
தகவல் தெரிவித்தால், உங்கள் இல்லம் தேடி வந்து
சாண எரிவாயுக் கருவியைப் பொருத்தி விட்டுச்
செல்வார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில்
( 3 நாளுக்கு ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை)
கருவியில் உள்ள தொட்டியில் சாணத்தை உள்ளிடுவது
உங்கள் வேலை.

12) இவை அனைத்துமே நாட்டின் பகாசுரத் தனமான
எரிபொருள் தேவையில் மிக மிகச் சிறிய பங்கை
மட்டுமே நிறைவேற்றும். சுருங்கக் கூறின், இதெல்லாம்
யானைப்பசிக்கு சோளப்பொரி என்ற கதைதான்.

13) குப்பை மின்சாரத்தால் உங்கள் வீட்டுத் தேவையை
நிறைவு செய்ய முடிவதாகவே கற்பனை செய்து
கொள்வோம். சில டியூப் லைட்டுகள், மின்விசிறிகள்
ஆகியவை குப்பையால் எரியும். ஆனால் நீங்கள்
மின் இஸ்திரி உட்பட பல்வேறு கருவிகளை ( மிக்சி,
கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், வாஷிங் மெஷின்,
குளிர்பதனப் பெட்டி, வீட்டில் ஏ.சி, கிணற்றில்
இருந்து நீர் இறைக்க 1 HP மோட்டார்) பயன்படுத்துவீர்கள்.
இவற்றையெல்லாம் குப்பை மின்சாரம் நிறைவு
செய்யுமா? செய்வதாகவே வைத்துக் கொள்வோம்.

14) இந்தியாவில் வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சாரத்
தேவை (domestic usage) சுமார் 12 சதம் மட்டுமே.
தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், விவசாயம்
ஆகியவற்றுக்கான தேவையை குப்பை மின்சாரத்தால்
ஒருபோதும் நிறைவேற்ற இயலாது என்ற
யதார்த்தத்தையும் நாம் உணர்வது நல்லது.
********************************************************************
           
  
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக