திங்கள், 18 ஜூன், 2018

மரணத்தை நேசித்த இவர்களின்
கால்களில் விழுந்து வணங்குகிறேன்!
விடுதலையை நேசிப்பவன்
மரணத்தையும் நேசிக்க வேண்டும்!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
"நான் செய்ய வேண்டியதைச் செய்து விட்டேன்;
இனி நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச்
செய்து கொள்ளுங்கள்".

உலகப் பிரசித்தி பெற்ற இந்த வாக்கியத்தைச்
சொன்னது யார்? இந்த வாக்கியம் சொல்லப்பட்ட
தேதி 31 அக்டோபர் 1984. அதாவது 33 ஆண்டுகளுக்கு
முன்பு. சொல்லப்பட்ட நேரம் காலை 9.15 மணி

இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்ற, சீக்கிய
மெய்க்காவலர் பியாந்த் சிங் கூறிய வாக்கியமே இது.
அடிவயிற்றில் இந்திராவை மூன்று முறை சுட்டார்
பியாந்த் சிங். கீழே விழுந்த இந்திராவை இன்னொரு
காவலர் சத்வந்த் சிங் முப்பது முறை சுட்டார்.

இந்திராவைச் சுட்டு முடித்ததும் பியாந்த் சிங்
துப்பாக்கியைக் கீழே எறிந்து விட்டு, மேற்கூறிய
வாக்கியத்தைக் கூறினார். அவரை பிற காவலர்கள்
சுட்டுக் கொன்றனர். உயிருடன் பிடித்தனர் சத்வந்த்
சிங்கை.

இந்திரா கொலையில் மொத்தம் நான்கு பேர் மீது
மட்டும் குற்றம் சுமத்தப் பட்டது. 1. பியாந்த் சிங்
2.சத்வந்த் சிங் 3. கேஹர் சிங் 4. பல்பீர் சிங்.

பல்பீர் சிங்கிற்கு ராம் ஜெத்மலானி விடுதலை
வாங்கி கொடுத்து விட்டார். பியாந்த்  சிங்
நிகழ்விடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

மீதி இருவருக்கும் மரண தண்டனை விதித்தது
நீதி மன்றம். ஜனவரி 6,1989ல் அதிகாலை 4 மணிக்கு
சத்வந்த் சிங், கேஹர் சிங் இருவரும் தூக்கில்
இடப்பட்டனர். அவர்களின் சடலங்களை
குடும்பத்தாரிடம் ஒப்படைக்க மறுத்த சிறை
அதிகாரிகள்  திஹார் சிறையிலேயே அவற்றை
தகனம் செய்தனர். தகன சாம்பலையும்
குடும்பத்தாரிடம் ஒப்படைக்க மறுத்த சிறை
அதிகாரிகள்  ஹரித்வார் நதியில் பலத்த
பாதுகாப்புடன் உறவினர்களைக் கொண்டு
கரைத்தனர்.

மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம்
கோட்சே,.நாராயண் ஆப்தே இருவருக்கும்
மரண தண்டனை விதிக்கப் பட்டது. காந்தி
சுடப்பட்டது ஜனவரி 30, 1948. விசாரணை நீதிமன்றம்
தீர்ப்பு வழங்கியது பிப்ரவரி 10, 1949. அரசுத் தரப்பில்
149 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். குற்றவாளிகள்
தரப்பில் சாட்சிகள் என்று யாரும் ஆஜர்
படுத்தப்படவில்லை.

மொத்தம் எட்டுப்பேருக்கு தண்டனை வழங்கியது
விசாரணை நீதிமன்றம். கோட்ஸே, ஆப்தே இருவருக்கும்
தூக்கு, மற்ற 6 பேருக்கும் ஆயுள் தண்டனை என்பது
தீர்ப்பு.  நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால்
கோட்ஸே ஆயுள் தண்டனை பெற்றார்.

தீர்ப்பை எதிர்த்து நாதுராம் கோட்ஸேவைத் தவிர
மற்ற ஏழு பேரும் பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில்
மேல்முறையீடு செய்தனர். நாதுராம் மேல்முறையீடு
செய்யாமல் தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை
ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

1949 நவம்பர் 8ல் கோட்ஸே, ஆப்தே இருவருக்கும்
மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதி
மன்றம். தீர்ப்பு வந்த ஒரே வாரத்தில், அதாவது,
நவம்பர் 15ல் கோட்ஸே, ஆப்தே இருவரும் அம்பாலா
சிறையில் தூக்கில் இடப்பட்டனர்.

உயிர் பிரிந்ததை உறுதி செய்ததும் கோட்ஸே, ஆப்தே
இருவரின் உடல்களும் அம்பாலா சிறையிலேயே
தகனம் செய்யப் பட்டன. சடலத்தை உறவினர்களிடம்
ஒப்படைக்கவில்லை. அவர்களை தகனம் செய்த
அந்த இடம் உடனடியாக கலப்பை கொண்டு
உழப்பட்டு, தகனம் செய்த  அடையாளங்கள்
மறைக்கப் பட்டன.

தகன சாம்பலை சிறை அதிகாரிகள் அருகிலுள்ள
காகர் (Ghagar river) நதியில் கரைத்தனர். உறவினர்களிடம்
ஒப்படைக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியில்
பகத்சிங் தூக்கில் இடப்பட்டபோதும், இதே
போலத்தான் பிரிட்டிஷ் அரசு நடந்து கொண்டது.

பியாந் சிங். கோட்ஸே வரிசையில்
இவர்களுக்கெல்லாம் முந்திய வாஞ்சிநாதன்
வருகிறார். நீதிமன்றம் விதிக்கப்போகும்
மரண தண்டனை வரை காத்திருக்காமல்,
ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற சில
நிமிடங்களில். தன்னைத்தானே சுட்டுக்
கொண்டு இறந்தார்.

சுதந்திர இந்தியாவில், அரசியல் காரணங்களுக்காக
முதன் முதலில் தூக்கில் இடப்பட்டவர்கள்
நக்சல்பாரிப் புரட்சியாளர்களான பூமையா,
கிஷ்ண கெளடா ஆகிய இருவருமே. தூக்குக்
கயிற்றை முத்தமிட்டு அவர்கள் இருவரும்
தியாகி ஆயினர்.

மேலே பார்த்த பியாந்த் சிங், சத்வந்த் சிங்,
நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே,
வாஞ்சிநாதன், பொம்மையா, கிஷ்ண கெளடா
ஆகிய அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.

அவர்கள் விடுதலையை நேசித்தது போலவே
மரணத்தையும் நேசித்தனர். "நான் செய்ய
வேண்டியதை நான் செய்து விட்டேன்; இனி நீங்கள்
என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்"
என்று கூறி சரண் அடைகின்றனர் பியாந்த்  சிங்கும்
சத்வந்த் சிங்கும்.

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை
எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை
நாதுராம் கோட்சே. நான் ஏன் காந்தியைக்
கொன்றேன் என்று வாக்குமூலம் கொடுத்தார்
கோட்சே.தயக்கமின்றி குற்றத்தை ஒப்புக்
கொள்கிறார்.

வாஞ்சிநாதன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு
இறந்தார். பூமையாவும் கிஷ்ண கெளடாவும்
இன்குலாப் ஜிந்தாபாத் என்று கூறிக்கொண்டே
மரணத்தை மகிழ்ச்சியுடன் தழுவினர்.

மனித  வெடிகுண்டாக மாறி, ராஜீவோடு
தன்னையும் சேர்த்துக் கொன்ற தாணு என்ற
அந்த இளம்பெண் விடுதலையை நேசித்தாள்.
கூடவே மரணத்தையும் நேசித்தாள்.

இவர்கள் அனைவரும் உயிரைப் பொருட்டாக
மதிக்கவில்லை. அவர்கள் விடுதலையை
நேசித்தது போலவே மரணத்தையும் நேசித்தனர்.
யாரிடமும் கெஞ்சி, காலில் விழுந்து, கருணை மனு
போட்டுக் கொண்டு, ஐயா காப்பாத்துங்கய்யா
என்று காலில் விழுந்து கதறவில்லை

ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு, சொகுசுக்கு
ஆசைப்பட்டு ராஜிவ் காந்தி கொலைச்சதியை
நிறைவேற்றிய அற்ப ஜென்மங்கள் துடிதுடிக்கின்றன.
நான்தான் ராஜிவ் காந்தியைக் கொன்றேன்
என்று ஒப்புக் கொள்ளது துணியாத கோழைகள்
நளினியும்  பேரறிவாளனும். சிவராசன் சயனைடு
கொடுத்தபோது நளினி வாங்க மறுத்தார்.
அவர்கள் விடுதலையை நேசிக்கவில்லை.
எனவே அவர்கள் மரணத்தையும் நேசிக்கவில்லை.

பியாந்த் சிங், சத்வந்த் சிங், நாதுராம் கோட்ஸே,
வாஞ்சிநாதன், பூமையா, கிஷ்ண கெளடா, தாணு
ஆகியோரின் காலில் விழுந்து வணங்குகிறேன்;
இவர்களில் பலரின் செய்கையோடு எனக்கு
அறவே உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட.
************************************************            .
 

    .

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக