வியாழன், 28 ஜூன், 2018

அபினா? மரப்பு மருந்தா?
மார்க்சின் உள்ளக் கிடக்கையைச் சரியாகப்
பிரதிபலிக்கும் மொழிபெயர்ப்பு எது?
எது சரி என்று நிரூபிக்கும் கட்டுரை!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
=======================================
எனது மொழிபெயர்ப்பு'
------------------------------------------ 
"மதம் என்பது இதயமற்ற உலகில் ஒரு இதயம்;
அது ஒடுக்கப் பட்டவர்களின் நிம்மதிப் பெருமூச்சு;
அது ஒரு உயிராகவே மதிக்கப் படாதவர்களின் உயிர்; 
அது வாழ்வின் வலிகளை மரத்துப் போகச்செய்யும்
ஒரு மரப்பு மருந்து"

மார்க்சின் மூல வாசகம்:
---------------------------------------------
Religion is the sigh of the oppressed creature, the heart of a 
heartless world, and the soul of soulless conditions. It is the 
opium of the people. -----Karl Marx.

மொழிபெயர்ப்பு என்பது கல்விப்புலம் சார்ந்த
(academic) ஒரு செயல்பாடு. இயற்பியல் என்பதும்
கணிதம் என்பதும் எவ்வாறு கல்விப்புலம் சார்ந்த
செயல்பாடோ அதைப் போன்றதே மொழிபெயர்ப்பும்.

ஒரு மொழிபெயர்ப்பின் மீதான மதிப்பீடு 
கல்விப்புலம் சார்ந்து விவாதிக்கப்படாமல்
போகுமேயானால், அது பயனற்றதாகி விடும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னரே
opium என்ற ஆங்கில மொழிபெயர்ப்ப்புக்கு
உரிய ஜெர்மன் சொல்லை எந்தப் பொருளில்
மார்க்ஸ் பயன்படுத்தி இருந்தார் என்பதை
அறிந்தேன்.

அனஸ்தீசியாவும் மரப்பு மருந்தும்!
மொழிபெயர்ப்பின் வரலாறு!
-------------------------------------------------------------------
பிரசித்தி பெற்ற மார்க்சின் மேற்கோளில்
கடைசி வாக்கியமான "It is the opium of the people"
என்பதற்கு, "அது வாழ்வின் வலிகளை மரத்துப்
போகச் செய்யும் மருந்து" என்பதே சரியான
மொழிபெயர்ப்பு.

முதலில், "அது வாழ்வின் வலிகளை மரத்துப்
போகச் செய்யும் அனஸ்தீசியா" என்றுதான்
மொழிபெயர்க்க விரும்பினேன். ஆனால் அது
தமிழ் மொழிபெயர்ப்பாக ஏற்கப்படாது என்பதை
நான் அறிவேன்.

"அனஸ்தீசியா (anaesthesia) என்பதை மயக்க மருந்து
என்று தமிழில் மொழிபெயர்ப்பது பிழையானது. 
ஏனெனில் அனஸ்தீசியா இரு வகைப்படும்.
ஒன்று மத்திய நரம்பு மண்டலத்தை உணர்விழக்கச்
செய்யும். இது நோயாளிக்கு மயக்கம் தரும்.
அறுவை சிகிச்சை நடப்பதையே நோயாளி
உணர மாட்டான். இது central anaesthesia எனப்படும்.

இன்னொரு வகை அனஸ்தீசியா local anaesthesia ஆகும்.
This causes INSENSITIVITY to pain; ஆனால் நோயாளி
மயக்கம் அடைய மாட்டான். அறுவை சிகிச்சையை
நோயாளி உணர்வான்; ஆனால் வலி தெரியாது;
வலி மரத்துப் போயிருக்கும். இந்த நிலையைத்
தான் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

எனவே "அது வாழ்வின் வலிகளை மரத்துப்
போகச் செய்யும் மருந்து" என்று குறிப்பிட்டேன்.
இங்கு வலிகளை மரத்துப் போகச் செய்தல்
என்று ஏற்கனவே வந்திருப்பதால் மருந்து என்று
குறிப்பிட்டாலே போதும். மரப்பு மருந்து என்றோ
அனஸ்தீசியா என்று குறிப்பிட வேண்டிய
தேவை இல்லை  என்று கருதினேன்.


மருந்து என்று குறிப்பிடும்போது அது medicine என்ற
பொருளில் சராசரி வாசகர்களால் புரிந்து கொள்ளப்
படும். அது பிறழ் புரிதல் ஆகும்.

எனவே வாக்கியத்தைப் பின்வருமாறு மாற்றி
எழுதுகிறேன்: "அது வாழ்வின் வலிகளை
மரத்துப் போகச் செய்யும் மரப்பு மருந்து" 

இப்படி எழுதும்போது, ஒரே வாக்கியத்தில்
இரண்டு முறை மரப்பு என்ற சொல் வந்து
"கூறியது கூறல்" என்னும் குற்றம் இழைக்கப்
படுகிறது.  இது மொழிபெயர்ப்பின் அழகியலைக்
குன்றச் செய்கிறது.

குன்றக் கூறல், கூறியது கூறல்,
மாறுகொளக்கூறல் ஆகிய குற்றங்களைப்
பற்றி நன்னூல் குறிப்பிடுகிறது.

கூறியது கூறலைத் தவிர்க்கும் விதமாக
 "அது வலிகளை உணர்த்தாத மரப்பு மருந்து"
என்று எழுதினால் பொருளின் ஆழம் குன்றி
விடுகிறது.     

எனவே "அது வாழ்வின் வலிகளை மரத்துப்
போகச் செய்யும் மரப்பு மருந்து" என்பதையே 
தேர்வு செய்கிறேன்.இங்கு சராசரி வாசகரின்
புரிதல் மட்டமே மொழிபெயர்ப்பின் தன்மையைத்
தீர்மானிக்கும் காரணியாக அமைகிறது.
ஆக, மொழிபெயர்ப்பு பின்வருமாறு அமைகிறது.

"மதம் என்பது இதயமற்ற உலகில் ஒரு இதயம்;
அது ஒடுக்கப் பட்டவர்களின் நிம்மதிப் பெருமூச்சு;
அது ஒரு உயிராகவே மதிக்கப் படாதவர்களின் உயிர்; 
அது வாழ்வின் வலிகளை மரத்துப் போகச்செய்யும்
ஒரு மரப்பு மருந்து"

ஒரு செய்தி அறிக்கையை மொழிபெயர்ப்பது 
போன்றதல்ல மார்க்சிய மூல ஆசான்களின் எழுத்தை 
மொழிபெயர்ப்பது. உலகில் உள்ள தத்துவங்களில் 
மார்க்சியம் மட்டுமே செயல்பாட்டுக்கு வழிகாட்டும் 
தத்துவம் ஆகும். எனவே இதில் குறை இருப்பின்,
அது மார்க்சியச் செயல்பாட்டைப் பாதிக்கும்.
எனவே ஒரு மார்க்சிய மொழிபெயர்ப்பானது பாட்டாளி 
வர்க்கத்தின் புரிதல் மட்டத்தைக் கணக்கில் கொண்டு,
அதற்கு ஏற்ப அமைய வேண்டும்.

தமிழில் மொழிபெயர்ப்பது குறிப்பாக சொல்வளம் 
மிகுந்த ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பது 
மிகக் கடினமான பணி. அரசு பற்றிப் பேசிய எங்கல்ஸ்
"State will wither away" என்றார். ஷேக்ஸ்பியரும் 
"Age can not wither her beauty" என்றார் கிளியோபட்ராவைக் 
குறிப்பிடும்போது. இங்கு wither என்ற ஒற்றை ஆங்கிலச் 
சொல்லுக்கு "உலர்ந்து உதிர்தல்" என்ற இரண்டு 
சொற்கள் தேவைப் படுகின்றன. "அரசு உலர்ந்து உதிர்ந்து 
விடும்" என்று எங்கல்சின் கூற்று மொழிபெயர்க்கப் 
பட்டுள்ளது.

"Religion is the sigh of the oppressed creature" என்ற மார்க்சின் 
வாக்கியத்தை "மதம் என்பது ஒடுக்கப் பட்டவர்களின் 
பெருமூச்சு" என்று மொழிபெயர்க்கப்பட்டு இந்த 
மொழிபெயர்ப்புதான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் 
மேலாக இருந்து வருகிறது.

இதில் sigh என்பது யாந்திரீகமாக பெருமூச்சு என்று 
மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.மார்க்சின் உள்ளக் கிடக்கை 
மொழிபெயர்ப்பில் வரவில்லை. SIGH என்பது வெறும் பெருமூச்சு 
அல்ல. ஒடுக்கப்பட்டவர்கள் என்ன மோடியுடன் சேர்ந்து 
யோகா செய்யும்போது மூச்சை வெளியே இழுத்து
விடுகிறார்களா? இங்கு SIGH என்பது SIGH OF RELIEFஐக் 
குறிக்கும். ஒரு ஆசுவாசப் பெருமூச்சை, நிம்மதிப்
பெருமூச்சைக் குறிக்கும். 

எனவே "மதம் என்பது ஒடுக்கப் பட்டவர்களின் 
நிம்மதிப் பெருமூச்சு"என்று மொழிபெயர்த்துள்ளேன்.

It is a soul of soulless conditions என்பது "ஆத்மா இல்லாத  
நிலைமைகளில் அது ஒரு ஆத்மா" என்று மொழிபெயர்க்கப் 
பட்டுள்ளது. இதைவிட மோசமாக மார்க்ஸை யாரும் 
மொழிபெயர்ப்பு என்ற பெயரில் கொலை செய்ய 
முடியாது. எனவே "ஒரு உயிராகவே மதிக்கப் 
படாதவர்கள் உயிர்" என்று மொழிபெயர்த்து உள்ளேன்.  
  
மார்க்சிய மேற்கோள்களை மனப்பாடம் செய்யும்  
பாராயணவாதிகளும், பத்தாம் பசலிகளும் இந்த 
மொழிபெயர்ப்பைக் கண்டு அதிர்ச்சி அடையலாம். ஆனால் 
இந்த மொழிபெயர்ப்பு மட்டுமே மார்க்சின் உள்ளக் 
கிடக்கையை அப்படியே பிரதிபலிக்கிறது. மார்க்சின் 
மதம் பற்றிய நூல்கள் அனைத்தையம் படித்தால்தான் 
அவரின் உள்ளக் கிடக்கையை அறிய முடியும். 

எமது இந்த மொழிபெயர்ப்பு தவறானது என்று கருதும் 
கல்விப்புலம் சார்ந்தோர் உரிய தர்க்கத்துடன் அதை 
நிறுவலாம்.              
***********************************************************************************







           
 



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக