சனி, 15 அக்டோபர், 2016

மார்க்சியம் மிகத் தெளிவான கடவுள் மறுப்புக்
கொள்கையை உடையது. பொருள்முதல்வாதம்
(materialism) என்னும் தத்துவத்தை மார்க்சியம் தன்
ஒரு கூறாகக் கொண்டுள்ளது. வறட்டு நாத்திகம் அல்ல
மார்க்சியத்தின் கொள்கை.
**
கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவர் சேர்த்துக் கொள்ளப்
படுவதற்கான நிபந்தனை இதுதான்: அவர் கட்சியின்
வேலைத் திட்டத்தை (party programme) ஏற்றுக் கொண்டிருக்க
வேண்டும். அவ்வளவே.
**
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைத் தான் சேர்க்க
வேண்டும் என்று எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியிலும்
எந்தக் காலத்திலும்  விதி (rule) இருந்தது கிடையாது.
**
கட்சியில் சேர்ந்த உடனேயே எவர் ஒருவரும் கம்யூனிஸ்ட்டாக
ஆகி விடுவதில்லை. ஒருவர் கம்யூனிஸ்ட்டாக ஆவது என்பது
ஒரு நீண்ட இயக்கப்போக்கைக் கொண்டது. (a long process)/
காலப் போக்கில், அவர் கடவுள் குறித்த மார்க்சிய நிலைப்பாடு
என்பது என்ன என்பதைப் புரிந்து கொண்டு விடுவார். 
**
1948 தெலுங்கானாப் போராட்டத்தில் எளிய விவசாயிகள்
பலர் கட்சியில் சேர்ந்தனர். அவர்கள் அனைவரும்
கடவுளை வணங்குபவர்கள். அதில் எவ்விதத் தவறும்
இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியில் கதவடைப்புவாதத்திற்கு
இடமில்லை.   

"கடவுள் சிலைகளை உழவர்கள்தான் வைத்தனர்.
அவற்றை நாம் அகற்ற வேண்டியதில்லை. அவர்களே
ஒருநாள் அவற்றைத் தூக்கி எறிவர். அதுவரை நாம்
காத்திருக்க வேண்டும்" என்றார் மாவோ.
**
கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தத்
தயாராக இருந்தால், ஒரு மதத்தலைவரைக் கூட,
(அதாவது போப்பைக்கூட) கட்சியில் சேர்க்கலாம்
என்றார் லெனின்.
**
கடவுள் நம்பிக்கை என்பதை பிரச்சாரத்தின்
மூலமாகவோ, துப்பாக்கி முனையிலோ, அகற்றி
விட முடியாது. கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும்
ஒரு நாட்டில், அரசாங்கமானது எந்த மதத்திற்கும்
ஆதரவு அளிக்காது. அவ்வளவே. மக்கள் சாமி
கும்பிடத் தடை இல்லை. ஹஜ் யாத்திரைக்கு அரசுப்
பணத்தை மானியமாகக் கொடுக்கிறதே இந்திய அரசு.
இவை போன்ற செயல்களுக்கு கம்யூனிஸ்ட் ஆட்சியில்
இடமில்லை.

வழிபாட்டு உரிமையை கம்யூனிசம் ரத்து செய்வதில்லை!
----------------------------------------------------------------------------------------------------
மதமும் கடவுளை நம்புவதும் ஒருவரின் தனிப்பட்ட
அந்தரங்க விஷயம். ஒருவருக்கு கத்தரிக்காய் பிடிக்கும்,
ஒருவருக்குப் பிடிக்காது என்பது போன்ற விஷயம்.
இதில் கம்யூனிஸ்ட்கள் தலையிட வேண்டிய அவசியம் என்ன?
**
மதத்தையும் கடவுள் நம்பிக்கையையும் சுரண்டலுக்கும்
ஒடுக்குமுறைக்கும் பயன்படுத்துவதை கம்யூனிசம்
அனுமதிக்காது; உறுதியுடன் முறியடிக்கும். கம்யூனிஸ்ட்
ஆட்சியில் நாத்திகப் பிரச்சாரம் நடந்து கொண்டு
இருக்கும். வற்புறுத்தல் கிடையாது.
**
1) தலித்துகளுக்கு கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு
2) தேர் வடம் பிடித்து இழுக்கும் உரிமை மறுப்பு
3) இந்து-முஸ்லீம் வகுப்புக் கலவரங்கள்
4) அந்த இடம் ராமர் பிறந்த இடம், இல்லை இல்லை,
அங்குதான் பாரின் மசூதி உள்ளது.
5) போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தேவாலயத்தை
(church) இடிக்க நீதிமன்றம் உத்தரவு; பாதிரியார்கள்
சாலை மறியல்.
......இன்ன பிற, இன்ன பிற,,,,
இப்படி எதற்கும் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இடம் கிடையாது.
ஆனால், பிடித்த கடவுளை வணங்க உரிமை உண்டு.
மக்களின் வழிபாட்டு உரிமையை கம்யூனிசம் ரத்து செய்வதில்லை.  
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக