வியாழன், 20 அக்டோபர், 2016

இடஒதுக்கீடு பற்றிய மார்க்சியப் பார்வை!
----------------------------------------------------------------------------
கோட்பாடு ரீதியாக, இட ஒதுக்கீடு என்பது "பாதுகாப்புக்
கருதிய பாரபட்சம்" (protective discrimination) ஆகும். தீண்டாமை
போன்ற பாரபட்சம் சமூகத்தில் நிலவுகிறது. இது
அழிவு கருதிய பாரபட்சம் (destructive discrimination) ஆகும். 
இதற்கு மாற்றாக இடஒதுக்கீடு கொண்டுவரப் படுகிறது.
அதாவது, பாம்பு கடித்ததால் உடலில் விஷம் ஏறிப்போன
ஒருவனுக்கு, விஷ முறிவுக்கு மருந்து கொடுப்பது
போன்றது இடஒதுக்கீடு. அதாவது இடஒதுக்கீடு ஒரு
விஷமுறிப்பு மருந்து (antidote) போன்றதாகும்.
**
இடஒதுக்கீடு சர்வ ரோக நிவாரணி அல்ல. அது
விடுதலைக்கான பாதையும் அல்ல. இடஒதுக்கீட்டால்
சமூகத்தின் முன்னேறிய பிரிவினர்தான் (creamy section)
பெரிதும் பயனடைய முடியும் என்று கூறினார்
பிந்தேஸ்வரி பிரசாத்  மண்டல். சுருங்கக் கூறின்,
இடஒதுக்கீடானது, அதைப்பெறும் சாதியினர் மத்தியில்,
ஒரு நடுத்தர வர்க்கத்தை உருவாக்கும். அவ்வளவே.
இதைத்தான் ரங்கநாயகம்மாவும் கூறுகிறார். ராகுல
சாங்கிருத்தியாயானும் அதையேதான் கூறியுள்ளார்
என்பதை எமது கட்டுரையில் கூறியுள்ளோம்.
**
சில மூளைகளால் இடஒதுக்கீட்டைத் தாண்டிச் சிந்திக்க
முடிவதில்லை. அதற்குக் காரணம் அவர்தம்
சிந்தனையில் உறைந்துபோன நடுத்தர வர்க்கத்
தத்துவமே. மார்க்சியம் நடுத்தர வர்க்கச் சிந்தனைப்
போக்கில் நின்று கொண்டு விஷயங்களைப்
பார்ப்பதில்லை. அது பாட்டாளி வர்க்கச் சிந்தனையின்
மூலம் உலகத்தைப் பார்க்கிறது. அதனால்தான்
அது புரட்சிகரமாக இருக்கிறது.
**
ரங்கநாயகம்மா  தமது நூலில் நடுத்தர வர்க்கச்
சிந்தனையையும் அது வழங்கும் தீர்வுகளையும்
அமபலப் படுத்துகிறார்; மார்க்சியத்தை உயர்த்திப்
பிடிக்கிறார்.  எனவேதான் அவரின் நூல் மார்க்சியத்தின்
எதிரிகளால் தூற்றப் படுகிறது. 
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக