வியாழன், 6 அக்டோபர், 2016

மார்க்சியம் தெரியும், மார்க்ஸாலஜி தெரியுமா?
மார்க்ஸாலஜி (Marxology) என்றால் என்ன?
மார்க்சியர்களும் மார்க்ஸாலஜிஸ்டுகளும்!
-----------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்,
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-----------------------------------------------------------------------------------------------
ஒரு கட்சியின் முழுநேர ஊழியர் அவர். மார்க்சிய
வகுப்பெடுப்பது பற்றிய ஒரு உரையாடலின்
போது அவர் என்னிடம் கூறினார்: "நாங்க இதில
கறாரா இருக்கோம் தோழர், முழுநேர ஊழியர்
மட்டும்தான் எங்க அமைப்பில வகுப்பு எடுக்க
முடியும்"

எங்களிடம் உரையாடிய சில இளைஞர்களிடம்
என் நண்பர், "மூன்று உலகக் கோட்பாடு"
(Three world theory) பற்றி ஏதோ கேட்டார். அவர்களுக்கு
அது பற்றித் தெரியவில்லை.

அவர்களில் ஒருவர் சட்டென்று தமது ஆண்ட்ராய்ட்
மொபைலில், கூகுள் தேடலுக்குச் சென்று,
"Three world theory" என்று அடித்ததும், நிறையத்
தகவல்களும் கட்டுரைகளும் வெளிவந்தன.

இணையத்திலும் விக்கிப்பீடியாவில் கிடைக்கும்
தகவல்கள் பெரிதும் தோராயமாகவும், கரடு
முரடாகவும் ஒரு பொருளைப்  பற்றிய செய்திகளை
நொடிக்குள் அளித்து விடுகின்றன. அவற்றைச்
சார்ந்து இருக்க முடியாது (can not be relied upon) என்றாலும்,
அறிய வேண்டிய பொருளைப் பற்றிய ஏதோ ஒரு
சித்திரத்தை அளித்து, அந்த அளவுக்கு அறியாமையை
விரட்டி விடுகின்றன. மேலும் அறிய வேண்டும் என்ற
வேட்கையை ஏற்படுத்துகின்றன.

அதே நேரத்தில், சித்தாந்தக் கல்விக்கான
வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்கிற, ஒரு
புரட்சிகரக் கட்சியின் வகுப்புகளில், மெய்யான
அக்கறையுடன், நடைமுறையுடன் இணைத்துக்
கற்றுத்  தரப்படும் மார்க்சியக் கல்வியே மெய்யான
மார்க்சியக் கல்வி ஆகும். விக்கிப்பீடியாவின்
வழியாகப் பெறும்  வெற்றுத் தகவல்கள் 
மார்க்சியக் கல்வியாகாது.

ஒவ்வொருவரையும் சென்றடைந்த மார்க்சியம்!
---------------------------------------------------------------------------------------
தொண்ணூறுகளில், கோர்ப்பச்சேவ் காலத்தில்
நிகழ்ந்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும்,
தொடந்து நிகழ்ந்த கிழக்கு ஐரோப்பாவின் வீழ்ச்சியும்,
சீனத்தில் டெங் சியோ பிங் கொண்டு வந்த சந்தைப்
பொருளாதாரமும் மார்க்சியத்தின் மரணத்தை
அறிவித்து விட்டதாக, உலகெங்கும் உள்ள
பூர்ஷ்வாக்கள் கூச்சலிட்டார்கள். சிலர் மார்க்சியத்தின்
பிணக்கூறு ஆய்வு அறிக்கையையும் (post mortem report)
வெளியிட்டு மகிழ்ந்தனர்.

இக்காலக் கட்டத்தில் இணையமும் பெருவளர்ச்சி
பெற்றிருந்தது. மிகப் பரவலானதாகவும் ஆகி
இருந்தது. எனவே மார்க்சியத்தின் "வீழ்ச்சி"
இணையத்தின் பேசுபொருளாக ஆகியது.

இதனாலும் ஒரு நன்மை விளைந்தது. இதுவரை
மார்க்சியத்தை அறியாமல் இருந்த கோடிக்கணக்கான
வாசகர்களிடம் மார்க்சியம் சென்று சேர்ந்தது. இது
மார்க்சியத்தைக் கற்பதற்கான வேட்கையை
எழுப்பியது. பலரும் மார்க்சியம் கற்கத் தொடங்கினர்.
சிலர் ஆழமாகக் கற்றனர்.

லண்டனில் உள்ள பி.பி.சி நிறுவனம் தன் வாசகர்களிடம்
ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. அதில் கடந்த
மில்லேனியத்தில் (1001 முதல் 2000 வரையிலான ஆயிரம்
ஆண்டுகள்) உலகின் மாமனிதர் யார் என்ற கேள்விக்கு,
வாசகர்கள் காரல் மார்க்ஸ் என்று விடையளித்தார்கள்.
பி.பி.சி.யின் வாசகர்களில் மார்க்சியர்கள் மிகவும் குறைவு என்னும்போது, பரந்துபட்ட மக்களிடம் மார்க்சியத்திற்கு
இன்றும் நிலவும் செல்வாக்கு புலப்பட்டது.

மார்க்ஸாலஜி (Marxology) என்றால் என்ன?
----------------------------------------------------------------------
மார்க்சியத்தின் வரலாற்றிலேயே, மார்க்சியம் பெரிதும்
பயிலப்படும் காலம் நமது சமகாலம் ஆகும். இது ஒரு
உலகளாவிய போக்கு. (எனினும் தமிழகம் இதிலிருந்து
விலகி ஒரு தனித்தீவாக நிற்கிறது. இதற்குக் காரணம்
இங்குள்ள அடையாள அரசியலின் ஆதிக்கம் ஆகும்.)

தகவல் குவியலின் வழி மார்க்சியம் அறியப்பட்டதைத்
தொடர்ந்து, இயல்பாக அதன் அடுத்த கட்டத்திற்கு
மார்க்சியக் கல்வி நகர்ந்தது. பல்வேறு கல்லூரிகள்,
பல்கலைக் கழகங்கள் கல்வியியல் ரீதியாக
(academically) மார்க்சியத்தைக் கற்றுக் கொடுக்க
ஆரம்பித்தன. தவிரவும், மார்க்சியக் கல்வி ஆர்வலர்கள்
பலர், பல்வேறு வழிகளில் மார்க்சியத்தைக் கற்றுக்
கொடுக்க முன்வந்தனர். இவ்வாறு மார்க்சியக் கல்வி
நிறுவனப் படுத்தப் பட்டதாகவும் (institutionalised) ஆகியது.

சுருங்கக் கூறின், அதிகார பூர்வமான மார்க்சியக்
கட்சிகள், அமைப்புகளைத் தாண்டி, கட்சியிலேயே
இல்லாத அறிவுஜீவிகளும் மார்க்சியத்தைத் தாமும்
கற்றனர்; பிறருக்கும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினர்.
இதனால் மார்க்ஸாலஜி (Marxology) என்ற புதிய சொல்
பிறந்தது.

Zoology, Biology என்பது போல, Marxology. "logy" என்ற
பின்னொட்டு "அறிவு" என்ற பொருளைத் தரும்.
Marxology என்றால் மார்க்சைப் பற்றிய அறிவு என்று
பொருள்.    

மார்க்சிஸ்டுகளும் மார்க்ஸாலஜிஸ்டுகளும்!
-----------------------------------------------------------------------------------
இதன் விளைவாக, மார்க்சியம் அறிந்தவர்களின்
இடையே, இரு பெரும் பிரிவுகள் உண்டாயின.
1) அமைப்பு சார்ந்த மார்க்சியர்கள் 2) அமைப்பு சாராமல்
மார்க்சியம் கற்றவர்கள்.

"மார்க்சியம் என்பது நடைமுறைக்கான ஒரு தத்துவம்"
என்பார் கிராம்சி. (Marxism is a philosophy of praxis). அதாவது
மார்க்சியம் என்பது பிற தத்துவங்களைப் போல,
வெறுமனே பயிலுவதற்கு மட்டுமேயான ஓரு தத்துவம்
அல்ல; மாறாக பிரயோகத்தைக் கருதி உண்டாக்கப்
பட்ட ஒரு தத்துவம்.

இதன் பொருள், மார்க்சியத்தைக் கற்பதன் நோக்கம்
அதைப் பிரயோகிப்பதற்காகவே. பிரயோகிக்கும்
எண்ணம் இல்லாதவர்கள் மார்க்சியத்தைக் கற்கத்
தேவையில்லை; அப்படிக் கற்றால்தான் என்ன பயன்?

உரையாடல்களின் போது, தன் அறிவு மேன்மையை
வெளிக்காட்டுவதற்காகவோ அல்லது ஒரு மாலைப்
பொழுதை ரம்மியம் ஆக்குவதற்காகவோ மார்க்சியம்
பயில்வதால் என்ன பயன்?

எனவே மார்க்சியம் கற்பதன் நோக்கம் பிரயோக
நோக்கமே. மார்க்சியத்தை எப்படிப் பிரயோகிப்பது?
ஒரு கட்சியோ அமைப்போ இல்லாமல் மார்க்சியத்தை
எவரும் பிரயோகிக்க முடியாது. எனவே கட்சியிலோ
அதன் வெகுஜன அமைப்புகளிலோ செயல்படாமல்
எவ்வளவு திறமையானவராக இருந்தாலும்,
மார்க்சியத்தைச் செயல்படுத்த முடியாது.

"நடைமுறை இல்லாத தத்துவம் மலட்டுத்
தனமானது: தத்துவம் இல்லாத நடைமுறை
குருட்டுத் தனமானது" என்றார் ஸ்டாலின்.
இப்போது ஒரு தெளிவான சித்திரம் கிடைத்து
விட்டது.

எனவே, முன்பத்திகளில் கூறப்பட்ட, 1) மார்க்சியர்
2) மார்க்சியம் கற்றவர் ஆகிய இரு பிரிவினரையும்
"மார்க்சியர்" என்ற பொதுப் பெயரால் ஒருபோதும்
அழைக்க முடியாது. 

மார்க்சியம் கற்று, அமைப்பில் சேர்ந்து,
மார்க்சியத்தைத் தாங்கள் சார்ந்த அமைப்பின்
வழியே செயல்படுத்துவோர் மட்டுமே மார்க்சியர்கள்
(Marxists) ஆவர்.

வெறுமனே மார்க்சியம் கற்று. எந்த அமைப்பிலும்
சேராமலும்,  கற்ற மார்க்சியத்தைச் செயல்படுத்தாமலும்
உள்ளவர்கள் மார்க்சியக் கல்வியர்கள். ஆங்கிலத்தில்
மார்க்ஸாலஜிஸ்டுகள் (Marxologists).

ஆக, மார்க்சியர்கள் மற்றும் மார்க்ஸாலஜிஸ்டுகள்
(தமிழில் மார்க்சியர்கள் மற்றும் மார்க்சியக் கல்வியர்கள்)
என்ற பெயர்சூட்டல் (nomenclature) வெறும் மொழியியல்
சார்ந்த விஷயம் அல்ல. மாறாக, அதன் பின்னே ஒரு
தத்துவம் இருக்கிறது.
**********************************************************************  
பின்குறிப்பு: இப்பதிவின் முக்கியத்துவம் கருதி, சக
மார்க்சிஸ்டுகளை இப்பதிவில் அனுமதியின்றியே
கோத்துள்ளேன். உரிமையுடன் நான் செய்த இச்செயலை  
அத்துமீறலாகக்  கருதினால் என்னை மன்னிக்கவும்.
********************************************************************


           



       
      





       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக