செவ்வாய், 17 மார்ச், 2015

மயிர் பிளக்கும் விவாதங்கள்!
மார்க்சிய லெனினிய மாவோயிச விவாதங்கள்!!
---------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------------------------- 
1) வசந்தத்தின் இடிமுழக்கமாக இந்திய அரசியல் வானில்,
நக்சல்பாரி இயக்கம் தோன்றிய பிறகே, மார்க்சிஸ்ட்களிடம் 
தத்துவார்த்த விவாதம்  செழுமை அடைந்தது; மக்களைச் 
சென்றடைந்தது; பரந்துபட்ட அளவில் அகல்விரிவானதும் 
ஆழமானதும் ஆன தத்துவார்த்த விவாதங்கள் முன்னெடுக்கப் 
பட்டன. நம் துணைக்கண்டத்தின் வரலாற்றில், இதற்கு 
முன்பு இவ்வளவு பாரிய, செறிந்த விவாதம் நடைபெற்றதே 
இல்லை.
-------------
2) படித்தல், சிந்தித்தல், விவாதித்தல், செய்து பார்த்தல் 
(practicing), அனுபவங்களில் இருந்து படிப்பினை பெறல் 
ஆகிய கட்டங்களின் (stages) வழியாகத்தான் அறிவைப் 
பெற இயலும். வேறு குறுக்கு வழி இல்லை. இதுதான் 
epistemology, theory of acquiring knowledge!  
-------------
3) ரசாயன மாணவனின் ரெக்கார்டு நோட்டை வாங்கிப் 
பாருங்கள். அதில், Experiment, Observation, Inference என்கிற 
முறைமை இருக்கும். சரியானது எது என்று அறிந்திட  
இதுதான் வழி. (தயவு செய்து யாரும் plus two மாணவனைத் 
தொந்தரவு செய்ய வேண்டாம்; மார்ச் 27 அன்று அவன் 
ரசாயனப் பாடத்தில் தேர்வு எழுத வேண்டும்.)   
------------    
4) சமூகத்தின் பொதுவெளியில், அரங்குகளில், மேடைகளில் 
காணக் கிடைக்காத (அல்லது சாத்தியமற்ற) விவாதங்கள் 
இன்று இணையதளங்களில் உயிர்ப்புடன் உள்ளன.
(புரட்சியையே இன்று இணையத்தில் நடத்திக் கொண்டிருக்கும் 
கோமாளிகளில் பலர், கணிப்பொறி இந்தியாவில் 
அறிமுகப் படுத்தப் பட்டபோது, அதை மூர்க்கத் தனமாக 
எதிர்த்தவர்கள். What a dramatic irony!)
-----------
5) எனினும், தமிழ்ச் சூழலில் நடைபெறும் இணையதள 
விவாதங்களில், ஆகப் பெரும்பகுதி ஆழமற்றதாகவும், நுனிப்புல் 
மேய்வதாகவுமே உள்ளன. இதற்குக் காரணம் ஆழமான 
விவாதம் என்பது ஆழமான மார்க்சியக் கல்வியைக் 
கோருவதுதான். Arithmetic பற்றிய விவாதம் என்றால் 
ஆயிரம் பேர் வருவான்; ஆனால்,Laplace Transform பற்றிய 
விவாதம் என்றால், எத்தனை பேர் தேறுவான்?
-----
6) எனவே, இயல்பாகவே இத்தகைய விவாதங்களில் 
வலது இடது போலிக் கம்யூனிஸ்ட்கள் பங்கேற்க 
அஞ்சி ஒதுங்கிக் கொள்கிறனர். கழுதைக்குத் தெரியுமா 
கற்பூர வாசனை என்பது போல, முதலாளித்துவப் 
பொதி சுமக்கும் இந்தப் போலிகளிடம் மார்க்சிய 
வாசனை என்பது மருந்துக்கும் கிடையாது.
----
7) இதனால், போலிகள் அல்லாத பிற மார்க்சியர்கள்  
தத்துவச் செழுமை மிக்கவர்கள் என்பதாக யாரும் அர்த்தம் 
செய்து கொள்ளக் கூடாது. போலிகளின் தரம் 
"பா பா பிளாக் ஷீப்"என்றால், இவர்களின் தரம் 
"once there lived a fox in a cave" என்பதற்கு மேல் இல்லை.
இதற்குக் காரணம் புறச் சூழ்நிலைமையே. தீவிரமான 
கம்யூனிஸ்ட் செயல்பாடுகள் இருப்பின், அதன் 
இயற்கையான பின் விளைவாக, தீவிரமான விவாதம் 
பிறக்கும். செயல்பாடே இல்லாதபோது, விவாதம் 
எங்கிருந்து பிறக்கும்?
----     
8) இக்கட்டுரையின் தலைப்பில், மாவோயிசம் என்ற சொல் 
உள்ளது. இந்தச் சொல்லாட்சி எழுபதுகளிலும் எண்பதுகளிலும் 
தடுக்கப்பட்ட கனி. மாவோயிசம் என்று சொல்லவே 
கூடாது, மாவோ சிந்தனை (Mao thought) என்றுதான் சொல்ல 
வேண்டும் என்று எங்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்கள் 
வலியுறுத்தினார்கள்.
------
9) "இந்த யுகம் ஏகாதிபத்திய யுகம்; இந்த யுகம் முழுமைக்குமான 
மார்க்சியம் என்பது லெனினியமே; எனவே, லெனினியம் 
இருக்கும்போது, மாவோயிசம் என்று சொல்லக் கூடாது; 
அதற்குப் பதிலாக, மாவோ சிந்தனை என்று மட்டுமே 
கூற வேண்டும்.மாவோ சிந்தனை என்பது லெனினியத்தில் உள்ளடங்கியது."  இதுதான் அவர்கள் கூறிய காரணம்!
-----
10) பீகாரில் செயல்பட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் 
(MCC) என்ற அமைப்பும், மக்கள் யுத்தக்குழுவும் அமைப்பு 
ரீதியாக ஒன்றிணைவதற்கு, "மாவோயிஸ்ட்" என்ற பெயர் 
முட்டுக்கட்டையாக இருந்தது என்பது வரலாறு. பின்னர் 
இருவரும் இணைந்து இந்த வறட்டு வாதத்தை 
முறியடித்தனர்.
----
11) கியூபாவில் புரட்சியை நடத்திய பிடெல் காஸ்ட்ரோ
எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராக இல்லை.
ஆர்த்தடாக்ஸ் (orthodox) கட்சி என்னும் பழமைவாதக் 
கட்சியின் தலைவராகத் தான் அவர் இருந்தார். நம்மூர் 
பாஜக போன்ற ஒரு conservative கட்சிதான் அது. வறட்டு 
வாதத்தை முறியடித்துக் காட்டிய காஸ்ட்ரோ 
இவ்விஷயத்தில் பின்பற்றத் தக்கவரே.
-----
 12) அன்றைக்கெல்லாம் ஒரு முழுநேர ஊழியரோ அல்லது 
கட்சித் தோழரோ வகுப்பு எடுக்கிறபோது, அவர்கள் 
சொல்லித் தந்தது மட்டுமே சிலபஸ் என்பதாக, மார்க்சியக் 
கல்வி சுருங்கிப் போய்க் கிடந்தது. இன்றுள்ள இணையதள 
வசதிகள் யாவும் அன்று கிடையாது. தேவையான எந்த 
ஒரு மார்க்சிய நூலையும் பதிவிறக்கம் செய்து பெற்றுக் 
கொள்ளலாம், ஹனாய் நகரில் உள்ள ஆங்கிலம் தெரிந்த 
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரிடம் இங்கு 
சென்னையில் இருந்தபடியே விவாதிக்கலாம் என்பன 
போன்ற வசதிகள் அன்று கிடையாது. எனவே, ஒரு 
முழுநேர ஊழியர் சொல்லித் தந்தது தப்பு என்று 
உணர்ந்து கொள்வதற்குள் சில ஆண்டுகள் ஓடிவிடும்.
-----
13) இன்று நவீன அறிவியலின் வளர்ச்சியானது மார்க்சியக் 
கல்விக்கான கதவுகளை விசாலமாகத் திறந்து வைத்துள்ளது. 
மார்க்சிய விவாதங்கள் வரவேற்கத் தகுந்தவை, 
அவை போதிய அளவு காத்திரமானவையாக 
இருக்கும் பட்சத்தில்!
----------------------------------------------------------------------------------------------------                 
*****************************************888888888888888

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக