புதன், 11 மே, 2016

தமிழாலும் முடியாது!
இந்தியாலும் முடியாது!!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
பள்ளிக் கல்வி முழுமையும், அதாவது பன்னிரண்டாம்
வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வி இந்தியாவில்
கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். இங்கு தாய்மொழி
என்பது தமிழ்நாட்டில் தமிழ், கேரளத்தில் மலையாளம்,
உ.பி.யில் இந்தி என்று பொருள்படும்.  அரசமைப்புச்
சட்டத்தைத் திருத்துவதன் மூலமே இதைச் செய்ய
முடியும் என்றால், அதைச் செய்தே ஆக வேண்டும்.

இந்திய மொழிகள் பலவும் ( தமிழ் தெலுங்கு
மலையாளம் கன்னடம் மராத்தி குஜராத்தி வங்காளி
இந்தி ஆகிய மொழிகள்) 12ஆம் வகுப்பு வரையிலான
அறிவியலைத் தங்கள் மொழியில் சொல்கின்ற
அளவுக்கு வளர்ந்து இருக்கின்றன.

ஆனால், 12ஆம் வகுப்புக்கு மேற்பட்ட கல்லூரி,
பல்கலை மட்டத்திலான அறிவியலைத் தங்கள்
மொழியில் சொல்லும் அளவுக்கு மேற்கூறிய
மொழிகள், தமிழ் உட்பட, வளர்ச்சி அடையவில்லை.

பல்கலை அளவிலான அறிவியல் என்றால், குவான்டம்
தியரி, சார்பியல் கொள்கை, கணிதத்தின்
GROUP THEORY,  tensor algebra ஆகியவற்றை எல்லாம்
தமிழில் சொல்ல வேண்டும். அதுபோலவே இந்தியில்,
தெலுங்கில் பிற மொழிகளில் சொல்ல வேண்டும்.

அவ்வாறு சொல்லுகின்ற வல்லமையை இந்த
மொழிகள் பெற்றுள்ளனவா என்றால் இல்லை
என்பதே பதில். அதற்கான அறிவியல் நூல்கள்
மேற்கூறிய மொழிகள் எல்லாவற்றிலும் சேர்த்து
குறைந்தது 2 கோடி, 3 கோடி அளவுக்கு
எழுதப்பட்டு இருக்க வேண்டும். அப்படி எதுவும்
இல்லை என்பது கண்கூடு.

பல பில்லியன் அறிவியல் கட்டுரைகள், கோடிக்
கணக்கில் அறிவியல் நூல்கள் மேற்கூறிய
மொழிகளில் எழுதப்பட்டு, மக்களிடம் பரவி,
அவர்களால் படிக்கப்பட்டு, கூட்டங்களில்
விவாதிக்கப் பட்டு இருந்தால் மட்டுமே, பல்கலை
அளவில் இந்த மொழிகள் பயிற்று மொழிகள் ஆக
இயலும்.

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய A brief history of time என்ற
புத்தகம் உலகப் புகழ் பெற்றது. இது போல
தமிழில் எழுதப் பெற்ற அறிவியல் நூல்கள்
இந்தியா முழுவதும் பரவி, செல்வாக்குப் பெற்று
இருந்தால் மட்டுமே தமிழ் வழிக் கல்வி வெற்றி
பெறும். பெற்றோர்களும் தமிழ் வழிக் கல்வியில்
பிள்ளைகளைச் சேர்ப்பார்கள்.

தமிழ் கம்ப்யூட்டர் என்ற மாதமிருமுறை இதழ்
ஒன்று வருகிறது. 22 ஆண்டுகளாக தமிழில்
அறிவியலைச் சொல்லும் இந்த இதழ் வெற்றிகரமாக
வந்து கொண்டிருக்கிறது.  இந்த ஏட்டில் அண்மையில்
மார்ச் 16-31, 2016 இதழில், இணைய நடுநிலையைப்
பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒரு நீண்ட
கட்டுரை எழுதி இருக்கிறேன். ஆறு பக்க அளவிலான இக்கட்டுரையில் அடைப்புக் குறிக்குள்
70 ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த நேர்ந்தது.
உதாரணமாக OTT services, TRAI, COAI, TCP/IP ஆகிய சொற்கள்.

ஆ, தமிழால் முடியாதா என்று தாண்டிக் குதிப்போர்
வரிசையில் வருக. நம்மிடம் பல ஆங்கிலச் சொற்கள்
இருக்கின்றன. அவற்றுக்கான தமிழ்ச் சொற்களைத்
தந்து விட்டு அப்புறம் குதிக்கலாம்.
********************************************************************   



    

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக