திங்கள், 3 அக்டோபர், 2016

(10) புத்தரை அல்ல, புத்தரின் பிம்பத்தையே
விமர்சிக்கிறார் ரங்கநாயகம்மா!
ரங்கநாயகம்மா எழுதிய நூலின் திறனாய்வு!
--------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------------
சாண்டில்யனின் யவனராணி என்ற வரலாற்று
நாவலை இன்றைய மூத்த வாசகர்கள் உறுதியாகப்
படித்திருப்பார்கள். அதில் டைபீரியஸ் என்ற ஒரு
பாத்திரம் வரும். அது யவன அரசர் டைபீரியஸ்
சீசரைக் குறிக்கும். யவனராணியில் சாண்டில்யன்
காட்டுகிற டைபீரியஸை வைத்துக் கொண்டு,
யவனர் வரலாற்றையோ, டைபீரியஸ் சீசரையோ
விமர்சிப்பது அபத்தமாகி விடும்.

"புத்தரும் அவர் தம்மமும்" என்ற ஒரு நூலை
அம்பேத்கார் எழுதி இருக்கிறார். தம் வாழ்நாளின்
இறுதிக் காலத்தில் அவர் எழுதிய இந்நூல் ஒரு
அற்புதமான இலக்கியப்  படைப்பு (literary masterpiece).

மேற்படி நூல் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக்
கூறும் ஒரு biography அல்ல. அது ஒரு புனைவு (fiction).
புத்தரின் வாழ்க்கையை கற்பனை கலந்த
புனைவாகவும், அவரின் தம்மத்தை (போதனைகளை)
விதந்தோதியும் எழுதப்பட்ட ஒரு நூல் அது. அது ஒரு
புனைவு என்பதால், அதில் கற்பனைகளும்
புகழ்மாலைகளுமே மிகுதி. நீலகண்ட சாஸ்திரியும்
ரொமிலா தாப்பரும் எழுதிய வரலாற்று நூல்
போன்றது அல்ல அது.

SCIENCE வேறு; SCIENCE FICTION வேறு. ஜோஹன்னஸ்
கெப்ளரின் கோள்களின் இயக்கம் பற்றிய மூன்று
விதிகளை நாம் அறிவோம். அது அறிவியல். அதே
கெப்ளர்  'சோம்னியம்' (Somnium) என்ற ஒரு நூலையும்
எழுதினார். அது PURE FICTION. அதில் மனிதன்
நிலவுக்குப் பயணம் செய்ததாக அன்றே (1608இல்)
எழுதி இருந்தார் கெப்ளர்.

நிலாவைச் சுற்றி வர இந்தியா சந்திரயான் என்ற
செயற்கைக்கோளை அனுப்பியபோது கெப்ளரின்
விதிகள் (Kepler's laws) பயன்பட்டன. ஆனால் கெப்ளரின்
புனைவான சோம்னியம், வாசிப்பின் இன்ப
நுகர்ச்சிக்கு (textual pleasure) மட்டுமே பயன்பட்டது.

அதேபோல், அம்பேத்காரின் "புத்தரும் அவர்
தம்மமும்" நூல் வாசகர்களின் இன்ப நுகர்ச்சிக்கு
உரித்தானது. அது புத்தரை மதிப்பிட உதவாது.
பரிசோதிக்கப் பட்டு ஏற்கப்பட்ட வரலாற்றுத்
தரவுகள், மிகவும் நம்பகமான வரலாற்றுச்
சாட்சியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்
கொண்டு அம்பேத்கார் அந்த நூலை எழுதவில்லை.
அவர் எழுதியதுதான் மெய்யான வரலாறு என்று
வேறெந்த வரலாற்று ஆசிரியரும் சான்று
பகரவில்லை. சுருங்கக் கூறின், அது ஒரு வரலாற்று
ஆவணமாக எவ்விதத்திலும் கருதப்பட முடியாது.

புத்தரைப் பற்றிய ஒரு உயர்ந்த பிம்பத்தை அந்நூலில்
கட்டி எழுப்பி இருக்கிறார் அம்பேத்கார். அவ்வளவே.
அம்பேத்கார் சிருஷ்டித்த இந்த பிம்பத்தையே
மெய்யான புத்தராக ஏற்றுக் கொண்டு, புத்தரை
மிக வன்மையாகவும் கடுமையாகவும் விமர்சனம்
செய்துள்ளார் ரங்கநாயகம்மா தமது நூலில்.

ஜவுளிக் கடையில் பகட்டான சேலை கட்டிய
பொம்மைகள் நிறுத்தப் பட்டிருக்கும். அவை
பொம்மைகளே தவிரப் பெண்கள் அல்ல. அது போல
'புத்தரும் அவர் தம்மமும்' நூல் சிருஷ்டித்தது
புத்தரின் பொம்மையே தவிர, புத்தர் அல்ல.

புத்தரின் பிம்பத்தை வைத்துக் கொண்டு, அந்த
பிம்பமே புத்தர் என்று மயங்கி, புத்தரை விமர்சித்தது
அபத்தமா என்றால், சந்தேகமே வேண்டாம், அது
அபத்தம்தான். இது குற்றமா என்றால், சந்தேகமே
வேண்டாம், இது குற்றம்தான்.

என்றாலும், இந்தக் குற்றத்திற்கான முழுப் பொறுப்பும்
ரங்கநாயகம்மாவைச் சாராது.எப்படி?

சாதியப் பிரச்சினைக்கு புத்தரிடம் தீர்வு இருக்கிறது
என்கிறார் அம்பேத்கார். புத்தரிடம் மட்டுமே
தீர்வு இருக்கிறது, வேறு எவரிடமும் இல்லை என்றும்
அறுதியிடுகிறார் அம்பேத்கார். மேலும் ஒரு படி
சென்று, காரல் மார்க்சிடம் கூட இதற்குத் தீர்வு
இல்லை என்கிறார்.

அம்பேத்கார் இப்படி அழுத்திக் கூறுவதால்,
புத்தரையும் விமர்சிக்க வேண்டிய கட்டாயத்துக்கு
ஆளாகிறார் ரங்கநாயகம்மா. இந்நிலையில் அவர்
என்ன செய்திருக்க வேண்டும்? மெய்யான புத்தரை,
வரலாறு காட்டுகிற புத்தரை, வாலாற்றுச்
சாட்சியங்கள் காட்டுகிற புத்தரை எடுத்துக்
கொண்டு விமர்சித்து இருக்க வேண்டும். அதைச்
செய்யத் தவறிய ரங்கநாயகம்மா, அம்பேத்கார்
சிருஷ்டித்த பிம்பத்தை எடுத்துக் கொண்டு
புத்தரை விமர்சிக்கிறார்.

அதாவது, அம்பேத்கார் இழுத்த இழுப்புக்கெல்லாம்
இவர் ஆளாகி விடுகிறார். அம்பேத்காரின்
கற்பனைச் சிறைக்குள் அடைபட்ட ஒரு கைதியாகவே
புத்தரைப் பார்க்கிறார் ரங்கநாயகம்மா.

பௌத்தத் துறவியாக இருந்து பின்னாளில்
மார்க்சியவாதியாக மாறிய ராகுல
சாங்கிருத்தியாயன்  "பௌத்தத் தத்துவ இயல்"
என்று ஒரு நூலை எழுதி இருக்கிறார். (NCBH வெளியீடு).
மார்க்சிய நோக்கில் புத்தரை அணுகிய பல்வேறு
நூல்கள் உள்ளன. இவற்றில் காட்டப் படுகிற
புத்தரையே நூலாசிரியர் விமர்சித்து இருக்க
வேண்டும். அதைச் செய்யத் தவறியதால்
நூலாசிரியரின் புத்தர் பற்றிய மதிப்பீடு
ஓர் எதிர்த்திசைப் பயணத்தில் போய் முடிந்து
விடுகிறது.

புத்தர் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்
என்பதே உலக மகா அபத்தம்.  அந்தத் தீர்வில்
போதாமை இருக்கிறது என்பது அதை விட
அபத்தம். புத்தர் கிறிஸ்துவுக்கு முற்பட்டார்.
கி.மு. 563இல் பிறந்தவர் புத்தர். அவர் காலத்தில்
இந்தியாவில் நிலவுடைமைச் சமூகமே தோன்றி
இருக்கவில்லை. மாபெரும் பேரரசுகள் உருவாகி
இருக்கவில்லை.

புத்தர் காலத்திலும் சாதி நிலவியது. அது பின்னாளில்
அடைந்த மூர்க்கத்தையும் உக்கிரத்தையும்
புத்தர் காலத்தில் கொண்டிருக்கவில்லை. இன்னும்
சொல்லப் போனால், சூத்திர பஞ்சமர்களுக்கு
வழங்கப்பட வேண்டிய தண்டனைகளைத்
தொகுத்துக் கூறும் மநு சாஸ்திரம் புத்தர் காலத்தில்
எழுதப்பட்டே  இருக்கவில்லை. புத்தருக்குப் பின்
பல நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்தவர் மநு.

தம் காலத்தில் நிலவிய சாதியை தம் தேவைக்கேற்ப
புத்தர் எதிர்கொண்டார். தேவையான அளவு
முறியடித்தார். போதி மரத்தில் அடைந்த ஞானம் மூலமாக சாதியப் பிரச்சினைக்குத் தாம்
தீர்வு கண்டு விட்டதாக புத்தர் எவ்விதப்
பிரகடனமும் செய்யவில்லை. முதலாளியச்
சமூகத்தின் விதிகளை மார்க்ஸ் ஆராய்ந்து
கண்டறிந்தது போல, தம் சமகாலச் சமூகத்தின்
விதிகளை புத்தர் ஆராய்ந்து கண்டு பிடிக்கவில்லை.
அவ்வாறு கண்டு பிடித்து விட்டதாகவும் புத்தரோ
அவரின் சீடர்களோ உரிமை கோரவில்லை.

எனவே சாதியப் பிரச்சினைக்கு  புத்தர் தீர்வு
கண்டு விட்டார் என்ற அம்பேத்காரின்
உரிமைகோரல்கள் பரிசீலனைக்கே அருகதை
அற்றவை. அவை அதீத வழிபாட்டு மனநிலையில்
இருந்து வெளிப்படும் பரவசத்தின் வெளிப்பாடுகளே.
கோவில் திருவிழாக்களில் பூசாரிக்கு அருள்
வரும்போது, பக்தர்களின் கோரிக்கைகளைச் 
செவிமடுத்து வழங்கும் பரவசமான தீர்வுகளே அவை.
மார்க்சிய லெனினிய நோக்கில் அவற்றின்
பெறுமானம் அவ்வளவுதான்.

புத்தர் தீர்வே சொல்லாதபோது, புத்தர் சொல்லிய
தீர்வில் போதாமை உள்ளது என்று ரங்கநாயகம்மா
கூறுவது எதில் சேர்த்தி! பஞ்ச சீலமும் அஷ்டாங்க
மார்க்கமுமே தீர்வு என்று ஒருவர் சொன்னால்,
அந்தக் கூற்றை எடுத்துக் கொண்டு ஆய்வுக்
கூடத்திற்குச் சென்று விடுவதா? அந்தக் கூற்றின்
பெறுமானம் என்ன என்று பார்க்க வேண்டாமா?

ஜெயலலிதா ஒரு புரட்சித் தலைவி என்று அதிமுக
அடிமைகள் சொன்னால், அதற்காக அவர் ஒரு
புரட்சித் தலைவி அல்ல என்று நிரூபிக்கும் ஆய்வுக்
கட்டுரை எழுத வேண்டுமா? ஒரு அபத்தத்திற்கு
மறுப்பாக இன்னொரு அபத்தத்தை முன்வைக்க
வேண்டுமா?

இருப்பினும், பௌத்தம் சாதியத்திற்குத் தீர்வு
தருகிறது என்று அம்பேத்கார் கூறியதால்,
அதை நிராகரிப்பதற்குப் பதிலாக, அக்கு வேறு
ஆணி வேறு என்று அலசிப் பார்த்து விடுவது என்று
ரங்கநாயகம்மா முடிவு எடுத்து இருக்கக் கூடும்.
இதற்காகப் பௌத்தக் கூளங்கள் வழியே நெடுக
நடந்துள்ளார்.

ஏற்கனவே, ராமாயணம் ஒரு விஷ விருட்சம் என்ற
நூலை எழுதுவதற்காக, பிராமணியக் கூளங்கள்
வழியே நடந்து அனுபவம் பெற்றவர்தானே இவர்!

வழிபாட்டு மனநிலையும் துதி பாடுதலும் தவிர
வேறெதையும் அறியாத மௌடீகம் நிறைந்த ஒரு
சூழலில், ஒரு எழுத்தாளர், கடுமையான அபத்தத்தைக்
கூட, ஒரு எளிய மறுப்பின் மூலமாகவோ, இகழ்ச்சியின்
மூலமாகவோ கடந்து போய் விட முடியாது என்ற
யதார்த்தத்தை ரங்கநாயகம்மா உணர்ந்து இருக்கக்
கூடும். அம்பேத்காரின் புத்தர் பற்றி எழுதுமாறு  
வாசகர்கள் எழுப்பிய கோரிக்கைகளின்
நிர்ப்பந்தம் அவருக்கு இருந்து இருக்கக் கூடும்.
இதனால், ரங்கநாயகம்மா மீது கோபம் கொள்ள
முடியவில்லை; பரிதாபம்தான் மேலிடுகிறது.
----------------------------------------------------------------------------------------------
தொடரும்
அடுத்த கட்டுரையுடன் முடியும்.
*************************************************************** 


 

 
             
   
 



             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக