செவ்வாய், 4 அக்டோபர், 2016

(12) ரங்கநாயகம்மாவுக்கு செலக்டிவ் அம்னீஷியா!
ரங்கநாயகம்மா நூலின் திறனாய்வு!
மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச் செண்டாலே!
-----------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-----------------------------------------------------------------------------------
தொழிற்சங்கங்கள் என்பவை  கம்யூனிசத்தின்
நாற்றங்கால்கள் என்பார் லெனின். புரட்சியின்
சோஷலிஸக் கட்டத்தின் போதோ, வளர்ச்சியடைந்த
முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்கம்
புரட்சி நடத்தும் போதோ, அந்தப் புரட்சி சோஷலிஸப்
புரட்சி எனப்படும். அதில்  தொழிற்சங்கங்களின்
வேலைநிறுத்தங்கள் முக்கியப்  பங்கு வகிக்கும்.

இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான AITUC,
1920இல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே அமைக்கப்
பட்டது. இதை அமைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.

1928இல் அன்றைய பம்பாய் மாகாணத்தில், பஞ்சாலைத்
தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தம்
நடைபெற்றது. எண்பது ஆலைகளைச்  சேர்ந்த,
ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் இந்த
வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். எஸ் ஏ டாங்கே,
பி டி ரணதிவே போன்ற கம்யூனிஸ்டு தலைவர்கள்
இந்த வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைத்தனர்.
ஆறுமாத காலம் நீடித்தது இந்த வேலைநிறுத்தம்.

வேலைநிறுத்தம் கூடாது என்னும் அம்பேத்கார்!
--------------------------------------------------------------------------------------
இந்த வேலைநிறுத்தத்தை அம்பேத்கார்
ஆதரிக்கவில்லை. தலித் தொழிலாளர்கள் இதில்
பங்கேற்க வேண்டாம் என்று அம்பேத்கார்
அறிவுறுத்தினார். அரசியல் நோக்கம் உடைய
இந்த வேலைநிறுத்தங்கள் தலித் தொழிலாளர்களின்
பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விடும் என்றார் அவர்.
(பார்க்க: தனஞ்செய் கீர் எழுதிய Dr Ambedkar life and mission,
ஆங்கில நூல், பக்கம்-118)

அம்பேத்காரும் மார்க்சிஸ்டுகளும் நேருக்கு நேர்
எதிராக நின்ற இடம் இது. இது அம்பேத்காரின் வர்க்கச்
சார்பைத் தெளிவு படுத்தும் நிகழ்வு. தொழிலாளர்கள்
வர்க்க ரீதியாகத் திரண்டு விடவே கூடாது என்பதில்
உணர்வு பூர்வமாகவே செயல்பட்டார் அம்பேத்கார்.
தொழிலாளி வர்க்க அமைப்பான தொழிற்சங்கம்
மீது  எப்போதும் பகைமை கொண்டவராகவே அவர்
இருந்து வந்தார்.

இருந்தும், அம்பேத்காரின் இந்த வர்க்கத் திரட்சி
மீதான காழ்ப்பை அம்பலப் படுத்த, தமது நூலில்
ரங்கநாயகம்மா முயலவில்லை. செலக்டிவ் அம்னீஷியா
வந்தவர் போல் நடந்து கொண்டு, இவற்றை எல்லாம்
மூடி மறைத்து விடுகிறார்.

இந்த வேலைநிறுத்தத்தை நடத்தியதற்காக,
எஸ்.ஏ.டாங்கே மீது அடுத்த ஆண்டே, 1929இல்
மீரத் சதி வழக்கைப் புனைந்த பிரிட்டிஷ் அரசு,
அவரையும் பிற கம்யூனிஸ்டுகளையம் சிறையில்
அடைத்தது.  போராட்டங்களை வழிநடத்தும்
தொழிற்சங்க முன்னோடிகள், அரசின், நிர்வாகத்தின்
பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு இலக்கு ஆகிறார்கள்.

தொழிற்சங்கங்கள் இல்லாமல், அவை நடத்திய வேலைநிறுத்தங்கள் இல்லாமல்,
தொழிற்சங்க முன்னோடிகளின் தியாகங்கள்
இல்லாமல், தொழிலாளி வர்க்கம் இன்று
அனுபவிக்கும் எந்த உரிமைகளையும் நினைத்தே
பார்க்க முடியாது. மேலும் தொழிலாளர்களை அரசியல் படுத்துவதிலும் தொழிற்சங்கப் போராட்டங்களும்
வேலைநிறுத்தங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன.
ஆயிரம் உதாரணங்கள் கொண்டு இதை விளக்கலாம்.

போராட்ட அனுபவமும் லெனினிய பால பாடமும்!
------------------------------------------------------------------------------------------
ஒருமுறை சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நல
ஆணையர் அலுவலகத்தில், தடையை மீறி ஆர்ப்பாட்டம்
.செய்தோம். AITUC, AICCTU (வினோத் மிஸ்ரா குழுவின் சங்கம்)
ஆகிய சங்கத் தோழர்களும் எங்களுடன் இதில்
பங்கேற்றனர். எங்கள் சங்கம் (NFTE -National Federation of
Telecom Employees) சார்பாக மட்டும் நாங்கள் 48 பேர்
பங்கேற்றோம். அனைவரையும் கைது செய்து
நீதிமன்றத்தில் நிறுத்தியதும், சைதாப்பேட்டை
மாஜிஸ்திரேட் 15 நாள் ரிமாண்டு என்றார். எனவே
சிறையில் அடைக்கப் பட்டோம்.

எங்களைக் கைது செய்த இன்ஸ்பெக்டர், முன்பு
கியூ பிராஞ்சில் பணியாற்றி அப்போதுதான் சட்டம்
ஒழுங்கு  பிரிவுக்கு வந்தவர். எனவே எல்லோர் மீதும்
124A பிரிவின் கீழ் (sedition) வழக்குத் தொடுத்து இருந்தார்.

பின்னர்,  நீதிமன்றத்தில், அரசு ஊழியர்களின் மீது
கண்மூடித் தனமாக 124A  பிரயோகிக்கப்பட்டதானது
அத்துமீறல் என்று நீதிபதி கண்டித்து, எங்களுக்கு
ஜாமீன் கிடைத்தது. நாங்கள் சிறையில் இருந்து
விடுதலையான அன்று, நகரின் எல்லா
எக்சேஞ்சுகளிலும் இருந்து ஊழியர்கள் பணியை
அப்படியே போட்டு விட்டு ( deserting the duty)
சிறைவாசலுக்கு வந்து எங்களை வரவேற்றார்கள்.

இந்தப் போராட்டத்தில்  சிறைக்குச் சென்றது எங்கள்
சங்கத்தில் 48 பேர்தான். ஆனால் தமிழ்நாடு முழுவதும்
40,000 ஊழியர்களிடமும்,  "அரசு எந்திரம் என்பது ஓர்
அடக்குமுறைக் கருவி" என்ற லெனினிய பால பாடத்தை
பசுமரத்தாணி போல பதிய வைக்க முடிந்தது.

இதோ அம்பேத்கார் கூறுகிறார்:
---------------------------------------------------------
"அடித்தட்டு வர்க்கங்களைச்  சேர்ந்தவர்களிடம்
தாங்களும் ஆட்சியாளர்களாக மாற வேண்டும்
என்பதில் காணப்படும் அவசரமானது ஒரு
வர்க்கப் போராட்டமாகவோ, வர்க்கப் போராகவோ
வளர்ச்சி அடைவதை அனுமதிக்காக கூடாது."
( அம்பேத்கார் எழுத்தும் பேச்சும், தொகுதி-13, பக்-284)
(ரங்கநாயகம்மா நூல், பக்-372)

அம்பேத்கார் சட்ட அமைச்சராக இருந்த போது தான்
தெலுங்கானா போராட்டத்தை ஒடுக்க, பட்டேல்
ராணுவத்தை அனுப்பினார். அம்பேத்கார் ராணுவத்தை
ஆசீர்வதித்து அனுப்பினார்.

தாம் வர்க்கப் போராட்டத்துக்கு எதிரானவர் என்பதை
எப்போதும் பிரகடனம் செய்து கொண்டே இருந்தார்
அம்பேத்கார். இருப்பினும், அம்பேத்காரை
மென்மையாகவே அணுகுகிறார் ரங்கநாயகம்மா.
மார்க்சிய வழியிலான கறாரான விமர்சனம் என்பது
ரங்கநாயகம்மாவிடம் அபூர்வமாகவே காணப்
படுகிறது.

மாமன் அடிச்சானோ
மல்லிகைப் பூச் செண்டாலே
என்பது போல ரங்கநாயகம்மாவின் விமர்சனம் உள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------
தொடரும்
-----------------------------------------------------------------------------------------------------------   .



 


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக