திங்கள், 19 ஜூன், 2017

தோராயங்களும் அனுமானங்களும்
புதிரை விடுவிக்கவில்லை!
(ஆரியர் வருகை குறித்த விவாதம்:
கட்டுரையின் முதல் பகுதி)
---------------------------------------------------------------
(திரு டோனி ஜோசப் ஆங்கில இந்து ஏட்டில் (ஜூன் 16,2017)
எழுதிய "ஆரியரின் இடம்பெயர்வு பற்றிய சர்ச்சையை
மரபியல் எவ்வாறு தீர்த்து வைக்கிறது?"
"How genetics is settling the Aryan migration debate?"
என்ற கட்டுரையின் மீதான எதிர்வினை)
--------------------------------------------------------------------------------
 நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் அறிவியல்
கைப்பற்றிக் கொண்டு வருகிறது; அத்தோடு
அத்துறைகளை அறிவியல்மயம் ஆக்கியும்
வருகிறது. மானுட மரபியல் (Human Genetics) என்பது
ஒரு துறை. இதைச் சார்ந்த இன்னொரு துறை
மக்கள்தொகை மரபியல் (population genetics).
ஆய்வுகளிலும் பரிசோதனைகளிலும் புதிய
தொழில்நுட்ப முறைகளைப் புகுத்தியதன்
விளைவாக, இத்துறைகள் முன்னிலும் அதிகமான
அறிவியல் தன்மையைப் பெற்றுள்ளன.

எனினும்,தற்போதைய நிலையில், 'மக்கள்தொகை
மரபியல்'  துறையின் (population genetics) விதிகள், இயற்பியல் விதிகளைப் போன்று கறார் ஆனதும்
துல்லியம் உடையதும் அல்ல. கிடைத்திருக்கும்
சிறிதளவான சான்றாதாரங்கள் (physical evidence),
திரட்டப்பட்ட தரவுகள் ஆகியவற்றைக் கொண்டு.
உச்ச அளவிலான அனுமானங்களை மேற்கொண்டுதான் (கவனிக்கவும்: உச்ச அளவிலான அனுமானங்கள்)
இத்துறையில் ஒரு கோட்பாட்டு முன்மாதிரியை
(theoretical model) உருவாக்க முடியும்.

கோட்பாட்டு உருவாக்கத்தின் ஒவ்வொரு
கட்டத்திலும் தோராயங்களும் அனுமானங்களும்
இத்துறையில் தவிர்க்க முடியாதவை மட்டுமல்ல,
இயல்பானவையும் கூட. மிகுந்த ஆரவாரத்துடன்
முன்மொழியப்படும் பல கோட்பாடுகள் நாளடைவில்
போலியாக (fallacy) ஆகி விடுவதும் இத்துறையில்
இயல்பே.

எனவே பாயில் விதி, அவகாட்ரோ விதி போன்றோ,
உந்தம் மாறாமல் இருத்தல் பற்றிய விதி போன்றோ
(Law of conservation of momentum) இத்துறையின்
கோட்பாடுகள் இருப்பதில்லை; இருக்கவும்
இயலாது. இந்த அடிப்படை  உண்மையை மனதில்
பதித்துக்கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில்
உயிரியல் பாடங்களில் ஓரளவேனும் அறிமுகம்
இருத்தல் வேண்டும். அதற்கு உதவியாகச் சில
விஷயங்களை முதலிலேயே பார்த்து விடுவோம்.

1) பொருட்கள் அணுக்களால் ஆனவை. அதுபோல
உயிர்கள் (எல்லா உயிரினங்களும்) செல்களால்
ஆனவை.
2) செல் என்பது ஓர் உட்கருவைக் கொண்டது.
உட்கருவில் குரோமோசோம்கள் உள்ளன.
குரோமோசோமில் மரபணு (DNA) உள்ளது.
DNAவின் கூறுகளில்  ஒன்று ஜீன்கள் ஆகும்.
3) Y குரோமோசோம் என்பது பாலியல் நிர்ணயிப்பு
குரோமோசோம் ஆகும். Y குரோமோசோம்
ஆண்களைக் குறிக்கும்.
4)ஹேப்லோ குழுமம் (Haplogroup): ஒரு மூலப் பெற்றோரிடம்
இருந்து வந்த மனிதர்களின் (அல்லது உயிரிகள்)
உடலில் உள்ள ஜீன்களின் குழு. 
5)R1a: மனித உடலின் ஒரு ஹேப்லோ குழு R1a ஆகும்.
மனித Y குரோமோசோம் DNAவின் ஹேப்லோ குழுக்கள்
A முதல் T வரை வகைப் படுத்தப் .பட்டுள்ளன.
அவற்றில் இது R வகையில் 1a உட்பிரிவு ஆகும்.
6) மக்கள்தொகை மரபியலில் இரண்டு விதமான
ஹேப்லோ குழுக்கள் ஆய்வு செய்யப் படும்.
அ) Y குரோமோசோம் ஹேப்லோ குழு.(Y DNA)
ஆ) மைட்டோ கான்ட்ரியல் ஹேப்லோ குழு.(mtDNA)
7) Y குரோமோசோம் ஹேப்லோ குழு.தந்தையின்
தன்மை உடையது. அதாவது இது தகப்பனிடம்
இருந்து பண்புகளை மகனுக்குக் கடத்தும். இது
PATRILINEAL ஆகும்.
8) மைட்டோ கான்ட்ரியல் ஹேப்லோ குழு: இது
தாய்மைப் பண்பு உடையது. தாயிடம் இருந்து
பிள்ளைகளுக்குக்  கடத்தும். இது MATRILINEAL ஆகும்.
9) Z 95: இது R1a-ஐ மூதாதையாகக் கொண்டு (ancestor)
அதிலிருந்து வந்த (descendant) வம்சம் ஆகும். அதாவது
R1aவின் உட்பிரிவு ஆகும்.
10) இன்றைய மொத்த மனித இனமும் ஹோமோசேப்பியன்
(homosepian) என்னும் வகை ஆகும்.இதற்கு முன்பு
நியாண்டர்தால் இனமும் அதற்கும் முன்பு
ஹோமோஎரக்டஸ் இனமும் இருந்தது.
11)  மரபியல்  ஆதாம் ( Y குரோமோசோம் ஆதாம்):
-----------------------------------------------------------------------------------------
இன்று வாழும் மனித குலத்தின் மிகச் சமீபத்திய
(MOST RECENT) பொது  மூதாதையின் மரபணுக்கள்
அறியப் பட்டுள்ளன. ஆண்தன்மை உடைய இந்த
மூதாதை "மரபியல் ஆதாம்" என்று அழைக்கப் படுகிறது.

12) மரபியல் ஏவாள்: ( Mitochondrial Eve):
---------------------------------------------------------------
இன்று வாழும் மனித குலத்தின் மிகச் சமீபத்திய
பொது மூதாதை மரபியல் ஏவாள் என்று அழைக்கப்
படுகிறது. இது தாய்மைத் தன்மை உடையது.

இந்த அளவிலான அறிமுகத்துடன் கட்டுரைக்குள்
செல்வோம். வாசகர்கள் உரிய பாடநூல்களைப்
படித்து அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.  

'மக்கள்தொகை மரபியல்' (population genetics) துறையின் 
 கோட்பாடுகளில் நிச்சயமின்மைகள்(uncertainties)
நிறைந்து காணப்படும். எனவே முன்வைக்கப்படும்
எந்த ஒரு கோட்பாடும் எதிர்காலத் திருத்தத்திற்கு
உட்பட்டது. (subject to future revision).

மத்திய ஆசியா, தெற்காசியா (இந்தியா உள்ளிட்டு)
பகுதிகளில் வாழும் மக்கள் குறித்த மரபியல்
ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுகாறும் நடைபெற்ற ஆய்வுகளில், தாய்மைப்
பண்பு உடைய மைட்ரோகான்ட்ரியல் மரபணு
(mtDNA) ஆய்வு முடிவுகளின் தரவுகள் பயன்பட்டன.

தற்போது, தந்தைத் தன்மை உடைய Y மரபணு
ஆய்வுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
இந்த ஆய்வுத் தரவுகளை தற்போது மரபியலில்
பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். mtDNA ஆய்வுகள்
மற்றும் Y DNA ஆய்வுகள் என்று இரண்டு வகையான
ஆய்வுகளும் தற்போது மரபியலில் பயன்படுத்தப்
படுவது வரவேற்கத் தக்கதாகும். இது தோராயத்தை
ஓரளவு குறைத்து துல்லியத்தை ஓரளவு அதிகரிக்கும்.  

BMC Evolutionary Biology என்ற பெயரில் இங்கிலாந்தில்
இருந்து ஒரு அறிவியல் ஏடு வெளிவருகிறது.
BioMed Centre என்ற நிறுவனம் இந்த ஏட்டை
வெளியிட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு
இந்த ஏட்டில் ஒரு கட்டுரை வெளியானது.

பேராசிரியர் மார்ட்டின் பி ரிச்சர்ட்ஸ் என்ற இங்கிலாந்து
விஞ்ஞானி, அந்த ஏட்டில், "A Genetic Chronology for the Indian 
Subcontinent Points to Heavily Sex-biased Dispersals"  என்ற 
தலைப்பில் எழுதிய கட்டுரையே அது.   

இந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டி,
ஆங்கில இந்து ஏட்டில், திரு டோனி ஜோசப் என்ற
பத்திரிகையாளர் ஒரு கட்டுரையை எழுதி உள்ளார்.
அக்கட்டுரை மீதான  எதிர்வினையே இந்தக் கட்டுரை.

திரு டோனி ஜோசப் எழுதிய கட்டுரையை
படித்துப் புரிந்து கொண்ட பிறகு, வாசகர்கள் எமது
இந்தக் கட்டுரையைப் படிப்பது சிறந்தது. ஆழமான
வாசிப்பு தேவைப்படுவோர் பேராசிரியர் மார்ட்டின்
பி ரிச்சர்ட்ஸ் எழுதிய மேற்குறிப்பிட்ட மூலக்
கட்டுரையையும் படிக்க வேண்டும்.
இக்கட்டுரைகளைப் படித்துப் புரிந்து
கொள்வதற்கு வலுவான அறிவியல் பின்னணியும்
நல்ல ஆங்கிலப் புலமையும் முன்நிபந்தனைகளாக
அமைகின்றன என்பது சொல்லாமலே விளங்கும்.

1) மூலக்கட்டுரையில் பேராசிரியர் ரிச்சர்ட்ஸ் என்ன
முடிவுகளை முன்வைத்துள்ளார்?

2) அம்முடிவுகளை அவர் வந்தடைந்தது எப்படி?
அதாவது, அவரின் முடிவுகளில் அறிவியல் தரவுகளின் 
பங்கு எவ்வளவு? தோராயங்களின் பங்கு
எவ்வளவு?  அனுமானங்களின் பங்கு எவ்வளவு?

3) இங்கு பேசப்படும் அனைத்திற்கும் மூல
காரணமாக இருப்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட
மரபணுக்களின் சாம்பிள் (sample). இந்த  சாம்பிளில்
உள்ள மரபியல் தகவல்கள்தான் குறியீடுநீக்கம்
(decode) .செய்யப்பட்டன. எனவே இந்த சாம்பிளின்
அளவு, தரம், பிரதிநிதித்துவத் தன்மை, பெறுமதி
ஆகியவை என்ன? 
என்ற மூன்று கேள்விகளுக்கு விடை காண வேண்டும்.

4) அடுத்து, பேரா ரிச்சர்ட்ஸின் கட்டுரையை மேற்கோள்
காட்டிய திரு டோனி ஜோசப் தமது கட்டுரையில்
மூலக் கட்டுரைக்கு எவ்வளவு விசுவாசமாக
இருக்கிறார் அல்லது இல்லை?

5) பேரா ரிச்சர்ட்ஸின் அனுமானங்களுக்கு
திரு டோனி ஜோசப் அளிக்கும் வியாக்கியானங்கள்
(interpretations) என்ன? அவை சரியானவைதானா? 

6) இக்கட்டுரைகளால் இந்தியாவுக்குள் ஆரியர்
வருகை என்ற புதிர் விடுவிக்கப் பட்டு விட்டதா?
அல்லது நீடிக்கிறதா? புதிர் விடுவிக்கப் பட்டு
விட்டதாக கட்டுரையாளர் உரிமை கோருவது சரியா?
ஆகிய கேள்விகளுக்கும் விடை காண வேண்டும்.

மேற்கூறிய ஆறு  கேள்விகளுக்குமான விடையே
எமது கட்டுரை. துரதிருஷ்ட வசமாக தமிழ் வாசகச்
சூழலில் எடுத்த எடுப்பிலேயே ஒரு கட்டுரையை எழுதி
விட இயலாது. கட்டுரையைப் புரிந்து கொள்ள
உதவியாக, சில அடிப்படையான விஷயங்களைச்
சொல்லாமல், கட்டுரையை அப்படியே வாசகர்களுக்கு
முன் வைத்து விட இயலாது. எனவேதான் இந்த
முன்னுரை. மேற்கூறிய ஆறு கேள்விகளுக்கும்
 விடையளிக்கும் கட்டுரையின் சாரப்பொருள்
அடுத்த பகுதியில் வெளியாகும்.
--------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
போதிய வாசகர்களின் ஆதரவு இருந்தால்
மட்டுமே கட்டுரையின் இரண்டாம் பகுதி வெளியாகும்.
******************************************************************
   
 


       



           


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக