புதன், 21 ஜூன், 2017

நிகழ்ந்தது யவனப் படையெடுப்பே தவிர
ஆரியப் படையெடுப்பு அல்ல!
அலெக்ஸ்சாண்டர், செல்யூக்கஸ் நிகேடாரின்
படையெடுப்பும், ஆட்சியும் அவற்றின் தாக்கமும்!
(ஆரியர் வருகை குறித்த கட்டுரை: பகுதி-4)
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
உலகத்தின் கூரை எது என்ற கேள்விக்கு
'பாமீர் முடிச்சு' என்று விடையளித்தது நினைவு
வருகிறதா? சிறு வயது பூகோளப் பாடத்தில் படித்தது
நினைவிருக்கிறதா?  (The PAMIR KNOT is the roof of the world).

மத்திய ஆசியா முழுவதும் பெரும் மலைகள் உண்டு.
தியான்ஷன் மலை, காரகோரம் மலை, இந்துகுஷ் மலை
உள்ளிட்ட பெரும் மலைத் தொடர்கள் பாமீர் முடிச்சில்
இருந்து பிரிந்து செல்கின்றன. இமயமலை வரைக்கும்
நீள்கின்றன.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே இந்தியத்
துணைக் கண்டத்தின் மீது அந்நியப் படையெடுப்பு
நடந்தது.இது யவனப் படையெடுப்பு .ஆகும். யவனர்
என்பது கிரேக்கரைக் குறிக்கும் தமிழ்ச்சொல்.

கி.மு 326ஆம் ஆண்டில், அதாவது இன்றைக்கு
சற்றேறக் குறைய 2350 ஆண்டுகளுக்கு முன்பே
மகா அலெக்ஸ்சாண்டர் சிந்து சமவெளியின் மீது
படையெடுத்தார்.அலெக்ஸ்சாண்டர் மாசிடோனியா
மன்னர். மிகப்பெரும் ராணுவப் படையெடுப்பு அது.

சிந்து சமவெளி நெடுகிலும் நிறைந்திருந்த
இந்தியப் பழங்குடி இன மக்களின் அரசுகளைப்
போரில் வென்றார். வடமேற்கு இந்தியா முழுவதையும்
கைப்பற்றினார். தமது ஆட்சியை அவர் இங்கு
ஸ்தாபிதம் செய்தார். பல தலைமுறைகளாக
யவனர்களின் ஆட்சி சிந்து சமவெளிப் பகுதியில்
நீடித்தது. இன்றைய குஜராத் வரை
அலெக்ஸ்சாண்டரின் யவனப் பேரரசு பரவி இருந்தது.

யவனர் ஆட்சியின் விளைவாக, இங்கு இனக்கலப்பும்
மொழிக்கலப்பும் நிகழ்ந்தது. இங்கிருந்த சுதேசிப்
பண்பாடு யவனர்களால் அழிக்கப் பட்டது.

என்றாலும் அலெக்ஸ்சாண்டர் விந்திய மலையைத்
தாண்டி, தென்னிந்தியாவுக்குள் நுழையவில்லை;
நுழையவும் இயலவில்லை. இருப்பினும், தமிழகத்தை
யவனர்கள் கைப்பற்றும் அபாயம் உள்ளது என்ற
கருத்தின் மீது சாண்டில்யன் 'யவனராணி' என்ற
வரலாற்று நாவலை எழுதினர். சுமார் 600+600=1200
பக்கங்களைக் கொண்ட இரண்டு பாகங்களால்
ஆன பெரும் நாவல் அது.

என்னுடைய பதினெட்டு வயதில்  யவனாராணியை
முதலில் படித்தேன்.அதன் பின்னரும் பத்தாண்டு
காலம் அதைத் தொடர்ந்து படித்துக் கொண்டே
இருந்தேன். யவனத்தில் டைபீரியஸ் சீசர் காலத்திலும்
தமிழகத்தில் கரிகால் பெருவளத்தான் காலத்திலும்
கதை நடப்பதாக சாண்டில்யன் அமைத்து இருப்பார்.

அலெக்ஸ்சாண்டர் பாபிலோனில் இறந்தார்.
அவருக்குப்பின், அவரின் படைத்தளபதியாக
இருந்த செல்யூக்கஸ் நிகேடார் பஞ்சாப் பகுதிகளை
வென்றார்; ஆட்சி செய்தார். இவையெல்லாம்
பள்ளிப் பாடங்களில் சொல்லித் தரப்பட்டுள்ளன.

ஆக, இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது
யவனப் படையெடுப்பே தவிர, கற்பனையான
ஆரியப் படையெடுப்பு இல்லை. வரலாற்றை
பொருள்முதல்வாத நோக்கில் ஆராய்வது என்ற
கோட்பாட்டையே அறிந்திராத அறியாமையும்,
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியைப் போற்றும்
அடிமைச் சிந்தனையுமே ஆரியப் படையெடுப்பு
என்ற பொய்யான கட்டுக்கதையை தோளில்
தூக்கிச் சுமந்து கொண்டு இருக்கின்றன.

ஆரியப் படையெடுப்பு என்பது பொய் என்று டாக்டர்
அம்பேத்கார் முன்வைத்த ஆய்வு முடிவுகளை
இன்றுவரை எவரும் மறுக்கவில்லை; எவராலும்
மறுக்க இயலவில்லை.

ஆரியர் என்றோ  திராவிடர் என்றோ எந்த
மனித இனமும் (race) கிடையாது. ஆரிய இனமும்
பொய்! திராவிட இனமும் பொய்! ஆரியம் திராவிடம்
இரண்டுமே வெறும் மொழிக்குடும்பங்கள்.

வில்லியம் ஜோன்ஸ், கால்டுவெல் பாதிரியார்
ஆகிய இரு ஆங்கிலேய காலனி ஆதிக்கவாதிகள்
முறையே ஆரிய திராவிட இனக் கோட்பாட்டை
உருவாக்கினர். இருவருமே அறிவியலுக்கு எதிராக
மொழிக் குடும்பங்களை மனித இனமாக
வரையறுக்கும் பாரிய தவறைச் செய்தனர். பிரிட்டிஷ்
ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரத்திற்கு
உகந்த கோட்பாடுகளாக இவை இருந்தமையால்,
அவர்கள் இக்கற்பனைக் கோட்பாடுகளை
அரச அதிகாரத்தின் மூலம் மக்களிடம் எளிதாகப்
பரப்பினர்; மக்களை நம்ப வைத்தனர்.

அறிவியல் ஆதாரங்கள் குறித்து!
----------------------------------------------------------
GENETICS என்பது பெரிதும் அறிவியல். ஜீன்களில்
உறைந்துள்ள மரபியல் தகவல்களை
வெளிப்படுத்துதல் (decoding) என்பது முற்றிலும்
அறிவியல் தன்மை வாய்ந்தது.

ஆனால் POPULATION GENETICS என்பது  துல்லியமான
அறிவியல் அல்ல. அது தோராயங்களையும்
அனுமானங்களையும் கொண்டது. கிடைத்த
அறிவியல் தரவுகளைக் கொண்டு கால நிர்ணயம்
செய்வது என்பதில் அனுமானங்களே அதிகம்.

திரு ஜோசப் தமது கட்டுரையில், கிடைத்துள்ள
Y DNA அறிவியல் தரவுகளைக் கொண்டு தவறான
வியாக்கியானம்  மூலம் அபத்தமான முடிவுக்கு
வருகிறார். வெண்கல யுகக் காலத்தில், மத்திய
ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் ஜீன்களின்
வரத்து ( inflow of jeans) இருந்தது என்ற அவரின்
அனுமானத்தில்  உள்ள கால நிர்ணயம் முற்றிலும்
தவறானது.

வாசகர்கள் நன்கு கவனிக்க வேண்டும். Y DNA
ஆய்வுகள் அறிவியல் ஆகும் (PURE SCIENCE).
அதை மரபியல் விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர்.
அதில் குற்றம் கூற முடியாது. ஆனால்
அந்த ஆய்வுகளைக் கொண்டு வியாக்கியானம்
செய்யப்படும் கால நிர்ணயத்தில் அறிவியல்
இல்லை. அனுமானமே ஆட்சி செய்கிறது.
-------------------------------------------------------------------------------------------
இன்னும்  வரும்!
************************************************************

1) புராணம் என்ற சொல்லுக்கு பழமையானது என்று
பொருள். ஆக புராணம் என்பது தொன்மம். மனித
சமூகத்தின் அறிவு குழந்தைப் பருவத்தில்
இருந்தபோது, அக்கால மனிதர்களால் இயற்றப்
பட்டவையே புராணங்கள். அவை அக்கால அறிவு
வளர்ச்சியின் வெளிப்பாடுகள். பூமி உருண்டையானது
என்ற உண்மை சில பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே தெரிய வந்தது. அதற்கு முன்பு பூமி
தட்டையானது என்றே கருதப் பட்டது. எனவே
தட்டையான பூமியை ஒருவன் பாயாகச் சுருட்டிக்
கொண்டு ஓடினான் என்ற கதை எழுதப்பட்டது.
**
2) உலகம் முழுவதும் உள்ள புராணங்கள் ஒரே
மாதிரியாகத்தான் இருக்கும். இந்தியப் புராணங்களும்
பலவேறு அம்சங்களில் உலகின் பிற புராணங்களை
ஒத்தவையே.



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக