சனி, 10 ஜூன், 2017

பின்நவீனத்துவத்தின் ஒளிவிலகல் எண்!
(The refractive index of POMO)
பரந்துபட்ட பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
1) மார்க்சியம் என்பது எப்போதுமே செயல்பாட்டுக்கான
ஒரு தத்துவமே தவிர, விளைவுக்கு இட்டுச் செல்லாத
பயனற்ற விவாதங்களைக் கட்டமைப்பதில் அக்கறை
காட்டுவது அல்ல. ஏனெனில் மார்க்சியம் உலகை
மாற்றி அமைப்பதற்கான தத்துவம். மார்க்சியம் என்பது
நடைமுறைக்கான தத்துவம் (Marxism is the philosophy of praxies)
என்றார் கிராம்சி. எனவே ஒரு முன்னிரவுப் பொழுதை
ரம்மியம் ஆக்குவதற்காக, முடிவற்ற விவாதங்களில்
ஈடுபடும் "மார்க்சியம் பேசுவோர்" எனப்படுவோரை
மார்க்சியம் அங்கீகரிப்பதில்லை.

2) "இன்றைய மார்க்சிய அரசியல் என்பது வெறுமனே
மார்க்சியத்தை மட்டும் கொண்டதாக இருத்தல் கூடாது;
பெரியாரியம் மற்றும் அம்பேத்காரியத்துடன்
இணைக்கப் பட்டிருந்தால் மட்டுமே அது மார்க்சிய
அரசியலாக இருக்கும்"  என்ற கருத்து இங்கு பலராலும்
முன்வைக்கப் படுகிறது. இது எவ்விதத்திலும்
புதிய கருத்தே அல்ல. பின்நவீனத்துவ மொந்தையில்
அடைக்கப்பட்ட பழைய புளித்த கள்ளே அது.

3) பெரியாரியமும் அம்பேத்காரியமும் காலாவதி
ஆகிப்போன குட்டி முதலாளியத் தத்துவங்கள்.
பெரியாரும் அம்பேத்காரும் தாங்கள் வாழ்ந்த
காலத்திலேயே, தங்களின் கோரிக்கைகளை
அடைந்து விட்டவர்கள். அத்தோடு அவர்கள்
முன்மொழிந்த அவர்களின் வேலைத்திட்டம்
(programme) முடிவுக்கு வந்து விட்டது. அவர்களின்
போதனைகள் தத்துவம் என்ற வகைமைக்குள்
அடங்காது.

4) இட ஒதுக்கீடு, அரசின் ஆளுகையில் (governance)
 பங்கு பெறுதல் என்று ஆளும் வர்க்கத்தின்
பிரிக்க முடியாத பகுதியாக சூத்திர பஞ்சம
மக்களின் ஒரு சிறு பகுதியான முன்னேறிய
பிரிவினரை ஆக்குவதே அவர்கள் இருவரின்
லட்சியம். அதில் கான முயல் எய்த அம்பாக
அவர்கள் எப்போதோ வெற்றி பெற்று விட்டனர்.

5) ராகுல சாங்கிருத்தியாயன் ஒரு முறை
கூறியதைப்  போல, "மற்ற சாதியில் உள்ளது
போல, பட்டியல் வகுப்பிலும் ஒரு நடுத்தர
வர்க்கத்தை  உருவாக்க அம்பேதகார்
விரும்பினார்; அந்த விருப்பத்தை நிறைவேற்றிக்
கொண்டார்" என்பதுதான் அம்பேத்கார் பற்றிய
துல்லியமான கணிப்பு. பெரியாருக்கும் இது
அப்படியே பொருந்தும்.

6) எனவே காலாவதியாகிப்போன, நோக்கம்
நிறைவேறி விட்ட ஒரு கோரிக்கை சாசனத்தை,
ஒரு வேலைத் திட்டத்தை, தத்துவம் என்று மெருகு
பூசி விற்க முயற்சி செய்வது அலுமினியத்தின்
மீது தங்க முலாம் பூசும் ஏமாற்று முயற்சியே ஆகும்.

7) பெரியாரும் அம்பேத்காரும் இருக்கிற அமைப்பை
மாற்றியமைக்க ஒருநாளும் முயன்றவர்கள் அல்ல.
இருக்கிற அமைப்பைப்  பேணிக்கொண்டே, அதில்
சில சீர்திருத்தங்களைச் செய்ய முயன்று அதில்
வெற்றியும் கண்டவர்கள். அவ்வளவே. இருக்கிற
சமூக அமைப்பை அடியோடு மாற்றியமைக்க
வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் வேலைத் திட்டத்துடன்
இவற்றை எப்படி இணைக்க முடியும்?

8) பெரியாரும் அம்பேத்காரும் களத்தில் வேலை
செய்தவர்கள் என்ற முறையில், அவர்களின்
கள அனுபவங்களில் இருந்து, பயனுள்ள
படிப்பினைகள் எவையேனும் இருக்குமானால்,
அவற்றை ஏற்றுக் கொள்ளத் தடையில்லை.
அதற்காக மார்க்சியத்தை எவ்விதத்திலேனும்
பெரியாரிய அம்பேத்காரிய வேலைத்திட்டங்களுடன்
இணைக்க வேண்டும் என்று ஒருவர் சொல்ல
முற்படுவது எள்முனையேனும் ஏற்புடைத்தன்று.

9) பாசிச மோடி அரசை எதிர்க்கிறார் என்பதற்காக
வஹாபிய பி. ஜெய்னுலாபுதீன் அவர்களுடன்
ஐக்கிய முன்னணி கட்ட முடியுமா? ஐக்கிய முன்னணி
என்பது கூட்டாஞ்சோறா என்ன?

10) மோடி அரசு ஒரு பாசிச அரசு அல்ல என்று
சீத்தாராம் யெச்சூரி Peoples' democracy ஏட்டில்
அண்மையில் வரையறுத்து இருந்த நிலையில்,
பாசிச எதிர்ப்பு கதம்பக் கூட்டுக்கு யெச்சூரி
வருவாரா?

11) மிகுந்த பாமரத் தன்மையுடனும், நுனிப்புல்
தன்மையுடனும் ஏற்கனவே பலமுறை பதிலளித்த
கேள்விகள், பின்நவீன முலாம் பூசி மீண்டும்
முன்வைக்கப் படுகின்றன. பரிசீலிக்கப்பட்டு கைவிடப்
பட்ட யோசனைகள் மீண்டும் புத்துயிர் கொடுக்கும்
வேலையை, தன் முயற்சியில் சற்றும் தளராத
விக்கிரமாதித்தன் போன்று சிலர்
மேற்கொள்ளுகிறார்கள். இவற்றை ஏற்பதற்கில்லை.
---------------------------------------------------------------------------------------------

12) collective negotiation காலாவதி ஆகிவிடவில்லை.
தொழிலாளி வர்க்கம் தன்னுடைய கூட்டுபேர
சக்தியை (collective bargaining capacity)  தக்க வைத்துக்
கொண்டே உள்ளது. அண்மையில் வெற்றி கண்ட
தமிழகப் போக்குவரத்து தொழிலாளரின்
வேலைநிறுத்தம் அதற்குச் சிறந்த உதாரணம்.
------------------------------------------------------------------------------------------ 
ஐக்கிய முன்னணிப் போர்த்தந்திரம்
எப்போதுமே நிபந்தனைக்கு உட்பட்டது!
--------------------------------------------------------------------------
1) கூலி உயர்வுக்கான போராட்டங்கள் சாராம்சத்தில்
முதலாளியச்  சுரண்டலின் தீவிரத்தைக் குறைக்கும்
ஒரு முயற்சியே தவிர, அவை வர்க்க விடுதலையைப்
பெற்றுத் தராது என்பது அனைத்து மார்க்சியரும்
அறிந்த பாலபாடமே.

2) புரட்சிக்கான யுத்த தந்திரம் குறித்துப் பேசவில்லை
என்பது சரியே. ஆயின் இடதுசாரிகளின் இன்றைய
political tactical line குறித்துப் பேசுகிறீர்கள்.
அது பரிசீலிக்கப் படலாம். தவறில்லை.

3)  எப்படியாவது ஒரு வீடு கட்டிவிட வேண்டும் என்று
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஆசைப்படுவது போல,
எப்படியாவது மோடியை எதிர்த்து ஒரு முன்னணி
கட்டி விட வேண்டும் என்ற வேட்கையுடன்
செயல்படுகிறீர்கள். நல்லது.

5) முன்னணியை மேலிருந்தும் கட்டலாம்;
கீழிருந்தும் கட்டலாம். எப்படிக் கட்டினாலும்,
ஒரு முன்னணிக்கான புறச் சூழ்நிலை கனிந்து
இருப்பதும், அம்முன்னணியை தங்களின்
தேவையாக மக்கள் கருதுவதும் அவசியமான
முன்நிபந்தனை ஆகும். வெறுமனே,
"Front for the sake of front" என்பது கற்பனாவாதமே.

6) தொழிலாளி வர்க்கம் தன் சொந்த அனுபவத்தின்
மூலமே பாடம் பெறும் என்றார் லெனின். கடந்த
முப்பத்தாண்டுக்கும் மேலான களப்பணியில்
எனக்குச் சில அனுபவங்கள் கிடைத்துள்ளன.

7) இந்தியாவில் அடையாள அரசியல் தனது
சிகரத்தைத் தொட்டு விட்டது. மார்க்சியத்தின்
வெளி (space) முழுவதையும் அபகரித்துக் கொண்டு
விட்டது. மார்க்சியம் மக்களிடையே பரவாமல்
பெரும் தடைச் சுவராக அடையாள அரசியல்
நிற்கிறது. அடையாள அரசியல் சக்திகளோடு
சமரசமின்றிப் போர் புரிந்து அவற்றை வீழ்த்தாமல்
மார்க்சியம் ஒரு சிறிதும் முன்னகர முடியாது
என்பது எமது அனுபவம்.

8) அப்படியிருக்க, மீண்டும் மீண்டும் அடையாள
அரசியல் சக்திகளுடன் ஐக்கியம் பேணுவது எப்படி?
அடையாள அரசியல் எதேச்சதிகாரத் தன்மை
அடைந்து வருகிறது. பெரியாரும் அம்பேத்காரும்
விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட திருவுருக்களாக
வெளியெங்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டு
இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களை
மார்க்சிய நோக்கில் விமர்சனம் செய்வது எப்படி?
அதை அடையாள அரசியல் சக்திகள் செய்ய
விடுவார்களா?

9) பாசிச சக்திகளோடு சேர்ந்து எப்படி பாசிச எதிர்ப்பு
ஐக்கிய முன்னணி கட்ட முடியும்?

10) வஹாபிய ஜெய்னுலாபிதீன், எஸ் எம் பாக்கர்
ஆகியோருடனும் கூட ஒன்றுபடும் புள்ளிகள்
இல்லாமலா இருக்கின்றன? எனவே ஏன் பெரியார்
அம்பேத்கார் என்று குறுக்க வேண்டும்? சாத்தியமான
எல்லா சக்திகளுடனும் இணைந்து ஒரு பிரபஞ்ச
முன்னணியை அமைக்கலாம்! சந்தர்ப்பவாதத்தின்
உச்சம் தொடலாமே!

11) அடையாள அரசியல் சக்திகளை வீழ்த்தி நாங்கள்
முன்னேற விரும்புகிறோம். நீங்கள் எங்களுக்கு
ஆதரவு தாருங்கள். அது தங்களால் இயலுமா?
களப்பணி செய்தவர்களின் அனுபவங்களை
theorise செய்யுங்கள். அதில் இருந்து முடிவுக்கு
வாருங்கள். நிலத்தில் கால் பதித்து நின்று
சிந்தனை செய்யுங்கள். தந்தக் கோபுரச்
சிந்தனைகளால் தீர்வைக் காண இயலாது.

பின்குறிப்பு:
-------------------------
அடையாள அரசியல் என்பதற்கு சமூகத்தில்
நிலவும் அர்த்தத்தையே கணக்கில் கொண்டுள்ளேன்.
பின்நவீனத்துவம் கூறுகிற முன்வரிசை அர்த்தம்,
2ஆம் வரிசை அர்த்தம் ஆகியவற்றை நான்
பொருட்படுத்தவில்லை.
******************************************************
   
ஜமாலன் அவர்களுக்கு,
1) கண்ணியக் குறைவான வசவால் உங்கள் கருத்தை
நிரப்பி இருந்தது நீங்களே தவிர நான் அல்ல.
நான் பாதிக்கப் பட்டவன். நீங்கள் பாதிப்பை
ஏற்படுத்தியவர். இதை மறைக்கும் விதமாக, இன்று
நீங்கள் பேசுவது எனக்கு வியப்பைத் தருகிறது.
பாதிக்கப்பட்ட நான் அதைக் கடந்து வந்து விட்டேன்.
பாதிப்பை ஏற்படுத்திய நீங்கள் அதை இன்னும்
கடக்க இயலவில்லை என்றால், அதற்கு நான் என்ன
செய்ய இயலும்? நிற்க.

முப்பதாண்டுகளுக்கும் மேலான இழையறாத
களப்பணி, அடக்குமுறைகள், இழப்புகள் இவற்றுக்கு
நடுவில் பெற்றுள்ள சில அனுபவங்களை இங்கு
நான் முன்வைத்தேன். அதுவும் நீங்கள் எழுப்பிய
கேள்விகளுக்குப் பதிலாக. இங்கு பேசப்பட்டது
என்னைப் பற்றியல்ல. மார்க்சிய அனுபவங்களைப்
பற்றியது. அதைத் தாங்கள் ஏற்பதும் மறுப்பதும்
தங்களின் உரிமை. ஆனால் அதற்காக, குட்டி
முதலாளியத் தன்மையுடன் பாதிக்கப்பட்ட என் மீது
பழி சுமத்துவது அழகல்ல. விவாதம் தேவையில்லை
என்று நீங்கள் முடிவு எடுத்தால், அதில் எனக்கு என்ன
நஷ்டம்? உங்கள் உரிமை அது. நன்றி.  

             
 மூட நம்பிக்கைகள் (சாதகம், சோதிடம், நல்ல நேரம்,
கிரஹ பலன், நேர்த்திக்கடன், விரதம், நோன்பு இன்ன பல)
என் வீட்டில் கிடையாது. அவற்றை மேற்கொள்ள
யாரும் விரும்புவதில்லை. எளிமையும்  நுகர்வு
மறுப்பும் உண்டு. பொதுப் போக்குவரத்து
வசதிகளில்தான் வெளியே செல்வது. நேரில் வந்து
பார்த்துத் தெளிவு பெறுக.          எல்லோரும் உள்ளூரில்தான்
உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக