திங்கள், 5 ஜூன், 2017

காலந்தோறும் புதுப்பிக்கப் படும்
பொருள்முதல்வாதம்!
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
1) எவ்வளவு கஞ்சத் தனமாக மதிப்பிட்டாலும்
பொருள்முதல் வாதத்திற்கு வயது இரண்டாயிரம்.
உண்மையில் இன்னும் அதிகம் என்றாலும்,
இப்படி எடுத்துக் கொள்வதால் எதிரிகளுக்கு
ஆதாயம் இல்லாமல் போகும்.

2) முதன் முதலில் கீழ்த்திசை நாடுகளில்
(மேற்கில் அல்ல) தோன்றி வளர்ந்த
பொருள்முதல்வாதம் கீழ்த்திசை நாடுகளின்
தத்துவஞானம் (Oriental philosophy) என அழைக்கப்
பட்டது.

3) பின்னர் மேற்கத்திய நாடுகளிலும் (western)
பொருள்முதல் வாதம் தோன்றியது; வளர்ந்தது.

4) தொடர்ந்து மேற்கு கிழக்கு எல்லைகளைக் கடந்து,
உலகளாவிய தத்துவமாக பொருள்முதல் வாதம்
நிலைபேறு உடையதாகியது.    

5) பத்தொன்பதாம் நூற்றாண்டு பொருள்முதல்
வாதத்தின் பொற்காலம் ஆகும். மார்க்ஸும்
ஏங்கல்சும் தங்கள் மூச்சு நிற்கும் வரையிலான
அறிவியலை உள்வாங்கிக் கொண்டு பொருள்முதல்
வாதத்தை வளர்த்து எடுத்தனர். லூத்விக்
பாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தைச்
செழுமைப் படுத்தி, ஹெகலின் இயங்கியலை
பொருள்முதல்வாதத்துடன் பொருத்தமாக
இணைத்து,இயங்கியல் பொருள்முதல்வாதமாக
அதை மாற்றினர்.

6) லெனின் காலத்தில் மாஹியவாதிகள் என்போர்
(followers of Ernest Mach) பொருளே இல்லை என்று
வாதிட்டனர். அவர்களின் கருத்துக்களை லெனின்
முறியடித்து, பொருள்முதல் வாதத்தின் மேன்மையை
உணர்த்தினார்.

7) இரண்டாம் உலகப் போரின் பின்னர், மனித
குலத்தின் இழிந்த தத்துவமாக பின்நவீனத்துவம்
பிறந்தது. பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள்
பொருள்முதல் வாதத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர்.

8) பொருள்முதல் வாதத்தின் அடிப்படையாக
அறிவியல்  இருப்பதால், பின்நவீனத்துவர்கள்
அறிவியலின் மீதும் தாக்குதல் தொடுத்தனர்.

9) பின்நவீனத்துவத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து,
மேக மறைப்பில் இருந்து விடுபட்ட நிலவாக
பொருள்முதல்வாதம் தத்துவ வானில் ஒளிர்ந்து
கொண்டு இருக்கிறது.

10) இதே நேரத்தில் மற்றோரு உண்மையையும்
நாம் உணர வேண்டும். நியூட்டனின் இயற்பியல்
முழுவதையும் பொருள்முதல்வாதம் உள்வாங்கிக்
கொண்டுள்ளது. அதன் பிறகான அறிவியலின்
வளர்ச்சியில் உருவான சார்பியல் கோட்பாடு,
குவான்டம் கோட்பாடு ஆகியவை பொருள்முதல்
வாதத்தில் இடம்பெறவில்லை. அவற்றையும்
உள்ளடக்கி பொருள்முதல்வாதம் தன்னைப்
புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

11) பொருள்முதல் வாதத்தைப் புதுப்பிப்பது
என்றதுமே சில சிந்தனைக் குள்ளர்கள் தீயை
மிதித்தது போல் அலறுவது வாடிக்கை. ஐயோ,
பொருள்முதல்வாதத்தைப் புதுப்பிப்பதா என்று
அவர்கள் அரற்றுவார்கள்.

12) இந்த சிந்தனைக் குள்ளர்களிடம் ஒரு கேள்வி!
 சிந்தனைக் குள்ளர்களே, 2000 ஆண்டுகளுக்கு
முந்திய பொருள்முதல் வாதமும் இன்றைய
பொருள்முதல் வாதமும் ஒன்றா? இந்த 2000
ஆண்டுகளில் பொருள்முதல் வாதத்தில் மாற்றமே
ஏற்படவில்லையா?  மாற்றமே இல்லையென்றால்,
அன்றிலிருந்து இன்றுவரை பொருள்முதல் வாதம்
ஒரு தேங்கிய குட்டையாகவா இருந்து வருகிறது?
இல்லையே.

13) காலந்தோறும் மாறிக்கொண்டும் தன்னைப்
புதுப்பித்துக் கொண்டும் வருகிறது பொருள்முதல்
வாதம். அது நேற்று புதுப்பிக்கப் பட்டது. இன்று
புதுப்பிக்கப் படுகிறது; நாளையும் புதுப்பிக்கப் படும்.

14) மாற்றமே இல்லாமல் இருப்பதற்கு
பொருள்முதல்வாதம் ஒரு மதமல்ல,
மார்க்சியமும் ஒரு மதமல்ல.
*******************************************************************    
  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக