சனி, 13 ஜூன், 2015


ஒரு நாட்டின் பிரதமராக இருந்த முதல் தமிழரான 
தேசியத் தலைவருக்கு நடுகல் நிறுவுவோம்!
------------------------------------------------------------------------------
(2) ஈழ விடுதலைப் போரும் புலிகளின் வீழ்ச்சியும்!
ஒளிவீசும் உண்மைகளின் அணிவகுப்பு!!  
----------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
------------------------------------------------------------------------------
ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை 
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப் 
போந்தைஅம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப் 
பல்ஆன் கோவலர் படலை சூட்டக் 
கல்ஆ யினையே கடுமான் தோன்றல் 
வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப் 
பரிசிலர் செல்வம் அன்றியும் விரிதார்க் 
கடும்பகட்டு யானை வேந்தர் 
ஒடுங்கா வென்றியும் நின்னொடு செலவே.
---புறம்-265, முகையலூர்ச்  சிறுகருந்தும்பியார் பாடியது---
(கரந்தைத் திணை, கையறுநிலைத்துறை)
**
மானுட வரலாற்றில், நவீன அரசுகள் தோன்றிய பின்னர்,
எவரேனும் ஒரு தமிழர் அரசுத் தலைமைப்  பொறுப்பை 
ஏற்று இருந்தார் எனில்,  அவர் தமிழ் ஈழ தேசியத் தலைவர் 
மேதகு வே பிரபாகரன் அவர்களே. இலங்கையின் வடக்கு 
கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தமிழ் ஈழ அரசின் 
குடியரசுத் தலைவராகவும் தலைமை அமைச்சராகவும் 
மேதகு பிரபாகரன் அவர்கள் ஆட்சி செலுத்தினார் என்பது 
வரலாறு. நார்வே சமாதான முன்னெடுப்புக்குப் பின்னரும்
முன்னரும் தமிழ் ஈழ அரசு நிலவியது, ஆட்சி நடைபெற்றது.
நீதிமன்றங்கள் செயல்பட்டன, வரி வசூல் மேற்கொள்ளப் 
பட்டது என்பவை எல்லாம் எவரும் மறுக்க இயலா 
உண்மைகள்.
**
தமிழ் ஈழ அரசு ஒரு சட்டபூர்வமற்ற ஆனால் மெய்ந்நிலை 
அரசு (a defacto state). தேசியத் தலைவர் அவ்வரசின் defacto 
பிரதமர். எனவே உலகின் முதல் தமிழ்ப் பிரதமர் என்ற 
பெருமையைத் தேசியத் தலைவர் பெறுகிறார். கி.பி 2002இல் 
கிளிநொச்சியில் நடைபெற்ற உலகப் பத்திரிகையாளர் 
சந்திப்பின்போது, புலிகளின் சிந்தனையாளர் ஆன்டன் 
பாலசிங்கம் அவர்கள், தமிழ் ஈழ அரசின் பிரதமரும் 
ஜனாதிபதியுமான பிரபாகரன் என்று தேசியத் தலைவரை 
அறிமுகப் படுத்தியதை வாசகர்கள் நினைவு கூர வேண்டும்.
**
அது கார்காலம். அக்காலக் கட்டம் (2002-2005) தமிழ் ஈழ 
அரசின் பொற்காலம். எனினும் நிலையாமை கோலோச்சும் 
இவ்வுலகில் ஈழமும் நிலைக்கவில்லை; புலிகளும் 
நிலைக்கவில்லை.
**
தேசியத் தலைவர் மறைந்திருக்கலாம்; புலிகள் அழிக்கப் 
பட்டு இருக்கலாம். ஆனால், பஃறுளி ஆறும் பன்மலை 
அடுக்கமும் போல யாழும் வன்னியும் முல்லைத்தீவும் 
தமிழ் நிலமே. அவற்றைச் சிங்களன் பறிக்க இடம் தருதல் 
தகாது. எனவே ஈழப்போர் தொடரும் ஏதேனும் ஒரு வடிவில்.
தமிழ்மண் மீட்கப்படும்.மீட்கப்பட வேண்டும்.
**
நிற்க. போரில் இறந்த தமிழ் வீரருக்கு நடுகல் நிறுவி 
வழிபடுவது பண்டைத் தமிழர் மரபு.
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை 
முன்னின்று கல்நின்ற வர் 
என்கிறது குறள்.
**
அன்று நடுகல் நட்ட தமிழினம் இன்று சிலை நிறுவுகிறது.
ஈழமண் மீட்பிற்குப் போராடி உயிர்நீத்த தமிழ் மன்னன் 
மறைந்த தமிழ் ஈழப் பிரதமர் பிரபாகரன் அவர்களுக்கு 
யாழில் நடுகல்லும் சிலையும் நிறுவுதல் வேண்டும்.
தமிழர் வீரமும் மானமும் உலகிற்குச் சொல்லப்படாது 
போயினும், தமிழர்க்கேனும் சொல்லப்பட வேண்டும் 
அன்றோ! 
**
இக்கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள புறப்பாட்டில்,
புலவர் சிறுகருந்தும்பியார், போரில் இறந்து நடுகல்லாய் 
நிற்கிற ஒரு பண்டைய மன்னனைப் பாடுகிறார்.
பாட்டின் பொருள்:
-----------------------------
விரைந்து செல்ல வல்ல புரவிகளின் தலைவனே,
ஊர்ப்புறத்தில் பூத்த வேங்கைப் பூக்களைப் பனம் படலில்
தொடுத்து மாலையாக்கி அணிகின்றனர் ஆடுமாடுகள் 
மிகுதியும் கொண்ட ஆயர். ஆனால் நீயோ, நடுகல் 
ஆகிவிட்டாய். உன் மறைவோடு புலவர் பெறும்
பரிசிலும் இல்லாமல் போயிற்று. அம்மட்டோ, 
யானைப் படைகளை எதிர்த்து நின்று வேந்தர்கள் 
பெறும் வெற்றியும் அன்றோ நின்னோடு போயிற்று! 
---------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இக்கட்டுரைத் தொடரில் இடம் பெறும் 
புறநானூற்றுப் பாடல்களின் காண்டிகை உரை 
கலையியல் நிறைஞர் புலவர் வீரை பி 
இளஞ்சேட்சென்னி அவர்களின் உரையாகும்.
**********************************************************      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக