புதன், 24 ஜூன், 2015

காமாட்சி அம்மாள் திரிஷா ஆகி விட்டாள்!!
மார்க்சியத்தை விழுங்கும் பின்நவீனத்துவம்!!
குரோனி முதலாளித்துவம் பற்றிய இரண்டாவது கட்டுரை!
-------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன், தலைவர்,
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------------------------------  
குரோனி முதலாளித்துவம் என்பது உண்மையில் இல்லை 
என்பதுதான் எமது நிலைப்பாடு. குரோனி முதலாளித்துவம் 
என்பது புதிய வகை முதலாளித்துவம் என்ற கருத்தாக்கத்தை 
நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
**
1) உற்பத்தியில் ஈடுபடுகிற முதலாளியமா? (அல்லது)
2) உற்பத்தியில் ஈடுபடாத முதலாளியமா?
என்ற அம்சம்தான் தீர்மானிக்கிற அம்சம். இதுதான் 
அளவுகோல். இதன்படி பார்த்தால், குரோனி முதலாளித்துவம் 
என்பது , முற்றிலும் புது வகையான, உற்பத்தியையே  
அடியோடு மாற்றி விடும் தன்மை உடைய, முதலாளித்துவ 
உற்பத்தி முறையின் வரலாற்றிலேயே  இல்லாத புதிய வகை 
முதலாளித்துவம் என்பதை நாங்கள் ஏற்கவில்லை.
**
மார்க்சியம்,முதலாளித்துவம் ஆகிய இவ்விரண்டில், 
மார்க்சியத்தை விட முதலாளித்துவமே பின்நவீனத்தை 
அதிகமாக உள்வாங்கி உள்ளது. பின்நவீனத்துவம் 
பெற்றெடுத்த குழந்தைதான் குரோனி முதலாளித்துவம். முதலாளித்துவமானது தயக்கமின்றிப் பின்நவீனத்துவத்தைச் 
சுவீகரித்துக் கொண்டுள்ளதால், குரோனி முதலாளித்துவம் 
என்கிற புதிய வகைமையை,முதலாளித்துவம் 
ஏற்றுக் கொள்கிறது.
**
ஆனால், சமகாலத்தில் மார்க்சியமும் பின்நவீனத்திடம் 
தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
இதன் விளைவாகவே, பின்நவீனத்துவம் கூறியுள்ள 
வகைமையை, சில மார்க்சியர்கள் அப்படியே ஏற்றுக் 
கொள்கிறார்கள். மற்றப்படி, குரோனி முதலாளித்துவம் 
என்பது உண்மையில் இல்லை.
(CRONY CAPITALISM DOES NOT EXIST).
**
காமாட்சி அம்மாள் என்கிற நடுத்தர வயதுப் பெண்மணி 
தெருவில் நடந்து போகிறாள் என்று வைத்துக் 
கொள்ளுங்கள். தெருமுனையில் நின்று கொண்டிருக்கும் 
குட்டி முதலாளித்துவ மற்றும் பின்நவீனத்துவ 
விடலைகள் அந்தப் பெண்மணிக்கு "திரிஷா" என்று 
பெயர் சூட்டுவதால், காமாட்சி அம்மாள் திரிஷா 
ஆகி விட மாட்டாள்.
**
அது போலவே, ஏற்கனவே இருக்கிற, உற்பத்தியில் 
பங்கெடுக்கிற முதலாளித்துவத்துக்கு, குரோனி என்கிற 
புதுப்பெயரைச் சூட்டினால், அதை நாங்கள் ஏற்றுக் 
கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஏனெனில், 
புதியவகை முதலாளித்துவம் எதுவும் பிறந்து 
விடவில்லை.  
**
சிந்தனைக் குள்ளர்களுடன் முரண்பாடு!
-------------------------------------------------------------------
குரோனி முதலாளித்துவம் பற்றி, 1) மார்க்ஸ் தம் 
மூலதனம் நூலில் எதுவும் சொல்லவில்லை; 
2) ஏகாதிபத்தியம் பற்றி நூல் எழுதிய லெனின், 
குரோனி பற்றிக் குறிப்பிடவில்லை;
3)மூல ஆசான்கள் எவரும் (எங்கல்ஸ், ஸ்டாலின், மாவோ)
குரோனி பற்றிப் பேசவே இல்லை.
எனவே, குரோனி முதலாளித்துவம் என்ற ஒன்று 
கிடையாது என்று மார்க்சிய சிந்தனைக் குள்ளர்கள் 
கூறக்கூடும்.
**
சிந்தனைக் குள்ளர்களை நாம் இகழ்ச்சியுடன் 
நிராகரிக்கிறோம். குரோனி முதலாளித்துவம் என்பது 
கிடையாது என்று நாம் சொல்வதற்கான அடிப்படையே
வேறு.
**
கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதப் பட்ட 1848ஆம் ஆண்டை 
மார்க்சியத்தின் தொடக்கமாகக் கொண்டால், இன்று 
இந்த 2015இல், மார்க்சியம் உலகில் தோன்றி 167 ஆண்டுகள் 
ஆகின்றன. 167 ஆண்டுகள் என்பது மானுட வரலாற்றில்,
பெருங்காலமே ஆகும். இவ்வளவு நீண்ட காலத்தில்,
மார்க்சியம் மட்டுமின்றி, வேறு எந்த ஒரு தத்துவமும்
தனது தூய்மையை, கன்னித் தன்மையை அப்படியே 
பசுமை மாறாமல் காத்துக் கொள்வது என்பது இயலாது.
**
சமகால உலகில் (contemporary world), 1) முதலாளித்துவம் 
2) மார்க்சியம் 3) பின்நவீனத்துவம் என்ற முக்கோணம் 
உருவாகி உள்ளது. இதனால், தவிர்க்க இயலாமல்,
இவற்றுக்கு இடையிலான ஊடாட்டம் நிகழ்கிறது.
இதன் விளைவாக, மார்க்சியம் தனது தூய்மையைப் 
பாதுகாத்துக் கொள்ள இயலாமல், பின்நவீனத்துவத்தின் 
ஊடுருவலை அனுமதித்து விடுகிறது.
**
இவ்வாறு, மார்க்சியத்துக்குள் ஊடுருவிய பின்நவீனமே 
குரோனி முதலாளித்துவம் என்ற கோட்பாட்டைப் 
பெற்றெடுத்துள்ளது. உண்மையில், குரோனி முதலாளியம் 
என்று ஒன்று இருக்குமேயானால், அது பின்நவீனத்தின் 
கொடையாக இருந்த போதிலும், அதை ஏற்றுக் கொள்வதில் 
தவறில்லை. ஏனெனில், பின்நவீனத்துவம் என்ற உடனே,
தீயை மிதித்தாற்போல் அலற வேண்டியதில்லை.
தத்துவ வலிமை வாய்ந்த எந்த ஒரு தத்துவமும் 
கலப்புகளை எதிர்கொண்டு முறியடிக்கும் ஆற்றலுடன் 
விளங்குமாயின், பிற தத்துவங்களைக் கண்டு 
அஞ்ச வேண்டியதில்லை.
**
பின்நவீனத்துவத்தின் நுண்ணரசியலின் வெளிப்பாடே 
குரோனி முதலாளித்துவம்.  மார்க்சியம் முன்வைக்கும்
பேரரசியலுக்கு மாற்றாக,பின்நவீனத்துவம் நுண்ணரசியலை 
முன்வைக்கிறது. எந்த ஒன்றையும் முழுமையாகவும் 
ஒருங்கிணைந்த விதத்திலும் பரிசீலிப்பதற்குப் பதிலாக, 
அதை ஆயிரம் துண்டுகளாக ஆக்கி, ஒவ்வொரு துண்டையும் 
தனித்தனி அவதாரமாகக் கருதுவதே பின்நவீனத்துவம் 
கடைப்பிடிக்கும் வழிமுறை (modus operandi). ஆயிரம்     
கண்ணுடையாள் எங்கள் அபிராமவல்லி என்பதைப் 
போன்ற பார்வை இது. இது அறிவியலுக்கு எதிரானது.
**
அடுத்ததாக, குரோனி முதலாளித்துவம் என்பது ஓர் 
ஐரோப்பிய விளைபொருள். அதை அப்படியே இறக்குமதி 
செய்து, இங்கு விற்பனை செய்யப் படுகிறது. வெளிநாட்டில் 
விளைந்த எதையும் இங்கு ஏற்கக் கூடாது என்ற குறுகிய 
பொருளில் இவ்வாறு கூறவில்லை. மாறாக, இந்திய 
மண்ணுக்கே உரிய தனித்தன்மையை ஆராய்ந்து, 
இந்த மண்ணின் உற்பத்தி முறையை ஆராய்ந்து,
அதிலிருந்து வந்தடைந்த முடிவல்ல குரோனி 
முதலாளியம் என்ற கோட்பாடு.
**
இந்தியாவில் சாதி முறை நீடித்து நிலவுகிறது. 
பொருளியலில் பார்ப்பன-பனியா ஆதிக்கம் உள்ளது.
வண்ணார், நாவிதர், குயவர், பஞ்சமர் ஆகிய சாதிகளில் 
இருந்து, பெருமுதலாளிகள் எவரும் இதுவரை 
தோன்றியதில்லை.இந்தியப் பெருமுதலாளிகள் 
என்போரில் 95 சதம் பார்ப்பன பனியாக்களே.
**
இச்சூழலில், இந்தியாவில் பார்ப்பன-பனியாக்களே 
நிரந்தர குரோனிகள் ஆவர். (முறைகேடாக அரசிடம் 
இருந்து ஆதாயம் பெறுவது குரோனி முதலாளியம் 
எனப்படுகிறது) இந்தியச் சூழலில், குரோனி முதலாளியம் 
பற்றிக் கூறும் எவரும் பார்ப்பன-பனியாக்களைப் பற்றிக் 
கூறாமல் இருக்க முடியாது. ஆனால், ஐரோப்பிய 
இறக்குமதியான குரோனி  முதலாளியத்தில், பார்ப்பன 
பனியாக்கள் பற்றி மருந்துக்குக் கூட ஒரு குறிப்பும்
கிடையாது.
**
ஆக மொத்தத்தில், மார்க்சிய சிந்தனைப் பயிலகம்,
குரோனி முதலாளியம் குறித்துப் பின்வரும் 
கருத்துக்களை தமிழ் மார்க்சிய உலகின் பார்வைக்கு 
முன்வைக்கிறது.
1) குரோனி முதலாளித்துவம் என்ற ஒன்று உண்மையில் 
இல்லை.       
2) ஏற்கனவே இருக்கிற, உற்பத்தியில் ஈடுபடுகிற 
முதலாளித்துவக்குப் புதிய பெயர் வைக்கும் 
சிறுபிள்ளைத்தனமான முயற்சியே குரோனி கோட்பாடு.
3) குரோனி முதலாளியம் என்பது பின்நவீனக் 
கருத்தியல் பெற்றெடுத்த குழந்தையே. இது மார்க்சியத்தின் 
குழந்தை அல்ல.
*************************************************************************           
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக