வெள்ளி, 26 ஜூன், 2015

நெருக்கடி நிலைக் காலம்: நினைவுகள் அழிவதில்லை!
நெருக்கடி நிலையும் காரோட்டி கண்ணப்பனும்!
-----------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-----------------------------------------------------------------------------
கொடிய நெருக்கடி நிலையின்போது இந்தியா முழுவதும்
எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது,
இரண்டே இரண்டு மாநிலங்களைத் தவிர. 1) தமிழ்நாடு
2) குஜராத். இவ்விரண்டில்,  கலைஞரின் தமிழக அரசு
மட்டுமே நெருக்கடி நிலையைப் பகிரங்கமாக
எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.
**
மேலும் தலைமறைவாக இருந்த பல்வேறு வட இந்தியத்
தலைவர்களுக்குத் தமிழகத்தில் புகலிடம் தந்து
அவர்கள் சிறைக்குப் போகாமல் காப்பாற்றினார் கலைஞர்.
ஜார்ஜ் பெர்னாண்டசை நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 
வைத்துப் பாதுகாப்பளித்தார் கலைஞர்.
**
மேலும் காமராசரைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திரா
மிகவும் வற்புறுத்தியபோதும், கலைஞர் அதற்கு செவிசாய்க்க
வில்லை. இதனால் மிகவும் ஆத்திரம் கொண்ட இந்திரா காந்தி
திமுக ஆட்சியை 1976 சனவரி 30 அன்று கலைத்தார்.
(இதற்கிடையில் காமராசர் 1976 அக்டோபர் 2 அன்று மறைந்தார்).
**
திமுக ஆட்சியைக் கவிழ்த்தவுடன், திமுக தலைவர்கள்
சிறையில் அடைக்கப் பட்டனர். மாறன், ஸ்டாலின், டி.ஆர்.பாலு,
ஆற்காட்டார், ஆசைத்தம்பி, இரா செழியன், வைகோ, நெல்லை
சூரிய நாராயணன் உள்ளிட்ட பலரும் மிசா சட்டத்தின் கீழ்
சிறையில் அடைக்கப் பட்டனர். (இப்பட்டியல் எவ்விதத்திலும்
முழுமை ஆனதல்ல).
**
கலைஞருக்குக் கார் ஒட்டியவர்கள் ஒவ்வொருவரும்
கைது செய்யப் பட்டனர். காலையில் கார் ஓட்டியவர் அன்று
இரவே வீட்டுக்குத் திரும்பியவுடன் கைது செய்யப் படுவார்.
இந்நிலையில் கலைஞரின் அமைச்சரவையில் போக்குவரத்துத்
துறை அமைச்சராக இருந்த மு கண்ணப்பன் கலைஞருக்குக்
காரோட்ட முன்வந்தார்.நெருக்கடிநிலைக் காலம் முழுவதும்
கலைஞருக்கு அவர் காரோட்டினார். இதனால் கலைஞர்
அவரை காரோட்டி கண்ணப்பன் என்று அழைத்தார்.   இந்தப்
பெயரிலேயே இவர் நீண்ட காலம் அழைக்கப் பட்டார்.
**
கிணத்துக் கடவு சட்டமன்ற உறுப்பினராக இருந்த
மு கண்ணப்பனையே இங்கு குறிப்பிடுகிறோம். பின்னாளில்
இவர் மதிமுகவுக்குச் சென்று, பின்னர் மீண்டும் தாய்க்
கழகத்துக்கே திரும்பினார்.
**
நெருக்கடிக் காலக் கொடுமைகள் என்று எடுத்துக் கொண்டால்,
ஒரு ராமாயணம் அளவுக்கு எழுதலாம். இது ஒரு சிறிய
மாதிரி. அவ்வளவே.
*********************************************************************  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக