செவ்வாய், 9 ஜூன், 2015

களபலியாகும் உண்மைகளும் 
கனிமொழி மீது கவியும் பொய்மைகளும்!
------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------
போர்க்களத்தில் உண்மைதான் முதல் களப்பலி ஆகிறது 
(Truth is the first casualty in any battle field) என்று ஒரு ஆங்கிலப் 
பழமொழி உண்டு. ஈழப் போரைப் பொறுத்தமட்டில் இது 
முக்கால உண்மை ஆகி நிற்கிறது.
**
2009 மே முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த ஈழப்போரின் 
இறுதிக் கட்டத்தில், கனிமொழியின் அறிவுரையின் பேரில்தான் 
தம் கணவர் எழிலன் சிங்களப் படைகளிடம் சரண் அடைந்தார் 
என்று போகிறபோக்கில் ஒரு பழியைத் தூக்கி வீசுகிறார் 
ஆனந்தி சசிதரன். ஈழத் தமிழ்ப் பெண்மணியான இவர் 
இலங்கை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்.
**
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
அப்படியே நம்பிடல் அறிவு"  
என்பதாகத்தான் வள்ளுவரைப் புரிந்து வைத்து 
இருக்கிறார்கள்  ஏமாளித் தமிழர்கள். லாஜிக் இல்லாத 
தமிழ் சினிமாவைப் பார்த்துப் பார்த்து மூளை மழுங்கிப் 
போன தமிழனிடம் எவ்வளவு இழிவான பொய்யும் 
எடுபடும் என்று ஆனந்திக்கு எடுத்துச் சொல்லி 
இருக்கிறார்கள் கள்ளச் சகுனிகள்.  இல்லையெனில் 
இவ்வளவு எளிதில் நொறுங்கிப் போய்விடக்கூடிய 
ஒரு மலினமான பொய்யைச் சொல்ல முனைவாரா 
ஆனந்தி!
**
2009 ஈழப்போரின் இறுதியில் துப்பாக்கிகளை மௌனிக்கச் 
செய்வது என்ற முடிவையும் சரண் அடைவது என்ற 
முடிவையும் புலித்தலைமை எடுத்தது.இது முற்ற முழுக்க 
புலித்தலைமையின் சொந்த முடிவு. இந்த முடிவை 
நோக்கிக் களநிலைமைகள் அவர்களைத் தள்ளின.
**
எந்த ஒரு போர்க்களத்திலும், போர்நிறுத்தம் அல்லது 
சரணடைதல் என்ற முடிவைக் களநிலைமைகளே 
தீர்மானிக்கும். ராணுவத் தளபதிகள்தான் முடிவு 
எடுப்பார்கள். அப்படித்தான் தமிழ் ஈழ தேசியத் தலைவர் 
மேதகு பிரபாகரன் அவர்களும் அவரின் தளபதிகளும், 
களநிலைமையைக் கவனத்துடன் பரிசீலித்து, 
தம் மக்களைக் காப்பாற்ற வேண்டி, 
துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்வது என்ற முடிவையும் 
சரண் அடைவது என்ற முடிவையும் எடுத்தார்கள்.
**
தளபதிகள் கூடி முடிவு எடுத்தபின்னர், அந்த முடிவு 
புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர்களுக்கும் 
சர்வதேசத் தொடர்பாளர்களுக்கும் தெரிவிக்கப் பட்டது.
கட்டுப்பாடும் கறாரான ஒழுங்கும் மிக்க புலிகளிடம் 
தான்தோன்றித்தனமோ தலைக்குத்தலை நாட்டாமையோ 
அறவே கிடையாது. ஆயிரம் குரலில் பேசுவதற்கு 
புலிகள் என்ன காங்கிரசுக் கட்சியா?
**
கிளிநொச்சி என்று வீழ்ச்சி அடைந்ததோ, அன்றே புலிகளின் 
வீழ்ச்சியும் உறுதியாகி விட்டது என்பது புலிகளுக்கும் 
தெரியும்; சிங்களர்களுக்கும் தெரியும்; ஏன், உலகத்துக்கே 
தெரியும். புலிகள் இராணுவரீதியில் வெல்லப்பட 
முடியாதவர்கள் என்ற பிரமையை கிளிநொச்சியின்  வீழ்ச்சி
கிழித்து எறிந்தது.
**
சுமார் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவே உள்ள, முள்ளி 
வாய்க்கால்  பகுதியில், புலிகளும் ஒன்றரை லட்சம் ஈழத் 
தமிழர்களும், பின்வாங்கவோ தப்பிக்கவோ வழியின்றிச் 
சிக்கிக் கொண்டனர். சிங்கள முற்றுகை புலிகளை 
நெருக்கிக் கொண்டே வந்தது. முற்றுகையை ஊடறுத்து 
வெளியேறுவது என்பதற்கு வாய்ப்பே இல்லாத நிலையில் 
புலிகள் சரண் அடைவது என்ற முடிவை எடுத்தனர்.
**
திருமதி ஆனந்தி அவர்களே,
1) உங்கள் கணவர், கனிமொழியின் பேச்சைக் கேட்டு, 
சரண் அடைந்தார் என்று நாக்கூசாமல் பொய் பேசுகிறீர்களே, 
உங்கள் கணவருக்குத் தலைவர் பிரபாகரனா, கனிமொழியா?       
2) கனிமொழி அவ்வாறு கூறினார் என்று வாதத்துக்கு 
வைத்துக் கொண்டாலும், அந்தக் கருத்து குறித்து, 
உங்கள் கணவர் தமது மேலதிகாரிகளுடன் கலந்து 
ஆலோசிக்கவில்லையா? உங்கள் கணவர்தான் இறுதிநிலை 
அதிகாரியா? (ULTIMATE AUTHORITY). அவருக்கு மேல்,
கட்டளைத் தளபதிகள் (COMMANDER) இல்லையா?
**
3) ஒரு கட்டளைத் தளபதியின் உத்தரவு இல்லாமல்,
புலிகள் இயக்கத்தில் ஒரு துரும்பும் அசைய முடியாதே,
அப்படியிருக்க, எவ்வாறு உங்கள் கணவர் கனிமொழியின் 
பேச்சைக் கேட்டு சரண் அடைந்தார் என்று சொல்கிறீர்கள்? 
புலிகள் என்ன பம்பரம் விளையாடும் சிறுவர்களா?
**
4) உங்கள் கணவரை சரண் அடையச் சொல்லி உத்தரவிட்ட 
அந்தக் கட்டளைத் தளபதி இன்று உயிருடன் இல்லை 
என்பதால், இவ்வளவு மோசமான பொய்யைச் சொல்லத் 
துணிந்தீர்களா? 
 5) ராஜீவ் படுகொலைக்குப் பின், புலிகளுக்கும் திமுகவுக்கும் 
இருந்த உறவு முறிந்து போனது என்பது உலகறிந்த உண்மை.
கலைஞரை விட, நெடுமாறனும் வைகோவும்தான் புலிகளுக்கு 
நெருக்கம் என்ற உண்மையைக் கைக்குழந்தையும் அறியுமே!
அவ்வாறு இருக்க, நெடுமாறனையும் வைகோவையும் 
புறந்தள்ளிவிட்டு, உங்கள் கணவர் கனிமொழியைக் 
கேட்டு முடிவு செய்தார் என்று நெஞ்சாரப் பொய் 
சொல்கிறீர்களே, இது நியாயமா?
**
6) ஈழ விடுதலையின் மீது அக்கறை கொண்டிருந்தார்,
இது குறித்துப் பலரிடமும் தொடர்பைப் பேணியவர் 
என்பதற்காக, கனிமொழியின் மீது, இவ்வாறு அபாண்டமாகப்
பழி சுமத்துவது நியாயமா?
7) இலங்கைப் பிரஜையான நீங்கள், தமிழ்நாட்டு அரசியலில் 
தேவையின்றித் தலையிடுவதும், குழப்பம் விளைவிக்க 
முயல்வதும் போக்கிரித் தனமானது மட்டும் அல்ல,
ஈழத் தமிழர் நலனுக்குப் பெரும் ஊறு விளைப்பதும் ஆகும்.
**
8) ஈழத் தமிழர்பால் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் 
பரிவு உணர்வுக்கு சமாதி கட்டுவதாகவே தங்களின் 
போக்கிரித் தனமான குற்றச்சாட்டுகள் அமைகின்றன.
இதை உணர்ந்து திருந்துங்கள்!
**
மாறு பட்ட வாதமே- ஐந்நூறு 
வாயில் நீள ஓதுவாய் போபோபோ 
சேறு பட்ட நாற்றமும்- தூறும்சேர்
சிறிய வீடு கட்டுவாய் போபோபோ.
---மகாகவி பாரதி             
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக