புதன், 17 ஜூன், 2015

தலைவிதியை மாற்றிய அந்த மூன்று வார்த்தைகள்!
உடன்பாட்டை ஏற்க மறுத்த தேசியத் தலைவர்!
----------------------------------------------------------------------------------------- 
(6) ஈழ விடுதலைப் போரும் புலிகளின் வீழ்ச்சியும்!
ஒளிவீசும் உண்மைகளின் அணிவகுப்பு!!  
---------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------------------------
கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின், தேசியத் தலைவர் 
அவர்கள் கே.பி எனப்படும் குமரன் பத்மநாபனை 
மீண்டும் இயக்கத்தில் சேர்த்தார் என்று முந்திய 
கட்டுரையொன்றில் கூறி இருந்ததை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறேன்.
**
கிளிநொச்சியின் வீழ்ச்சி என்பது ஈழப்போரின் இறுதி 
என்பதைத் தேசியத் தலைவரும் முக்கியமான தளபதிகளும் 
அறிந்தே இருந்தார்கள். இந்நிலையில் கே.பி தமது 
சர்வதேசத் தொடர்புகள் மற்றும் செல்வாக்கின் 
அடிப்படையில் ஒரு சமாதான உடன்பாட்டை 
ஏற்படுத்துவார் என்ற நோக்கம் கருதியே அவர் மீண்டும்  
இயக்கத்தில் சேர்க்கப் பட்டு இருந்தார். 
**
2009 புத்தாண்டின் முதல் நாளன்று, மீண்டும் விடுதலைப் 
புலிகள் இயக்கத்தில் சேர்ந்த கே.பி. தமக்கு இடப்பட்ட 
பணியைச் சிறப்பாகவே செய்தார். அக்கறையுள்ள 
நாடுகளின் அரசுத் தலைவர்கள் அதிகாரிகளுடன் பேசி 
ஒரு திட்டத்தை இறுதி செய்து மார்ச் 2009இல் 
தேசியத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
**
அத்திட்டத்தின் சாராம்சம் வருமாறு:-
-----------------------------------------------------------------
1) புலிகள் தங்களின் ஆயுதங்களை முடக்கி வைக்க 
வேண்டும் (The weapons are to be locked off). அவை ஐ.நா 
குழுவினரிடம் ஒப்படைக்கப் படும்.
2) சிங்கள அரசும் புலிகளும் நார்வே பங்கேற்புடன் 
பேச்சுவார்த்தி நடத்தி, அரசியல் தீர்வு காணவேண்டும்.
**
3) புலிகளின் முதல்நிலைத் தளபதிகளும் அவர்தம் 
குடும்பத்தினரும் பாதுகாக்கப் படுவார்கள். தேவைப்
பட்டால், வெளிநாடுகளில் தஞ்சம் அளிக்கப் படும்.
4) இரண்டாம் நிலையில் உள்ள புலிகள் மீது 
நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டு, தண்டனை 
வழங்கப்படும்.
**
மீதியுள்ள  புலிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு 
அளிக்கப்படும்.  
**
இந்த வரைவுத் திட்டம் தேசியத் தலைவரின் 
பார்வைக்கு அனுப்பப் பட்டது. ஆனால் மூன்றே மூன்று
வார்த்தைகளில் தேசியத் தலைவர் அதை நிராகரித்தார்.
"இதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என்ற மூன்று 
வார்த்தைகளில் கே.பி.யின் சமரச உடன்பாடு 
கல்லறைக்கு அனுப்பப் பட்டது. கூடவே புலிகளின் 
எதிர்காலமும். நிராகரித்ததற்கான காரணம் எதையும் 
தேசியத் தலைவர் அவர்கள் தெரிவிக்கவில்லை.
திட்டத்தில் எந்த மாற்றத்தையும் கோரவும் இல்லை.
**
2009 மார்ச் மாதத்தில் களநிலைமை நூறு சதமும் 
புலிகளுக்குப் பாதகமாகவே இருந்தது. கிளிநொச்சி 
முல்லைத்தீவு வீழ்ச்சிக்குப் பின், புலிகளிடம் 
ஐந்து சதம் அளவே, மிகக் கொஞ்சமான பிரதேசமே 
எஞ்சி இருந்தது. புதிய ஆயுத வரத்து முற்றிலுமாக 
இல்லாமல் போய் இருந்தது. மருந்து மாத்திரைக்குக் 
கூடப் பெரும்பஞ்சம். 
**
இந்நிலையில், எவ்வளவு விரைந்து ஒரு உடன்பாட்டுக்கு 
வர வேண்டுமோ அவ்வளவு விரைந்து ஒரு 
உடன்பாட்டுக்கு வர வேண்டியது புலிகளின் 
அடிப்படைத் தேவை. சிங்கள அரசை இந்த 
உடன்பாட்டுக்கு இணங்க வைப்பது என்பது 
பகீரத முயற்சியைக் கோரும் ஒன்று. இருந்தும் 
தேசியத் தலைவர் அவர்கள் இதை நிராகரித்தது 
புலிகளின் முற்றான அழிவுக்கு வழி வகுத்தது.
அது அடுத்த சில நாட்களிலேயே தெரிந்தது.
**
ஆனந்தபுரம் தாக்குதல் புலிகளுக்குப் பெருந்தோல்வியை 
மட்டுமின்றி முற்றான அழிவையும் தந்தது. அது பற்றி 
அடுத்துப் பார்ப்போம்.
**************************************************************          

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக