புதன், 24 ஜூன், 2015

டி.வி.எஸ்.ஐயங்காரும் டி.டி.கிருஷ்ணமாச்சாரியும்தான்
இந்தியாவின் குரோனி முதலாளிகள்!
குரோனி முதலாளித்துவம் பற்றிய மூன்றாவது கட்டுரை!!
--------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன், தலைவர்,
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------------------------------------
1) நடுரோட்டில் சிறுநீர் கழிப்பது,
2) தெருவோரங்களில் மலம் கழிப்பது,
3) ஓடும் பஸ்ஸில் இருந்து சன்னல் வழியே சளியைக்
காறித் துப்புவது
ஆகிய இவையெல்லாம் இந்தியாவில் இயல்பாக
நடப்பவை. 65 கோடி இந்திய ஆண்களில் , சுவரில்
ஒண்ணுக்கு அடிக்காத எந்த ஒரு ஆணாவது இருக்கிறானா?
இல்லை.
**
ஆனால், சுவிட்சர்லாந்தில் யாராவது நடுரோட்டில்
மூத்திரம் பெய்ய முடியுமா? முடியாது; எவனும்
அப்படிச் செய்யவும் மாட்டான். இந்தியாவில் இதெல்லாம்
இயல்பானவை (NORMAL). சுவிஸ்சில், ஏனைய ஐரோப்பிய
நாடுகளில் இவையெல்லாம் இயல்புமீறல் (ABNORMAL).  
**
அதேபோல், லஞ்ச ஊழல் இந்தியாவில் இயல்பானது.
நம்மில் பலரும் லஞ்சம் வாங்கியிருக்க மாட்டோம்; ஆனால்
லஞ்சம் கொடுத்து இருப்போம். ஆனால் மேலை ஐரோப்பிய
நாடுகளில் லஞ்சஊழல் இயல்புமீறலாகக் கருதப்படும்.
ஐரோப்பிய நாடுகளில் லஞ்ச ஊழல் அறவே இல்லை
என்று இக்கட்டுரை கூறவில்லை.அங்கெல்லாம் மக்களின்
விழிப்புணர்வும் கண்காணிப்பும் அதிகம். ஊழல் புரிந்தவன்
பிடிபட்டு விடுவான்; தண்டனை வழங்கப்படும்.
**
நியூசிலாந்து கிரிக்கட் வீரர் கிரிஸ் கெயின்ஸ் (Chris Cairns)
மாட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டு, அவர்
மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது. தற்போது அவர் லாரி
ஓட்டிப் பிழைத்து வருகிறார். இதே மாட்ச் ஃபிக்சிங்கில்
ஈடுபட்ட, நம் இந்திய வீரர் அசாருதீன், நாடாளுமன்ற
உறுப்பினர் ஆகிவிட்டார்.மேலும் இந்தியாவில் குமாரசாமிகள்
அதிகம். அங்கு இல்லை; அல்லது அபூர்வம்.
**
முறைதவறியும் நெறி பிறழ்ந்தும் ஐரோப்பிய முதலாளிகள்
அரசின் சலுகைகள், ஆதாயங்களைப் பெற்றபோது, அது
சமூகத்தின் கண்ணை உறுத்தியது.  பிறழ்நெறி முதலாளிகள்
மக்களிடம் அம்பலப்பட்டுப் போனார்கள். ஏனெனில்,
ஐரோப்பிய சமூகத்தில் இது இயல்புமீறல் (abnormal).
எனவே, இத்தகைய முதலாளியம் பிறழ்நெறி முதலாளியம்
(crony capitalism) என்று அடையாளம் காணப் பட்டது;
அழைக்கப் பட்டது.
**
ஐரோப்பிய சமூகத்தில் காணப்பட்ட இந்தப் போக்கை,
அப்படியே கொண்டு வந்து இந்திய சமூகத்துக்குப்
பொருத்தினார்கள் இங்குள்ள சில மார்க்சியர்கள்.
இவர்கள் பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு
ஆட்பட்டவர்கள். இந்தியாவிலும் குரோனி முதலாளியம்
இருக்கிறது என்ற தங்களின் "கண்டுபிடிப்பை"
வெளியிட்டார்கள்.
**
இது சரிதானா? இந்திய சமூகத்துக்குப் பொருந்துமா? என்று
ஆராய வேண்டும். ஐரோப்பிய சமூகத்தில் எதெல்லாம்
இயல்புமீறலோ (abnormal), அதெல்லாம் இந்திய சமூகத்தில்
இயல்பானவை. அங்கு எதெல்லாம்  நெறிமீறலோ(deviation),
அதெல்லாம் இங்கு நெறியுடைமை ஆகும். அங்கு விசேஷித்த
தன்மையாக (special property) இருப்பது, இங்கு பொதுத்தன்மை
ஆகும். சுருங்கக் கூறின், அங்கு வெள்ளைத் துணியில்
கறுப்புப் புள்ளியாகக் கண்ணுக்குத் தெரிவது, இங்கு கறுப்புத்
துணியில் கறுப்புப் புள்ளியாக இருப்பதால் கண்ணுக்குத்
தெரியாது.
**
இதன் பொருள் என்னவெனில், அங்கு ஒரு குறிப்பிட்ட
காலக்கட்டத்தில் புதிதாகத் தோன்றியது குரோனி
முதலாளியம் என்றால், அதே அளவுகோலைக் கொண்டும்
அதே வாதப்படியும் பார்த்தால், இங்கு ஆதி முதலே இருப்பது
குரோனி முதலாளியம்தான். இங்குள்ள எல்லா
முதலாளிகளுமே குரோனி முதலாளியத்தின்
பிரதிநிதிகள்தான்.
**
டி.வி.எஸ். ஐயங்காரும், டி.டி.கிருஷ்ணமாச்சாரியும் குரோனி
முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளா, இல்லையா?
நேரு அரசிடம் இருந்து மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடம்
இருந்தும் நெறிபிறழ்ந்து சலுகை பெற்றவர்கள்தானே இவர்கள்.
அப்படியாயின் இவர்களையும் குரோனி முதலாளிகள் 
என்றுதானே கூற வேண்டும்?
**
சுருங்கக் கூறின், குரோனி முதலாளியக் கோட்பாட்டாளர்களின் இலக்கணப் படி, இங்குள்ள எல்லாவகை முதலாளியமும்
குரோனி முதலாளியமே என்றுதான் கூற முடியும். அதாவது, 
குரோனித் தன்மை என்பது (so called cronyism) இங்குள்ள 
முதலாளியத்தின் பொதுப்பண்பு. இந்திய முதலாளியத்தில்  
நீக்கமற நிறைந்து இருப்பது இப்பண்பு.
**
இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால்,
ஐரோப்பாவில் அண்மையில், சில பத்தாண்டுகளுக்கு 
முன்பு உருவான குரோனி முதலாளியம், இந்தியாவில் 
பிரிட்டிஷ் காலத்திலேயே இருந்து இருக்கிறது என்று 
கொள்ள வேண்டும். ஆனால் இது தவறானது.
**  
ஒரு வகைமையை உருவாக்கும்போது, ஏற்கனவே
இருக்கின்ற பிற வகைமைகளில் இருந்து மாறுபட்டு
திட்டவட்டமான புதிய பண்புகளுடன் இருக்கிறதா என்று
பார்த்து, அப்படி இருந்தால் மட்டுமே அந்த வகைமையை
(category) உருவாக்க வேண்டும். இந்த இலக்கணப்படி,
குரோனி முதலாளியம் என்ற வகைமை இந்தியாவில்
கிடையாது.
**
ஆக, இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில், குரோனி
முதலாளியம் என்பது இந்திய உற்பத்தி முறையில்
இல்லை; இல்லவே இல்லை என்று நிரூபித்துள்ளோம்.
*****************************************************************8        .
            
       
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக