வெள்ளி, 19 ஜூன், 2015

சரண் அடைதலையும் பிடிபடுதலையும்
தவிர்க்கத் தவறிய புலித்தலைமை! 
-------------------------------------------------------------------------------------------
(9) ஈழ விடுதலைப் போரும் புலிகளின் வீழ்ச்சியும்!
ஒளிவீசும் உண்மைகளின் அணிவகுப்பு!!  
---------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------------------------
எந்த ஒரு விடுதலை இயக்கத்திலும், அது மக்கள்திரள் 
வழிப் போராட்டம் ஆயினும் சரி, ஆயுதப் போராட்டம் 
ஆயினும் சரி, முன்னேற்றமும் பின்னடைவும் தவிர்க்க 
இயலாதவை. போரும் சமாதானமும் என்ற இரண்டு 
முரண்களுக்கு ஊடாகத்தான் எந்த ஒரு விடுதலை 
இயக்கமும் இயங்க முடியும். கூம்பும் பருவம் வருகையில் 
கூம்புதல் வேண்டும். சீர்த்த இடங்களில் செயலூக்கத்துடன் 
வினை புரிய வேண்டும். 
**
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 
குத்தொக்க சீர்த்த இடத்து. (குறள்-490)
என்று வள்ளுவரும் இதனை யாப்புறுத்துகிறார். ஆனால் 
கூம்பும் பருவம் என்ற கோட்பாட்டையே புலித்தலைமை 
ஏற்றுக் கொள்ளவில்லை. 
**
கிளிநொச்சி வீழ்வதற்கு முன்பே, 2008ஆம் ஆண்டிலேயே 
சமாதான உடன்பாடு கண்டிருக்க வேண்டும். அப்போது,
A-9 சாலையின் இருபுறத்திலும், அதாவது கிழக்கு மேற்கு 
இருபுறமும் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட 
பிரதேசங்கள் இருந்தன. கிளிநொச்சி 2009 சனவரி 2 அன்று 
வீழ்ந்த பின்னர், புலிகள் A-9 சாலையின் கிழக்குப் 
புறமாக முடக்கப் பட்டனர்.
**
இலங்கையை நட்ட நடுவில் இரண்டாகப் பிரிப்பது 
போல் அமைந்த, வடக்கே யாழ்ப்பாணம்-தெற்கே கண்டி 
ஆகிய இரு நகரங்களையும் இணைக்கும் நீண்ட சாலை 
A-9 சாலை ஆகும். கிளிநொச்சி இச்சாலையில் 
அமைந்த நகரம். இச்சாலையின் மீதான கட்டுப்பாட்டை 
இழந்தது இராணுவரீதியில் புலிகளுக்குப் பெரும் 
பின்னடைவாகும்.
**
2009 சனவரியில், கிளிநொச்சி வீழ்ந்த பின்னர், உலகின் 
பல நாடுகளும் புலிகளை ஒரு இணக்கப்பாட்டுக்கு 
வருமாறு வலியுறுத்தின. அப்போதும் புலிகள் அந்த 
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 2009 மார்ச்சில் 
கே.பி. முன்மொழிந்த சமாதான வரைவு உடன்பாட்டையும் 
தேசியத் தலைவர் நிராகரித்தார். 
**
அனந்தபுரம் தாக்குதலை மிகை மதிப்பீடு செய்த தேசியத் 
தலைவரின் கணக்கு தவறாகிப் போனது. நிலைமை 
தலைகீழாக மாறிப்போய், சிங்களப் படையினரின் 
முற்றுகையில் தேசியத் தலைவரே சிக்கிக் கொண்டு,
பெருஞ்சேதத்துடனே மீள முடிந்தது. கிணறு வெட்டப்போய் 
பூதம் புறப்பட்ட கதையாக ஆனது அனந்தபுரம் தாக்குதல்.
அனந்தபுரம் தாக்குதல் மீது கொண்டிருந்த அதீத 
நம்பிக்கையால் கே.பி.யின் உடன்பாட்டையும் 
புறந்தள்ளினார் தேசியத் தலைவர். இவ்வாறு தங்களின்   
கதவடைப்பு வாதத்தால் புலிகள் அனைத்தையுமே இழந்தனர்.
**
2009ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் 32 நாடுகள், புலிகளை 
பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்து 
இருந்தன. 1992 முதல் இந்தியா தடை செய்தது நாம் 
அறிந்ததே. 2000 முதல் இங்கிலாந்தும், 2001 முதல் 
அமெரிக்காவும், 2006 முதல் கனடாவும் தடை செய்தன.
27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் 2006 
முதல் புலிகளைத் தடை செய்து இருந்தது. புறச்சூழ்நிலை 
இவ்வளவு பாதகமாக இருப்பதை உணர்ந்து, தக்க 
சமயத்தில், ஓர் உடன்பாட்டுக்கு வந்திருந்தால், பெருத்த 
சேதாரங்களைப் புலிகள் தவிர்த்து இருக்க முடியும்.
**
அதைச் செய்யத் தவறியதன் விளைவாக, சரண் அடைதல்கள்,
பிடிபடுதல்கள், சிங்களக் காடையர்களிடம் அகப்பட்டுச் 
சித்திரவதைக்கு உள்ளாதல் ஆகிய கொடுமைகளைப் 
புலிகளும் தமிழ் மக்களும் அனுபவிக்க நேர்ந்தது.
**
இணைக்கப்பட்ட படங்களைப் பாருங்கள். இவ்விரு 
படங்களிலும் முழு நிர்வாணமாக நிற்க வைக்கப் 
பட்டு இருப்பவர் திரிகோணமலைப் பகுதியைச் 
சேர்ந்த புலிகளின் தளபதி கர்னல் வசந்தன் ஆவார்.
சிங்கள வெறிநாய்களின் இழிவான வக்கிர புத்தியைப் 
பாருங்கள். ஒரு புலிப்படையின் தளபதியை இவ்விதம் 
இழிவு படுத்திய சிங்கள இழிபிறவிகளின் முகத்தில் 
காரி உமிழ்வோம்!
**************************************************************           

        

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக