புதன், 4 மார்ச், 2015

கட்டுரையின் பகுதி இரண்டு
-----------------------------------------------
தத்துவங்களைத் தகர்த்தெறிந்து
மகுடங்களை மண்ணில் உருட்டி....
கட்டுரையின் பகுதி: 2
----------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
----------------------------------------------------------------------
மாவோ மீது சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!
---------------------------------------------------------------------------------------
நிக்சனின் சீன விஜயம் இருபதாம் நூற்றாண்டின்
அரசியல் நிகழ்வுகளில் காவிய அந்தஸ்து பெற்ற
நிகழ்வாக ஒளிர்கிறது. வட துருவமும் தென் துருவமும்
தங்கள் இருப்பிடத்தை விட்டுப் புறப்பட்டு, பூமத்திய ரேகைக்கு
வந்து கைகுலுக்கிக் கொண்டால், பூமி எவ்வளவு நசுங்கிப்
போய்விடுமோ, அதுபோன்று இந்நிகழ்வு உலகெங்கும்
பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.
------------------------------------------------------------------------------------
நிக்சனின் சீன விஜயம் நிகழ்ந்த காலம் பெப்ரவரி 1972.
பனிப்போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்
அது. முதலாளித்துவ முகாம், சோஷலிஸ முகாம் என்று
உலகமே இரண்டு பகைமையான முகாம்களாகப் பிளவு
பட்டிருந்த காலம் அது. முதலாளித்துவ முகாமுக்கு
அமெரிக்கா தலைமை தாங்கியது. சீனா, வியட்நாம்,
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள்
அடங்கிய சோஷலிஸ முகாமுக்கு சோவியத் ஒன்றியம்
(இன்றைய ரஷ்யா) தலைமை தாங்கியது. வியட்நாமில்
அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கும், சோஷலிஸ
முகாமின் ஆதரவு பெற்ற தேசபக்த வியட்நாம் படைகளுக்கும்
இடையிலான போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
-----------------------------------------------------------------------------------------------------
இப்படிப்பட்ட ஒரு காலத்தில்தான், நிக்சன் வந்தார்; மாவோ
அவரை வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான
பகை நீங்கி, நட்பு பூத்தது. மாவோ-நிக்சன் திருப்புமுனைச்
சந்திப்பும், இரு நாடுகளின் 'காவிய' நட்பும் குறித்து நிறையவே
எழுதப் பட்டுள்ளன. பல நூல்கள் வெளிவந்துள்ளன. பிரபல 
பிரிட்டிஷ் பெண் எழுத்தாளர் மார்கரட் மாக்மில்லன் எழுதிய 
Nixon and Mao: the week that changed the world என்ற நூல் அவற்றுள் 
குறிப்பிடத் தக்கது. 
---------------------------------------------------------------------------------------------------- 
மாவோ நிக்சன் காவிய நட்பு கனிந்ததன் பின்னணியில்
இரு தரப்பிலும் நிறைய ராஜதந்திரிகள் இருந்தனர். டாக்டர் 
ஹென்றி கிஸ்சிங்கர், நிக்சனின் வலது கரமாகவும், சீனப் 
பிரதமர் சூ என் லாய், மாவோவின் வலது கரமாகவும் 
திகழ்ந்தனர்.மாவோவின் மனைவி திருமதி ஜியாங் குயிங் 
இதில் பின்னணியில் இருந்து சிறப்பான பங்களிப்பைச் 
செய்தார். இருநாட்டு மக்களும் இப்புதிய உறவை அங்கீகரித்தனர்.
------------------------------------------------------------------------------------------------------------    
எனினும், மாவோவின் இந்த அதிரடி நடவடிக்கை சோஷலிஸ 
முகாமில் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் 
ஏற்படுத்தியது. வியட்நாம் அதிர்ந்து போய் நின்றது. பல 
சோஷலிஸ நாடுகள் மாவோவைக் கடுமையாகக் கண்டித்தன.
ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக, மாவோ சோஷலிஸ முகாமைப் 
பிளவுபடுத்துகிறார் என்று சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் 
சாட்டியது. மாவோ ஒரு எட்டப்பன் என்று சோவியத் ஒன்றியம் 
முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
----------------------------------------------------------------------------------------------------- 
மாவோவின் மீதான கண்டனங்களுக்கு எல்லாம் சூ என் லாய் 
பதிலளித்தார். பிரசித்தி பெற்ற அவரின் பதில் இதுதான்.
"யார் என்ன சொன்னாலும் எங்களுக்குக் கவலையில்லை;
எங்கள் நிலைபாடு மாறாது".
----------------------------------------------------------------------------------------------- 
நிக்சனின் சீன விஜயத்தின் ஒரே விளைவு இதுதான்.
சோஷலிசக் கோழிக்குஞ்சுகளை அமெரிக்கக் கழுகு 
கொத்தித் தின்றதுதான். 
------------------------------------------------------------------------------------------- 
இக்கட்டுரை முற்றியது.
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
*********************************************************** 
  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக