சனி, 16 மே, 2015

நவீன குலக்கல்வித் திட்டம் வரப் போகிறது!
குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தம் என்ற பெயரில்!
---------------------------------------------------------------------------------------------
1) கிடக்கிற வேலை கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி 
மணையில் வை என்ற கதையாக, மோடி அரசு
1986ஆம் ஆண்டின் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தைப் 
பிற்போக்குத் தனமாகத் திருத்துகிறது.
2) இந்தத் திருத்த மசோதா, வரும் நாடாளுமன்றத்தின் 
குளிர்காலக் கூட்டத் தொடரில்  நிறைவேறும் என்று 
நம்பிக்கை தெரிவித்துள்ளார் தொழிலாளர் நலத்துறை 
அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா.
**
3) இது ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் 
நவீன கால மறுபதிப்பே. ராஜாஜி குலம் என்று கூறியதை
மோடி குடும்பம் என்று கூறுகிறார். அதாவது பிள்ளைகள் 
குடும்பத் தொழிலைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். 
4) ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் பதினாலு வயதுச் 
சிறுவனைத் தொழிலில் அமர்த்துவது, அவனுடைய 
படிப்பை முற்றிலும் பாழ்படுத்தும்.
**
5) இது பெண் குழந்தைகளின் கல்வியைப் பெரிதும் 
பாதிக்கும். படிப்பில் கவனம் குறைந்து, இடைநிற்றல் 
(school dropout) அதிகமாகும்.
6) ஒரு சலவைத் தொழிலாளியின் மகன், குடும்பத் 
தொழிலில் ஈடுபடுத்தப் பட்டால், இரவு முழுவதும் 
வெள்ளாவி வைக்க நேரும். அதன் பிறகு, பகலில் 
தூங்குவான். பள்ளி செல்ல முடியாது. படிப்பில் 
கவனம் குறையும். காலப்போக்கில் படிப்பு நின்றுபோகும்.
**
7) நம் நாட்டவரான கைலாஷ் சத்யார்த்தி என்பவருக்கு 
நோபல் பரிசு வழங்கப்பட்டது. படிப்பில் இடை நின்றுவிடும் 
குழந்தைகள் மீது தனிக்கவனம் செலுத்தி, அவர்களின் 
படிப்பைத் தொடர வகை செய்தார் என்பது அவரின் சிறப்பு.
இந்த நவீனக் குலக் கல்வித் திட்டம் கைலாஷ் சத்யார்த்தி 
போன்றவர்களின் தொண்டைச் சீர்குலைக்கும்.
**
8) இது சாதி முறையைப் பேணிப் பாதுகாக்கும்.
சாதி ஒழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் 
இத்திட்டம் கொண்டு வரப் படுகிறது.
9) தகப்பனின் தொழிலை மகன் கற்றுக் கொள்வதும்  
ஒத்தாசையாக இருப்பதும் என்பது வேறு. தகப்பனின் 
தொழிலில் மகன் வேலையமர்த்தப் படுவது 
(employed) என்பது வேறு.
**
10) இத்தகைய வேலையமர்த்தல்கள் கடுமையான 
முதலாளித்துவச் சுரண்டலுக்கு வழிவகுக்கும். எனவே,
இந்த உத்தேச மசோதா சட்டம் ஆகாமல் தடுக்க 
வேண்டியது மக்களின் கடமையாகும்.
--------------------------------------------------------------------------------------
கேப்டன் நியூஸ் டி.வி. விவாதத்தில் (15.05.2015 இரவு 9 to 10 மணி)
நியூட்டன் அறிவியல் மன்றம் தெரிவித்த கருத்து.
**********************************************************************
          
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக