புதன், 27 மே, 2015

காப்பி குடிப்பவன் கருத்துமுதல்வாதி!
தேநீர் குடிப்பவன் பொருள்முதல்வாதி!
இடதுசாரிப் புரோகிதர்களின் தத்துவஞானம்!
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்,
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
--------------------------------------------------------------------------------
சமகால உலகில் தத்துவங்கள் வெகு வேகமாக, தங்கள்
மவுசை இழந்து வருகின்றன. இனியும் மனித குலத்துக்குத்
தத்துவங்கள் தேவையில்லை என்ற நிலை உருவாகி,
மென்மேலும் உறுதிப் பட்டுக் கொண்டே வருகிறது.
மானுடமானது  தத்துவங்களைச் சாக்கடையில் வீசுமா
அல்லது தத்துவங்கள் தங்களின் இறுதிமூச்சை விட்டு,
சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லப் படுமா என்பதுதான்
பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.
**
தத்துவம் (PHILOSOPHY) என்பது எல்லா அறிவுத்துறைகளின்
தொகுப்பு. எல்லா அறிவியல்களின் பொது விதிகளைக்
கண்டறிந்து, அவற்றைத் தொகுப்பது தத்துவம் ஆகும்.
அப்படியானால், எவையெல்லாம் தத்துவங்கள் ஆகும்?
**
பொருளாதார மற்றும் அரசியல் கோட்பாடுகளை இங்கு
தத்துவம் என்று குறிப்பிடவில்லை.மார்க்சியப்
பொருளாதாரத்தையோ அல்லது விஞ்ஞான
சோஷலிசத்தையோ இங்கு தத்துவம் என்று குறிப்பிடவில்லை.
அத்வைதம், துவைதம், கருத்துமுதல்வாதம், பொருள்முதல்
வாதம் போன்றவை மட்டுமே இங்கு தத்துவம் என்ற சொல்லால்
குறிப்பிடப் படுகின்றன.
**
ஆரம்ப காலத்தில் விஞ்ஞானிகளே தத்துவ ஞானிகளாக
இருந்தனர். அரிஸ்டாட்டில் இயற்பியல் அறிஞராகவும்
தத்துவ ஞானியாகவும் இருந்தார். இருபதாம் நூற்றாண்டில்
ஏற்பட்ட பிரும்மாண்டமான அறிவியல் வளர்ச்சியும் ,
குறிப்பாக இந்த மில்லேனியத்தின் பின்னான அறிவியல்
வளர்ச்சியும், தத்துவங்களை வெகுதூரம் பின்தங்க
வைத்து விட்டன.
**
இதனால், உலகை விளக்கும் (INTERPRETING) வல்லமையை
தத்துவங்கள் இழந்து விட்டன. உலகை விளக்க இயலாத
தத்துவங்களால், உலகை எப்படி மாறி அமைக்க இயலும்?
**
இதுவரை தத்துவங்கள் செய்து வந்த வேலையை, தற்போது
அறிவியல் செய்கிறது. உலகை விளக்கும் பணியை
தத்துவங்களிடம் இருந்து அறிவியல் பறித்துக் கொண்டது.
கடவுள் உண்டா இல்லையா?, பிரபஞ்சம் எப்படித்
தோன்றியது? பொருள் என்றால் என்ன? சிந்தனை
என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு, சமகால
உலகில், அறிவியல் பதில் அளிக்கிறது. பதில் அளிக்கும்
அருகதையை அறிவியல் மட்டுமே பெற்றுள்ளது.
**
கடந்த 115 ஆண்டுகளின் அறிவியல் வளர்ச்சியில் இருந்து
துண்டிக்கப் பட்டு நிற்கும் பொருள்முதல்வாதமோ,
அனைத்துக்கும் கடவுளே மூலம் என்ற கிளிப்பிள்ளைப்
பாடத்தையே யுகங்கள் தோறும் தொடர்ந்து சொல்லும்
கருத்துமுதல்வாதமோ, உலகை விளக்கும் ஆற்றலை
இழந்து விட்டன. கருத்துமுதல்வாதம் மரணப் படுக்கையில்
குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறது.
பொருள் முதல்வாதமோ கிழடுதட்டிப் போய்க் கிடக்கிறது.
**
பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின், பொருள்முதல்
வாதம் வளரவில்லை. அதை வளர்க்கவோ புதுப்பிக்கவோ
எவரும் முன்வரவில்லை. எனவே அதன் பாத்திரத்தை
தற்போது அறிவியல் ஆற்றி வருகிறது.
**
கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்விக்கு அறிவியல்
பதில் அளிக்கிறது. ஸ்டீபன் ஹாக்கிங், ரோகர் பென்ரோஸ்
போன்ற அறிஞர்கள் கடவுள் இல்லை என்று பதில்
அளிக்கிறார்கள்.
**
இவ்வாறு காலம் மாறி விட்டதைப் புரிந்து கொள்ள
முடியாத பழமைவாதப் புரோகிதர்கள், இன்றும்
கருத்துமுதல்வாதம், பக்கவாதம், பொருள்முதல்வாதம்
என்று மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருப்பது
நகைப்புக்கு இடமானது.
**
சமஸ்கிருதம் படித்த பார்ப்பனப் புரோகிதர்கள், ஆதிசங்கரரின்
சௌந்தர்ய லஹரி, பஜகோவிந்தம் நூல்களின் சுலோகங்களை
ஒப்பிப்பது போல, இந்த இடதுசாரிப் புரோகிதர்கள் ஹெக்கல்,
ஃ பாயர்பாக் போன்றோர்களின் மேற்கோள்களை விபூதிப்
பிரசாதம் போல வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
**
"அவர் காப்பி குடிப்பவர்; எனவே அவர் கருத்துமுதல்வாதி,
இவர் தேநீர் குடிப்பவர்; எனவே இவர் பொருள்முதல்வாதி"  
என்கிற ரேஞ்சில்தான் இவர்கள் படித்த, பாராயணம் செய்த
பொருள்முதல்வாதம் உள்ளது. கழுத்தை நெரிக்கும்
தங்களின் பலவீனத்தை நன்கு உணர்ந்த இந்தப்
பாராயணவாதிகள், விவாதங்களைக் கண்டு அஞ்சி
ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். கடவுள் அவர்களை
ஆசீர்வதிக்கட்டும்.
-------------------------------------------------------------------------------------------------
      
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக