திங்கள், 4 மே, 2015

(8) மார்க்சியத்தில் சாதிக்குத் தீர்வு உள்ளதா?
தொடர் கட்டுரை-8;  மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
----------------------------------------------------------------------------------------
பம்பரம் விளையாடும் சிறுவர்களின் கூச்சலும், 
அனைத்துலகத் தத்துவம் என்றாலும், மார்க்சியம் 
சர்வரோக நிவாரணி அல்ல என்ற உண்மையும்!
-------------------------------------------------------------------------------------
காரல் மார்க்ஸ் இந்தியாவில் நிலவும் சாதி முறையைப் 
பற்றி அறிந்து இருந்தார். தமது நூல்களில் பல்வேறு 
இடங்களில் சாதியைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார் 
என்பதை முந்தைய கட்டுரைகளில் ஆதாரத்துடன் 
நிரூபித்து உள்ளோம். இன்னும் நிறைய இடங்களைச் 
சுட்டிக் காட்ட இயலும். ஆனாலும் கட்டுரை பெரிதும் 
விரிவடையும் என்று அஞ்சி இத்துடன் நிறுத்திக் 
கொள்கிறோம்.
**
கீழ்த்திசை நாடுகளைப் பற்றி எழுதுகையில், ஆசிய உற்பத்தி 
முறை (ASIATIC MODE OF PRODUCTION) பற்றியும் மார்க்ஸ் 
எழுதி இருக்கிறார். இது மார்க்சின் சமகால அறிஞர்களால் 
கடுமையாக விமர்சிக்கப் பட்டது. ரஷ்யாவில் ஸ்டாலின் 
காலத்தில், இக்கோட்பாடு நிராகரிக்கப் பட்டது. ஆசிய உற்பத்தி 
முறை என்ற ஓர் சமுதாய அமைப்பு கிடையாது என்று 
ஸ்டாலின் கருதினார். (இது குறித்துப் பின்னர் விரிவாகப் 
பார்க்கலாம்).
**
ஐரோப்பிய மார்க்சியம், கீழைத்தேய மார்க்சியம் என்று 
மார்க்சியத்தை இரண்டாகப் பிரிக்கின்றனர் சில மார்க்சியர்கள்.
தமிழ்ச் சூழலில், பேரராசிரியர் எஸ். என் எனப்படும் நாகராசன் 
அவர்கள் கீழைத்தேய மார்க்சியமே இந்தியாவுக்குப் 
பொருந்துவது என்று வாதிடுகின்றார். மார்க்சியத்தை 
இவ்வாறு இரண்டாகப் பிரிப்பது முற்றிலும் தவறாகும்.
இது ஏற்கத் தக்கதல்ல. மார்க்சியம் அனைத்து உலகிற்குமான
பொதுத் தத்துவமே. அதாவது, மார்க்சியம் ஒரு UNIVERSAL
தத்துவமே. 
**
மார்க்சியம் ஓர் அனைத்துலகத் தத்துவமே என்றாலும்,
மார்க்சியம் ஒரு சர்வ ரோக நிவாரணி அல்ல. உலக நாடுகள்
மற்றும் உலக மக்களுக்கு இரண்டு விதமான பிரச்சினைகள் 
உண்டு. 1) எல்லா நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினைகள்;
(உதாரணம்: முதலாளித்துவச் சுரண்டல்)    
2) அந்தந்த நாட்டுக்கு மட்டுமே உரித்தான பிரத்தியேகமான 
பிரச்சினைகள்.(உதாரணம்: இந்தியாவின் சாதிய முறை)        
**
மார்க்சியம் எல்லா நாடுகளின் பொதுவான பிரச்சினையான, 
முதலாளித்துவச் சுரண்டலில் இருந்து விடுதலை அடைவதற்கான 
வழிகளைக் கூறும் ஒரு மாபெரும் தத்துவம். அதே நேரத்தில்,
குறிப்பான, ஒரு நாட்டுக்கு மட்டுமே உரித்தான 
பிரச்சினைகளுக்கும் மார்க்சியத்தில் தீர்வைத் தேடுவது 
வீண் முயற்சியாகும்.மார்க்சியத்தில் இல்லாதது எதுவுமே 
இல்லை என்று உரக்கக் கூச்சலிடுவது, பம்பரம் விளையாடும் 
சிறுவர்களின் மனநிலையின் வெளிப்பாடாகும்.
**
மார்க்சும் எங்கல்சும் இந்தியாவைப் பற்றியும், இந்தியாவில் 
உள்ள சாதியைப் பற்றியும் அறிந்து இருந்தார்கள் என்பது 
உண்மையே. தமது நூல்களில் சாதியம் பற்றிப் பல்வேறு 
இடங்களில் குறிப்பிட்டு உள்ளனர் என்பதும் உண்மையே.
ஆனால், சாதியத்தை ஒரு ஆழமான சிக்கலாகப் பார்த்து,
அதன் தோற்ற மூலங்களை ஆராய்ந்து, அதை வீழ்த்துவதற்கான 
தீர்வை, செயல் திட்டத்தை வகுத்துக் கொடுத்து 
இருக்கின்றார்களா என்றால், இல்லை என்பது தெளிவு.
**
என்றாலும் இதனால் மார்க்சியத்துக்கு எவ்வித பங்கமும் 
ஏற்பட்டு விடவில்லை என்பதும் உண்மை. மார்க்சியம் 
வெளிப்படுத்தும் உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்,
இந்திய மார்க்சியர்கள் சாதியத்துக்குத் தீர்வு காண வேண்டும்.
இது காலம் அவர்களின் தோள்களில் ஏற்றி இருக்கும் சுமை.
அது முடியுமா என்றால், நிச்சயம் முடியும். எப்படி என்பதை 
அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.---------தொடரும்-----------
*******************************************************************         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக