செவ்வாய், 10 மே, 2016

நாத்திகப் பிரச்சாரம் ஏன் அவசியம்?
------------------------------------------------------------------------
பிரச்சாரத்தால் மட்டும் நாத்திகத்தை மக்கள் ஏற்குமாறு
செய்து விட முடியாது என்பதை மார்க்சியம் அறியும்.
ஒரு பாட்டாளி வர்க்க அரசு அமைந்து, அந்த அரசானது
மேற்கொள்ளும் நாத்திகப் பிரச்சாரமும் அதற்கு
இசைவான அரசியல் பொருளியல் நடவடிக்கைகளும் 
மட்டுமே மக்களிடம் நாத்திகத்தை வேரூன்றச்
செய்யும் என்பதும் மார்க்சியத்தில் சொல்லப்
பட்டுள்ள விஷயம்தான்.
**
என்றாலும், இதன் பொருள் பாட்டாளி வர்க்க அரசு
அமையும் வரை நாத்திகப் பிரச்சாரத்தைப் பரணில்
வைத்து விடவேண்டும் என்பதல்ல. எந்த ஒரு
கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்திலும்
நாத்திகப் பிரச்சாரம் தவிர்க்க இயலாத ஒன்றாக
இடம் பெற்றுத்தான்  உள்ளது. அதை இயன்ற அளவு
எடுத்துச் செல்வது கம்யூனிஸ்டுகளின் புறந்தள்ள
முடியாத கடமைகளில் ஒன்று. சில குறிப்பிட்ட
அரசியல் சூழ்நிலைமைகளில் நாத்திகப் பிரச்சாரம்
பெரிதும் முன்னுரிமை பெறுவதும், வேறு சில
நிலைமைகளில் அந்த அளவுக்கு முன்னுரிமை
பெறாமல் இருப்பதும் இயல்பே.
**
சமகால இந்திய, தமிழகச் சூழலில், முன்னெப்போதும்
இல்லாத அளவில் சகல விதமான மதவெறிச்
சக்திகளும் போர்க்கோலம் பூண்டு நிற்கிற காட்சிகளை
அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
எனவே இக்காலக் கட்டம் நாத்திகப்  பிரச்சாரத்திற்கு
ஏற்ற காலக் கட்டம் ஆகும். நாத்திகப் பிரச்சாரம்
சமூகத்தின் புறநிலைத் தேவையில் இருந்து எழுகிறது.
**
கம்யூனிஸ்டுகள் தங்கள் லட்சியங்களை மறைத்து
வைப்பதில்லை: அவ்வாறு மறைத்து வைப்பதை
அவமானமாகக் கருதுகிறவர்கள் என்பார்
காரல் மார்க்ஸ். எனவே நாத்திகத்தை மறைத்து
வைக்க வேண்டிய  அவசியம் இல்லை.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக