சனி, 18 ஜூன், 2016

தமிழ்நாட்டின் தலைசிறந்த
சமஸ்கிருத அறிஞர் யார்?
பொன்னார் தலைகுனிந்தது ஏன்?
------------------------------------------------------------
கடந்து சென்ற ஒரு நூறு ஆண்டுக் காலத்தில்,
(1916 முதல் 2016 வரை) தமிழ்நாட்டின் தலைசிறந்த
சமஸ்கிருத அறிஞராகத் திகழ்ந்தவர் யார்?

பாரதியார் காசி சர்வகலாசாலையில் பயின்றவர்.
அங்கு சமஸ்கிருதமும் படித்தார். அவர் ஒரு சமஸ்கிருத
அறிஞரே. எனினும், பாரதியையும் விஞ்சிய
ஆற்றல் மிக்க சமஸ்கிருத அறிஞர் ஒருவர்
தமிழ்நாட்டில் இருந்தார். அவர் யார்?

அவர்தான் மறைமலை அடிகள்.
காளிதாசனின் சாகுந்தலம் நாடகத்தைத்
தமிழில் மொழிபெயர்த்தவர் மறைமலை அடிகள்.
சமஸ்கிருத காவியத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பது
எவ்வளவு ஆற்றலையும் உழைப்பையும் கோருகின்ற
பணி என்பது அறிவு நுட்பம் உடையோரால் மட்டுமே
உணரப்பட இயலும்.

யாம் அடித்துக் கூறுகிறோம். மறைமலை அடிகளை
மிஞ்சிய சமஸ்கிருத அறிஞர் யாரும் தமிழ்நாட்டில்,
அவர் காலம் தொட்டு இன்றுவரை இல்லை. அவரே
முழுமுதல் அறிஞர்; தலைசிறந்த அறிஞர்.

சமஸ்கிருதத்தைப் போற்றித் துதிக்கும் எந்த ஒரு
பார்ப்பனரும் அன்றும் சரி, இன்றும் சரி,
மறைமலை அடிகளுக்கு நிகராக இல்லை.

சரி, மறைமலை அடிகள் பாரம்பரியத்தில் கடைசி
சமஸ்கிருத மாணாக்கர் யார்? வேறு யார்?
இந்தக் கட்டுரை ஆசிரியர்தான்.

ஒரு சமஸ்கிருத சுலோகத்தை எழுதி இக்கட்டுரையை
நிறைவு செய்வோம். தேவநகரியில் எழுதவில்லை,
எல்லோரும் புரிந்து கொள்ள ஏதுவாக, தமிழிலேயே
எழுதப்பட்ட இச்சுலோசகத்தைப் படிக்கவும்.

அக்ரே வஹ்னி  ப்ருஷ்டே பானு
ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜானு
கர தல பிச்சஸ் தருதல வாஸஸ்
ததபி ந  முஞ்சத் ஆஷா பாஷ!

ஆதி சங்கரரின் பஜ கோவிந்தத்தில் உள்ள
பாடல் இது. மிக எளிமையானது. பொருள்?

சமஸ்கிருத அபிமானிகளும் சமஸ்கிருத
எதிர்ப்பாளர்களும் அல்லவா பொருள் சொல்ல
வேண்டும்?  ஒன்றைத் தெரிந்து கொள்ளாமலே
எதிர்ப்பதும், தெரிந்து கொள்ளாமலே ஆதரிப்பதும்
எவ்வளவு மடமை என்பதை பலரும் உணர்ந்த
பின்னர் யாம் பொருள் கூறுவோம்.

அண்ணல் அம்பேத்கார் மிகத்  தீவிர சமஸ்கிருத
அபிமானி என்பதை நினைவு கூர்வது நல்லது.

மார்க்சிய மூல ஆசான் காரல் மார்க்ஸ் தம் அந்திம காலத்தில் இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்ள
முயன்றார். அன்று இந்தியா பற்றிய மூல நூல்கள்
யாவும் சமஸ்கிருதத்தில்தான் இருந்தன. எனவே
மார்க்ஸ் சமஸ்கிருதம் கற்க முனைந்தார்; கற்றார்.
ஆனால் கற்று முடிப்பதற்குள் மார்க்ஸ் இறந்து விட்டார்.

நம்மூர் பொன் ராதாகிருஷ்ணன் ஒரு கருத்தரங்கிற்குச்
சென்றார். அங்கு பேசிய அறிஞர் பெருமக்கள்
பலரும் சமஸ்கிருத சுலோகங்களை மேற்கோள்
காட்டிப் பேசினர். பொன்னாருக்கு ஒரு இழவும்
புரியவில்லை. பாவம், வெட்கித்  தலைகுனிந்தார்.

யாரும் தன்னுடைய அறியாமையை  வெளியில்
சொல்வதில்லை.  ஒரு தற்குறி கூட, தன்னை அறிஞனாகக்
காட்டிக் கொள்ளவே முயலுவான். ஆனால் பொன்னார்
மிகவும் நேர்மையாக, தனது அறியாமையை
வெளியில் சொல்லி இன்று கேலிக்கு இலக்காகி
நிற்கிறார். பாவம்.

கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பதுதான்
எமது நிலைபாடு. இதுதான் மறைமலை
அடிகளின் நிலைபாடு.

ஆயின், ஒரு மொழி என்ற நிலையில் சமஸ்கிருதம்
குறித்து உங்கள் கருத்து என்ன என்று வாசகர்கள்
கேட்கலாம். இதற்கான எமது விடை.

மறைமலை அடிகள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.
தமிழ்த்தாய் என்ற தலைப்பில் என்பதாக நினைவு.
இக்கட்டுரை ஆசிரியர் எஸ்.எஸ்.எல்.சி படித்த
காலத்தில் 1970-71 தமிழ்ப்பாடப் புத்தகத்தில்
முதல் பாடமாக மறைமலை அடிகளின் அக்கட்டுரை
இருந்தது. அக்கட்டுரையின் கருத்துக்களே சமஸ்கிருதம்
குறித்த எமது கருத்துக்களும் ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: எதிர்மறையாக விமர்சனம் செய்ய
விரும்புவோர் இக்கட்டுரையில் கூறப்பட்ட
சமஸ்கிருத சுலோகத்திற்குச் சரியான பொருள்
கூறியபின், தமது எதிர்மறைக் கருத்துக்களை
எழுதலாம்.
***********************************************************************      
       



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக