செவ்வாய், 21 ஜூன், 2016

நவநீத கிருஷ்ணனும் அபர்ணாவும்!
அய்யங்கார்களும்  சமஸ்கிருதமும்!
மறைமலை அடிகளும் நானும் நீங்களும்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
யூதர்களின்  பெயர்கள் அவர்களின் பூர்விக
மொழியில்தான் இருக்கும். ஆப்ரஹாம் என்பது
ஒரு யூதப் பெயரே. ஆனால்,  தமிழர்களின் பெயர்கள்
மிகுதியும் சமஸ்கிருதத்தில்தான் இருக்கும்.

கனிமொழி, தமிழிசை என்ற பெயர்கள் அரிதானவை.
அண்மையில் ராஜிவ் கொலையாளி நளினியின் மகளின் 
பெயரான ஹரித்ரா ஸ்ரீஹரன் என்ற பெயர் பேரளவில்
செய்திகளில் அடிபட்ட பெயர். அழகிய சமஸ்கிருதப்
பெயர்! என்னே அழகு என்று வியக்கின்றனர் தமிழ்ப்
பற்றாளர்கள்!!

ஆக, சமஸ்கிருதப் பெயர்கள் தமிழர் வாழ்வில்
தவிர்க்க இயலாமல் போய்விட்டன. அதுகுறித்துக்
கவலை கொள்வதால் பயனில்லை என்றாகி விட்டது.

சமஸ்கிருதப் பெயர்களின் பொருள் புரியாமல்
அல்லல் படுகின்றனர் சிலர். அந்த அல்லலைக்
குறைக்கலாம் என்ற நோக்கில் சில பல சமஸ்கிருதப்
பெயர்களின் பொருளை வாசகர்களுக்குத் தெரியப்
படுத்தும் ஓர் எளிய முயற்சியே இக்கட்டுரை.

அபர்ணா என்றால் என்ன பொருள்?
----------------------------------------------------------------- 
"ராமனும் சீதையும் காட்டுக்குச் சென்றார்கள். அங்கு
காட்டில் சீதை தங்குவதற்காக, லட்சுமணன்
பர்ணசாலை அமைத்தான்."-------1960களில் பாடப்
புத்தகங்களில் இவ்வாறு எழுதப் பட்டிருக்கும்.
"பர்ண" என்ற சமஸ்கிருதத் சொல்லுக்கு இலை, தழை
என்று பொருள். இலை தழையால் அமைத்த குடில்
பர்ணசாலை. அதாவது தமிழில் இலைக்குடில்.
( பாடசாலை, கலாசாலை போன்றது பர்ணசாலை.
அது ரோடு அல்ல).

"பர்ண"என்ற சொல்லில் இருந்து அபர்ணா என்ற
சொல் தோன்றியது. இது மலைமகளான பார்வதியின்
பெயர். இலைக்குடிலில் வாழாதவள் என்று பொருள்.
ஆடு மாடுகள் போல் இலை தழைகளை உண்ணாதவள்
என்று பொருள். அபர்ணா (பார்வதி) ஹிமவானின் மகள்.
அதாவது மலையரசனின் மகள். அவள் ஏன் அஃறிணை
உயிர்களைப் போல  இலை தழைகளை உண்ண
வேண்டும்? ஆக, அபர்ணா என்பது இவ்வாறு காரணப்
பெயர் ஆகி விடுகிறது. இடுகுறி அன்று. (இதற்குரிய
புராணக் கதையை நான் இங்கு கூற விரும்பவில்லை.

ஆதி சங்கரரின் ஸௌந்தர்ய லஹரி படித்திருக்கிறீர்களா?
மறைமலை அடிகள் படித்திருக்கிறார். நானும்
படித்திருக்கிறேன்.( சமஸ்கிருதக் கல்வியில்
மறைமலை அடிகளின் நிழலைக்கூட நெருங்காதவன் யான்) அபர்ணா என்ற சொல் அதில் மிகவும் பிரஸித்தம்.

நவநீத கிருஷ்ணன் தமிழ்ப் பெயர்தானே!
------------------------------------------------------------------------------   
இல்லை. நவநீதம் என்றால் வெண்ணெய் என்று பொருள்.
தியாகராஜ கீர்த்தனைகள் கேட்டு இருக்கிறீர்களா?
"நிதி சால சுகமா?"என்பது உலகப்புகழ் பெற்ற
தியாகராஜ கீர்த்தனைகளில் ஒன்று. அதிலும்
பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் என்று போற்றப்படும்
ஐந்து கீர்த்தனைகளில் ஒன்று.

"நிதி சால சுகமா--ராமுனி
ஸந்நிதி ஸேவ சுகமா"  என்று தொடங்கும்
அக்கீர்த்தனை,

"ததி நவநீத க்ஷீரமுலு ருச்சோ
தஸரதி த்யான பஜன ஸுதா ரஸமு ருச்சோ"
என்று தொடரும். 

இங்கு வரும் நவநீதம் என்ற சொல்லைக் கவனியுங்கள்.
அதற்கு வெண்ணெய் என்று பொருள். நவநீதம்
தமிழ்ச் சொல் அல்ல.

தியாகராஜ கீர்த்தனைகளை டி.எம். கிருஷ்ணா
பாடக் கேளுங்கள். தியாகராஜ கீர்த்தனைகளை
உயிர் கொடுத்தவர் அவர். அவர்தான் வாழும்
தியாகய்யர் (Living Thyagaraja) என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் கருதுகிறது.

அய்யங்கார் வீடுகளில் குழந்தைகளுக்கு அழகான
தமிழ்ப் பெயர்கள் வைக்கிறார்கள். ஆராவமுதன்
என்றும் கோதை, ஆண்டாள் என்றும்.

இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்களுக்கு ஓர்
எளிய கேள்வி. அனுசூயா என்ற பெயர் தமிழ்ப்
பெண்களுக்கு அதிகமாக வைக்கப்படும்
பெயர்களில் ஒன்று. தமிழில் இதன் பொருள்
என்ன என்பதை வாசகர்கள் தெரிவிக்கலாம்.
*************************************************************** 
  







 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக