செவ்வாய், 3 மார்ச், 2015

பாம்பேயின் கட்டளையை மீறி 
ரூபிகன் ஆற்றைக் கடந்த சீசரும் 
ஸ்டாலினின் கட்டளையை மீறி 
யாங்டிசி ஆற்றைக் கடந்த மாவோவும்!!
-------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------
மார்க்சிய மூல ஆசான்கள் ஐவர்:  மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், 
ஸ்டாலின், மாவோ. இந்த ஐவரில் மார்க்சுக்கும் எங்கல்சுக்கும் 
இடையே காவிய நட்பு நிலவியது. காலத்தால் பிந்தியவரான லெனின், மார்க்சின் இறப்பின்போது, பள்ளிச் சிறுவனாக இருந்தார். மார்க்ஸ்-எங்கல்சுடன் ஆன இவரின் உறவு ஆசிரியன்-மாணவன் உறவாகும்.
லெனினும் ஸ்டாலினும் சமகாலத்தவர்கள், ஸ்டாலின் 
இளையவர் என்றபோதும். லெனின் ஸ்டாலினுக்கு இடையிலான 
உறவு சிறந்ததாக இல்லை. ஸ்டாலின் மீது லெனினுக்கு நம்பிக்கை 
இல்லை.  
----------------------------------------------------------------------------------------------------------------- 
ஸ்டாலினும் மாவோவும் சம காலத்தவர்கள், மாவோதான் இளையவர் 
இருவருள்ளும். ஸ்டாலின்-மாவோ உறவு சுமுகமானதாக 
இல்லை. கோட்பாட்டு ரீதியான ஐக்கியம் இல்லை. எனினும் இவர்கள் 
ஐவரும் மூல ஆசான்கள் என்றே கருதப்படுகின்றனர். 
-----------------------------------------------------------------------------------------------------------------  
ஸ்டாலின் குறித்த புகழாரங்களுக்கு மாவோவின் எழுத்துக்களில் 
பஞ்சமே இல்லை. எனினும் ஸ்டாலின் மீதான தீவிரமான 
விமர்சனங்களும் மாவோவின் படைப்புக்களில் நிரம்பவே உள்ளன.   
ஒரே ஒரு சான்றைப் பார்ப்போம்!
-------------------------------------------------------------------------------------------------------
சீனப் புரட்சியை மாவோ தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த 
நேரம்.சீனப் புரட்சி என்பது நாடு முழுவதும் நீண்ட பயணம் செய்து,
பயணத்தின் ஊடாக, வழியெங்கணும் உள்ள கிராமங்களை, ஊர்களை விடுதலை செய்வது என்ற நடைமுறையைக் கொண்டது. 
நீண்ட பயணத்தின் ஒரு தீர்மானகரமான கட்டத்தில், யாங்க்டிசி நதியைக்  கடக்க வேண்டி இருந்தது.
--------------------------------------------------------------------------------------------------------- 
அப்போது யாங்டிசி நதியைக் கடக்க வேண்டாம் என்று ஸ்டாலின் 
மாவோவுக்கு ஒரு தந்தி அனுப்பினார்.( பார்க்க: ஆகஸ்ட் 22, 1945 
தேதியிட்ட தந்தி). நதியைக் கடக்க வேண்டாம் என்றும், சியாங்கே 
ஷேக்குடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறும் 
அத்தந்தியில் ஸ்டாலின்  அறிவுறுத்தி இருந்தார். இல்லாவிடில்,
சியாங்கே ஷேக்குக்கு ஆதரவாக அமெரிக்கா போர் தொடுக்கும் 
என்றும், இப்போரால் சீன தேசம் அழிந்து விடும் என்றும் 
ஸ்டாலின் அத்தந்தியில் மேலும் குறிப்பிட்டு இருந்தார்.
------------------------------------------------------------------------------------------------------- 
தந்தியைப் படித்ததும் மாவோ மிகவும் கோபம் கொண்டார்.
மக்கள் திரண்டு எழுந்து போராடுவதால் ஒரு தேசம் எப்படி 
அழியும் என்று உடன் இருந்தவர்களிடம் கூறினார். 
சீனாவை வடக்கு சீனா, தெற்கு சீனா என்று இரண்டு நாடுகளாகப் 
பிரிக்கும் உள்நோக்கத்துடனேயே ஸ்டாலின் இவ்வாறு 
அறிவுரை கூறுவதாக, சூ என் லாய், மாவோ, மற்றும் மக்கள் 
விடுதலைப் படையின் தளபதிகள் கருதினர்.
--------------------------------------------------------------------------------------------- 
ரோமானிய வரலாற்றில் இது போன்று ஒரு காட்சி!
ரூபிகன் ஆற்றின் இக்கரையில் தம் படைகளுடன் தங்கி 
இருந்த ஜூலியஸ் சீசர் ஆற்றைக் கடக்க விரும்பினார்.
அப்போது ரோமில் அதிகாரத்தில் இருந்த பாம்பே, ஆற்றைக் 
கடக்க வேண்டாம் என்று சீசருக்குச் செய்தி அனுப்பினார்.
பாம்பேயின் கட்டளையைப் புறக்கணித்த சீசர், ரூபிகனைத் 
தம் படையுடன் கடந்தார். ரோமை வென்றார்
-------------------------------------------------------------------------------- .  
சீசரின் வரலாற்றைப் படித்திருந்த மாவோ, சீசர் போன்றே 
முடிவெடுத்து, ஸ்டாலினின் அறிவுரையைப் புறக்கணித்து
யாங்டிசி நதியைக் கடந்தார். ஒட்டு மொத்த 
நாட்டையும் விடுதலை செய்தார். சீனப் புரட்சி உலகுக்கே 
ஒரு கலங்கரை விளக்கமாய் அமைந்தது.
------------------------------------------------------------------------------------
ஆக, மூல ஆசான்கள் என்று கருதப்படும் இவ்விருவருமே 
தங்களுக்குள் ஐக்கியமும் கருத்தொருமையும் கொண்டவர்களாக 
இல்லை. எனினும் தங்களின் தனிச் சிறப்பான பங்களிப்பால் 
இவர்கள் மூல ஆசான்கள் என்று கொண்டாடப் படுகின்றனர்.
--------------------------------------------------------------------------------------------------
**********************************************************************      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக