செவ்வாய், 10 நவம்பர், 2015

நித்திஷ்குமார் வாழ்க்கைக் குறிப்பு
----------------------------------------------------------
சொந்த வாழ்க்கை:
வயது:64. படிப்பு: பொறியியல் பட்டதாரி. தொடக்கத்தில்
பீகார் மின்வாரியத்தில் மின்சாரப் பொறியாளர். மனைவி
2007இல் இறந்து விட்டார். ஒரே மகன். அவரும் பொறியியல்
பட்டதாரி. குடும்ப அரசியல், வாரிசு அரசியலுக்கு இடம்
தராதவர்.

அரசியல் வாழ்க்கை:
-----------------------------------
தமது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரும்பகுதிக் காலம்
பாஜகவின் இணைபிரியாத தோழராகவே நித்திஷ் குமார்
இருந்தார். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட
போது, அதை இவர் எதிர்த்தார். மோடியை விட நானே மிகச்
சிறந்த பிரதமர் வேட்பாளர் என்று ஊடகங்களில் அறிவித்தார்.
மோடி மாநில அரசில் மட்டுமே அனுபவம் பெற்றவர். நான்
மாநில முதல்வராகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றி
இருக்கிறேன். எனவே மோடியை விட நான்தான் பிரதமர்
பதவிக்குத் தகுதியானவன் என்று அறிவித்தார்.

பதினேழு ஆண்டு காலம் 1998 முதல் 2014 வரை, பாஜகவின்
இணைபிரியாத் தோழராக இருந்த நித்திஷ் குமார் இந்த
நிகழ்வின்போதுதான் முரண்படுகிறார். 

தொடக்க கால அரசியல் வாழ்க்கை:
-----------------------------------------------------------
1985இல் முதன் முதலாக எம்.எல்.ஏ ஆகி பீகார் சட்ட
மன்றத்துக்குச் செல்கிறார். தொடர்ந்து எம்.எல்.ஏ, எம்.பி
என்று பல பதவிகளை வகித்தார்.

1998இல் பாஜக NDA கூட்டணியை அமைத்தபோது நித்திஷ் குமார்
அதில் சேர்ந்தார். எம்.பி.யாக வெற்றி பெற்றார். 1998இல் வாஜ்பாய்
பிரதமரான போது, அவரின் அமைச்சரவையில் ரயில்வேயின்   
காபினெட் அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா ஆதரவை வாபஸ் பெற்றதால்,  வாஜ்பாய் அமைச்சரவை 13 மாதங்களுக்குப் பின்
1999இல் கவிழும்வரை அமைச்சராக இருந்தவர் நித்திஷ்.

அதன்பின், 1999இல் மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்ற
போது, NDA வெற்றி பெற்று, வாஜ்பாய் மீண்டும் பிரதமர்
ஆனார். அப்போது நித்திஷ் குமார் வாஜ்பாய் அமைச்சரவையில்
மீண்டும் ரயில்வே அமைச்சர் ஆனார்.    

பிரசித்தி பெற்றதும் துயரம் மிகுந்ததுமான கோத்ரா ரயில்
எரிப்புச் சம்பவம் இவர் ரயில்வே அமைச்சராக இருந்த
போதுதான் (2002 பிப்ரவரி) நடந்தது. வாஜ்பாய் அரசின்
பதவிக்காலம் 2004இல் முடிகிறவரை இவர் ரயில்வே
அமைச்சராக இருந்தார்.

மாநில அரசியலுக்குத் திரும்புதல்:
------------------------------------------------------
2004 பொதுத் தேர்தலில்,பாஜக  தோற்று, மன்மோகன்சிங்
பிரதமர் ஆகிறார். நித்திஷ்குமார் மாநில அரசியலுக்குத்
திரும்புகிறார்.

2005 பெப்ரவரி பீகார் சட்ட மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும்
பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம்
அமைகிறது. நித்திஷ் கட்சியும் பாஜகவும் கூட்டணி ஆட்சி
அமைக்கத் தேவையான ஆதரவு இல்லை. அப்போது
ராம்விலாஸ் பாஸ்வானின் LJP கட்சி 12 எம்.எல்.ஏ.க்களை
வைத்திருந்தது. ஆட்சி அமைக்க முயன்ற பாஜக, லாலு 
இருவருக்கும் ஆதரவு இல்லை என்று பாஸ்வான் 
உறுதியாக இருந்தார்.

பாஸ்வானின் உறுதியைக் குலைத்து அவர் கட்சியின்
12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெறுவதில் தீவிரம்
காட்டினார் நித்திஷ். அந்நேரத்தில் பாஸ்வான் காங்கிரசின்
மன்மோகன்சிங் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார்.
இருப்பினும், காங்கிரஸ் அமைச்சரான பாஸ்வானின் கட்சி
எம்.எல்.ஏ.க்களை, காங்கிரசுக்கு எதிரான பாஜக கூட்டணி
ஆட்சி அமைப்பதற்கு விலைபேசி, பாஸ்வானையும்
சம்மதிக்க வைத்து குதிரை பேரத்தில் வெற்றியும் அடைந்து
விட்டார் நித்திஷ்.

ஆனால், அப்போது பீகாரில் ஆளுநராக இருந்த
காங்கிரஸ்காரரான பூட்டாசிங் இதை ஏற்க மறுத்து
சட்ட மன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். இவ்வாறு
முதலாளித்துவ அரசியலின் குதிரைபேரம் உள்ளிட்ட
ஆய கலைகள் அறுபத்தி ஐந்தையும் கற்றுத் தேர்ந்தவர்தான்
நித்திஷ்குமார்.

பின்னர் அதே ஆண்டு 2005 நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்ட மன்றத் தேர்தலில் பாஜக-நித்திஷ் கட்சி கூட்டணி வெற்றி 
பெற்று நித்திஷ் முதல்வர் ஆகிறார். அடுத்த 2010 தேர்தலிலும் 
பாஜக கூட்டணி வெற்றி பெற்று நித்திஷ் இரண்டாம் 
முறையாகவும் முதல்வர் ஆகிறார்.

தற்போது 2015இல் கூட்டணி மாற்றத்துடன் மீண்டும் வெற்றி
பெற்று மூன்றாம் முறையாகவும் முதல்வர் ஆகி இருக்கிறார்.

2015 முதல் 2020 வரை நித்திஷ் குமாரே முதல்வர்
------------------------------------------------------------------------------
கதம்பக் கூட்டணியாக, எலி-தவளை கூட்டணியாக
இருக்கிற போதிலும், நித்திஷ் குமாரின் ஆட்சி கவிழாது.
ஒருவேளை, லாலு தமது ஆதரவை விலக்கிக் கொண்டாலும்
நித்திஷின் ஆட்சி கவிழாது. அவர் பாஜகவின் ஆதரவைக்
கோரிப் பெற்று விடுவார். பாஜகவும் அவருக்கு ஆதரவளிக்கத்
தயங்காது. இதுதான் அரசியல். நுனிப்புல் மேயும்
அப்பாவிகளால் இதை ஜீரணிக்க முடியாமல் போகலாம்.
ஆனால், உண்மை இதுதான்.

மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்
என்றால், மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தல் 
கூடாது என்ற தெளிவு நித்திஷுக்கு உண்டு. எனவே மோடி 
அரசுடன் ஒத்திசைவுடன் இணங்கிப் போய் விடுவார். ஏனெனில் 
நித்திஷ் ஒரு சிறந்த நிர்வாகி.   

ஆக மொத்தத்தில், பாஜக எதிர்ப்பு அரசியலுக்கு நித்திஷ் 
பயன்பட மாட்டார். ஆனால், பீகாரின் முதல்வராகத் 
திறம்படப் பணியாற்றுவார்.
********************************************************************* 
   
   

.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக