ஞாயிறு, 29 நவம்பர், 2015

அய்யா,
தமிழ் உள்ளிட்ட சில மொழிகள் அழிவின் விளிம்பில்
இருப்பதாகவும் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இந்தச் சில
மொழிகளின் அழிவு தொடங்கி விடும் என்றும் ஐ.நா மன்ற
அறிக்கை கூறுகிறது. இது குறித்து கவிஞர் வைரமுத்துவும்
தமிழறிஞர் குமரி ஆனந்தனும் கண்ணீரும் கம்பலையுமாக
விடுத்த அறிக்கைகள் ஓராண்டுக்கு முன்னரே தமிழ்நாட்டில்
வெளியாகின.

தமிழ்ச் சமூகத்தின் பொருள் உற்பத்தியில் தமிழ் என்ன இடம்
வகிக்கிறது என்பதைப் பொறுத்தே தமிழின் எதிர்காலம்
அமையும். சமூகத்தின் பொருள் உற்பத்தி என்பது அறிவியல்
தொழில்நுட்பம் சார்ந்தது, அறிவியல்-தொழில்நுட்பத்தில்
தமிழுக்கு என்ன இடம் இருக்கிறது என்று பார்த்தால்,
சொல்லிக்கொள்ள வல்ல எந்த இடமும் இல்லை என்பது
கண்கூடு. சமூகத்தின் பொருள் உற்பத்தியில் பங்கேற்காத
எந்த மொழியும் நிலைத்து நிற்க இயலாது. இது ஒரு
மார்க்சிய பால பாடம்.

தமிழ் தொன்மை மிக்க மொழி என்கிறோம். அது 100 விழுக்காடு
உண்மையே. அதே நேரத்தில், தொன்மை மிக்க மொழி
என்பதன் பொருள் தமிழ் நவீன மொழியாக இல்லை
என்பதே. நிலவுடைமைச் சமூகத்துக்கு முந்திய காலத்தில்
தோன்றியது தமிழ். (born during pre feudal period). நிலவுடைமைச்
சமூக காலத்தில் வளர்ச்சியின் உச்சம் கண்டது தமிழ்.

இன்றைய காலம் நிலவுடைமைக்குப் பிந்திய காலம்.
இன்னும் சொல்லப்போனால் ஏகாதிபத்திய காலம்.
(post feudal and imperial period) இக்காலத்திற்கு ஏதுவானதாக
இசைவானதாகத் தமிழ் இல்லை என்பது உள்ளங்கை
நெல்லிக்கனி. Pre feudal காலத்தில் தோன்றிய தமிழ்,
Post feudal காலத்தில் பொருந்தி நிற்க இயலவில்லை.

எல்லா மொழிகளுக்கும் ஓர் ஆரம்பம், வளர்ச்சி, உச்சம்,
சரிவு, இறுதி என்ற கட்டங்கள் உண்டு. இதற்குத் தமிழும்
விலக்கன்று. இதுதான் தமிழின் எதிர்காலம் குறித்த
அறுதி உண்மை.

நிலைமை இவ்வாறிருக்க, கூடம் தெரியாமல் சாமி ஆடும்
மூடனைப் போல, தனித்தமிழ் தலிபான்கள் தமிழின்
முடிவை விரைந்து தருவிக்கின்றனர். வணக்கத்துக்குரிய
மறைமலையடிகளின் தனித்தமிழ்க் கொள்கைகள் இன்று
ஒரு சிறிதும் பொருந்தா என்பதை அறிவியல் வழியில்
சிந்திக்கும் எவரும் உணர இயலும்.

கடந்த பல ஆண்டுகளாக தமிழில் அறிவியலை எழுதி
வருபவன் என்ற முறையில் என் பட்டறிவின் வழி
மேற்கூறிய உண்மைகளை உணர்ந்துள்ளேன்.

தங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக