புதன், 25 நவம்பர், 2015

குருட்டு நாத்திகமும் போலிப் பகுத்தறிவும்
மதவெறியர்களிடம் தோல்வி அடையும்!
தமிழகத்தில் நாத்திகத்தின் எதிர்காலம்!
-------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-----------------------------------------------------------------------------
உலகில் மனித இனம் தோன்றிய காலம் முதல்
பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் பிற விலங்கினங்கள்
போன்றே வாழ்ந்து வந்தான். மானுட வாழ்க்கை நீண்ட
நெடிய கட்டங்களைக் கடந்த பின்னரே, மனிதன் கடவுளைக்
கற்பித்தான். இதன் பின்னரான நீண்ட கட்டங்களுக்குப்
பிறகே மதம் தோன்றியது. மனிதனின் அற்புதமான
கண்டுபிடிப்புகளில் ஒன்று கடவுள்.

இன்று இந்த 2015இல், உலகெங்கும் கடவுள் நம்பிக்கை
குறைந்து வருகிறது. உலகின் பெரும்பான்மையான
மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த கிறித்துவம் தன்
பிடியை இழந்து வருகிறது. கிறித்துவத்தின் செல்வாக்கில்
இருந்து விடுபட்டு கோடிக்கணக்கான மக்கள் நாத்திகர்களாக
மாறி வருகிறார்கள்.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளிலும் முன்னாள் கம்யூனிஸ்ட்
நாடுகளிலும் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான மக்கள்
நாத்திகர்களாகவே இருந்து வருகிறார்கள். இசுலாமிய நாடுகளில் 
வாழும் மக்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் இசுலாமியர்கள்
ஆகியோரிடம் மட்டுமே அதிதீவிர கடவுள் நம்பிக்கை இருந்து
வருகிறது. மக்களின் சிந்தனையையும் சிந்தனையைத்
தூண்டும் அறிவியலையும் இசுலாம் விலங்கிட்டு வைத்து
இருப்பதால்தான், இசுலாம் மதத்தில் இருந்து நாத்திகத்தை
நோக்கிய பயணம் வெற்றி பெறுவதில்லை.

உலக மக்கள் தொகையில் மிக மிகக் குறைவான மக்களால்
பின்பற்றப் படும் சீக்கிய மதமும் இஸ்லாம் மதத்தைப் போன்றே
தன் மக்களின் சிந்தனையை விலங்கிட்டு வைத்து இருக்கிறது.
எனவே சீக்கியர்கள் நடுவில் இருந்து நாத்திகம் பிறப்பது
முயல் கொம்பே. சீக்கியர்களில் முதல் நாத்திகர் பகத் சிங்.
கடைசி நாத்திகரும் அவரே.

இந்து மதம் தனக்கென ஒரு இறுக்கமான கட்டமைப்பைக்
கொண்டிராத ஒரு மதம். மேலும் கோட்பாட்டு ரீதியாக
நாத்திகம் இந்து மதத்தின் ஒரு பிரிக்க இயலாத கூறாக
உள்ளது. தனி மனிதனின் மீதான மதத்தின் பிடி, மிக மிகத்
தளர்வாக அல்லது அறவே இல்லாத மதம் இந்து மதம்.

பௌத்தம் ஒரு நிறுவனமயமான மதமாக ஆன பிறகும்
கூட, பிற நிறுவனமயமான மதங்களான கிறித்துவம் இசுலாம்
போல, மக்கள் மீதான தன் பிடியை இறுக்கவில்லை.
தாராளப் போக்குகளைக் கொண்ட ஒரு லிபரல் மதம்தான் அது.

இந்தியச் சூழலில் பௌத்தம் சமணம் ஆகிய மதங்கள் இந்து
மதத்தின் கிளைகள் போலவே செயல்படுகின்றன. பௌத்தரான
ராஜபக்சே திருப்பதிக்கு வந்து அங்குள்ள இந்துக் கடவுளான
வெங்கடேசப் பெருமாளை வணங்கிச் சென்றது இங்கு நினைவு
கூரத் தக்கது.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் தவிர்க்க இயலாத
ஒரு விளைவு, முன்னேறிச் சிந்திக்கும் மக்களுக்கு (those who
can think ahead of the society)   கடவுள் மீதான நம்பிக்கையை
இழப்பதற்கான வாய்ப்பைத் தருகிறது என்பதாகும்.  

1) அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அசுரத்
தனமான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி
2) மேற்கூறிய அறிவியல் வளர்ச்சியானது மானுடத்தின்
சிந்தனையைக் கவ்விப் பிடித்திருக்கும் இறுக்கமான
விலங்குகளை உடைத்தெறிந்து, மானுட சிந்தனையின்
கதவுகளை விசாலமாகத் திறந்து வைத்தமை
3) அமெரிக்க ஐரோப்பிய சமூகங்களில் நிலப்பிரபுத்துவம்
முற்றிலுமாகத் தகர்க்கப் பட்டு, மக்களின் பங்கேற்புடன்
கூடிய முதலாளித்துவ ஜனநாயகம் மலர்ந்தமை

மேற்கூறிய மூன்று காரணிகளும் அமெரிக்க ஐரோப்பிய
சமூகத்தில், மக்களின் மீதான கிறித்துவத்தின் பிடி
தளர்ந்தமைக்கும் நாத்திகம் பரவலாக ஏற்கப் படுவதற்குமான
காரணிகளில் சிலவாகும்.

மன்னராட்சி, ராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகார ஆட்சி
நடக்கும் இசுலாமிய நாடுகளில், ஐரோப்பிய நாடுகளைப்
போன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியோ அல்லது
முதலாளித்துவ ஜனநாயகமோ ஏற்பட வில்லை. எனவே
இயல்பாக அந்நாடுகளில் நாத்திகம் முளைவிடவே
இல்லை.

மதமும் கடவுளும் அதன் உச்சாணிக் கொம்பில் சகல
அதிகாரத்துடன் அதாவது முற்றிய சர்வாதிகாரத்துடன்
ஆட்சி நடத்திய காலம் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் மட்டுமே,
நிலப்பிரபுத்துவம் தகர்க்கப்பட்டு அதன் சாம்பலில்
முதலாளித்துவ சமூகம் உருவானது என்பது நாத்திகம்
முகிழ்ப்பதற்கு ஏதுவான சூழலைத் தந்தது.

முதலாளிய சமூகம் என்னும் நாற்றங்காலில் நடப்பட்ட
நாத்திக நாற்றுக்கள், அறிவார்ந்த சோஷலிச சமூகம் 
என்னும் வயலில் பிடுங்கி நடப்ப்படும்போது, பயிர்
செழிக்கும்.

நிற்க. மேற்கூறிய கருத்துக்கள் யாவும் சமகால
சமூகத்தைப் பொருள்முதல்வாத நோக்கில் ஆராயும்
எவரும் வந்தடைகிற முடிவுகளே. இக்கருத்துக்கள்
யாவும் அடுத்து எழுதப்போகும் ஒரு கட்டுரையின்
பீடிகைகளே. அடுத்த கட்டுரை தமிழகச் சூழலில்
நாத்திகம் என்ற தலைப்பில் அமையும்.

குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்களும் போலிப்
பகுத்தறிவுவாதிகளும் குருட்டு நாத்திகர்களும்
நிறைந்துள்ள ஒரு சமூகச் சூழலில் தமிழ்நாட்டில்
நாத்திகமும் அதன் எதிர்காலமும் என்பது குறித்து
பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் விளக்கப் பெறும்.
******************************************************************  
     
   
 

    
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக