வெள்ளி, 13 நவம்பர், 2015

பிற்பட்ட ஜாதி ஏழை மாணவன்
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் மாநில முதலிடம்!
பார்ப்பனர்களை வென்று ஐ.ஐ.டி.யைக் கைப்பற்றிய
சூத்திர மாணவர்களை வரவேற்போம்!
--------------------------------------------------------------------------------
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார் பெரியார்.
ஆனால் மானமும் அறிவும் இல்லாத, மூளை முழுவதும்
தாழ்வு மனப்பான்மை நிரம்பி வழிகிற, சிலர்
சமூகத்தைப் பல நூற்றாண்டுகள் பின்னுக்குத்
தள்ளுகிற பிற்போக்குக் கருத்துகளைத் தொடர்ந்து
பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.

"ஐ.ஐ.டி.லல்லாம் நாம சேர முடியுமா? அது
பிராமின்சுக்குன்னு உண்டானது. நம்ம பசங்கல்லாம்
அந்தப் பரீச்சைல பாஸ் பண்ண முடியாது.
அதுக்கெல்லாம் நெறய மூள வேணும்.
ஏதாவது ஆர்ட்ஸ் குரூப்ல சேத்து விட்டா நம்ம பசங்க
பாஸ் பண்ணுவாங்க..அக்கவுன்டன்சி குரூப் நல்ல குரூப்.
அதுல சேத்து விடுங்க பசங்கள"

இப்படிப்பட்ட அறிவுரைகளை வழங்கி பல சூத்திர பஞ்சமப்
பெற்றோர்களுக்கு தவறான வழிகாட்டி, பல பிற்பட்ட
தாழ்த்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை இருட்டில்
தள்ளிய புண்ணியவான்கள் தமிழ்நாட்டில் நிறைய உண்டு.

ஆனால் உண்மை இதற்கு நேர்மாறாக இருக்கிறது.
ராகேஷ் ரஞ்சன் நாயக் என்ற 18 வயது மாணவன் ஐ.ஐ.டி
நுழைவுத் தேர்வில் (JEE Advanced 2012) அகில இந்திய அளவில்
154ஆவது RANK எடுத்துள்ளான். OBC மாணவர்களில் 18ஆவது
RANK எடுத்துள்ளான். மேலும் ஓடிஸா மாநிலத்தில்
தேர்வில் வென்ற  240 பேரில் முதல் இடம் பெற்றுள்ளான்.   
இதற்காக ஓடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அவனைப்
பாராட்டி உள்ளார்.

இம்மாணவன் பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவன். இவனின்
தந்தை பெட்டிக்கடை வைத்துப் பிழைப்பவர். படிப்பறிவு
இல்லாதவர். ஐ.ஐ.டி. பற்றியோ தன்  மகனின்  கல்வி
பற்றியோ எவ்வித அறிவும் இல்லாதவர்.

ஐ.ஐ.டி என்பது தந்தக் கோபுரம் என்றும், வாயில் வெள்ளிக்
கரண்டியோடு பிறந்த பார்ப்பனர்களுக்கு மட்டுமே அங்கு இடம்
கிடைக்கும் என்றும் அறியாமை காரணமாகவும் தாழ்வு
மனப்பான்மை காரணமாகவும் சிலர் சூத்திரப் பிள்ளைகளின்
எதிர்காலத்தைப் பாலைவனம் ஆக்குகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை அறிந்த பின்னராவது இப்படிப்
பட்டவர்கள் திருந்த வேண்டும்.

ஐ.ஐ.டி.யில் சேரும் மாணவர்கள் அனைவரும்
மேட்டுக்குடியினர் என்று அடுத்ததாக இன்னொரு
பொய்யையும் இந்த தாழ்வு மனப்பான்மை கோஷ்டியினர்
பரப்பி வருகின்றனர். இதுவும் அப்பட்டமான பொய்யே.
இடஒதுக்கீட்டில்  சேரும் OBC, SC, ST மாணவர்களில்
90 சதம் மாணவர்கள் ஏழ்மையான மற்றும் நடுத்தர
வருவாய்ப் பிரிவினரே. அதே போல், பொதுப்போட்டியில்
சேரும் மாணவர்களிலும் பெரும்பாலோர் எளிய நடுத்தர
வர்க்கப் பிரிவினரே.

கோடி கோடியாய்ச் சொத்து சேர்த்து வைத்திருக்கின்ற,
சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருக்கின்ற
அரசியல்வாதிகளில் எவரேனும் தங்கள் பிள்ளைகளை
ஐ.ஐ.டி.யில் சேர்த்து இருக்கிறார்களா? லல்லு பிரசாத்
யாதவ் தம் இரு மகன்களையும் எம்.எல்.ஏ.க்கள்
ஆக்கி இருக்கிறாரே தவிர இஞ்சீனியர் ஆக்கவில்லை.

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் எல்லாம் ஐ.ஐ.டி.யில்
படித்தால், அப்போது சொல்லலாம் அதில் மேட்டுக்குடிச்
சீமான்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று.

எனவே, தாழ்வு மனப்பான்மை கோஷ்டியினரே, அருள்
கூர்ந்து உங்களின் பொய்மூட்டையை அவிழ்க்க வேண்டாம். 
சூத்திரப் பிள்ளைகளின் எதிர்காலத்தை இருட்டாக்க
வேண்டாம் என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.
------------------------------------------------------------------------------------------------
 


    
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக