திங்கள், 25 ஜூலை, 2016

அடையாள அரசியல் சார்ந்த எதிர்ப்பு
மூடத்தனமானது! பயனற்றது!!
புதிய கல்விக் கொள்கை 2016!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
தேசிய கல்விக் கொள்கை இன்னும் மக்களைச் சென்றடையவில்லை. யானை பார்த்த குருடர்களைப்
போல, பலரும் அதன் ஒட்டு மொத்தத் தன்மையை
விட்டு விட்டு, ஒரு சில முக்கியத்துவம் குறைந்த
அம்சங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டு
இருக்கிறார்கள். அதன் மீதான எதிர்ப்பும் கூட,
மிகவும் சிறுபிள்ளைத் தனமானதாகவும்,
பிற்போக்கான அடையாள அரசியல் சார்ந்ததாகவுமே
இருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையை அதன் பொருளாதார
அரசியல் அம்சங்கள் சார்ந்து எதிர்ப்பது என்ற
பேச்சுக்கே இந்தியாவில் இடமில்லை என்று
தோன்றுகிறது. பின்நவீனத்துவத்தால் வளர்த்து
எடுக்கப்பட்ட அடையாள அரசியலானது சர்வ
வியாபகமாய் இருப்பதால் நேரிடும் தீவினை இது.

இந்நிலையில் சென்னையில் நேற்று (24.07.2016)
நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை குறித்த
ஒரு கருத்தரங்கில் நியூட்டன் அறிவியல் மன்றமானது
புதிய கல்விக் கொள்கையின் ஏகாதிபத்தியப்
பின்னணி குறித்தும், லாப நோக்குடன், கோடிகள் புரளும்
இந்திய உயர்கல்விச் சந்தையைக் கைப்பற்றத்
திட்டமிடும் WTOவின் திட்டங்கள் குறித்தும்,
அதற்கு உடந்தையாக இருப்பதற்கென்றே
உருவாக்கப் படும் புதிய கல்விக் கொள்கை
குறித்தும் அகல்விரிவானதும் ஆழமானதுமான
ஒரு விளக்கத்தை முன்வைத்தது.

ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் என்கிற
அளவில் சொற்பொழிவு நீண்டது.  எதிர்பார்த்த
அளவு கூட்டம்  வரவில்லை. என்றாலும், புதிய
கல்விக் கொள்கை குறித்த முழுநிறைவான
பார்வையை, தமிழ்ச் சமூகத்தில் முதன் முறையாக
முன்வைத்தது நியூட்டன் அறிவியல் மன்றமே
என்பது குறிப்பிடத் தக்கது. 
******************************************************************


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக