திங்கள், 11 ஜூலை, 2016

பெருமாள் முருகனைப் பாராட்டும்  தீர்ப்பு!
==============================================
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சென்னை
உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
"ஒரு புத்தகம் உங்களுக்குத் பிடிக்காவிட்டால்,
அதைத் தூர எறிந்து விடுங்கள், அதைப்
படிக்காதீர்கள்" என்கிறார்கள் நீதியரசர்கள்.

இக்கட்டுரை பெருமாள் முருகனை ஆதரித்தோ
எதிர்த்தோ எழுதப்படுவது அல்ல. ஆதரவு-எதிர்ப்பு
என்ற பைனரி நிலையைத் தாண்டி, மக்கள் பக்கம்
நின்று உண்மை நிலையை எடுத்துரைப்பது.

எனவே இக்கட்டுரை குட்டி முதலாளித்துவ நுனிப்புல்
வாசகர்களுக்கானது அல்ல. ஒரு கட்டுரையின்
சாரத்தை, அதன் அடிநாதத்தை  ஒருபோதும்
நுனிப்புல் வாசகர்களால் புரிந்து கொள்ள இயலாது.
அவர்களால் இயல்வதெல்லாம் பிறழ்புரிதலை
வந்தடைவதே.

எனவே இக்கட்டுரையின் இரண்டாம் மூன்றாம்
பத்திகளில் கூறியவற்றை மீண்டும்
வலியுறுத்துகிறோம்.

அ) பெருமாள் முருகன் சிற்றிதழ் வாசகர்களுக்கு மட்டுமே
அறிமுகமான ஒரு குட்டி முதலாளித்துவ எழுத்தாளர்.

ஆ) பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்குப் பெரிதும்
ஆட்பட்டவர்.பின்நவீனத்துவம் கூறும்
கழிபெருங்காமத்தை தம் எழுத்துக்களில் வடிப்பவர்.

இ) கழிபெருங்காமம் சமூகத்தில் அன்று இருந்தது;
எனவே இன்றும் இருப்பதில் தவறில்லை என்று கூறி
அதை நியாயப்  படுத்துவதற்கென்று அவர் எழுதிய
நாவல்தான் மாதொருபாகன். 

ஈ) இந்த நாவலை எழுதுவதற்காக, ஏகாதிபத்திய
தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடம் இருந்து
பெருந்தொகையை அன்பளிப்பாக பெருமாள்
முருகன் பெற்று இருக்கிறார். இதை அவரே
ஒப்புக் கொண்டும் இருக்கிறார். 

ஆக, இவை இந்த நாவல் குறித்தும் பெருமாள்
முருகன் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டிய
அடிப்படையான செய்திகள்.

மேற்கூறிய நான்கு அம்சங்களில் நான்காவது
அம்சமான ஏகாதிபத்திய ஏவலர் (imperialist agent)
என்பதுதான் பெருமாள் முருகன் யார் என்பதைத்
தீர்மானிக்கக் கூடிய அம்சம்.

ஆனால் பெருமாள் முருகன் ஆதரவாளர்கள்-
எதிர்ப்பாளர்கள் இரு தரப்பினருமே இந்த
நான்காவது அம்சத்தைக் கண்டுகொள்ளவே
இல்லை என்பது இரு தரப்பினருமே
நுனிப்புல்லாளர்கள் என்பதை உறுதி செய்கிறது.

அடுத்து இந்தக் கட்டுரையாளரைத் தவிர வேறு
எவரும் பெருமாள் முருகனின் பின்நவீனத்துவச்
சிந்தனைப் போக்கு குறித்து அலட்டிக் கொள்ளவே
இல்லை. ஏனெனில் பின்நவீனத்துவம் குறித்தும் 
அதன் நுண்ணரசியல் குறித்தும் சமூகத்தில் அது
ஏற்படுத்தும்  பாரதூரமான எதிர்மறை விளைவுகள்
குறித்தும் தமிழ்ச் சமூகத்தில் குறைந்தபட்ச
விழிப்புணர்வு கூட இல்லை.

வாளை உருவிக் கொண்டு பெருமாள் முருகனை
எதிர்க்கும் ஆடிட்டர் குருமூர்த்தி கூட, தமது
கட்டுரைகளில் பெருமாள் முருகன் ஒரு
பின்நவீனத்துவர் (post modernist) என்ற
உண்மையைப் போகிற போக்கில் கூட சுட்டிக்
காட்டவில்லை. ஆடிட்டரின் CA பாடத்திட்டத்தில்
பின்நவீனத்துவம் இல்லை என்பதாலா?

பெருமாள் முருகனை ஆதரித்து வரிந்து கட்டிக்
கொண்டு நிற்கும் தமுஎகச தலைவர் தமிழ்ச்
செல்வன் போன்றோரும் கூட, பெருமாள் முருகனின்
பின்நவீனத்துவச் சார்புகளைக் கண்டு
கொள்ளவில்லை.

காரணம் என்னவெனில், தமுஎகசவின்
எழுத்தாளர்களில் பலர் பின்நவீனத்துவத்தை
ஆதரிப்பவர்களே. பின்நவீனத்துவம் என்பது
மார்க்சியத்துக்கு எதிரான தத்துவம் என்று
வாசகர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் தமுஎகச எழுத்தாளர்களுக்கும் கூடவா
தெரியாது?

அடுத்து நீதியரசர்கள். இந்தியாவின் நீதியரசர்கள்
அனைவருமே குட்டி முதலாளித்துவ அல்லது
மேல்நடுத்தர வர்க்கப் பின்னணியில் இருந்து
வந்தவர்கள். இவர்களில் எவருக்குமே வலுவான
சித்தாந்தப் பின்னணி கிடையாது. இவர்களில்
சிலர் வலதுசாரி மனப்பான்மையும் மிகப்
பெரும்பாலோர் லிபரல் பூர்ஷ்வா மனப்பான்மையும்
உடையவர்கள்.

மேலும் லஞ்ச ஊழல், நிதி முறைகேடுகள், பாலியல்
ஒழுக்கக்கேடு ஆகியவற்றில் சிக்கியுள்ள
பெரும்பாலான நீதிபதிகள், தங்கள் மீதான
குற்றச்சாட்டுகள் என்றேனும் சந்திக்கு
வருமேயானால், அவற்றில் இருந்து தப்பிக்கவும்,
தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் இதுபோன்ற
கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவான (!) தீர்ப்புகளை
வழங்குவதன் மூலம் தங்களுக்குப் பாதுகாப்புத்
தேடிக் கொள்கிறார்கள். தங்களுக்கான ஆதரவுத்
தளத்தை சமூகத்தில் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இந்திய சமூகத்தில் கருத்துருவாக்கம் செய்ய வல்ல
லிபரல்களின் ஆதரவைப் பெரும் பொருட்டே
இத்தகைய தீர்ப்புகளை மேதகு நீதியரசர்கள்
வழங்குகிறார்கள். ஆனால் இது தெரியாத
எழுத்தாளர் ஜெயமோகன் இந்திய நீதித்துறையின்
குலத்தொழிலே முற்போக்கான (!) தீர்ப்புகளை
வழங்குவதுதான் என்று சிலாகிக்கிறார்.
Is he so naive to believe so, one wonders!

மொத்தச் சமூகமுமே பெருமாள்முருகன்
ஆதரவு-எதிர்ப்பு என்று இரண்டாகப் பிரிந்து
கிடப்பது தமிழர்களின் தத்துவ வறட்சியை
எடுத்துக் காட்டுகிறது. யானை பார்த்த
குருடர்களின் கருத்துக்களாகவே இவர்கள்
அனைவரின் கருத்துக்களும் அமைகின்றன.
----------------------------------------------------------------------------------
தொடரும்
-----------------------------------------------------------------------------------

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக