ஸார்த்தர்
அல்தூசர்
ஃபூக்கோ
காஃப்கா
காமு
வருவதும் போவதுமாய் இருக்கிறார்கள்.
உதட்டுக் கங்குகளின் புகை
30 X 20 அரங்கை மூழ்கடிக்கிறது.
பிரகடனங்களின் ஓசை
100 டெசிபெல்லை எட்டுகிறது.
மேல் தாவணி துறந்த
அரிவை தெரிவைகளின்
மயிர் சிரைத்த
அல்குல்கள் வளர்கின்றன
கதையாடலின் உச்சத்தில்.
ஜட்டி அணிந்த மற்றும் அணிந்திராத
எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டுகள்
வழித்தெறிந்த சுக்கிலம்
குறுந்தொலைவில் நடந்து செல்லும்
ஒரு சர்ரியலிச ஓவியனின்
தூரிகையை நனைக்கிறது.
ரூபம் கொண்ட கூரை முகில்களின்
அட்சதை உதிரிப்பில்
குறிப்பான் - குறிப்பீடு
லிங்கமும் காயடிப்பும்
ஆசிரியனுக்குக் கருமாதி
இன்ன பிற.
விவாதத்தைத் தொடங்கி வைத்த கடவுள்
அமர்வு முடியுமுன்னே
இறந்து விடுகிறார்.
தரைச் சிதறலில்
பிளந்த மயிர்கள்
சொல் மீது வழுக்கி விழுந்த அர்த்தங்கள்
மற்றும்
எல்லையின்மையின் எல்லையின்மைகள்
சுப மங்களம்
--------------------------------------------------------------------------------------
தோடுடைய செவியன்களின் மெய்த்தேட்டம்
மார்க்சியம்
லெனினியம்
பெரியாரியம்
தலித்தியம்
பின் நவீனத்துவம்
முன் புராதனத்துவம்
அங்காடிப் பேழைகளில்.
போங்கடா மயரான்களா
என்று ஆரோகணிக்கின்றான்
நுகர்வியப் புரவி மீது
ஒற்றைக் கடுக்கன் அணிந்த
காண்ட்டம்ப்ரரி டமில் யூத்
தொடர்கின்றன மேலும் புரவிகள்.
--------------------------------------------------------------------------------------
கொடுப்பினை
கடக்கும் ஒவ்வொரு முறையும்
பூ வாங்கக் கூறுகிறாள்
அந்த இளம் பூக்காரி
விலைக் குறைவை உணர்த்தி
வற்புறுத்துகிறாள்
சூட்டுவதற்குக் கூந்தல்
இல்லாத துயரை
அவளிடம் எப்படிச் சொல்வேன்?
--------------------------------------------------------------------------------------
புலனடக்கம்
ஓசைகளும் உறைந்து விடும்
ஒரு பனிக்காலப் பின்னிரவில்
தொலைதூர நகரத்தின் விடுதி அறையில்
துணை பிரிந்த தனிமை வெடவெடக்க
விரகம் கொப்பளிக்கும் என் தேகம்
துயிலைத் துரத்தும்.
அல்குல்கள் வாடகைக்கு விடப்படும்
இடம் சேரும் வினைத்திட்பத்துடன்
தாழ் திறக்கையில்
தாள்கள் படபடத்துக்
கவனம் கலைக்கும்
மகாத்மா காந்தியின்
‘On Continence'.
--------------------------------------------------------------------------------------
மதமாற்றம்
பாளையங்கோட்டைச் சிறையில்
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கும்
ஆயுள் கைதி ஆறுமுகச்சாமி
இளைப்பாறுதல் வேண்டி
வேலூர்ச் சிறைக்கு
மாறி விட்டான்
ஆமென்.
--------------------------------------------------------------------------------------
சிற்றில் சிதைத்தல்
என் கரம் பற்றி நடக்கிறாய்
கடைத்தெரு வெங்கும்.
உரிமையுடன் கடிந்து கொள்கிறாய்.
அவ்வப்போது என் தோளில்
உன் பூங்கரம் பதிக்கிறாய்.
கட்டளை இடுகிறாய்
கொத்தடிமையாய்
உனக்குச் சேவகம் செய்வதில்
பெருமிதம் பொங்குகிறாய்.
பிச்சிப்பூ இரண்டு முகம்
வாங்க எத்தனிக்கையில்
பைத்தியமா உங்களுக்கு
ஒரு முழம் போதும் என்கிறாய்.
கச்சு
விளிம்புகளில் வெளித்தெரிவதை உணர்ந்து
ரவிக்கையைக் கீழே இழுத்து விடுமாறு
கிட்டத்தில் வந்து கிசுகிசுக்கிறாய்.
பிற ஆடவரின்
பொறாமை என் மீது படர
தூக்கலான அந்நியோந்நியத்துடன்
தொழிற்படுகிறாய்.
இவ்வளவு கொடுத்து வைத்தவனா நான்!
வியக்கிறேன்.
ஒரு மின்னல் பொழுதில்
குரூரமான யதார்த்தம்
யாவற்றையும் துடைத்தெறியக்
கனவு கலைகிறேன்.
--------------------------------------------------------------------------------------