சனி, 31 ஜனவரி, 2015

வின் தொலைக்காட்சியில் விவாதம்
------------------------------------------------------ 
DEBATE IN WIN TV
------------------------------------- 
இன்று இரவு 31.01.2015 7.00 மணி முதல் 8.00 மணி வரை 
ஒபாமா வருகையும்  இந்திய அமெரிக்க உறவும்  
பங்கேற்பு 
-----------------
தோழர் இளங்கோ 
 தோழர் குமரேசன் (மார்க்சிஸ்ட் கட்சி) 
மற்றும் ஒரு பாஜக பிரமுகர்.

விரும்புவோர் காணலாம்.

... அன்புடன், மார்க்சிய சிந்தனைப் பயிலகம்... 

வெள்ளி, 30 ஜனவரி, 2015

காந்தியும் கோட்சேயும்!
சத்யம் தொலைக்காட்சியில் விவாதம்!
--------------------------------------------------------------- 
நாள்: இன்று 30.01.2015 இரவு 7.00 முதல் 8.00 வரை.

பொருள்: மகாத்மாவின் பங்களிப்பும் 
கோட்சேயைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்சும்!

பங்கேற்பு:
------------------- 
காங்கிரஸ், பாஜக பிரதிநிதிகளுடன்     
தோழர் இளங்கோ 

விரும்புவோர் காணலாம்!

...மார்க்சிய சிந்தனைப் பயிலகம்...........

***************************************************** 
பாளையங்கோட்டைச் சிறையில் உள்ள கைதி 
வேலூர்ச் சிறைக்கு மாறுவது போன்றதே மதமாற்றம்!
--------------------------------------------------------------------------------------- 
அதிகாரி உமாசங்கர் குறித்து 
WIN TV விவாதத்தில் முன்வைக்கப்பட்ட    
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பார்வை!
---------------------------------------------------------------------- 
1) ஆங்கிலத்தில்  CONVERT's ZEAL என்று ஒரு தொடர் உண்டு.
CONVERT  என்றால் மதம் மாறியவன். ZEAL என்றால் உற்சாகம்.
புதிதாக மதம் மாறியவன், அந்த மதத்தில் ஏற்கனவே 
இருப்பவனை விடத் தீவிரமாக இருப்பான் என்பது 
இத் தொடரின் பொருள். இத்தொடருக்குப் பொருத்தமானவர் 
உமாசங்கர்.
2) உமாசங்கரின் கிறிஸ்துவப் பிரச்சாரம், கிறிஸ்துவத்துக்கு 
மதமாற்றம் ஆகிய செயல்களில்  எங்களுக்கு அக்கறையும் 
இல்லை; ஆட்சேபமும் இல்லை.
3) ஏனெனில், மதமாற்றம் மனிதனுக்கு எந்த விடுதலையும்  
தரப்போவதில்லை.
4) பாளையங்கோட்டைச் சிறையில் உள்ள ஒரு கைதி 
வேலூர்ச் சிறைக்கு மாறிவிட்டால், அவன் விடுதலை 
அடைந்து விட்டதாகப் பொருள் இல்லை. இது போன்றதுதான் 
மதமாற்றமும்.
5) ஆனால் அவரின் மூடநம்பிக்கைப் பிரச்சாரம் ஆபத்தானது.
சமூகத்துக்குத் தீங்கு விளைப்பது. மருத்துவ விஞ்ஞானத்தால்
முடியாத நோய்களை நான் ஜெபத்தால் குணப்படுத்துகிறேன் 
என்னும் அவரின் மூடநம்பிக்கைப் பிரச்சாரம் கண்டிக்கத் 
தக்கது.
6) படிப்பறிவு இல்லாத ஏழை எளிய மக்கள், இவரின் பேச்சைக் 
கேட்ட பிறகு, தங்கள் குழந்தைக்கு நோய் வந்தால்,
டாக்டரிடம் போவதற்குப் பதிலாக ஜெபம் பண்ணப் 
போவார்கள். விளைவு குழந்தையின் உயிருக்கே ஆபத்து.
7) மராட்டிய மாநிலத்தில், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் 
இருக்கிறது. (ANTI SUPERSTITION LAW ). அங்கு போய் இவர் 
பேசுவாரானால், ஏழு ஆண்டுச் சிறை உறுதி.

*******************************************************888            
   

வியாழன், 29 ஜனவரி, 2015

ஏபெல் பரிசு பெற்ற தமிழர்!
---------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------- 
நோபெல் பரிசு பற்றி எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அந்த அளவு பிரபலம் ஆகாதது ஏபெல் பரிசு.
(ABEL PRIZE). இப்பரிசு 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 
2003 முதல் வழங்கப் பட்டு வருகிறது. 

கணிதத்திற்கு நோபெல் பரிசு வழங்கப் படுவதில்லை.
கணிதம் என்பது எல்லா அறிவியல் துறைகளிலும் 
ஊடு கலந்து நிற்கிறது என்பதால் தனியாகக் கணிதத்திற்கு 
வழங்கத் தேவையில்லை என்று நோபெல் கருதினார்.

கணிதத்திற்குப் பரிசு இல்லை என்பது ஒரு குறையாகவே 
நீடித்தது. இக்குறையைப் போக்க வந்ததே ஏபெல் பரிசு.
நார்வே நாட்டின் அறிவியல் கழகம் (ACADEMY OF SCIENCES 
AND LETTERS) என்ற அமைப்பு இப்பரிசை வழங்குகிறது.

நியல் ஹென்றிக் ஏபெல் (NIEL HENRICK ABEL)
------------------------------------------------------------------------- 
இப்பரிசு நார்வே நாட்டின் கணித அறிஞர் நியல் ஹென்றிக் 
ஏபெல் அவர்களின் பெயரால் வழங்கப் படுகிறது. 1802ஆம் 
ஆண்டில் பிறந்த இக்கணித மேதை 26 ஆண்டுகளே வாழ்ந்து 
மிக்க இளம் வயதில் மறைந்தவர். கணிதத்தில் இவரின் 
பங்களிப்புகள் அருமை. அவற்றை விவரிக்க இங்கு இடமில்லை.

DISCRETE MATHS படிக்கும் மாணவர்கள் அபிலியன் குலம்
( ABELIAN GROUP) பற்றிப் படிப்பார்கள். ABELIAN GROUP என்பது 
ஒரு COMMUTATIVE GROUP ஆகும்.உதாரணமாக, இயல் எண்களில்,
3+5=5+3 ஆகும். THIS IS COMMUTATIVE w.r.t ADDITION. இத்தகைய 
COMMUTATIVE GROUPS அபிலியன் குலங்கள் என்று அழைக்கப் 
படும். கணித அறிஞர் ஏபெல் அவர்களின் நினைவாகவே,
அவரது பெயரால் ABELIAN GROUP என்று பெயர் சூட்டப் 
பட்டுள்ளது. அபெல் அவர்களின் மகத்தான பங்களிப்புக்கு ஒரு 
சான்றே இது.
ஏபெல் பரிசு பெற்ற தமிழர் 
--------------------------------------------- 
2003 முதல் வழங்கப்பட்டு வரும் ஏபெல் பரிசை, 2007இல் 
பெற்றவர் திரு சீனிவாச வரதன். தற்போது அமெரிக்காவில் 
வாழ்ந்து வரும் இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் 
பயின்றவர். கொல்கத்தா புள்ளியியல் பயிலகத்தில்
டாக்டரேட் (Ph.D) பட்டம் பெற்றவர். PROBABILITY THEORYயில் 
இவரின் பங்களிப்புக்காக ஏபெல் பரிசு வழங்கப் பட்டது.

வானொலியில் உரை!
------------------------------------ 
ஏபெல் பரிசு குறித்து, தமிழ் வாசகர்களுக்கு, முதலில் 
அறிமுகப் படுத்தியது நியூட்டன் அறிவியல் மன்றமே.
2012, 2013 ஆண்டுகளில் சென்னை வானொலியில் 
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் தலைவர் உரையாற்றி 
உள்ளார். சீனிவாச வரதன் குறித்தும் அவ்வுரை குறிப்பிடும்.

ஆங்கில ஏடு THE HINDU சீனிவாச வரதனின் பேட்டியை 
இன்று வெளியிட்டு உள்ளது. (பார்க்க: 29.01.2015, பக்கம்: 17)
----முந்தைய பதிவு ஜனவரி 29, 2015.-----------
****************************************************************      
        
          

புதன், 28 ஜனவரி, 2015

உமாசங்கர் விவகாரம்! 
தொலைக்காட்சி விவாதம்! (WIN TV)
---------------------------------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்கிறது!
----------------------------------------------------------------------- 
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மதப் பிரச்சாரமும் 
                    (திரு உமா சங்கர் விவகாரம்)
என்ற பொருளில் விவாதம்!
வின் டிவி (WIN TV)
நாள் :இன்று  28.01.2015 புதன்
நேரம்: இரவு 7 முதல் 8 வரை    
நிகழ்ச்சித் தொகுப்பு: திரு நிஜந்தன்  

விரும்புவோர் காண்க!
.........................அன்புடன், 
.......................நியூட்டன் அறிவியல் மன்றம்....................

****************************************************************8 
பித்தகோரஸ் தேற்றத்தை ஏன் படிக்கவில்லை என்று 
எல்.கே.ஜி பையனை அடிப்பதா?
IT IS OUT OF SYLLABUS FOR HIM!
-------------------------------------------------------------------------------------
மார்க்சும் எங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் அறிக்கையில் 
உலகப் பாட்டாளிகளே ஒன்று படுங்கள் என்று அறைகூவல் விடுத்தனர். 
அந்த அறைகூவலை ஏற்று, உலகின் பல்வேறு நாடுகளிலும் 
பாட்டாளி வர்க்கக் கட்சிகள் அமைக்கப் பட்டன. அதுபோலவே  
1925இல் (அல்லது 1920இல்) இந்தியாவில் அமைக்கப்பட்ட கட்சிதான் 
கம்யூனிஸ்ட் கட்சி.
இந்தியாவில் ஆயிரம் கட்சிகள் தோன்றியும் மறைந்தும் நிலைத்தும் 
உள்ளன. ஆதி முதல் கட்சியான காங்கிரஸ் முதல், நேற்றுத் 
தொடங்கப்பட்ட ஜி.கே.வாசன் கட்சி வரை. இக்கட்சிகள் யாவும் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் அல்ல. அவ்வாறு அவை உரிமை கோருவதும் இல்லை.
இக்கட்சிகள் மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தங்கள் 
வேலைத்திட்டமாகக் கொண்ட கட்சிகள் அல்ல. எனவே அவை 
டாட்டா பிர்லா எதிர்ப்புக் கட்சிகள் அல்ல. 

சுருங்கக் கூறின், CPI, CPM, CPIML ஆகிய மூன்று கட்சிகளைத் தவிர,
இந்தியாவில் வேறு எந்தக் கட்சியும் பாட்டாளி வர்க்கத்தை 
அடிப்படையாகக் கொண்டும், கம்யூனிஸ்ட் அறிக்கையை 
வேலைத் திட்டமாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்சிகள் அல்ல.

எனவே இக்கட்சிகள், கண்டிப்பாக டாட்டா-பிர்லா-அம்பானி 
கூட்டத்தைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்.  அப்படி எதிர்க்கத் 
தவறினால் அது விமர்சனத்துக்கு உள்ளாவது இயற்கை.

மற்றக் கட்சிகள் மீது, இந்த விமர்சனத்தை வைக்க முடியாது.
ஏனெனில் அவை டாட்டா-பிர்லா எதிர்ப்புக் கட்சிகள் அல்ல. 
இவை எல்லாம் மார்க்சிய பாலபாடம்.

திமுகவின் பொருளாதாரக் கொள்கையை அறிஞர் அண்ணா, தமது 
பணத்தோட்டம் என்ற படத்தில் விளக்கி உள்ளார். ( எம்.ஜி.ஆர் 
நடித்த படம் அல்ல, அதற்கும் முந்தியது). அண்ணா திமுகவின் 
பொருளாதாரக் கொள்கையை "அண்ணாயிசம்" என்று எம்ஜிஆர் 
விளக்கினார். மதிமுகவின் பொருளாதாரக் கொள்கை 
திமுகவில் இருந்து வேறுபட்டது அல்ல. இந்த மூன்று 
திராவிடக் கட்சிகளின் கொள்கைகளும் முதலாளித்துவ 
எதிர்ப்புக் கொள்கைகள் அல்ல. 

எனவே, முதலாளித்துவ எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்டிராத 
கட்சிகளிடம் போய், "நீ ஏன் டாட்டாவை எதிர்க்கவில்லை?"என்று 
கேட்பது பேதைமையுள் எல்லாம் பேதைமை ஆகும்.

ஆக, கொண்ட கொள்கையை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள் 
என்று கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தான் கேட்க முடியும்.
கடைப்பிடிக்கத் தவறும்போது கேள்வி கேட்கவும் முடியும்.

பித்தகோரஸ் தேற்றத்தை ஏண்டா படிக்கல என்று எட்டாங்கிளாஸ் 
பையனை அடிக்கலாம். எல்.கே.ஜி பையனிடம் போய் 
பித்தகோரஸ் தேற்றத்தை ஏண்டா படிக்கல என்று அடிப்பது 
மடமை. ஏனெனில், அவனுக்கு அது அவுட் ஆப் சிலபஸ்.
OUT OF SYLLABUS!

*************************************************888888888888888888888   
    

      

செவ்வாய், 27 ஜனவரி, 2015

சாரதா நிதி நிறுவனத்திடம் ரூபாய் ஐந்து கோடி 
பெற்றுக் கொண்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு 
 அமைப்புகள் மீது விசாரணை!
-----------------------------------------------------------------------------------  
1) மமதா பானர்ஜியின் குரல்வளையை நெரித்துக் கொண்டு 
இருக்கும் சாரதா நிதி மோசடி, மேற்கு வங்க மாநில 
எல்லையைக் கடந்து தமிழ்நாடு வரை வந்து விட்டது.
2) தமிழ்நாட்டின் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் 
குழுக்கள் சாரதா நிறுவனத்திடம் ரூபாய் ஐந்து கோடி 
பெற்றுக் கொண்டதாக, CBI விசாரணையில் தெரிய 
வந்துள்ளது.
3) இது குறித்து அமலாக்கப் பிரிவு கூடிய விரைவில் 
விசாரணை நடத்த இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
4) உதயகுமார் என்ன பதில் சொல்லப் போகிறார்?
பொறுத்திருந்து பார்ப்போம்!

**************************************************************** 
ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கரின் 
மூடநம்பிக்கைப் பிரச்சாரம்!
----------------------------------------------- 
தந்தி தொலைக்காட்சிக்கு சிறப்புப் பேட்டி அளித்தார் 
அதிகாரி உமாசங்கர் ( இன்று 27.01.2015). செய்தியின் ஊடே 
ஒளிபரப்பான  இப்பேட்டியை காலை 9.30--10.00 மணிக்கு 
பார்க்க நேர்ந்தது.அடுத்தடுத்த ஒளிபரப்புகளிலும் 
இப்பேட்டி இடம் பெற்றதாகக் கேள்வியுற்றேன்.

அதிகாரி உமாசங்கர் ஆணித்தரமாகத் தமது நிலையை 
எடுத்துரைத்தார்.
1) கடவுள் நம்பிக்கை 2) கிறிஸ்துவ மத நம்பிக்கை 
3) கிறிஸ்துவப் பிரச்சாரம் 4) கிறிஸ்துவத்துக்கு மத மாற்றம் 
ஆகிய நான்கையும் தமது நிலையாகவும் தமது செயல்களாகவும் 
அவர் ஒப்புக் கொண்டார்.
இவை நான்கையும் இந்திய அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது 
( பிரிவு-19 மற்றும் பிரிவு-25இன்பிரகாரம்)  என்றும், எனவே 
தம் மீது சட்டப்படி தவறு ஏதும் இல்லை என்றும் 
உறுதிபடக் கூறினார்.   

மதமாற்றத்தை அரசமைப்புச் சட்டம் தடுக்கவில்லை 
என்று மேலும் விளக்கம் அளித்த அவர், மதமாற்றம் என்ன 
விபச்சாரமா ( BROTHEL) என்றும் வெடித்தார்.

அதிகாரி உமாசங்கர் ஒப்புக்கொண்ட மேற்சொன்ன நான்கிலும் 
சட்டப்படி எந்தத் தவறும் இல்லை. அவர் மீது ஒழுங்கு 
நடவடிக்கை எடுக்க எவ்வித நியாயமும் இல்லை. எனவே,
கிறிஸ்துவப் பிரச்சாரம், கிறிஸ்துவத்துக்கு மதமாற்றம் ஆகிய 
செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபடுவதை எதிர்ப்பதில்  
அர்த்தம் இல்லை.அது அவரின் உரிமை.

ஆனால் இத்தோடு நின்று விடாமல் மேலும் ஒன்றைக் கூறினார்.
மேற்சொன்ன பேட்டியில் அவர் கூறியது:-
------------------------------------------------------------ 
" நான் ஏசுவின் மகிமைகளைக்  கூறி ஜெபம் செய்கிறேன்.
இதன் மூலம் நோயாளிகளைக் குணப்படுத்துகிறேன்.
நான் ஜெபம் செய்து முடித்ததும் ஆஸ்த்மா நோய் மாஜிக்கைப் 
போல குணம் ஆகிறது. ஆர்த்ரைட்டிஸ் நோய் மாஜிக்கைப் போல 
குணம் ஆகிறது. மனிதனால் முடியாத, மெடிக்கல் சயன்சால்
முடியாத வியாதிகளை நான் குணப் படுத்துகிறேன்.

நான் கோஆப்டெக்சில் பணி புரிந்தபோது, ஒரு ஊழியருக்கு 
கண் பார்வை இல்லாமல் இருந்தது. ஒருவிதமான DISORDER அது.
நான் ஜெபம் செய்து முடித்ததும் அவருக்குப் பார்வை வந்து விட்டது."

இவை அனைத்தும் அவர் கூறியது ஆகும். இது எவ்வளவு 
பெரிய மோசடி! எப்பேர்ப்பட்ட பித்தலாட்டம்! மருத்துவ 
விஞ்ஞானத்தால் முடியாததை இவரின் ஜெபம் குணப் 
படுத்தும் என்றால், நாட்டில் மருத்துவமனைகள் எதற்கு?

தமிழ்நாட்டில் நிறைய மருத்துவமனைகளைக் கட்டியவர்கள் 
கிறிஸ்துவ மெஷினரிகள். ஜெபத்தால் நோய் குணமாகும் 
என்றால், பாதிரியார்கள் மருத்துவ மனைகளைக் கட்டியது ஏன்?

எனவே உமாசங்கர் செய்து வருவது கேவலமான மூடநம்பிக்கைப் 
பிரச்சாரம். முறியடிக்க வேண்டியஒன்று.
இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களிடம் அறிவியல் 
மனப்பான்மையை ( SCIENTIFIC TEMPER) வளர்க்க வேண்டும் என்று 
கூறுகிறது. அதிகாரி உமாசங்கரோ, அறிவியலுக்கு எதிராக 
மூடநம்பிக்கையை வளர்த்து வருகிறார். இது கண்டிக்கத் தக்கது.

மராட்டிய மாநிலத்தில், மறைந்த அறிவியல் போராளி 
டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் மறைவை ஒட்டி 
" மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்" என்று ஒரு சட்டம் 
பிறப்பிக்கப் பட்டது. அந்தச் சட்டத்தின்கீழ் உமாசங்கர் 
தண்டனைக்கு உரிய குற்றவாளி ஆகிறார். அதுபோன்ற 
சட்டம் தமிழ்நாட்டிலும் கொண்டு வரப் பட வேண்டும்.

அதிகாரி உமாங்கரின் மூடநம்பிக்கைப் பிரச்சாரத்தை 
முறியடிப்பதில் அறிவியல் ஆர்வலர்களும் 
பகுத்தறிவாளர்களும் தோள் கொடுக்க வேண்டும் என்று 
நியூட்டன் அறிவியல் மன்றம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
நியூட்டன் அறிவியல் மன்றம்,
சென்னை 600 094, நாள்: 27.01.2015

***********************************************************               




திங்கள், 26 ஜனவரி, 2015

தயாநிதி மாறன் குருமூர்த்தி சொற்போர் எழுப்பும் 
அறிவியல் கேள்விகள்!
------------------------------------------------------------------------------ 
வாசகர்களும் விடை அளிக்கலாம்!
-------------------------------------------------------------------------------- 
திரு மாறன் நிறுவியதாகக் கூறப்படும் ISDN இணைப்புகள் மற்றும் 
323 சர்க்யூட்கள் அடங்கிய எக்சேஞ்ச்  குறித்த ஆடிட்டர் 
திரு குருமூர்த்தியின் புகாரும் அதற்கு திரு மாறன் அளித்த 
பதில்களும் அறிவியல் சார்ந்த பல கேள்விகளை எழுப்பி 
இருக்கின்றன என்பதை வாசகர்கள் நம் கவனத்துக்குக் கொண்டு 
வந்தனர். அவற்றுள் சில கீழே.

எல்லாக் கேள்விகளையும் தொகுத்து அவற்றுக்கு 
மொத்தமாகப் பதிலளிக்க நியூட்டன் அறிவியல் மன்றம் 
விரும்புகிறது. வாசகர்களும் பதில் அளிக்கலாம்.

1) ISDN CONNECTION என்றால் என்ன?
2) ISDN என்பது 2G டெக்னாலஜியா அல்லது 3G யா?
3) ISDN PRI, ISDN PRA என்று ஊடகங்கள் அடிக்கடி 
    குறிப்பிடும் வாசகங்களின் பொருள் என்ன?
4) ISDN அதிநவீன வயர்லெஸ் சேவை என்று பேசுகிறார்களே,
    அதன் விளக்கம் என்ன?
5) ஆப்ட்டிக்கல் பைபர் கேபிள் மூலம் சன்  டி.வி அலுவலகத்துக்கும் 
    அமைச்சரின் இல்லத்துக்கும் தொடர்பு ஏற்படுத்தியதாகக் 
    கூறப்படுகிறதே, இந்த ஆப்ட்டிகல் கேபிள் என்றால் என்ன?
   இதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும்?

................... கேள்விகள்தொடரும்........ பதில்களும்தான்...........
.......நியூட்டன் அறிவியல் மன்றம் ....................................................

*********************************************************************
      
ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன!
------------------------------------------------------------------------------------------------- 
கட்டுரையின் மையக் கருத்து CPMஇன் திவால் அரசியல் பற்றியது.
தொடர்ந்து திவால் அரசியலைப் பின்பற்றி வருவதால் CPM  கட்சி 
காணாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பது உண்மை. இதை 
ஏகப்பட்ட ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் 
இக்கட்டுரை மெய்ப்பிக்கிறது. கட்டுரையின் இந்த மையக் 
கருத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூடச் சொல்ல இயலாத 
பலவீனமும் ஆற்றாமையும் சேர்ந்து குட்டி முதலாளித்துவ 
அன்பர்களை ஆத்திரம் கொள்ள வைக்கிறது.

இக்கட்டுரை சாதியம் குறித்த கட்டுரை அல்ல.அல்லது 
தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துவதில் CPM, திமுக,
அதிமுக கட்சிகளின் நடைமுறைத் தந்திரம், துணிச்சல் 
பற்றிய கட்டுரை அல்ல. கட்டுரையின் பேசுபொருள் 
இது அல்ல.

கடந்த பத்தாண்டுகளாகவே மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
செயல்பட்டு வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில், காத்திரமான 
விவாதங்களை முன்னெடுப்பதிலும் ஒருங்கிணைப்பதிலும் 
குறிப்பிடத்தக்க பங்கை ஆற்ற முடிந்தது. தலித் அறிவுஜீவிகள்,
குறிப்பான சில CPM தோழர்கள், மா.லெ தோழர்கள், மார்க்சிய 
விமர்சகர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று , பலகட்ட விவாதங்களின் 
இறுதியில், சில முடிவுகள் பெறப்பட்டன. 

இவை முடிந்த முடிவுகள் என்று நாங்கள் உரிமை கோரவில்லை.
இன்னும் ஒரு பரந்த தளத்தில் இவை விவாதிக்கப் படுவது 
சரியானது மட்டுமல்ல தேவையானது என்றும் நாங்கள் 
கருதுகிறோம்.

படித்தல் மட்டும் போதாது.
சிந்தித்தல் மட்டும் போதாது.
விவாதித்தலும் அவசியம்.
படித்தல்-சிந்தித்தல்-விவாதித்தல் என்பதன் வாயிலாகவே 
மார்க்சியத்தைக் கற்க இயலும்.     

படித்தலும் சிந்தித்தலும் தனிமனித முயற்சியால் சாத்தியமாகும்.
ஆனால் விவாதித்தலுக்குக் கூட்டு முயற்சி தேவைப் படுகிறது.  

எனவே கட்டுரையின் மையக் கருத்தான, CPM திவால் அரசியலைப் 
பின்பற்றுகிறது என்பதை மறுத்தும் எதிர்த்தும் சொல்லப்படும் 
கருத்துக்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

துரதிருஷ்ட வசமாக, காத்திரமானதும் கருத்துச் செறிந்ததும் 
ஆன  எதிர்வினைகள் வரவில்லை. வெற்றிகொண்டான்--
நாஞ்சில் சம்பத் தரத்திலான லாவணிகள் மட்டுமே வருகின்றன.
இவை பரிசீலனைக்கு உகந்தவை அல்ல.

தனக்கு உவப்பில்லாத ஒரு கருத்தை எதிர்கொள்ள நேரும்போது,
ஒரு மார்க்சியவாதி, கருத்து ரீதியாக அதற்கு எதிர்வினை 
ஆற்றுகிறான். தன்னுடைய  ËGO IS OFFENDED" என்று அவன் 
கருதுவதில்லை. ஆனால் குட்டி முதலாளித்துவவாதி தன்னுடைய 
EGO IS OFFENDED என்று கருதி ஆத்திரத்துடன் எதிர்வினை 
ஆற்றுகிறான்.

முகநூல் என்பது குட்டி முதலாளித்துவக் குறைகுடங்கள்
கூத்தாடும் இடம்தான் என்றாலும் அங்கும் சில காத்திரமான 
விவாதங்கள் நடைபெறுகின்றன என்று சில ஆதாரங்களைக் 
காட்டினார் நண்பர். எனவே, நாடாளுமன்றப் புறக்கணிப்பு 
போல, முகநூல் புறக்கணிப்பு வேண்டாம்  என்று 
அறிவுறுத்தினார் நண்பர்.   

காத்திரமான விவாதங்களில் பங்கேற்கவல்ல முதிர்ச்சி உடைய 
ஒரு குழாமை( A GROUP ) அமைக்க முயற்சி செய்யுங்கள் 
என்று கேட்டுக் கொண்டார் நண்பர்.

இறுதியாக ஒரு சொல்!
IS THE POLITICS OF CPM BANKRUPT OR NOT?
WE INVITE MEANINGFUL RESPONSES BOTH FOR AND AGAINST.
THAT IS ALL.

பி இளங்கோ சுப்பிரமணியன் 
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் சார்பாக.  
  
*************************************************************       

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

குட்டி முதலாளித்துவ வாசகர்களின்  
சொற்காமுகமும் ( PHRASE MONGERING)
-------------------------------------------------------------
CPM கட்சியின் சந்தர்ப்பவாதம் தமிழக அரசியலில் 
நீண்ட வரலாற்றைக் கொண்டது. நெருக்கடி நிலையின்போது 
தமிழ்நாட்டில் திமுக, திக, ஆர்.எஸ்.எஸ், மார்க்சிஸ்ட் 
ஆகிய கட்சிகள் கடுமையாக ஒடுக்கப் பட்டன. மக்களுக்குத் 
துரோகம் செய்து, CPI  கட்சியும் அதிமுகவும் நெருக்கடி நிலையை 
ஆதரித்தன. எம்.ஜி.ஆர் பட்டவர்த்தனமாக நெருக்கடி நிலையை 
ஆதரித்தார்.
நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டு, 1977இல் 
தேர்தல் நடைபெற்றது இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி 
நெருக்கடி நிலையை ஆதரித்த அதிமுகவுடன் கூட்டணி 
வைத்தது. இது கட்சி அணிகளிடையே பெரும் கொந்தளிப்பை 
ஏற்படுத்தியது.கட்சியை விட்டுப் பலர் விலகினர். (அப்போது 
கட்சியில் இருந்த இக்கட்டுரையாளர், தோழர் பி.ஆர்.பி 
அவர்களிடமே சண்டை போட்டார்.) 

இது சந்தர்ப்பவாதமா இல்லையா? இதை நியாயப் படுத்த இயலுமா/
இதைக் கூறினால் திமுக ஆதரவு என்று கூறுவதா?
எவ்வளவு பேதைமை!

திராவிட இயல் சித்தாந்தம் பாட்டாளி வர்க்க சித்தாந்தம் 
அல்ல. அது அடையாள அரசியலையும் தன்னுள்  ஒரு பகுதியாகக் 
கொண்டது.மார்க்சியம் வர்க்க சித்தாந்தம்;அதில் அடையாள அரசியலுக்குப் 
பெரிதான இடம் இல்லை.

இக் கட்டுரை ஒரு மார்க்சியப் பகுப்பாய்வு. திராவிட இயல் 
கட்டுரை என்றால் அது வேறு மாதிரி இருக்கும். முற்றிலும் வேறுபட்ட இடத்தில் வேர் கொண்டிருக்கும். இந்த வேறுபாட்டைப் புரிந்து 
கொள்வது, கட்டுரையைப் புரிந்து கொள்ள உதவும்.  

குட்டி முதலாளித்துவ நுனிப்புல் வாசகர்கள், எல்லாவற்றையும் 
எளிமைப் படுத்திப் புரிந்து கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் 
எளியவொரு சூத்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் வாழ்க்கை 
அவ்வாறு இல்லை. அது மிகவும் COMPLEX ஆக உள்ளது.
எந்த ஒன்றுக்கும் நேர்கோட்டுப் பாதை இல்லை.ZIGZAG ஆக உள்ளது.

இது புரியாமல் கு.மு வாசகர்கள், கட்டுரையாளர் திமுகவை 
ஆதரிக்கிறார் என்று சுலபமாக முடிவுக்கு வருகிறார்கள்.

கட்டுரையின் மையக் கருத்துக்கு எதிராக ஒரு உதாரணமோ 
அல்லது விஷயம் அடங்கிய ஒரு வாக்கியமோ கூற இயலாத 
வெறுமை காரணமாக, கு.மு அன்பர்கள் சொற்காமுகத்தில் இறங்கி 
விடுகிறார்கள்.  

கட்டுரை ஜெயா -CPMஇன் இறுக்கமான பிணைப்பை ஏகப்பட்ட 
ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறது. CPM கட்சியின் வர்க்க 
அடித்தளத்தை ஆதாரத்துடன் அம்பலப் படுத்துகிறது.

இது தவறு என்றால், கு.மு அன்பர்கள் இதை DISPROVE செய்ய 
வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்பதால் 
கட்டுரையின் சாரம் சரியானது என்பது மீண்டும் 
நிரூபிக்கப் படுகிறது. 

 *************************************************88.  
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலும் 
மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுவதன் ரகசியமும்!
-------------------------------------------------------------------------------- 
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------------------------- 
முன்குறிப்பு-1:
----------------------
இக்கட்டுரை விவாதங்களைத் தேவையற்றதாக ஆக்கும் 
ஆய்வுக் கட்டுரை. (THIS IS NOT ON POLEMICS BUT BASED 
ON UNASSAILABLE EVIDENCE SUPPORTED BY DATA ANALYSIS)  

முன்குறிப்பு-2:
--------------------- 
எனினும் காத்திரமான எதிர்வினைகள் வரவேற்கப் படுகின்றன. 
-------------------------------------------------------------------------------------------------- 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவை முன்னறிவிக்க 
ஒரு செபாலஜிஸ்ட் தேவையில்லை. அதிமுக அமோக 
வெற்றி பெறும். திமுக இரண்டாம் இடத்தைப் பெறும். 
பாஜகவும் மார்க்சிஸ்ட்டும் டெப்பாசிட் இழக்கும்.

தோராயமாக 35000 வாக்குகளைப் பெற முடிந்தால்,
பாஜக டெப்பாசிட் பெறும்.(ONE SIXTH OF THE POLLED VOTES
SECURES A PARTY ITS DEPOSIT). அப்படிப் பெற்று விட்டால்,
பாஜகவைப் பொறுத்த மட்டில் அது இமாலய சாதனை.

திருமங்கலம் முதல் ஏற்காடு வரையிலான இடைத் தேர்தல்கள் 
தமிழக அரசியல் கட்சிகளுக்கு, மறக்க முடியாத ஒரு 
படிப்பினையை வழங்கி இருக்கின்றன. எனவேதான், காங்கிரஸ்,
பாமக, மதிமுக, வாசனின் தமாக, தேமுதிக, புதிய தமிழகம் 
உள்ளிட்ட பல கட்சிகள் ஒதுங்கிக் கொண்டு விட்டன.

தேர்வுக்கு முன்பே, வினாத்தாள் வெளியாகி, அது கையிலும் 
கிடைத்து விட்ட மாணவனைப்போல் மகிழ்ச்சியுடன் 
தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக. மற்றக் கட்சிகளின் நிலை 
அவ்வாறல்ல. 

பொதுவாக, ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்து விட்டால்தான் 
இடைத்தேர்தல் வரும். ஆனால்  ஸ்ரீரங்கம் தேர்தல், பதவியில் 
இருக்கும் முதல்வர் பதவி இழந்ததால் வருகிறது. அதிமுகவைப் 
பொறுத்த மட்டில், இது முதல்வரின் தொகுதிக்கான இடைத் 
தேர்தல். எனவே, HIGHLY PRESTIGIOUS.

ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு வார்டு என்று ஒதுக்கப்பட்டு,
இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இலக்கு தவறினால்  சீட்டுக் கிழிவது நிச்சயம். எனவே, அமைச்சர்கள் ஒருவித KILLER INSTINCT
உடன் களப்பணி ஆற்றுகிறார்கள். இந்தச் சந்தை இரைச்சலிலும் 
வெள்ளமாய்ப் பெருகும் கரன்சி மழையிலும் நனையும் 
ஸ்ரீரங்கத்து மக்களால், நிதானமாகச் சிந்தித்துச் சீர்தூக்கிப் 
பார்த்து வாக்களிப்பது என்பதற்கான வாய்ப்பே இல்லை.

எனவே, இந்த இடைத்தேர்தல் சமநிலையற்ற ஒரு ஆட்டம்.
( A GAME AT ODDS AND NOT AT EVEN ).இதனால் பெரிதும் 
பாதிப்புக்கு உள்ளாவது சிறிய கட்சிகளே. பிரதான கட்சிகளைத் 
தவிர்த்து, போட்டியிடும் சிறிய கட்சிகளின் மெய்யான 
ஆதரவை இத்தேர்தல் முடிவு பிரதிபலிக்காது. வாக்காளர்களிடம் 
ஒருவிதமான துருவ மனநிலை (POLARISED MOOD) மேலோங்கி 
இருப்பதே இதற்குக் காரணம் ஆகும்.

பல சிறிய கட்சிகளும் போட்டியில் இருந்து ஒதுங்கிக் 
கொண்ட நிலையில், FOOLS RUSH IN WHERE ANGELS FEAR 
TO TREAD என்பது போல, மார்க்சிஸ்ட் கட்சி இங்கு போட்டி 
இடுகிறது.

ஏழு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் 
தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதி அடங்கிய திருச்சி தொகுதியில் 
போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி  வெறும் 17039 வாக்குகளை 
மட்டுமே பெற்றது. இத்தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த 
வாக்குகளை விட 5000 வாக்குகள் குறைவாகப் பெற்றது 
மார்க்சிஸ்ட் கட்சி. ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்பது 
ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே,
சராசரியாக, ஒரு தொகுதிக்கு 2830 வாக்குகள் என்பதே 
இங்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வாக்கு வங்கி.

இக்கட்டுரையுடன் புள்ளி விவரங்கள் அடங்கிய,
நான்கு இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை 
வாசகர்கள் கண்டிப்பாகப் படிக்கவும்.

ஏழு மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில், தங்களின் 
வாக்கு வங்கி எவ்வளவு என்று தெரிந்து கொண்டு விட்ட 
பிறகு, இப்போது மீண்டும் ஆதரவை அளந்து பார்க்க வேண்டிய 
அவசியம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இல்லை. அதுவும், ஒரு 
முதலமைச்சரின் தொகுதியில், இடம் பொருள் ஏவல்,
சந்தர்ப்பம், சூழ்நிலை இவற்றைக் கருத்தில் கொள்ளாமல்.

கடந்த டில்லி மாநிலத் தேர்தலில் தேமுதிக போட்டியிட்டது.
சூடுபட்டது.இதற்கும் மார்க்சிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கத்தில் 
போட்டி இடுவதற்கும் என்ன வித்தியாசம்?

வீண் பெருமைக்காகப் போட்டியிடுவதற்கு, மார்க்சிஸ்ட் 
தலைமை திமிர் பிடித்த முட்டாள்களைக் கொண்டதல்ல. 
அறிவாளிகளையும் சாணக்கியர்களையும் கொண்டதுதான் 
மார்க்சிஸ்ட் தலைமை. பின் ஏன், இப்படி ஒரு முடிவு?

இங்குதான் மார்க்சிஸ்ட் தலைமையின் திவால் அரசியலும் 
( BANKRUPT POLITICS), கட்சிக் கலைப்புவாதமும் வெளிப் 
படுகின்றன. ஜெயாவின் நல்லெண்ணத்தைப் பெறுவது 
ஒன்றே மார்க்சிஸ்ட்களின் ஒற்றை அஜெண்டாவாக உள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தலில், ஜெயாவுடன் ஒட்டிக்கொண்டு 
ஒன்றிரண்டு இடங்களைப் பெறுவது என்ற அவர்களின் 
திட்டத்துக்கு அச்சாரமாகவே, ஜெயாவைத் திருப்திப் படுத்த 
மார்க்சிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கத்தில் நிற்கிறது.

"அம்மா, பாருங்கள், நாங்கள் திமுகவுடன் இல்லை!" என்று 
உரக்கப் பிரகடனம் செய்வது ஒன்றுதான் மார்க்சிஸ்ட் 
தலைமையின் நோக்கம். இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் 
மூலம் இந்நோக்கம் சிறப்பாக நிறைவேறுகிறது.

"ஒருவேளை, இவர்கள் திமுகவுடன் போய் விடுவார்களோ"
என்ற சந்தேகம் அம்மாவின் மனதில் இருந்து நீங்கி விட்டது 
அல்லவா இப்போது! இதுதானே மார்க்சிஸ்ட் தலைமை 
விரும்பியது!

திமுகவுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி சேர வேண்டும் என்பதல்ல 
நாம் இங்கு கூறுவது. நுனிப்புல் வாசகர்களைத் தவிர, முதிர்ந்த 
வாசகர்களுக்கு இது எளிதில் விளங்கும்.

பாஜகவின் இந்துத்துவ அரசியலை ஏற்காத, அதே நேரத்தில் 
திமுக அதிமுக கட்சிகளையும் விரும்பாத, மக்கள் திரளின் 
எண்ணிக்கை தமிழக அரசியலில் அதிகரித்து வருகிறது.
இவர்களின் ஆதரவைப் பெறுவது ஒன்றுதான் மார்க்சிஸ்ட்   
கட்சிக்கு ஆக்சிஜன் ஆகும். வாசன் போன்றவர்களே இக்கூட்டத்தைக் 
குறி வைக்கும்போது, மார்க்சிஸ்ட்கள் பாராமுகம் 
காட்டுவது ஏன்?

ஜெயாவிடம் இருந்து முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டால் 
மட்டுமே, மார்க்சிஸ்ட்களால் இம்மக்கள் திரளின் ஆதரவைப் 
பெற முடியும். உண்மையில் இவ்வாறு துண்டித்துக் கொள்வது 
ஒரு அத்தியாவசியமான முன் நிபந்தனை ஆகும்.

ஆனால்,
"மீன் நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக் கோட்டம்மா நீ 
என்பால் நோக்காய் ஆகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன்"      
      ( குலசேகர ஆழ்வார், நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் )
என்பதுபோல், ஜெயா பக்தியில் மார்க்சிஸ்ட்கள் ஆழ்ந்து 
போய்க் கிடக்கிறார்கள். இது அரசியல் முக்திக்கு அவர்களை  
இட்டுச் செல்லும்.

தங்களின் திவால் அரசியலை மூடி மறைக்க, தலித் 
அட்டையை ( DALIT CARD) காட்டுகிறார்கள் மார்க்சிஸ்ட்கள்.
பொதுத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் ஒரு தலித் வேட்பாளரை 
நிறுத்தி இருக்கிறோம் என்று பம்மாத்துப் பண்ணுகிறார்கள்.
டெப்பாசிட் இழப்பது உறுதி என்ற நிலையில், மூத்த தலைவர்கள் 
போட்டியிடுவதை இகழ்ச்சியுடன் நிராகரிக்கும் நிலையில், 
ஒரு தலித் இளைஞரை நிறுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் 
தலித் ஆதரவு அந்தஸ்தை மார்க்சிஸ்ட்கள் பெற முடியாது.
தலித் மக்களையும் ஏமாற்ற முடியாது.

ராஜ்யசபா எம்.பி எனும்போது மீண்டும் மீண்டும் ரங்கராஜன் 
தான். கட்சியின் மாநிலச் செயலர் பதவி எனும்போது, 
தலித்துக்கா அதைக் கொடுக்கப் போகிறார்கள்?
மார்க்சிஸ்ட் கட்சியின் பிரபல தலைவர்களில், தலித் 
முகம் ஏதாவது உண்டா, அன்றிலிருந்து இன்று வரை?
பி. ராமமூர்த்தி, ஏ.பி,,  உமாநாத், சிந்தன், எம்.ஆர்.
வெங்கட்ராமன், பரமேஸ்வரன், சங்கரய்யா, மைதிலி 
சிவராமன், உ.வாசுகி என்று நீளும் தலைவர்களில் 
எத்தனை பேர் தலித்துகள்?

தேசியச் செயலாளர் என்னும் உயர்ந்த பதவியில், CPI 
டி.ராஜாவை அமர்த்தி இருக்கிறதே! அதுபோல், CPM இல் 
எதிர்பார்க்க முடியுமா/
( இங்கு கொடுக்கப்பட்ட புள்ளி விவர இணைப்புகளைப் 
பார்க்கவும்)     

மேற்கு வங்கத்தில் 1980களில், ஜோதிபாசு ஆட்சியில்,
பதினேழாயிரம் தலித்துகள் மரிச்சாபி என்ற இடத்தில் 
படுகொலை செய்யப் பட்டதை மறக்க முடியுமா?

தலித் விவசாயிகளின் மத்தியில், மார்க்சிஸ்ட் கட்சி 
வேலை செய்த வரலாறு உண்டா? மார்க்சிஸ்ட் கட்சியின் 
ஆதரவு அடித்தளம் நகர்ப்புற நடுத்தர வர்க்கமும், 
WHITE COLLAR பணியாளர்களும்தானே!

ஆக, மார்க்சிஸ்ட் கட்சி தலித் ஆதரவுக் கட்சியோ,
புரட்சி செய்யக் கூடிய கட்சியோ அல்ல. 

தமிழ்நாட்டில், மார்க்சிஸ்ட் கட்சி ஜெயாவின் கடைக்கண் 
பார்வைக்காக என்றென்றும் ஏங்கிக் கிடக்கும் ஒரு 
கட்சிதான். இதை இக்கட்டுரை ஐயம் திரிபற 
நிரூபித்துள்ளது, ஒரு ஜியோமெட்ரி தேற்றத்தை 
நிரூபிப்பதைப் போல.

பின்குறிப்பு:
-----------------
இத்துடன் தரப்பட்டுள்ள நான்கு புள்ளி விவர 
இணைப்புகளைப் படிக்கவும். அந்த இணைப்புகளையும் 
சேர்த்தால்தான், இக்கட்டுரை முழுமை அடையும்.

*************************************************************    
       . 


  
    

இணைப்பு-4:
--------------------- 
CPI , CPM கட்சிகளின் வாக்கு வங்கி விவரங்கள்:
2014 நாடாளுமன்றத் தேர்தல்; தமிழ்நாடு: ஓர் ஒப்பீடு! 
------------------------------------------------------------------------------------- 
1) CPI , CPM  கட்சிகள் தலா ஒன்பது  இடங்களில் 
மொத்தம் 18 இடங்களில் போட்டியிட்டன. 18 இடங்களிலும் 
தோற்றன; டெப்பாசிட் இழந்தன.

2) CPM ஒரே ஒரு தனித் தொகுதியில் போட்டியிட்டது.
 (விழுப்புரம் ).
CPI மூன்று தனித் தொகுதிகளில் போட்டி இட்டது.
( திருவள்ளூர், நாகை, தென்காசி)

3) போட்டியிட்ட 9 தொகுதிகளிலும், CPM கட்சி 
அதிக வாக்குகளைப் பெற்றது கன்னியாகுமரியில்;
35284 வாக்குகள்.

4) போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் CPI கட்சி 
அதிக வாக்குகளைப் பெற்றது நாகையில்;
ஒரு லட்சத்துக்குச் சற்றுக் குறைவான வாக்குகள்.
இங்கு  அதிமுக, திமுகவுக்கு அடுத்து வந்து 
மூன்றாவது இடத்தைப் பெற்றது CPI. பாஜக கூட்டணியின் 
பாமகவை நான்காவது இடத்துக்குத் தள்ளியது.

5) கிராமப்புறத் தொகுதிகளில் CPI கட்சியும், நகர்ப்புறத்
தொகுதிகளில்  CPM கட்சியும் தங்கள் வாக்கு வங்கியைக் 
கொண்டுள்ளன. (சொற்பமான வாக்கு வங்கிதான் )

6) தலித்துகள், விவசாயக் கூலிகள் மத்தியில், CPI கட்சி 
CPMஐ விட வலுவாக உள்ளது.

7) அலுவலகப் பணியாளர்கள் ( WHITE COLLAR OFFICE-GOERS ),
நகர்ப்புற  ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மத்தியதர 
வர்க்கத்தினர் மத்தியில் CPM கட்சி CPIஐ விட வலுவாக 
உள்ளது.

8) சுருங்கக் கூறின், ஒப்பீட்டு அளவில், தலித் வாக்கு வங்கி 
CPI  கட்சிக்கே அதிகமாக உள்ளது, CPMஐ விட.

9) IN SHORT, CPI IS STILL A PEASANT BASED PARTY
WHEREAS CPM IS MIDDLE CLASS BASED.    

************************************************************
          

இணைப்பு-3:
-----------------
இதற்குப் பெயர்தான் இறங்குமுகம்!
---------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் கட்சியின் இறங்குமுகம்:
1971 முதல் 2014 வரை பெற்றுள்ள நாடாளுமன்ற இடங்கள்:
--------------------------------------------------------------------------------------------- 
1971     25
1977     22
1980     37
1984     22
1989     33
1991     35
1996     32
1999     33
2004     43
2009     16
2014       9
--------------------------------------------------- 
ஆக, ஒற்றை இலக்கத்தில்தான் CPM கட்சி 
இடங்களைப் பெற முடிந்து உள்ளது.
மேற்கு வங்கம்-2, திரிபுரா-2, கேரளம்-5
ஆக மொத்தம் ஒன்பது.
********************************************************  
இணைப்பு-2:
---------------------- 
2014 ஏப்ரல்-மே நாடாளுமன்றத் தேர்தல்:
CPM கட்சி பெற்ற வாக்குகள், தொகுதிவாரியாக:
-------------------------------------------------------------------------- 
1. கன்னியாகுமரி      35284 
2. கோவை                    34197
3. மதுரை                       30126
4. வடசென்னை          23751 
5. தஞ்சை                       23215
6. விருதுநகர்                20157
7. திண்டுக்கல்              19455
8. விழுப்புரம் தனி       17408
9. திருச்சி                         17039

குறிப்பு-1: மேற்கூறிய ஒன்பது இடங்களில்
போட்டியிட்ட CPM கட்சி, அத்தனை இடங்களிலும் 
தோற்றது. டெப்பாசிட் இழந்தது.
குறிப்பு-2: போட்டியிட்ட ஒன்பது இடங்களிலும் 
மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றது 
திருச்சி தொகுதியில்.இங்கு நோட்டாவுக்கு 
விழுந்த வாக்குகள்: 22848. CPMக்கு நோட்டாவை 
விட 5000 வாக்குகள் குறைவு.

****************************************************88888 



   
இணைப்பு:1
-------------------- 
2014 ஏப்ரல்-மே நாடாளுமன்றத் தேர்தல்:
கட்சிகள் பெற்ற வாக்குகளும் சதவீதமும்:
மாநிலம்: தமிழ்நாடு 
-------------------------------------------------------------------
கட்சி           வாக்குகள்          சதவீதம் 
 --------          ------------------       ----------------  
அதிமுக    1,74,87,733                44.3

திமுக          92,56,923                 23.4 

தேமுதிக   20,19,796                  5.1

பாமக          17,69,970                  4.5

மதிமுக      14,16,035                  3.6

CPI                   2,15,455                  0.5

CPM                 2,06,904                  0.5

******************************************************* 
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள்
சனவரி 25
----------------------------------------------------------------------
ஆதிக்க இந்தியை எதிர்த்து
நீதிக்குப் போராடி மாண்டோர்
நினைவுக்கு நமது அஞ்சலி!

முதலாம் மொழிப்போரில் (1937) சிறை நண்ணி
உயிர்நீத்த தோழர் தாளமுத்து, தோழர் நடராசன்
ஆகிய இருவருக்கும்,
இரண்டாம் மொழிப்போரில் (1965)  உயிர் நீத்த
எண்ணற்ற தியாகிகளுக்கும் வீர வணக்கம்!

அலுவல் போனால் போகட்டும்
பிற சலுகை போனால் போகட்டும்
தலைமுறை கோடி கண்ட  
என் தமிழ் விடுதலை ஆகட்டும்.
      ---பாவேந்தர்-----

**********************************************************8

சனி, 24 ஜனவரி, 2015

ஸ்ரீரங்கம் தொகுதியில் மார்க்சிஸ்ட் போட்டி!
-------------------------------------------------------------------------- 
அதிமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து,
அதிமுகவுக்கு எதிராக, ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பைக் 
கட்டமைத்து விடக்கூடாது என்ற சீர்குலைவு 
நோக்கத்துடன் ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் போட்டி இடுகிறது.

இதன் மூலம், ஜெயலலிதாவைத் திருப்திப் படுத்தி 
விட்டோம் என்ற மனநிறைவை மார்க்சிஸ்ட் கட்சி 
பெற்று விட்டது.
***********************************************************    
குருமூர்த்தி அய்யரும் தயாநிதி மாறனும்!
---------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
----------------------------------------------------------------- 

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீராவேசம் 
தெரிகிறது குருமூர்த்தி அய்யரிடம்! தம் வீட்டின், 
மன்னிக்கவும், ஆத்தின் வரவேற்பறையில் இருந்த 
வண்ணம் ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குகிறார் 
அய்யர். வரவேற்பறைச் சுவர்களை சங்கரராமன் கொலை 
புகழ் ஜெயேந்திரரின் திருவுருவப் படம் அலங்கரிக்கிறது.
ஜெயேந்திரரின் திருவுருவப் படத்தைத் தரிசித்த கண்கள்,
அடுத்து ஆட்டோ சங்கரின் படத்தைத் தேடுகின்றன. ஒருவேளை 
புழக்கடையில் இருக்கக் கூடும், சூத்திரன் என்பதால்!

ஜெயேந்திரர், ஆட்டோ சங்கர் இருவரையும் ஒரே 
வினையால் அணையும் பெயரால் சுட்டலாம். வினையால் 
அணையும் பெயர் என்றால், செய்த செய்கையால் ஏற்படும் பெயர் 
என்று பொருள். மேலும் விளக்கம் பெற விரும்புவோர், எட்டாம் 
வகுப்பு தமிழ் இலக்கணப் புத்தகத்தை நாடலாம்.

எனினும் இவ்விருவருக்கும் ஒரு வேறுபாடும் உண்டு. 
முன்னவருக்கு "பிரம்ம  ஹத்தி" தோஷம் உண்டு.
பின்னவருக்கு தோஷம் எதுவும் கிடையாது. சூத்திர ஹத்தி 
ஒரு தோஷம் இல்லையே, மனு சாஸ்திரப்படி!

( சமஸ்கிருதம் தெரியாத சூத்திர அபிஷ்டுகளுக்காக ஒரு விளக்கம்:
 பிரம்ம ஹத்தி என்றால் பிராமணனைக் கொல்வது என்று 
பொருள். சூத்திர ஹத்தி என்றால், சூத்திரனைக் கொல்வது 
என்று பொருள்.)

 கி.பி 2007இல் சன் டிவி அலுவலகத்தில் நிறுவப்பட்ட,
கள்ளத்தனமான  ஒரு தொலைபேசி இணைப்பகத்தைத் 
தம் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட அய்யர், உடனேயே 
அதுபற்றி எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. நான்கு ஆண்டு காலத் 
தத்துவ விசாரத்தின் பின், கி.பி 2011இல் திருவாய் மலர்ந்து 
அருளுகிறார். அவரது அருள்வாக்கை தினமணி வைத்தியநாத 
அய்யர் பிரசுரிக்கிறார். 

CBI என்பது அரசு எந்திரத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதி
(AN INSEPERABLE PART OF THE STATE MACHINERY) என்கிற 
மார்க்சிய பாலபாடத்தை அறிந்தவர்களுக்கு, CBI என்றும் 
என்றென்றும் ஆளுவோரின் கைக்கருவிதான் என்பது புரியும்.
எனவே தயாநிதி மாறன் மீதான CBIயின் பாய்ச்சல், மாறன் 
சகோதரர்களைச் சிறையில் தள்ளுவது என்ற அற்ப 
நோக்கத்தைக் கொண்டதல்ல என்பதும் புரியும்.

தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் குழுமத்துக்குப் 
பெருஞ்சவாலாக இருப்பது பெரியாரிய, திராவிட இயல் 
சித்தாந்தங்களே. கண்டிப்பாக மார்க்சியம் அல்ல. அது தமிழ் 
மண்ணில் வேர் பிடிக்கவில்லை.  பெரியாரிய, திராவிட இயல் 
சித்தாந்தங்களை இன்றும் நடைமுறைப் படுத்தும் இயக்கமாக 
இருப்பது திமுகதான் ( இவர்கள் நடைமுறைப் படுத்துவதில் 
ஆயிரம் குறைகள் இருந்தபோதிலும் ).

திமுகவின் பலவீனங்களும் தவறுகளும் இன்று மேலோங்கி 
நிற்கின்றன. என்றாலும், இக்காரணம் பற்றி திமுகவை ஏற்க 
மறுக்கும் எவரும் ஆர்.எஸ்.எஸ் குழுமத்தை ஆதரிக்கப் 
போவதில்லை. மாறாக, திமுகவைவிட ஆயிரம் மடங்கு 
தீவிரத்துடன் ஆர்.எஸ்.எஸ் ஐ எதிர்ப்பார்கள்; எதிர்க்கிறார்கள்.

சுருங்கக் கூறின், தத்துவார்த்த அரங்கில், (IDEOLOGICAL FRONT )
பெரியாரியத்தை வெற்றி கொள்ளாமல், ஆர்.எஸ்.எஸ்  தமிழ் 
மண்ணில் காலூன்றவே முடியாது என்பதுதான் நிதரிசனம்.
இந்தப் புரிதலுக்கு வந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகள் 
( குருமூர்த்தி, துக்ளக் சோ போன்றோர்) திமுகவை 
வீழ்த்துவதன் மூலம் பெரியாரியத்தைக் கடப்பது  என்கிற ஓரம்சத் திட்டத்துடன் களத்தில் இறங்கி உள்ளனர்.

இந்த ஓரங்க நாடகத்தின் முதல் காட்சிதான் ( OPENING SCENE )
சன் டி.வி அதிகாரிகளின் கைதும் சிறையும். 

மாறன் சகோதரர்கள் சிறை செல்வார்களா என்றால், அதற்கான 
வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவர்களைக் கைது செய்து  
சிறைக்கு அனுப்புவதை விட, வழக்கை ஆண்டுக் கணக்கில் 
இழுத்தடித்து, வழக்கு சார்ந்த ஊழல் விவகாரங்களைப் 
பிரச்சாரம் செய்வதன் மூலம், திமுகவுக்கு அவப்பெயர் 
ஏற்படுத்துவது ஒன்றே ஆர்.எஸ்.எஸ்.சின் குறிக்கோள்.
தேவையான அளவு பிரச்சார மதிப்பு (PROPAGANDA VALUE )
கிட்டி விடுமேயானால், இவர்களைச் சிறைக்கு அனுப்புவதில் 
ஆர்.எஸ்.எஸ் ஆர்வம் காட்டாது.

இக்கட்டுரை மாறனுக்கு வக்காலத்து வாங்குவதற்காக 
எழுதப் பட்டது அல்ல. மாறன் குழுமம் உங்களுடைய 
அல்லது என்னுடைய வக்காலத்தை நம்பி இல்லை.
ஆசியாவின் மிகப்பெரிய தொழில் அதிபரான கலாநிதி மாறனை 
இந்திய முதலாளித்துவம் காப்பாற்றும். யார் ஆண்டாலும், 
இந்தியாவின் மத்திய அரசு என்பது பெருமுதலாளிகளின் 
அரசே. "அரசாங்கம் என்பது முதலாளிகளின் காரியக் 
கமிட்டியே " என்னும் மார்க்சிய போதனையை இங்கு 
நினைவு கூரவும்.

நிலைமை கைமீறிப் போகுமானால், சன்  குழுமம்
ஆர்.எஸ்.எஸ்சில் சங்கமம் ஆகவும் தயங்காது என்று 
நாம் கூறும் உண்மை சிந்தனைக் குள்ளர்களின் மண்டையில் 
வேண்டுமானால் ஏறாமல் இருக்கலாம். ஆனால் அது 
புறக்கணிக்க முடியாத உண்மை.

எனவே, இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ்சின் 
கை ஓங்கி விடாமல் பார்த்துக் கொள்வது ஒன்றுதான் புரட்சியாளர்களின் 
பிறழ முடியாத கடமை.

******************************************************************88888   
  
   



             




    

    


இடதுசாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை!
--------------------------------------------------------- 
எதற்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ்.ஐக் குறை சொல்வதே 
இடதுசாரிகளுக்கு வழக்கமாகப் போய்விட்டது.
தா.பாண்டியனுக்கோ ஜி.ராமகிருஷ்ணனுக்கோ 
மலச்சிக்கல் வந்தாலும், அதற்கு ஆர்.எஸ்.எஸ் தான் 
காரணம் என்று சொல்வார்கள் போலும் இடதுசாரிகள்.
இப்போக்கு வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

தருண் விஜய் போன்ற இடதுசாரிகளும் ஆர்.எஸ்.எஸ் 
அமைப்பில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டுப் பேசுவதா?
இடதுசாரிகளின் மயக்கத்தைத் தெளிவித்திட,
"தருண் விஜய் ஒரு இடதுசாரியே! தத்துவார்த்த ஆய்வில் முடிவு"
என்ற வீரை. பி. இளஞ்சேட்சென்னியின் கட்டுரை 
இன்று மாலை வெளியிடப்படும்.
படிப்பதற்கு முந்துங்கள்!

**************************************************************   

தருண் விஜய்  ஒரு இடதுசாரியே!
தத்துவார்த்த ஆய்வில் முடிவு!
------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------------------------  .
தருண் விஜய் ஒரு தீவிர இடதுசாரி என்றார் தோளர்.
எனக்கு லேசாக மயக்கம் வருவது போல இருந்தது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவம் பேசும்
வள்ளுவரை ஏற்றுக் கொள்கிற  தருண் விஜய்யை
வலதுசாரி என்று கணிப்பது தத்துவார்த்தப் பிழை
ஆகிவிடும் என்று பதறினார்  தோளர்.
-------------------------------------------------------------------------------------------------
அவர் ஆர்.எஸ்.எஸ்காரர் ஆயிற்றே .... என்று நான் இழுத்தேன்.
அப்படி அல்ல,  கண்ணால் காண்பதும் போய், காதால் கேட்பதும் 
பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்ற தோளர்  
"MISTRUST THE OBVIOUS" என்பதுதானே அறிவியல் என்றார்.
உடனே, உயிரோடுதான்  இருக்கிறேனா நான்  என்று எனக்கு ஓர்
சந்தேகம் வர, நான் என் தொடையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.
--------------------------------------------------------------------------------------------------------
அது உங்கள் கருத்து, அவ்வளவுதானே என்று உரையாடலைத்
கத்தரிக்க முயன்றேன் நான்.
இது கருத்தே அல்ல,  கருத்து என்றால்  வெறும் OPINION;
ஆனால் நான் சொல்வது ஆய்வுமுடிவு, FINDINGS  என்றார் தோளர்.
கள  ஆய்வு, புல ஆய்வு, தத்துவார்த்த ஆய்வு,
சான்றாதாரங்களின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வு,
என்று பல்வேறு ஆய்வுகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போய்  என்னை பிரமிப்பில் ஆழ்த்தினார் தோளர். இவ்வாறு 
பல ஆய்வுகளின் இறுதியில் நாங்கள் வந்தடைந்த முடிவுதான் 
தருண் விஜய் இடதுசாரி என்பது என்று விளக்கினார் தோளர்.
----------------------------------------------------------------------------------------------------------
இதெல்லாம் சாதாரண ஜனங்களுக்குப் புரியாது; 
INTELECTUALSக்குத் தான் புரியும், அதனால்தான் உங்களிடம் 
சொல்கிறேன் என்ற தோளர் போகிற போக்கில் எனக்கு ஒரு 
அறிவுஜீவிப் பட்டத்தையும் வழங்கினார்.
ஒப்புக் கொள்வதைத் தவிர எனாக்கு வேறு வழி இல்லாமல்
போய்விட்டது.யோசித்துப் பார்க்கிறபோது, சிவப்பு நிறத்தில் 
தருண் விஜய் குல்லாயும் ஸ்வெட்டரும் அணிந்திருப்பதாக 
லேசாக ஒரு தோற்றம் தெரிந்தது.
-------------------------------------------------------------------------------------------------------
நான் பலவீனம் அடைந்து விட்டதைத் உணர்ந்து  கொண்ட
தோளர் கைவசம் உள்ள மிச்சம் மீதி  அஸ்திரங்களையும்
பிரயோகிக்கத் தொடங்கினார்.
பக்கத்தில் உள்ள ஒரு இளைஞரை, மன்னிக்கவும், வாலிபரை
சுட்டிக்காட்டி இவரைப் போன்ற வாலிபர்கள்தான் கள ஆய்வுக்கு
முழுப்பொறுப்பு எடுத்துக் கொண்டவர்கள் என்று சிலாகித்தார்.
சே குவேரா படம் போட்ட பனியன் அணிந்திருந்த அந்த
வாலிபர் பரவசம் அடையத் தொடங்கினார்.அவர் சாதாரண 
வாலிபர் அல்ல என்றும்  வாலிபர் சங்கத்தில் இன்ன பொறுப்பு 
வகிப்பவர் என்றும் தோளர் தெளிவுபடுத்தினார்.
-----------------------------------------------------------------------------------------------------------
வாலிபம் என்ற சொல் எனக்கு உவப்பானதாக இல்லை.
வாலிப விருந்து போன்ற தலைப்பிலான பாலியல் ஏடுகள்,
வாலிப வயோதிக அன்பர்களே என்ற  லேகிய  வைத்தியர்களின்
கூக்குரல்கள் ஆகியவை  நினைவில் ஓடின.  எனவே, 
"வாலிபர் என்ற சொல்லுக்கு ஒரு நீல நிறம் இருக்கிறதே, தோளர், 
அதனால் இளைஞர்   சங்கம் என்று பெயர் வைக்கலாமே" என்று 
கூறினேன். "கண்மூடித் தனமான சமஸ்கிருத எதிர்ப்பு நமக்குக் 
கிடையாது என்று  என் வாயை  அடைத்தார்  தோளர்.
----------------------------------------------------------------------------------------------------------
(குறிப்பு; இங்கு நீல நிறம் என்பது இயற்பியலில் வரும், 
450-500 நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட நிறத்தைக் குறிக்காது )
இப்போது தன்  முறை என்று உணர்ந்த, உடனிருந்த
ஜிப்பா ஜோல்னாப்பை சகிதம் காட்சி அளித்த அடுத்த தோளர்
பேச ஆரம்பித்தார். அவர் த.மு.சி.ப.ச அமைப்பில் முக்கியப்
பொறுப்பு வகிப்பவர் என்று அறிமுகம் செய்தார் தோளர்.
----------------------------------------------------------------------------------------------------
த.மு.சி.ப.ச ............. என்று நான் தயங்குவதை உணர்ந்த தோளர்
தமிழ்நாடு முற்போக்குச் சிந்தனாவாதிகள் மற்றும் படைப்பாளிகள் 
சங்கம் என்று விளக்கினார்.
தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் யார் யார் இடதுசாரிகள்  என்று
பட்டியல் போட்டிருக்கிறோம் என்றார் த மு.சி.ப.ச தோளர்.
சொல்லிக் கொண்டே தன ஜோல்னாப்பையில் இருந்து ஒரு
சிவப்பு அட்டை போட்ட நோட்டுப் புத்தகத்தை  மிகுந்த
பவ்யத்துடன் எடுக்க ஆரம்பித்தார். சீனத்தில் கலாச்சாரப்
புரட்சியின்போது, மாவோவின் RED BOOK ஐ செங்காவலர்கள்
இப்படிதானே பவ்யத்துடன் எடுத்தார்கள் என்று நான்
நினைத்துக் கொண்டேன்.
------------------------------------------------------------------------------------------------------------
நீங்களும் படிக்கலாம், புதிதாக ஆரம்பிக்கப் பட்ட எங்கள்
இணைய தளத்திலும் இதை வெளியிடப் போகிறோம் என்று
கூறிக்கொண்டே நோட்டை என்னிடம் நீட்டினார்.
அதில் பெருமாள் முருகன் பெயர் தடித்த எழுத்தில்
இருப்பதைக் கண்டேன்.
மாதொருபாகன் நாவல் எழுதிய பெருமாள் முருகனா என்று
நிச்சயப் படுத்திக் கொள்ள விரும்பினேன் நான். ஆம், அவரேதான், 
ஒரு பெருமாள் முருகன்தானே இருக்கிறார் என்றார் தோளர்,           .
-----------------------------------------------------------------------------------------------------------
"அவர் பின்நவீனத்துவவாதி ஆயிற்றே" என்றேன் நான்.
அப்படியெல்லாம்  SECTARIAN ஆகப் பார்க்கக் கூடாது என்று
கண்டித்தார் தோளர்.
இதைத் தொடர்ந்ந்து கருத்துரிமை பற்றியும், அதைப் பாதுகாக்க
வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் சுருக்கமாக ஒரு
லெக்ச்சர் கொடுத்தார் தோளர். ஆர்.எஸ்.எஸ்காரனை
விட்டு வைக்கக் கூடாது என்றும் முத்தாய்ப்பு வைத்தார்.
-------------------------------------------------------------------------------------------------
மோடி அரசு ஆர்.எஸ்.எஸ் அரசுதானே, தோளர் என்று 
வினவினேன். ஆமோதித்தார் தோளர்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள்
நீட்டித்து இருக்கிறதே மோடி அரசு, இதவும் கருத்துரிமை
மீதான தாக்குதல்தானே தோளர், அதை ஏன் நீங்கள்  
எதிர்க்கவில்லை என்றேன் நான்.
----------------------------------------------------------------------------------------------------
கமிட்டிக் கூட்டம் இருக்குது, அவசரமாப் போணும்,
இன்னொரு முறை டீட்டெயிலாப் பேசலாம் என்று
சொல்லிக்கொண்டே வேகமாக இடத்தைக் காலி செய்தனர் 
தோளர்கள்
உரையாடலில் கலந்துகொள்ளாமல், மொத்த உரையாடலையும்
கேட்டுக் கொண்டிருந்த அந்த உணவகத்து அன்பர் காறித்
துப்பினார்.
--------------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-1: 
-------------------- 
பார்ப்பனீய விழுமியங்களைத் தூக்கிப் பிடிப்பதையே 
தம் எழுத்துப் பணியாகக் கொண்டிருந்த ஜெயகாந்தனை 
கம்யூனிஸ்ட் என்று மகுடம் சூடினர் போலிகள்.
இன்று, பின்நவீனத்துவ மற்றும் பாலியல் வக்கிர எழுத்தாளர் 
பெருமாள் முருகனை இடதுசாரி என்று போற்றுகின்றனர் 
போலிகள். நாளை இப்போலிகள் தருண் விஜயையும் 
இடதுசாரி என்று கூறக்கூடும். இதில் கற்பனை எதுவும் இல்லை.
IF THE DATA WERE EXTRAPOLATED, ONE WILL ARRIVE AT THIS
CONCLUSION!
----------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-2:
-------------------- 
 இங்கு "தோளர்" என்று எழுதியதில் எழுத்துப் பிழை 
எதுவும் இல்லை. போலிக் கம்யூனிஸ்ட்களுக்கு "தோழர்"  
என்ற அடைமொழி பொருத்தமற்றது என்பது எங்கள் 
நிலைப்பாடு.
----------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-3;
--------------------- 
"MISTRUST THE OBVIOUS" என்பது குற்றவியல் மற்றும் குற்றப்
புலனாய்வுப் புலத்தில் புழங்கும் ஒரு தொழில்நுட்பச் சொல்.
(TECHNICAL TERM ). பிரத்தியட்சமாகப் பார்க்கும் எதையும் 
நம்பாதே என்று இதற்குப் பொருள்.   

**************************************************************** .







    .

 .