சனி, 17 ஜனவரி, 2015

ஆண்டாளும் நெய்யுடை அடிசிலும்
-----------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------
நெய்யுடை அடிசில் பேறு பெற்றவர்க்கே வாய்க்கும்.
உடைப்பருஞ் செல்வர் ஆயினும், இனிப்பும்
கொழுப்பும் ( SUGAR AND CHOLESTROL )அண்டுமேயானால்,
நெய்யுடை அடிசில் வாய்க்காமலே போம்.

என் பள்ளிப் பருவத்தில், வீட்டில் அனைவரும்
அமர்ந்து உண்ணும்போது, இலைச் சோற்றில்
எம் அன்னை நெய் ஊற்றும்போதெல்லாம்
எம் தந்தை "மூட நெய்  பெய்து, முழங்கை வழிவார"
என்பார்.

பலமுறை இவ்வாறு சொல்லக் கேட்டபின், எனக்கு
அத்தொடரின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. எனினும்,
"மூட நெய்" என்பதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.
மூட நம்பிக்கை என்றால் தெரியும். அது என்ன
மூட நெய்? மூடத்தனமான நெய் என்பது
பொருந்தவில்லையே! தந்தையிடம் கேட்கத்
தோன்றவும் இல்லை. அக்காலச் சூழலில் கேட்டு
விடவும் முடியாது.

சிறிது காலத்திலேயே, வானொலியில் திருப்பாவை
விளக்கத்தை நான் கேட்கத் தொடங்கினேன். அப்போது
புரிந்தது மேற்கண்ட தொடர் ஆண்டாளின் பாசுரத்தில்
வருகிறது என்று. பொருளும் புரிந்தது.

"ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
 மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்  
 கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்."

மூட நெய் என்பதை அதற்கு முந்திய சீரான
பால்ச்சோறு என்பதுடன் இணைத்துப் பொருள்
காண வேண்டும். (பால்ச்சோறு என்று எழுதித் தெரிந்தே
தவறு இழைக்கும் என்னை இலக்கண ஆசிரியர்கள்
மன்னிக்கட்டும்).

பால்ச்சோறு மூட நெய்  பெய்து என்றால், இலையில்
இடப்பட்ட சோறு முழுவதையும் மூடும் அளவுக்கு
நெய்  ஊற்றுவது என்று பொருள். சோற்றின் நடுவில்
சிறிது நெய் ஊற்றி உண்பவர்கள் அல்ல ஆயர்கள்.
ஆயர் சமூகம் சுரண்டலற்ற சமூகம்; சமத்துவச் சமூகம்.
எனவே, அங்கு வண்மையும் இல்லை; வறுமையும் இல்லை.
ஆயர்குடியினரின் நிறைவாழ்வை  "மூட நெய் பெய்து
முழங்கை வழிவார"   என்ற தொடரால் ஆண்டாள்
யாப்புறுத்துகிறாள்.

உலகம் முழுவதும்  தொல்குடிச் சமூகத்தினர்  
ஆயர்களே என்பது வரலாறு. மானுட வரலாற்றில்
இச் சமூகம் மேய்ச்சல் சமூகம் ( PASTORAL SOCIETY )
என்று அழைக்கப் படுகிறது.     

உலகில் முதன் முதலில் தோன்றிய இலக்கியங்கள் யாவும்
ஆயர் குடியைச் சிறப்பித்துக் கூறுவனவே ஆகும்.
தமிழ் நிலத்தின் நால்வகைப் பிரிவுகளைக் கூறவந்த
தொல்காப்பியர்,
"மாயோன் மேய காடுறை உலகமும் " என்றுதான்
தொடங்குகிறார். இங்கு மேய என்பது விரும்பிய என்று
பொருள்படும். திருமால் விரும்பிய காட்டு நிலம் என்பது
பொருள்.

கிறித்துவ சமயமும் ஆயர்களைச் சிறப்பிப்பதில்
தவறியதில்லை. தங்கள் கடவுளையே ஒரு ஆயனாக,
மேய்ப்பனாக வரித்துக் கொண்ட மாண்பு கிறித்துவத்துக்கு
உண்டு.

"கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்;
அவர் புல்  உள்ள இடங்களில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீர் அண்டை இளைப்பாறச்
செய்கிறார் " என்கிறது விவிலியம்.

வேட்டுவச் சமூகமும் தொன்மையானதுதான் எனினும் 
அங்கு கருணைக்கு இடமில்லை. அச்சமூகத்து மனிதன்
விலங்கோடு விலங்காக, சற்று மேம்பட்ட விலங்காக
வாழ்ந்தவன். அவ்வளவுதான்.

ஆனால் ஆயர் சமூகம்தான் நாகரிகம் எய்திய
முதல் சமூகம். வேட்டுவச் சமூகம் போலன்றி,
இங்கு விலங்குகளோடு மனிதன் இயைந்து வாழ்ந்தான்.
திருப்பாவையில், ஆண்டாள் விலங்குகளையும்
பறவைகளையும் சிறப்பித்துப் பாடுவதை நாம்
காணலாம்.

"புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
 வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ"
என்றும் ( பாசுரம்: 6 ),

"கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து"
 என்றும் ( பாசுரம்: 7)
ஆண்டாள் பறவைகளை மாண்புறுத்துகிறாள்.

'கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
 நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத் தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்"
என்ற ஆண்டாள் பாசுரத்தைக் காட்டிலும் வேறு எதில்
எருமைகள் சிறப்பிக்கப் படுகின்றன?  

ஆயர் சமூகத்தில், விலங்குகளுக்கும் குடியுரிமை உண்டு.
மனிதனுக்குச் சமமான குடியுரிமை. அங்கு பசுக்களே
வள்ளல்களாக இருப்பதால், மானுட வள்ளல்கள் இல்லை.
"வண்மை இல்லை ஓர் வறுமை இல்லையால்" என்ற
கம்பனின் கூற்று இங்கு பொருந்தும் அழகைக் காண்க.
வண்மை என்றால் வள்ளன்மை, வள்ளல் தன்மை
என்று பொருள். 


ஆயர் குடியில் மனிதர்களை வாழ வைப்பவை
விலங்குகளே! மாடு எனில் செல்வம்!  மாடு எனில் வாழ்வு!
எனவே,
"வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் "
நிறைந்த ஆயர் குடியில், சோற்றை மூடும் அளவுக்கு
நெய் பெய்து உண்பதில் வியப்பில்லை அல்லவா!


 ஆண்டாளைப் படிக்கப் படிக்க அவளில் நான் மூழ்கிப்போய்
விடுகிறேன். கன்னங்களில் தாரை தாரையாகக் கண்ணீர் 
வழிய வழிய அவளில் நான் திளைத்து விடுகிறேன்.
திகட்டுதல் கண்டேனில்லை!

"ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ  
 வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்"
என்று அரச போகம் துறந்து சென்ற குலசேகர ஆழ்வார்
போல, நானும் அனைத்தையும் துறந்து, ஆண்டாளின்
திருவில்லிபுத்தூர் ஆய்ப்பாடியில் ஓர் ஆயனாக வாழும்
வாழ்க்கைக்கு ஏங்குகிறேன்.

வள்ளுவர் நம் மூளையை வென்று  விட்டார் எனில்,
ஆண்டாளோ நம் இதயத்தை வென்று விட்டாள்!
வாழிய ஆண்டாள்!

பின்குறிப்பு:
------------------
ஆண்டாள் இரண்டு பிரபந்தங்களைப் பாடினாள்.
முதல் பிரபந்தம் திருப்பாவை. இரண்டாவது,
நாச்சியார் திருமொழி. இவற்றுள் பிந்தியது
குறித்தும் எழுத ஆவலாக உள்ளேன், ஆர்வலர்கள்
ஊக்குவித்தால். இல்லையேல் அரசியல் சேற்றில்
வராகமாகக் கிடந்தது உழல வேண்டியதுதான்.

*************************************************************     
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக