வெள்ளி, 6 ஜூன், 2014

மார்க்சிய வாசகர்களுக்காக!
--------------------------------------------------- 

        கருத்துக்களால் கனம் பெற்றதும்

                 மொழிநடையால் வளம் பெற்றதும்

                        இயங்கியல் தத்துவத்தைத்
                                     
                                 திறனாய்வு செய்வதுமான 

                                       இக்கட்டுரை 

                                                உண்மையில் ஒரு கட்டுரை                                                           அன்று !

                                                               கருத்தாயுதம்!

பின்னூட்டங்கள் 
வரவேற்கப் படுகின்றன!


********************** பதிப்பாசிரியர்*****************************
அறிவியலுக்கு எதிரானது இயக்கவியல்
என்பதற்கான நிரூபணம்.
--------------------------------------------------------
 DIELECTICS is UNSCIENTIFIC AND WRONG:
HERE is THE PROOF!
--------------------------------------------------------
பி.இளங்கோ சுப்பிரமணியன்
--------------------------------------------------------
இயக்கவியல் (அல்லது இயங்கியல் ,
ஆங்கிலத்தில் DIELECTICS )என்பது தத்துவ ஞானத்தின்
ஒரு கூறு. எனினும், இயங்கியல் என்பது தத்துவம் அல்ல.
இயங்கியல் என்பது உண்மையைக் கண்டறியும் ஒரு முறை.
வாதம், எதிர்வாதம் இவற்றின் அடிப்படையில்
உண்மையைக் கண்டறியும் முறையே இயங்கியல்.

பண்டைய கிரேக்க அறிஞர்கள் உண்மையைக் கண்டறிவதற்காக
உருவாக்கிய ஒரு முறைதான் இயங்கியல்.
வேறுபட்ட  பல கருத்துகளை ஒன்றோடு ஒன்று முட்டி
மோத விட்டு, அவற்றின் மீது வாதமும் எதிர்வாதமும்
புரிந்தால் இறுதியில் உண்மை கிடைக்கும் என்பது
கிரேக்க அறிஞர்களின் கொள்கை; நடைமுறை.

ஆக இயங்கியலின் பிறப்பு பண்டைய கிரேக்க .அறிஞர்களுடன்
தொடர்புடையது. மேலும் இயங்கியல் என்பது தொன்மையானது.
அது நவீன அறிவியலின் முறை அல்ல.

மார்க்சியத் தத்துவம் முழுவதுமே இயங்கியலை
அடிப்படையாகக் கொண்டது. மார்க்சியத்தின் தத்துவஞானப்
பகுதியான பொருள்முதல்வாதம் இயங்கியலை
அடிப்படையாகக் கொண்டு, இயங்கியல் பொருள்முதல்வாதம்
என்று பெயர் பெறுகிறது.

இந்தக் கட்டுரையானது இயங்கியல் என்பது  தவறானது,
அறிவியலுக்கு எதிரானது என்ற பொருளில் அமைந்தது.
பொருள்முதல்வாதம் தவறானது என்றோ
மார்க்சியம் தவறானது என்றோ இக்கட்டுரை கூறவில்லை
என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொருள் முதல்வாதம்  சரியானது என்று நிரூபிக்கப்பட்டு
பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன.இதில் மாற்றுக்
கருத்துக்கு இடமே இல்லை.

இயங்கியல் பொருள்முதல்வாதம் என்பதில்,
இயங்கியல் என்பது தவறானது;
பொருள்முதல்வாதம் என்பது சரியானது.
எனவே, பொருள்முதல்வாதமானது
இயங்கியலைக் கைவிட்டு விட்டு அறிவியலை
கைக்கொள்ள வேண்டும். அப்போது, இயங்கியல்
பொருள்முதல்வாதம் என்பது
அறிவியல் பொருள்முதல்வாதமாக மாறும்.

இயங்கியல் தவறானது என்பதால் மார்க்சியவாதிகள்
யாரும் பதற வேண்டியதில்லை. ஏனெனில், இயங்கியல்
என்பது மார்க்ஸ்-எங்கல்ஸ் உருவாக்கிய முறை அல்ல.
மார்க்சும் எங்கல்சும் தம் சொந்த சிந்தனையில்
இயங்கியலை உருவாக்கவில்லை. இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் தோன்றி,
சாக்ரட்டீஸ் முதலான அறிஞர்களால் வளர்க்கப்பட்டு
ஹெக்கல்  என்ற ஜெர்மன் தத்துவ அறிஞரால்
செம்மைப்படுத்தப் பட்ட இயங்கியலை மார்க்சும் எங்கல்சும்
அப்படியே எடுத்து பொருள்முதல்வாதத்துக்குப் பயன்படுத்தினர்.

கருத்துமுதல்வாதத்தை விளக்க ஹெக்கல்
இயங்கியலைப் பயன்படுத்தினார்.
பொருள்முதல்வாதத்தை விளக்க மார்க்சும் எங்கல்சும் இயங்கியலைப் பயன்படுத்தினர். இயங்கியல் ஒன்றுதான்;
பயன்பாட்டில்தான் வேறுபாடு.

ஹெக்கல் அவர்களின் இயங்கியலானது
கருத்துமுதல்வாதத்தை விளக்க முற்படும்
ஒரு கருவி அல்லது முறை.
சிந்தனை எவ்வாறு தோன்றியது, எவ்வாறு வளர்ந்தது,
எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்கப்
பயன்பட்ட ஒரு முறை.இந்த முறையை மார்க்சும்
எங்கல்சும் தவறாகப் பயன்படுத்தினர்( MISUSED).
பொருள் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு வளர்ந்தது,
எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்க மார்க்சும்
எங்கல்சும் இயங்கியலைப் பயன்படுத்தினர்.பொருளின்
இயக்கத்தை விளக்க இயங்கியல் பயன்படாது.
அதற்கு அறிவியல் மட்டுமே பயன்படும். எனவே,
பொருள்முதல்வாதத்தில் உள்ள இயங்கியலை
அகற்றிவிட்டு, அதனிடத்தில் அறிவியலை வைக்க வேண்டும்.

இயங்கியல் தவறு என்பதால், பொருள்முதல்வாதம் தவறு
என்று பொருள்படாது.பொருள்முதல்வாதத்தின் சரித்தன்மை
அனந்த கோடி முறை நிரூபிக்கப்பட்ட ஒன்று.

மேலும் ஒன்று.இயங்கியலுக்கு எதிரானது
மாறாநிலைத்தத்துவம்  அல்லது இயங்காநிலைத்
தத்துவம் ( METAPHYSICAL ). இயங்கியல் தவறானது
என்பதால், இயங்காநிலைத் தத்துவம் சரியானது  
என்று பொருள் அல்ல.இயங்காநிலைத் தத்துவம்
முற்றிலும் தவறானது, முட்டாள்தனமானது என்பது
infinity times நிரூபிக்கப்பட்ட ஒன்று.

சொல்ல வந்த விஷயத்தை நேரடியாகச் சொல்வது
என்பது தமிழ் வாசக உலகில் இயலாத ஒன்று.
குறிப்பாக, மார்க்சியவாதிகள் என்போரில்
மார்க்சியத்தைக் குருட்டுப் பாடமாகக் "கற்றவர்களும்"
நுனிப்புல் மேய்ந்தவர்களும் மட்டுமே அதிகம்;
மிக மிக அதிகம். தங்களின் மூளையில் தடைகளை
ஏற்படுத்தி வைத்திருக்கும் இவர்களிடம் ஒரு புதிய
விஷயத்தை, சரியான விஷயத்தை எளிதில் சொல்லி
விட முடியாது.ஆகவே, பீடிகைகள் தேவைப் படுகின்றன.

ஆக, தொடர்புடைய அனைத்திலும், இக்கட்டுரை
இயங்கியலை மட்டுமே ஆராய்கிறது. இயங்கியல்
தவறானது என்பதை நிரூபிக்கிறது. எவ்வாறு என்பதை
விளக்கமாகப் பார்ப்போம்.


இயங்கியலின் விதிகள்:
------------------------------------------  
ஹெக்கலின் இயங்கியலானது, 
"கருத்து-எதிர்க்கருத்து-புதுக்கருத்து"
(  THESIS -ANTITHESIS-SYNTHESIS ) என்னும் 
சாராம்சத்தைக் கொண்டது.
ஹெக்கலின்  இயங்கியல் மூன்று விதிகளைக் கொண்டது.
1) எதிர்மறைகளின்  ஒற்றுமையும் போராட்டமும் 
2) அளவு மாற்றம் பண்பு மாற்றமாக ஆவது 
3) நிலைமறுப்பின் நிலைமறுப்பு .

THE LAWS OF HEGELIAN DIELECTICS:
----------------------------------------------------------  
1)THE LAW OF THE INTERPENETRATION OF OPPOSITES
2)THE LAW OF TRANSFORMATION OF QUANTITY INTO QUALITY
3)THE LAW OF NEGATION OF NEGATION.

ஹெக்கலின் இந்த மூன்று விதிகளையும் 
மார்க்சும் எங்கல்சும் அப்படியே எடுத்துக் கொண்டனர்.
( நுனிப்புல் வாசகர்கள் கருதுவது போல, இந்த 
விதிகள் மார்க்ஸ்-எங்கல்சின் கண்டுபிடிப்பு அல்ல.) 
ஹெக்கல் மட்டுமின்றி, பண்டைய கிரேக்கத் தத்துவஞானி 
ஹெராக்ளிடஸ் என்பவரின் கருத்துககளையும் மார்க்சியம் எடுத்தாண்டுள்ளது.ஹீராக்ளிடசின் கருத்துக்களைப் 
பற்றி   " இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் 
மூல அம்சங்களைப் பற்றிய ஒரு அருமையான 
விரிவுரை இது" என்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.
( பார்க்க: தத்துவத்தைப் பற்றிய குறிப்புப் புத்தகங்கள்).

லெனின் கூறுகிறார்:
"சரியான பொருளில் கூற வேண்டுமென்றால்,
இயக்கவியல் எனப்படுவது பொருட்களின் உள்ளே 
இருக்கும் சாராம்சத்தில் பொதிந்துள்ள முரண்பாடுகளை 
ஆராய்வதுதான்."
(பார்க்க: தத்துவத்தைப் பற்றிய குறிப்புப் புத்தகங்கள்)

லெனின் மேலும் கூறுகிறார்:
" வளர்ச்சி என்பது எதிர்மறைகளிடையே நடக்கும் 
போராட்டத்தையே குறிக்கிறது."

ஆக, சாக்ரட்டீஸ் காலம் தொடங்கி ஹெக்கல் காலம் வரை 
இயங்கியல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துள்ளது. 
இதன் உச்சகட்ட வளர்ச்சி ஹெக்கல் காலத்தில் ஏற்பட்டது.
ஹெக்கலைத் தொடர்ந்து மார்க்சும் எங்கல்சும் 
இயங்கியலை மேலும் மெருகேற்றினர்.

ஹெக்கலின் இயங்கியல் ஒரு சாதாரணக் கூழாங்கல் 
என்றால், மார்க்ஸ்-எங்கல்சின் இயங்கியல் 
பளபளப்பான மெருகேறிய கல் ஆகும்.

இயங்கியல் என்பது தவறானது: எப்படி?
---------------------------------------------------------------   
இயங்கியல் என்பது மனித குலத்தின் அறிவியல் அறிவு 
மழலைப் பருவத்தில் இருந்த போது உருவான தத்துவம்.
(அதாவது, உண்மையைக் கண்டறியும் முறை).
பரிசோதனை அறிவியல் (EXPERIMENTAL SCIENCE )
என்பதே தோன்றாத காலத்தில் நடைமுறையில் 
இருந்த ஒரு தத்துவம்.இதன் சாராம்சம் தர்க்கம் (LOGIC ).
வாதம், எதிர்வாதம், விவாதம், தர்க்கம் ஆகியவற்றின் 
வழியாக ஒரு கருத்தைச் சரி என்று நிறுவும் முறைதான் 
இயங்கியல். அந்தக் காலத்தில் இதுவே உயர்ந்தது 
என்பதில் ஐயமில்லை. ஆனால், பரிசோதனை அறிவியல் 
என்ற ஒன்று வந்த பின்னால், இயங்கியலின் சாயம் 
வெளுத்து விட்டது.

உண்மையைக் கண்டறியும் முறையாக இயங்கியலைப் 
பயன்படுத்துவது சரியல்ல என்பதை அறிவியல் 
நிரூபித்துள்ளது
" பரிசோதனை-கூர்நோக்காய்வு- அனுமானம்"   
( EXPERIMENT - OBSERVATION-INFERENCE) என்ற 
நவீன அறிவியலின் நடைமுறை வழியாகவே 
உண்மையைக் கண்டறிய முடியும் என்பதை 
அறிவியல் ஐயம் திரிபு இன்றி நிரூபித்துள்ளது.
ஒரு கொள்கையை நடைமுறையில் சோதித்துப் பார்த்த 
பின்னரே ஏற்றுக் கொள்வது என்பதுதான் அறிவியல் 
கடைப்பிடிக்கும் அணுகுமுறை.மயிர் பிளக்கும் 
வாதங்களையும் குருட்டுத் தர்க்கங்களையும் 
அறிவியல் இகழ்ச்சியுடன் நிராகரிக்கிறது.

பண்டைக்காலத் தத்துவஞானிகள் , பூமி தட்டையானது 
என்று கருதினர். பூமி உருண்டையானது என்று 
அறிவியல் நிரூபித்தது.மையத்தில் இருக்கும் பூமியை 
சூரியன் சுற்றி வருகிறது என்று (இக்கொள்கையின் பெயர் 
GEO-CENTRIC   THEORY) அரிஸ்டாட்டில் உள்பட 
கிரேக்க இயங்கியல் அறிஞர்கள் கருதினர். ஆனால் 
சூரியனைத்தான் பூமி சுற்றி வருகிறது என்று அறிவியல் 
நிரூபித்தது. இக்கொள்கையின் பெயர்: HELIO-CENTRIC
THEORY.  பொருட்கள் பஞ்ச பூதங்களால் ஆனவை 
என்று பண்டையத் தத்துவஞானிகள் கருதினர்.
இது தவறு என்று, டால்டனின் அணுக்கொள்கை மூலம் 
அறிவியல் நிரூபித்தது.இத்தகைய தவறான  கருத்துகள்
மேலோங்கி இருந்த  இந்தக் காலத்தில்தான் 
இயங்கியலும் உருவானது. 
அறிவியல் வளர்ச்சி அடையாத காலத்தின், குறையறிவு 
படைத்த மனிதகுலம் உருவாக்கிய தவறான
தத்துவம்தான் இயங்கியல்.

நவீன அறிவியலானது  இயங்கியலை முற்றிலுமாக
நிராகரிக்கிறது.அறிவியலின் எந்தக் கோட்பாட்டையும் 
விளக்க இயங்கியல் தேவைப் படவில்லை. இயங்கியலால் 
நவீன அறிவியலை விளக்கவும் இயலாது.

அறிவியலுக்கு எதிரான இயங்கியல்: எப்படி?
------------------------------------------------------------------------------------------------------------------  
மிகச் சுருக்கமாகச் சிலவற்றைப் பார்க்கலாம்.
1) இயங்கியல் என்பது ஒரு 'பைனரி மோகம்'
( BINARY MANIA ) பிடித்த தத்துவம். எல்லாப் பொருளிலும் 
எல்லா விஷயத்திலும் ஜோடிகளைத் தேடுகிற 
தத்துவம். ஈர்ப்பு விசை (GRAVITATIONAL FORCE )
நம் பூமியிலும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் 
பரவி இருக்கிற விசை.இது கவர்ச்சித் தன்மை உடையது.
(ATTRACTIVE).இதற்கு எதிரான, விலக்கல் தன்மை  
( REPULSIVE )உடைய ஒரு விசையைத் தேடித் தேடிச் 
சலித்தார் எங்கல்ஸ். கிடைக்காமல் சோர்ந்தார்.
எல்லாமே பைனரியாக இருக்கும் என்ற இயங்கியல் விதி 
தவிடுபொடியானது.எனவே, எதிர்மறைகளின் 
ஒற்றுமையும் போராட்டமும் 
(  UNITY AND STRUGGLE OF OPPOSITES) என்கிற 
இயங்கியல் விதி சரியல்ல என்பது இதன் மூலம் 
நிரூபணம் ஆகிறது.

2) எதிர்மறைகளின் ஒற்றுமையும் போராட்டமும் 
என்பதற்கு, மார்க்சிய மூல ஆசான்களின் எழுத்துக்களிலும் 
சரி, மார்க்சியப் பாடப்புத்தகங்களிலும் சரி,   
பின்வரும் உதாரணம் பெருமளவில் காணப்படும்:

"காந்தத்தின் வட துருவமும் தென் துருவமும்
எதிர்மறைகள்; இவை ஒற்றுமையாகவும் போராடிக் 
கொண்டும் இருக்கின்றன".

காந்தத்தின் வட  தென் துருவங்கள் எதிர்மறையானவை 
அல்ல; அவற்றுக்கிடையே எந்த விதமான முரண்பாடும் 
கிடையாது ( DIELECTICALLY CONFLICTING RELATIONSHIP)
என்பது குறைந்தபட்ச அறிவியல் அறிவு  உடைய 
பாமரனுக்கும் கூடப் புரியும்.

3) அளவு மாறுபாடு பண்பு மாறுபாட்டுக்கு இட்டுச் செல்லும் 
என்பதெல்லாம் இயங்கியலின் மூட நம்பிக்கைகள்.
பூனை குறுக்கே வந்தால் நல்ல சகுனம் அல்ல 
என்பது போன்ற மூடநம்பிக்கைதான் இந்த விதி.
ஹெக்கல் முதல் மார்க்ஸ்-எங்கல்ஸ் வரை 
பயன்படுத்தும் உதாராணமான, 'தண்ணீர் நீராவி ஆவதும் 
பனிக்கட்டி ஆவதுமான" நிகழ்வில்  எந்தப் பண்பு 
மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை. IT IS JUST A PHASE 
TRANSTITION என்கிறது இயற்பியல்.

4) நிலைமறுப்பின் நிலைமறுப்பு  என்பதெல்லாம் 
பெருமளவுக்குச் சிரிப்பு மூட்டுகிற விஷயங்கள்.
விதை-செடி உதாரணம் எல்லாம் பொருத்தமற்றவை.
WHAT ABOUT 'AFFIRMATION OF AFFIRMATION '?
அதில் வளர்ச்சி இல்லாமல் போய் விடுமா?

இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.
விரைவில் மீண்டும் தொடர்வோம்.
-----------------------------------------------------------------------------
வியாழன், 5 ஜூன், 2014

வரலாற்றின் பக்கங்களில் இருந்து 
---------------------------------------------------------
தியனான்மென் படுகொலைகள்:
உயிர் நீத்தவர்களின் 
இருபத்தைந்தாம் ஆண்டு நினைவாஞ்சலி!
ஜூன் 4, 2014
------------------------------------------------------------------------------------------------------------ 
                     பி. இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------------------------------------------
"சுட்டேன், சுட்டேன், குண்டுகள் தீரும் வரை சுட்டேன்" 
என்றான் ஜெனெரல் டயர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்
பஞ்சாப்பில் உள்ள ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில்
ஆயிரக்கணக்கான இந்திய மக்களைச் சுட்டு வெறி தீர்ந்தான்
கொடியவன் டயர்.

இதை விடவும் மோசமான கொடிய நிகழ்வு அண்மைக்கால
வரலாற்றில் நடைபெற்றது. சீனாவில் பெய்ஜிங் நகரில்,
(பழைய பெயர் பீகிங்) 1989 ஜூன் 4-ஆம் நாளில்
தியனான்மென் சதுக்கத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான
மாணவர்களும் பொதுமக்களும் சுட்டுக் கொல்லப் பட்டார்கள்.

பத்தாயிரம் உயிர்களை வெறி அடங்கும் வரை சுட்டுக் கொன்ற  
இந்த சோக  நிகழ்வின்போது உயிர்நீத்தவர்களின் 
இருபத்தைந்தாம் ஆண்டு நினைவாஞ்சலி 
உலகெங்கும் ஜூன் 4, 2014 அன்று அனுசரிக்கப் படுகிறது.

இந்தப் படுகொலைகளை நிகழ்த்தியவன் கொடியவன்
டெங் சியோ பிங் . மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின்
பெயரால் இந்தக் கொடிய படுகொலைகள் நடைபெற்றன.

லஞ்ச ஊழலை எதிர்த்தும், ஜனநாயக உரிமைகள் கோரியும்
மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில்   ஈடுபட்டபோது
டெங் சியோ பிங்  ராணுவத்தை அனுப்பிப் போராட்டத்தை ஒடுக்கினான்.
சுட்டுக் கொல்லப் பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை
மறைத்து, சில நூறு பேர்களே இறந்து போனதாகக் கணக்குக் காட்டி
உலகை ஏமாற்ற முயன்றான். ஆனால் உண்மை வெளிப்பட்டபோது,
மாணவர்களின் போராட்டம் என்பது சீனாவின் சோஷலிச
அமைப்புக்கு எதிரான சதி என்றான்; தியனான்மென் போராட்டம் ஒரு எதிர்ப்புரட்சி ( counter revolution ) என்றான் கொடியவன் டெங்.

ஆனால் உலகம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மைகள் டெங்கின் முகத்தில் காரி உமிழப் பட்டன.

லட்சக் கணக்கான மக்களைப் படுகொலை செய்த ஹிட்லர்
தற்கொலை செய்து கொண்டு செத்தான். ஹிட்லரின் கூட்டாளி
முசோலினி தூக்கிலிடப் பட்டுச் செத்தான்.உப்பைத் தின்ற
இக்கொடியவர்கள் தண்ணீர் குடித்தார்கள். ஆனால் இவர்களை விட
மோசமான கொடியவன் டெங் சியோ பிங் எந்தத் தண்டனையும் பெறாமல்
வயது மூப்பின் காரணமாகச் செத்துப்போனான்.

தியனான்மென் தியாகிகளுக்கு அஞ்சலி!
கொடியவன் டெங் சியோ பிங்கின் உருவப் படங்களில்
காறித் துப்புவோம்.  
*********************************************************************************

செவ்வாய், 3 ஜூன், 2014

பாரதீய ஜனதாவின் வெற்றி கிட்டியது எப்படி?
---------------------------------------------------------------- 
பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பாஜக 31 சதம் வாக்குகளையும், காங்கிரஸ் 19.3 சதம் வாக்குகளையும் 
பெற்றுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற 54 இடங்கள் வேண்டும். அதாவது, மொத்த இடங்களான 543-இல் 10 சதம் வேண்டும்.
காங்கிரசால் அதைக்கூடப் பெற முடியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
(543-இல் ஒன்று).
மார்க்சியக் கட்சி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இவை இரண்டும் ஒற்றை இலக்கக் கட்சிகளாக மாறி விட்டன.
அங்கீகாரத்தையும் இழக்கின்றன.

போலி மதச்சார்பின்மைக் கட்சிகளான 
மாயாவதியின் பகுஜன் கட்சி, முலாயம்மின் சமாஜ்வாதிக் கட்சி,
பீகாரில் லாலுவின் ராஷ்டிரிய  ஜனதா தளம், நிதிஷ் குமாரின் 
ஐக்கிய ஜனதாதளம், திமுக ஆகிய அனைத்துக் கட்சிகளும் 
துடைத்து எறியப் பட்டுள்ளன. 

பாஜகவின் வெற்றியும், காங்கிரஸ் , இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து விதமான போலி மதச்சார்பின்மைக் கட்சிகளின் தோல்வியும் ஒரே 
நாணயத்தின் இரு பக்கங்கள்.

பாஜகவின் வெற்றிக்கும் மேற்கூறிய கட்சிகளின் தோல்விக்குமான 
காரணம் என்ன?

காய்தல் உவத்தல் அகற்றிச் சிந்தித்தால் கிடைக்கும் விடை இதுதான்.
இசுலாமிய அடிப்படைவாதிகளின் அதிகரித்து வரும்
மதவெறிச் செயல்பாடுகளால் வரவிருக்கும் ஆபத்தைத் தடுக்க மோடியால் மட்டுமே முடியும் என்று நடுத்தர வர்க்கம், புதிய வாக்காளர்கள், 
நகர்ப்புற மக்கள் ஆகியோர் கருதியதே பாஜகவின் வெற்றிக்குக் காரணம்.
-----------------------------------------------------------------------------------------------------    


இரண்டு கவிதைகள் 
-------------------------------- 

அழகு 
-------
முன்பு 
இந்த ஒற்றையடித் தடங்களும் 
மலைகளின் வளைவுகளும் 
அதற்குப் பின்னே மறையும் சூரியனும் 
அழகாய்த்தான் இருந்தன.

ஆனால்,
ஒரு மிகப் பெரிய யுத்தம் 
இந்த மலையில் நடந்த பின்பு 
இந்தக் கிராமத்தின் சுவர்களைக்
குண்டுகள் துளைத்த பின்பு......  

அவைகள் 
இந்தச் சுவர்களை மட்டுமின்றி 
இந்த மலைகளையும் 
முன்பு இருந்ததை விட 
எவ்வளவு அழகாய்
மாற்றி இருக்கின்றன.

......................மாவோ............................
---------------------------------------------------------------------------------


ரத்த சாட்சிகள் 
---------------------
ரத்த சாட்சிகளே 
உங்களுக்கு வாழ்த்துகள்!

உண்மைக்காக  உயிர்ப்பலி தந்த நீங்கள் 
வெற்றி பெற்று விட்டீர்கள்.

உங்களைப் பாலூட்டி வளர்த்த 
தாய்மார்களும் வெற்றி பெற்று விட்டார்கள்.

ரத்த சாட்சிகளின் மகுடத்தை 
தலையில் சூடிக்கொண்ட 
உங்களுக்கு வாழ்த்துகள்.

மரணத் தருவாயிலும் 
துடிக்கும் உதடுகளால் 
புரட்சி முழக்கங்களை 
உச்சரித்துக் கொண்டிருந்த 
உங்களுக்கு வாழ்த்துகள்.

எங்கள் தலைக்கு மேல் வீசிப் பறந்து 
பழி வாங்குங்கள்
என்று எங்கள்  செவிகளில் 
ஓதிக்கொண்டிருக்கும் 
உங்கள் ஆத்மாக்களுக்கு வாழ்த்துகள்.

................................ ஸ்டாலின்..................................

----------------------------------------------------------------------------------------